“நீங்க ஒன்னு கவனிச்சிருக்கீங்களா? ஒரு கும்பலோட சேர்ந்து எடுத்துக்கிட்ட போட்டோவ பார்க்கும் போது, உங்க கண்ணு முதல்ல எங்க போகும்? நாம எப்படி நிக்கறோம், எப்படி சிரிக்கறோம், எப்படி தெரியறோம்… இதை எல்லாம் நோட்டம் விட்டுட்டு தான், நாம போட்டோல இருக்கற மத்தவங்களையே பாப்போம்! சரி தானே?”
எட்டாம் வகுப்பில் ஆசிரியர் “ஈகோ” பற்றி கொடுத்த பேச்சிலிருந்து ஒரு துணுக்கு சங்கரின் காதில் ஒலித்தது. எட்டாவது வகுப்பும், ஈகோவை பற்றிய கட்டுரையும் அவன் முடித்து பல வருடங்கள் ஆகியிருந்தாலும், அன்று எதிர்பார்ப்புடன் அவன் பேஸ்புக்கை தடவி கொண்டிருந்த போது, மனதில் இந்த வரிகள் ஓடின. அவனின் நண்பன் புதிதாக ஒரு ஆல்பம் நிறைய புகைப்படங்கள் போட்டிருந்தான். அதில் தான் மட்டும் இருக்கிறாப்பல எதாச்சும் போட்டோ சிக்கினா, உடனே டிஸ்ப்ளே பிக் ஆக்கிடலாம் என்ற நப்பாசையில் தேடி கொண்டிருந்தான்.
சங்கருக்கு இது தான் பிரச்சனை.
“எனக்கு ஒரு நல்ல டிஸ்ப்ளே பிக் இல்ல மச்சி!”
“உனக்கு எந்த மாதிரி வேணும் சொல்லு…” கையில் டீ.எஸ்.எல்.ஆர் காமிரா வைத்திருந்த ஒரு நண்பன் கேட்டான்.
“நல்லா இருக்கணும்டா”
“டேய்! எல்லாரும் பின்ன என்ன கேவலமாவா பிக் வெச்சிருக்காங்க? எந்த வெரைட்டி சொல்லு… ஸ்டைல் ஆ இல்ல ரொமாண்டிக் ஆ இல்ல கோவம் ஆ...”
“பொண்ணுங்க பாத்துட்டு பயப்பட கூடாது. டீசன்ட்டா இருக்கணும்.”
நண்பன் கன்னத்தில் மீதமிருந்த முடியை சொரிந்தான். “அழகா அம்சமா ஒரு படம் வேணும் உனக்கு. சரி அந்த பக்கம் பாரு…”, காமிராவை கண் அருகே எடுத்து சென்று, லென்ஸை சுழட்டியப்படி பேசினான் நண்பன்.
“தூரத்துல எதையோ தேடுற மாதிரி பாருடா… கன்னத்துல கை வை… ஆன்ன் அப்படி தான்… அப்படியே ஆழமா எதையோ யோசிக்கற மாதிரி… சூப்பர்!”
கிளிக்! கிளிக்!
சங்கருக்கு எதிலும் திருப்தி இல்லை.
ஒரு நீண்ட ரயிலின் பெட்டிகள் வளைந்திருக்க, அதில் நட்ட நடுவில் இருக்கும் பெட்டியிலிருந்து கூலிங் கிளாஸ் அணிந்தப்படி காமிராவை எட்டி பார்க்கும் முகம். லேசாக ஒரு புன்னகை. 136 லைக்.
வலது பக்கத்திலிருந்து ஒரு டேபிள் லாம்ப்பின் ஒளி கீற்றுகள் முகத்தில் பட, ஒரு சோபாவின் மீது முழங்கையை வைத்தப்படி காமிராவை பார்க்கும் முகம். போட்டோவில் வெளிச்சம் பெருக்க பட்டதால், அந்த நபரின் கருப்பு நிறமும் சற்று வெளுத்தவாறு இருந்தது. 101 லைக்.
குளிர் பிரதேசத்தில் அணியும் மப்ளர். கருப்பு ஜாக்கெட். பிரெஞ்சு பியர்ட். நேராக காமிராவை பார்க்காமல் சைடு வாங்கி பக்கத்தில் வேறொரு காமிராவை பார்க்கும் முகம். தோல் மீது இன்னொரு ஆளின் கை. அந்த ஆள் போட்டோவிலிருந்து அகற்றபட்டிருந்தான். 97 லைக்.
தொப்பிகள் விற்கும் கடையில், ஏதோ ஒரு தொப்பியை அணிந்து, தலையை சற்று குனிந்து, ஒரு புருவைத்தை மட்டும் உயர்த்தி காமிராவை குறும்பான ஒரு சிரிப்புடன் பார்க்கும் முகம். அந்த உயர்த்திய புருவத்திற்கு 112 லைக்.
சங்கரின் டிஸ்ப்ளே பிக் - அண்ணாமலை படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெள்ளையாக புகை விடும் படம். 34 லைக். அதுவும் அவனுக்கு வந்ததில்லை. சூப்பர்ஸ்டாருக்கு வந்தது தான் என்று சங்கருக்கு தெரியும்.
சங்கரும் எவ்வளவோ முயற்சித்து பார்த்துவிட்டான். நண்பர்களின் பிறந்த நாள் விழா, படம் பார்க்க செல்லும் அவுட்டிங், கிரிக்கெட் விளையாடும் பொழுது. எல்லாமே முயற்சித்து விட்டான். சிக்கவில்லை. புகைப்படம் எடுப்பவர்கள் ஏனோ சங்கரை மட்டும் விட்டுவிடுவார்கள்.
ஒரு நாள் ஒரு பாட்டு கச்சேரிக்கு சென்றிருந்த போது பார்வையாளர்களை புகைப்படம் பிடித்தவன், சங்கரை மிக அழகாக படம் பிடித்திருந்தான். வெளிச்சம் அவன் மீது கொஞ்சம் மங்கலாக விழுந்து ஒரு வித பொலிவுடன் அவன் முகத்தை காட்டியது.
“அடடே! நானா இது?” என்று ஒரு வினாடி வியந்து போனான். பிறகு சோகத்தில் ஆழ்ந்தான். புகைப்படம் எடுத்தவன் அவனுக்கு ஆகாதவன். இப்போது அதை டிஸ்ப்ளே பிக் ஆக்கினால், அவனின் திறமையை அங்கீகரிப்பது போல ஆகி விடுமே. அவனுக்கு நன்றிகளும் சொல்ல வேண்டி இருக்கும். அந்த பொழப்புக்கு டிஸ்ப்ளே பிக் இல்லாமலே இருக்கலாம் என்று முடிவு செய்தான்.
இரண்டு வாரங்களுக்கு பின், எல்லா இளைஞர்களுக்கும் ஏதோ ஒரு நாள் ஏற்படும் அந்த துயரமும் சங்கருக்கு நேர்ந்தது. ஏதோ ஒரு பாட்டு கேட்டப்படி ஏகாந்தமாக எஸ்க்கலேட்டரில் ஏறிச்செல்கையில், யாரோ அவனின் முதுகை தட்டினார்கள். திரும்பி பார்த்தால் ஒரு இளைஞன். யார் என்று தெரியவில்லை. காதிலிருந்து இசை அருவியை பிரித்தான் சங்கர். அந்த இளைஞன் உடனே, “அங்கிள்! இவ அழகா இருக்கா தானே?” என்று கேட்டப்படி அவன் பின்னே நிற்கும் பெண்ணை சுட்டிக்காட்டினான். அந்த பெண் வெட்கப்பட்டுக்கொண்டு அந்த இளைஞனின் தோளை தட்டினாள்.
சங்கருக்கு புரியவில்லை. முழித்தான். “சாரி?” என்றது அவன் வாய் தானாக. “இந்த பொண்ணு அழகா இருக்கா தானே அங்கிள்?” என்று அந்த இளைஞன் மறுபடியும் குத்தினான்.
“ஆ...மா...” என்று பிதற்றினான் சங்கர்.
“தேங்க்ஸ்!” டப்பென்று அந்த இளைஞன் அந்த பெண்ணின் பக்கம் திரும்பி அவளுடன் பெசத்தொடங்கிவிட்டான். அந்த பெண் வெட்க்கப்பட்டு அந்த இளைஞனின் தோளில் குத்தினாள். சங்கர் மெதுவாக திரும்பி காதில் இசை அருவியை மீண்டும் இணைத்துக்கொண்டான். ஆனால் அவனுக்கு சங்கீதம் கேட்கவில்லை. “அங்கிள்… அங்கிள்… அங்கிள்…” என்ற ஒரே வார்த்தை மீண்டும் மீண்டும் ஒலித்தது.
“அது ஏன்டா என்ன பாத்து அந்த கேள்விய கேட்ட? நான் உனக்கு பார்க்க அங்கிள் மாதிரியா இருக்கேன்? டேய்! உன்ன விட எனக்கு வயசு கம்மியா இருக்கும்டா… எத வெச்சு அவன் நம்மள அங்கிள்னு எடை போட்டான்?”
தன்னை மேலும் கீழும் பார்த்து கொண்டான் சங்கர். அவனுக்கு புலப்படவில்லை.
“நம்ம முகத்துலயே இருக்கோ?”
தனக்கு இருப்பத்தி நான்கு வயது தான் ஆகிறது என்றபோது திடுக்கிட்டுப்போன சக ஊழியரின் முகம் சங்கருக்கு நினைவு வந்தது.
அடுத்த நாள் சங்கர் முஸ்தப்பா கடையில் ஜீன்ஸ் பிரிவில் அலைந்துகொண்டிருந்தான். அடுத்து கூலிங் கிளாஸ் பிரிவில் அரை மணி நேரம். அடுத்து காலணிகள் பிரிவில் 20 ஜோடி ஷூக்கள் அணியப்பட்டு புறக்கணிக்க பட்டன. எல்லாம் முடிந்து, ட்ரயல் ரூமை விட்டு வெளியே வந்த சங்கர், பாட்ஷா ரஜினி போல இடுப்பில் கை வைத்துக்கொண்டு வாசலில் நின்றான்.
“இப்போ வாங்கடா! எவனாச்சும் வந்து அங்கிள்னு சொல்லிப்பாருங்க...”
அவனுக்கு அடுத்து ஒரு சிறுமி உள்ளே செல்ல காத்திருந்தாள். இரண்டு மூன்று சட்டைகளுடன் அந்த சிறுமியின் அம்மா அருகில் நின்றிருந்தாள். வெளியே வந்த சங்கரை பார்த்தவுடன், அந்த அம்மா தனது மகளிடம், “பாப்பா! வழி விடுங்க. அங்கிள் போகட்டும்.” என்றாள்.
வானில் இடி இடித்தது. கொட்டும் மழையில் நனைவது கூட தெரியாமல், எம்.ஆர்.டி ஸ்டேஷனுக்கு நடந்தான். ரயில் பயணம் முழுக்க மூடிய கதவில் சாய்ந்தப்படி, வானின் கருமேகங்களை பார்த்தப்படி பயணித்தான். மழை ரயிலின் கண்ணாடி ஜன்னலில் கண்ணீர் துளிகள் போல வழிந்தது.
கைபேசியை மெதுவாக வெளியே எடுத்தான். பேஸ்புக்கில் தன்னுடைய பழைய படங்களை மீண்டும் பரிசீலித்தான். “அங்கிள்” என்று தோன்றிய படங்களை, எவ்வளவு லைக் வந்திருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் நீக்கினான். ஆனால் இன்னும் டிஸ்ப்ளே பிக்கில் ரஜினி வெள்ளை புகை கக்கி கொண்டிருந்தார்.
“எது நமக்கு தேவையோ அதை கடவுள் கொடுப்பார். எது அவர் நமக்கு கொடுக்கவில்லையோ, அது நமக்கு தேவையில்லை.” பேராசையை பற்றி எட்டாம் வகுப்பு ஆசிரியர் கூறிய வரிகள். இவ்வரிகள் நினைவுக்கு வந்தாலும், சங்கரின் மனம் அமைதிக்கொள்ளவில்லை.
“மழை காரணமாக ரயில் சற்று மெதுவாக செல்லும். உங்கள் புரிதலுக்கு நன்றி.” என்ற யந்திர குரல் சங்கரை மீண்டும் பூமிக்கு கொண்டுவந்தது. உட்கார இடம் இருக்குமா என்று சுத்தி பார்த்தான்.
அப்போது தான் அந்த சீன தம்பதியை கவனித்தான். பார்பதற்கு கணவன் மனைவி போல இல்லாமல், அப்பா மகள் போல இருந்தாலும், ஒரு வித “கெமிஸ்ட்ரி” அவர்களுக்குள் இருந்தது. அந்த ஆணுக்கு வெள்ளை தலைமுடி, ஆனால் சுறுசுறுப்பான உடல் பாவனை. அந்த பெண்ணோ டை அடித்திருந்தாள். இருவரும் தலைகளை இணைத்து, பல கோணங்களில் செல்பீ எடுத்துக்கொண்டிருந்தனர். எடுத்தப்பின் அந்த படங்களை அவர்களே பார்த்து ரசித்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த தம்பதி எதிரில் அமர்ந்திருந்த ஒரு முதியவள், எழுந்து, அந்த கணவனுக்கு இடம் அளித்தாள். அந்த கணவன் அதை ஏற்றுகொள்ளவில்லை. “எனக்கு எதுக்கு முதியவர் சீட்டு?” என்று அவர் மறுத்துவிட்டார். சில வினாடிகளுக்கு பின், அவர் முகம் மாறியது. அந்த முதியவள் ஏன் அவருக்கு சீட்டு கொடுக்க எழுந்தாள் என்று அவருக்கு மெதுவாக புரியத் தொடங்கியது. அதை பொருட்படுத்தாமல் அவர் செல்பீ எடுப்பதை தொடர்ந்தார்.
சங்கர் மனதில் ஒரு திடீர் புரிதல், மின்னல் போல பாய்ந்தது. அந்த மின்னல் ரயிலையும் தாக்கியது போல. உடனடியாக நின்றது. ரயிலிலிருந்த அனைவரும் திடுக்கிட்டனர். நகராமல் அப்படியே நின்றது ரயில். பிறகு சடாரென்று ரயிலுள்ளே இருக்கும் விளக்குகளும் அணைந்து போயின. தூரத்தில் யாரோ ஒரு பெண் கூச்சலிட்டாள். அவசர நேர விளக்குகள் மினுமினுத்து எரிந்தன. மழை இடியுடன் ரயில் கதவுகளை அடித்துக்கொண்டிருந்தது.
அந்த விளக்கொளியில், சங்கர் எதிரே இருக்கும் கண்ணாடி கதவில் முதல் முறையாக தனது பிம்பத்தை பார்த்தான்.
மடக்கென்று கைபேசியில் காமிராவை திறந்தான். தனது பிம்பம் தெரிவது போல ஒரு பிரேம் வைத்தான். படம் எடுக்க கட்டை விரலால் பொத்தானை அழுத்த செல்லும் நொடியில், ஒரு மின்னல் வானில் பரவியது. கிளிக்!
***
No comments:
Post a Comment