January 12, 2014

வயிற்று வலி வரவைப்பது எப்படி?

(I wrote this short story on the topic "Puriyadha Pudhir" for the Thangameen Short Story Contest held this month. Based on a true life incident.)


“அங்க ரோட்டுலயே சாதத்த போட்டு கொழப்பி அடிக்கலாம்டா. அவ்வளோ சுத்தம்! அங்கப்போய் நம்ம வீட்ட அழுக்கு பண்ணுற மாதிரி பண்ணிட்டிருக்காதே...”


“தப்பு பண்ணா தடியடி தான்டா. லஞ்சம் எல்லாம் வேலைக்காவாது. பாத்து நடந்துக்கோ!”


இவ்வாறு தோனுகிற விஷயங்களை அவரவர் சொல்லி, சிங்கப்பூருக்கு படிக்கச் செல்லும் ராமுவை பயமுறுத்திவிட்டார்கள். இவையாவும் மண்டைக்குள் ஏற்றியப்படி, ராமு சிங்கப்பூருக்கு வந்து சேரும்போது, போகும் இடமெல்லாம் காமிரா. அதனால் கடையில் ஒரு சாக்கலேட் வாங்கி திங்கும்பொழுதுகூட, அவனுக்கு கைகள் நடுங்கும்.


“ஒரு வேல தெரியாத் தனமா சாக்கலேட் கவர் கீழ விழுந்துட்டா, அது காமிராவுலத் தெளிவா பதிவாகி, அப்புறம் முக அடையாளம் கண்டுக்கொள்ளும் தொழில்நுட்பம் உபயோகிச்சு, அது மூலமா நான் யாருன்னு கண்டுப்பிடிச்சு, எனக்கு அபராதம் கட்டச் சொல்லி ஈ-மெயில் அனுப்பி, அதோட பிரிண்ட் காபியை ஊருக்கு போஸ்ட்ல அனுப்பிட்டாங்கன்னா?” என்று வாயில் சாக்கலேட் மெல்லும்போது, அவன் மனதில் பயம் நாட்டியம் ஆடும்.


இப்படி ஒரு பயந்தாங்கோலியாக இருந்த ராமுவை, “என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே” பாட்டை விசில் அடித்துக்கொண்டே, குடித்து முடித்த ட்ரின்க் கேனை, சிங்கப்பூரில் நடு ரோட்டில் போடும் அளவிற்கு வீரனாக மாற்றியது ஒரு சம்பவம்.

***

என்.யூ.எஸ்-ஸில் ராமுவிற்கு இரண்டாவது செமஸ்டர். “இந்தியனா? அப்போ கம்ப்யூட்டர் சயன்ஸ் தானே படிக்கறே?” என்று சில சிங்கப்பூர் நண்பர்கள் கேட்ட கேள்வி, அவனை துடுக்குத்தனமாக ஒரு சினிமா சப்ஜெக்ட் எடுக்க வைத்தது.

“நாங்க இந்தியர்கள் சினிமாவும் படிப்போம்”, என்று பெருமையாக முதல் லெக்சரில் பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருந்த ஜோசபீனிடம் சொன்னான் ராமு.

இந்த சினிமா சப்ஜெக்ட்டினால் மிகவும் ஜாலியாகப் போனது அந்த செமஸ்டர். முதியோர் இல்லத்திற்குச் சென்று, தனியாக அவதிப்படும் தாத்தா பாட்டிகளை பற்றி ஒரு ஆவன படம் ராமுவும், ஜோசபீனும், அவளது நண்பர்களும் இனைந்து எடுத்தார்கள். ப்ரொபசர் வாங்கிடமிருந்து பாராட்டுகளும் பெற்றார்கள். ப்ரொபசர் வாங் ஒரு வினோதமான மனிதர். ஒவ்வொரு வாரமும் யாரும் சுத்தமாக கேள்வியே படாத படங்களை தேடிக் கண்டுப்பிடித்து, மாணவர்களுக்குத் திரையிடுவார். ஒவ்வொரு சீனையும் விவரிக்கும்பொழுது, ஏதோ அவரின் சொந்த மகன் பீ.எஸ்.எல்.ஈ தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்தார்ப்போல் ஒரு பூரிப்பு அவர் முகத்தில் இருக்கும்.

“ச்சே! என்ன ஒரு கலா ரசிகன்யா இவரு...” என்ற வியப்பு ராமுவிற்கு. அதே வியப்புடன், இறுதி பரிட்சைக்கு முந்தைய நாள், கல்லூரி நூலகத்திற்கு சென்றான். அடுத்த நாள் சினிமா பரிட்சை என்பதால், சில திரைப்படங்களை பார்த்து தயாராக வேண்டிருந்தது. அந்த படங்களை எல்லாம் அள்ளிக்கொண்டு, நூலகத்தில் ஓரமாக இருக்கும் ஒரு காட்சிப்பெட்டியின்முன் அமர்ந்தான். இந்த படங்களின் ஒவ்வொரு சீனையும் கரைத்துக் குடித்திடுவோம் என்று முடிவெடுத்தான்.

அரை மணி நேரம் கழித்து, அவனது கண்கள் மெல்ல திறந்தன. கண் முன்னே ஏதோ ஒரு கருப்பு உருவம்... கோட் போட்ட முதியவன்... ஒரு லிப்ஸ்டிக் அணிந்த பெண்ணிடம் பேசிக்கொண்டு இருந்தார்… காட்சிபெட்டிக்குள்…

“ஓ... தூங்கிட்டோமா...” கை கால்கள் எங்கே இருக்கின்றன என்று சோம்பல் முறித்துகொண்டே ஒரு கணக்கீடு செய்தான். “ரூமுக்கு போய் முழுசா மட்டையாகிடுவோம்.”

மாலை 5 மணிக்கு விழிப்பு மீண்டும் வந்தது. எழுந்தவாறே பேஸ்புக்கில் உட்கார்ந்தான். திரையை சற்று உருட்டியதும், ஜோசபீன் போட்டிருந்த ஸ்டேடஸ் அப்டேட், அவன் கண்ககளில் மாட்டியது.

“Done with all exams! Yipppee!” (“எல்லா பரிட்சைகளும் முடிஞ்சுதுடா சாமி!”)

“என்னடா இவ, சினிமா பரிட்சைய நாளைக்கு வெச்சுக்கிட்டு எல்லாம் முடிஞ்சுதுன்னு ஸ்டேடஸ் போட்டிருக்கா?”

மூன்று வினாடி நிசப்தம்.

“டேய்ய்ய்!!!” என்று அலறியபடி, நடுங்கும் விரல்களால் என்.யூ.எஸ் இணையதளத்திற்கு சென்றான். மே 5 காலை 9 மணிக்கு பரிட்சை என்று போட்டிருந்தது. இன்றைக்கு தேதி என்ன? டக்கென்று போனை கையில் எடுத்தான். “இன்னிக்கிதான் மே 5...” திரும்பவும் கம்ப்யுட்டரை பார்த்தான். அதுவும் தேதி மே 5 என்று வெட்கமே இல்லாமல் கூறியது.

“ஹல்லோ... ஜாக்?”

“எஸ் ராம்... டெல் மீ...”

“வாஸ் தி பிலிம் ஸ்டடீஸ் மாடூல் எக்ஸாம் டுடே?”

“எஸ். ஐ டீடிண்ட் சீ யூ தேர்...” அப்புறம் ஜாக்கிற்கும் புரிந்தது, “ஷிட் மேன்! யூ மிஸ்ட் இட்? வாட் ஆர் யூ கோயிங் டு டூ நவ்?”

ராமுவிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. போனை கட் செய்தான். “அப்போ இன்னிக்கி காலையில பரிட்சை நடந்திருக்கு... அந்த சமயம் நம்ம நூலகத்துல உக்காந்துக்கிட்டு படம் பாத்திருக்கோம்… அப்படியே தூங்கிருக்கோம்…”

“தேவையாடா உனக்கு இது! எல்லாரும் எடுக்கற சப்ஜெக்ட் எடுத்திருந்தா பரிட்சை என்னிக்கின்னு குழம்பியிருக்க மாட்ட. என்ன டா பண்ணுறது இப்போ? ப்ரொபசருக்கு மணி அடிச்சு வேற என்னிக்காச்சும் எழுத முடியுமான்னு கேக்கலாமா? அந்த மாதிரி எழுத விடுவாங்களா? அப்படி விடாட்டி... பெயில் தான்....”

அம்மாவின் முறைத்தப்படியான முகம் அவன் கண் முன்னே தோன்றியது. பக்கத்திலேயே தம்பியின் நக்கல் சிரிப்பு முகம். அதன் பக்கத்தில் பாட்டியின் ஒன்றும் புரியா முகம். அதன் பக்கத்தில் அவனுக்கு சிங்கப்பூரில் படிக்க ஸ்காலர்ஷிப் தந்தவர்களின் முகங்கள். “ஸ்காலர்ஷிப்பை புடிகிடுவாங்களோ? அப்புறம் எந்த முகத்த வெச்சுக்கிட்டு இந்தியா போறது?”

இவ்வாறு ராமுவின் மனம் யோசித்துக்கொண்டிருக்க, அவன் வலது கை போனில் இருக்கும் ஒவ்வொரு பெயராகத் தேடிக் கொண்டிருந்தது. கடைசியாக ராகவேந்திரா என்ற பெயரில் வந்து நின்றது. இவர் தான் கூப்பிட சரியான ஆள் என முடிவு செய்தான். என்.யூ.எஸ்ஸின் நெளிவு சுளிவு தெரிந்த சீனியர். அவரும் ஒரு முறை பரிட்சை எழுதாமல் விட்டதாக எங்கோ கேட்டதுபோல் ஞாபகம் இருந்தது ராமுவிற்கு.

“மச்சான்! ப்ரொபசருக்கு மொதல்ல ஒரு ஈ-மெயில் அனுப்பு... ஒடம்பு செரியில்லாததுனால வர முடியலன்னு. அப்புறம் சீக்கிரமா ஒரு டாக்டர் காலுல விழுந்து ஒரு எம்.சீ வாங்கு.”

“சிங்கப்பூர்ல அப்படி எல்லாம் தருவாங்களா?”

“எதாச்சும் சின்ன கிளினிக்ல இருக்கற டாக்டரை கேட்டு பாரு. கேக்காட்டி உன் நெலமைய சொல்லி கெஞ்சிப் பாரு.”

“வேற வழி இல்லியா ராகா?”

ராகாவேந்திரா மெளனமாக இருந்தார்.

“நீங்க எக்ஸாம் கோட்டைவிட்டப்போ இதான் பண்ணீங்களா?”

“நானா? நான் எந்த எக்ஸாமும் கோட்டை விடலியே...”

“ஓ… அப்போ உங்களுக்கு தெரிஞ்சு யாராச்சும் கோட்டைவிட்டாங்களா? அவங்க கிட்ட எப்படி சமாளிச்சாங்கன்னு கேட்டுத் தெரிஞ்சுப்பேன்.”

“எனக்கு தெரிஞ்சு கோட்டைவிட்ட எல்லாருக்கும் புட்டுக்கிச்சு. உனக்கு புட்டுக்காம இருக்கவும் வாய்ப்பு இருக்கு…”

ராகவேந்திரா சொன்னது, போட்டியில் தோத்தவுடன் “எல்லோரும் நல்லா தான் பண்ணீங்க… அடுத்தமுறை முயற்சி பண்ணுங்க… கண்டிப்பா ஜெயிக்கலாம்...” என்று நீதிபதி ஆறுதல் சொல்வது போல் இருந்தது.

கம்ப்யூட்டர்முன் அமர்ந்து மளமளவென்று ப்ரொபசர் வாங்கிற்கு ஈ-மெயில் அடித்தான் ராமு. அதில் வார்த்தைகளை மன்னிப்பு தொனியில் கோர்த்துக்கொண்டே, எம்.சீயை பற்றி யோசித்துக்கொண்டு இருந்தான். “கண்டிப்பா இந்த ஊருல எந்த டாக்டரும் போலி எம்.சீ தர ஒத்துக்க மாட்டாங்க. பிளஸ் என்.யூ.எஸ்ல இருக்கறவங்க இந்த மாதிரி எவ்வளவு கேஸ் பாத்திருப்பாங்க. கண்டிப்பா அப்போ சின்ன கிளினிக் டாக்டர் குடுக்கற எம்.சீயை ஒத்துக்க மாட்டாங்க. அப்போ என்.யூ.எச் (நேஷனல் யுனிவர்ஸிட்டி மருத்துவமனை) லேர்ந்தே வாங்கினா? அப்படின்னா டாக்டரை ஏமாத்தனும்...”

பாதி ஈ-மெயில் அடித்தவுடன் குழம்பிப்போய் அவன் விரல்கள் நின்றன. உடம்பிற்கு என்னவாயிற்று என்று போட வேண்டும். என்ன போடலாம்? பரிட்சைக்கே போகமுடியாத அளவிற்கு கொடூரமாக இருக்க வேண்டும். அதே சமயம் அந்த வியாதியை சுலபமாக வரவைத்து ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும்.

ஜூரம்? உடனே கூகிளை திறந்து, ஜூரம் வரவைப்பது எப்படி என்று அடித்தான். அவனுக்கு சிறுவயதில் எங்கோ படித்த ஞாபகம். வெங்காயத்தை கக்கத்தில் சில மணி நேரம் வைத்தால் ஜூரம் வருமென்று. அவ்வாறே பல இணையதளங்களில் போட்டிருந்தனர். மடக்கென்று எழுந்து ரூம் கதைவை திறந்தான்.

கால் கிலோ வெங்காயத்துடன் ரூமுக்குள் திரும்பினான். இரண்டு வெங்காயங்களை வெளியே எடுத்தான். “தோலை சீவனுமா சீவக்கூடாதா?” என்ற கேள்வி எழுந்தது. ஒரு பக்கம் சீவிய வெங்காயமும், மறு பக்கம் சீவாத வெங்காயமும் வைத்துக்கொண்டு மெத்தை மீது படுத்தான். தலைக்கு மேல் சுத்திக் கொண்டிருந்த மின்விசிறியை பார்த்துகொண்டே 15 நிமிடங்கள் கழிந்தன. கழுத்தை கையால் தொட்டுப்பார்த்தான். கொதிப்பு ஏற்பட்டதுப்போல் தெரியவில்லை. படபடப்பு அதிகமானது. “இப்ப என்ன செய்யுறது?” ஜூரம் வேலைக்கு ஆகாது என்று மெத்தையிலிருந்து எழுந்தான். இரண்டு வெங்காயங்களும் மெத்தையின் கீழ் உருண்டோடின.

“ஸ்கூல்லயே ஜூரம்னா டீச்சர் நம்ப மாட்டாங்க... கல்லூரியில யாரு நம்புவா?”, ன்னு ஜூரத்தை கை விட்டான். அப்போது தான் அவன் மண்டைக்குள் மணி அடித்தது.

“வாந்தி!” என்று அலறிக்கொண்டே பாத்ரூமுக்கு ஓடினான். குழாயை திறந்து தன் முன்னே இருக்கும் கண்ணாடியை பார்த்தான். வயிற்றில் பெரட்டுவதுபோல் மனதில் கற்பனை செய்தான். இரண்டு முறை “வாக்” என்று சப்தமிட்டு பார்த்தான். பிறகு விரல்களை வாய்க்குள் விட்டு ஆட்டினான். குமட்டியது. ஒரு வினாடி பரவசமானான். ஆனால் எச்சிலை தவிர வெளியே எதுவும் வர வில்லை. கண்ணாடியை பார்த்தான். நேரம் ஓடிக்கொண்டிருந்தது. இன்றிரவிற்குள் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும்.

***

தூரத்தில் என்.யூ.எச்சின் அவசர சிகிச்சை நுழைவு தெரிந்தது. வயிற்றை பிடித்துப்படி முடியாமல் நடப்பதுபோல் மெதுவாக நடந்தான். மனதில் பதட்டப்படாமல் ஒவ்வொரு விஷயமும் சரியாக இருக்கிறதா என்று யோசித்துக்கொண்டான். “முடிய களச்சு விட்டாச்சு. பழைய சட்டை போட்டுக்கிட்டாச்சு. சட்டையில் முதல் பட்டனை திறந்து விட்டாச்சு. கண்கள் கலங்கி இருக்க வேண்டும்...” பக்கத்தில் இருந்த ஒரு விளக்கை உற்று பார்த்துக்கொண்டே மெதுவாய் நடந்தான். “கொஞ்சம் நொண்டலாமா? ச்சே! ஓவரா இருக்கும். வேண்டாம்!”

அவசர சிகிச்சை நுழைவை அடைந்தான். கவுன்ட்டர் பின்னேயிருந்து ஒரு பெண்மணி, “எஸ்?” என்றாள்.

“டாக்டர்.... வான்ட் டு சீ டாக்டர்... ” என்று தடுமாறிய குரலில் உளறினான். கண்கள் கலங்கி இருந்ததால் அப்பெண்மணி எங்கே நிற்கிறாள் என்று தெளிவாக தெரியாமல், அவன் கண்கள் அங்கும் இங்கும் அலைந்தன.

“வாமிட்டிங்... ஸ்டொமக் ஏக்... டூ சம்திங்...”

கைகளை வைத்து கவுன்ட்டரை இறுக பிடித்துக் கொண்டான். அவன் நினைத்தவாறே யாரோ ஒருத்தர் மளமளவென்று சக்கிர நாற்காலியைத் தள்ளிக்கொண்டு வந்து அதிலே அவனை உட்காரச் சொன்னார்கள். பிறகு அவனை தள்ளிக்கொண்டுபோய் ஓரிடத்தில் காத்திருக்க வைத்தார்கள். அவன் முன்னே உட்கார்ந்திருந்த நோயாளிகளை ஒரு முறை தலையைத் தூக்கியப்படி பார்த்தான். அந்த கும்பலில் ஒருத்தன் முடியாதவன்போல தலை தொங்கிப்போய் இருந்தான். அவனை உற்றுக் கவனித்து அதே கோணத்தில் தலையை தொங்கவிட்டான். இதுவரை எல்லாம் சரி.

5 நிமிடத்தில் ஒரு நர்ஸ் ஓடிவந்து, “தம்பி இங்கயே வெயிட் பண்ணுறியா? இல்ல படுத்துக்கறியாப்பா?” என்று கேட்டாள். “முடியல... எதாச்சும் பண்ணுங்க...” என்று சாகப்போகிறவன்போல் பேசினான். அந்த நர்ஸ் பயந்து போய், உடனே அவனை அவசர சிகிச்சை வார்டிற்குள் தள்ளிக்கொண்டு போனாள்.

“முதலில் உனக்கு ட்ரிப்ஸ் கொடுக்கிறோம்...” என்று சொன்னப்படி ஊசியை தயார் செய்தாள். ராமுவிற்கு லேசாக பயம் வந்தது. “டாக்டர்?..” என்று கேட்டான்.

“வருவார். கவலை படாதே.” என்றாள் நர்ஸ்.

***

“எப்படி மச்சி இருக்க?”

கண்களை மெதுவாக திறந்து பார்த்தான் ராமு. அவனின் நண்பன் விவேக்.

“டேய் மச்சி! எக்ஸாம் ஒன்னு கோட்டைவிட்டுட்டேன். ஆஸ்பத்திரிக்குபோய் எம்.சீ வாங்கணும். கூட வரியா?” என்று மணியடித்து கேட்டபோது, “போடா டேய்! யாரு காதுல பூ சுத்தற? கலாய்க்க வேற ஆள் இருந்தா பாரு!” என்றபடி போனை கட் செய்த அதே விவேக் இப்போது அவன் பக்கவாட்டில் நின்றுக்கொண்டிருந்தான். ராமு அவனை முறைத்தான்.

“டே சாரி டா. நீ விளையாட்டுக்கு சொல்லுறன்னு நினச்சுட்டேன். எப்படிடா பரிட்சை இருக்கறதபோய் மறந்த?”

ராமு சில கெட்ட வார்த்தைகளை கொட்டுவதற்குள், முதலில் பதறிய அந்த நர்ஸ் திரும்ப வந்தாள். “தம்பி நீங்க ரொம்ப வீக்கா இருக்கீங்க. எதாச்சும் சாப்பிடனும். மைலோ குடிக்கறீங்களா? இல்ல ப்ரெட் சாப்படறீங்களா?”

“மைலோவே...”

ராமுவிற்கு உண்மையிலேயே தொண்டையிலிருந்து வார்த்தை வரவில்லை.

நர்ஸ் தலையாட்டியப்படி கிளம்பினாள். பக்கத்தில் இருந்த விவேக்கின் உடல் குலுங்க ஆரம்பித்தது. ராமு திரும்பி பார்த்தான். தலையை குனிந்தப்படி அவன் குலுங்கி குலுங்கி சிரித்துகொண்டிருந்தான்.

“டேய்! டாக்டர் இன்னும் வரல டா. சிரிப்ப நிப்பாட்டு!”

“விட்டா உனக்கு வட பாயசத்தோட இங்கயே சாப்பாடு போடுவாங்க போல இருக்கே...”

“சரி சரி... நீ கெளம்பு டா!”

கெளம்பு என்று சொல்லும் போது சற்று உணர்ச்சிவசப்பட்டு அவன் கையை நகர்த்தியதால், ட்ரிப்ஸ் ஏத்த குத்தியிருந்த ஊசி சுருக்கென்றது. கண்களை இறுக மூடிக்கொண்டான் ராமு.

“என்ன ஆச்சு? என்ன பிரச்சனை உங்களுக்கு?” என்றது ஒரு கணீர் குரல்.

கண்களை திறந்தால் வெள்ளையுடையில் கண்ணாடியணிந்த ஒரு உருவம் அவன் மணிக்கட்டை பிடித்தப்படி, ஒரு வட்ட டப்பியை அவன் நெஞ்சின் மீது அழுத்திக்கொண்டிருந்தது.

“வாமிடிங்… ஸ்டொமக் ஏக்...” என்று நூறாவது முறை ஒப்பித்தான்.

திரும்பி படு என்று சைகை காட்டியப்படி டாக்டர் கேட்டார், “எப்போ லேர்ந்து?”

ராமு மிக கவனமாக, “நேற்று ராத்திரியிலிருந்து டாக்டர்...” என்றான். அப்போது தான் எம்.சீயில் தேதியும் நேரமும் சரியாக வரும் என்ற யோசனை.

அப்புறம் திடீரென்று நேற்று ராத்திரியிலிருந்து என்றால் ஏன் இன்று வந்து அட்மிட் ஆனாய் என்ற கேள்வி வரக்கூடும் என்றெண்ணி, “ராத்திரிப்பூரா நகர முடியல டாக்டர். அப்படி ஒரு வலி. காலை முழுக்க வாமிட்டிங். சாயங்காலம் தான் எந்திரிக்க கொஞ்சம் முடிஞ்சுது.”

டாக்டர் எதுவும் பேசவில்லை. ராமுவின் இடுப்பருகே ஸ்டெதாஸ்கோப் வைத்தப்படி ஆழ்ந்து எதையோ கேட்டுக்கொண்டிருந்தார். “ஐயையோ! நம்ம டுபாகுருன்னு இது சொல்லிடுமோ?” என்ற பயம் அவன் மனதை ஆக்கிரமித்தது. வயத்து வலி இருக்கா இல்லியா என்று எந்த கருவியாலும் சொல்ல முடியாதென்று ஒரு இணையதளத்தில் படித்திருந்தான். ஆனா சிங்கப்பூர்ல எதாச்சும் அதிநவீன கருவி இருந்தா?

டாக்டர் மேலும் பலமாக அழுத்தியப்படி ஸ்டெதாஸ்கோப்பை கேட்டார். பிறகு அதை காதிலிருந்து கழற்றியப்படி ராமுவை திரும்ப நேராக படுக்கச் சொன்னார்.

“உங்களுக்கு அப்பெண்டிசிடிஸ்ன்னு நினைக்கறேன். இரண்டு நாள் தங்கி ட்ரீட்மென்ட் பண்ணனும்.”

ராமு பதறினான். “அப்பெண்டிசிடிஸா? ஒரு வேல இவரு நம்மள சொதிக்கறாரோ? என்னவாயிருந்தாலும் முகத்துல பயத்த மட்டும் காட்டாதே…” என்று தனக்குத் தானே அட்வைஸ் கொடுத்துக்கொண்டான்.

“நான் தங்க முடியாது டாக்டர்…. நாளைக்கே எனக்கு இந்தியாப்போக விமான டிக்கெட் இருக்கு…. எதாச்சும் மருந்து கொடுத்தீங்கன்னா...”

“ஓ அப்படியா… சரி நான் உனக்கு சில மருந்துகள் எழுதித் தரேன். அத சாப்பிடு. இன்னொரு ஒரு மணி நேரத்துல வீட்டுக்கு போய்டலாம். திரும்பவும் பிரச்சனைன்னா இங்க வந்திடு.”

சரசரவென்று பேப்பரில் ஏதோ கிறுக்கினார். கிளம்பி விடப்போகிறார் என்ற பதற்றத்தில் ராமு முனங்கினான், “எதாச்சும் நல்ல மாத்திரையா கொடுங்க டாக்டர்… வலி தாங்க முடியல… இதுனால இன்னிக்கி பரிட்சைய வேற விட்டுட்டேன்...”

எவ்வளவு சகஜமாக அதை சொல்ல முடியுமோ சொன்னான். டாக்டர் உடனே, “கவலை படாதே தம்பி. நான் நர்ஸ் கிட்ட சொல்லிடறேன். எம்.சீ வாங்கிக்கோ!”

சாக்ஷாத் அந்த பகவானே பூலோகத்திற்கு வந்து அவனை ஆசிர்வதித்ததுப்போல் இருந்தது ராமுவிற்கு. அப்போதுதான் நர்சும் மைலோ கொண்டுவந்தாள்.

***

“மச்சி கலக்கிட்டடா! சினிமா சப்ஜக்ட்ல கடசீல நடிப்பால தப்பிச்சுட்ட!”

பிலிம் சப்ஜெக்ட்டில் பெயில் ஆகாமல் தப்பித்ததற்கு ராமுவின் ட்ரீட். அவனும் அவனின் சில நண்பர்களும் ஒரு உணவகத்தில் சந்தோஷமாக சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். ஒவ்வொரு நண்பனும் சாப்பிட்டுக்கொண்டே ஏதோவொன்று சொல்லிக்கொண்டிருந்தான்.

ஒருத்தன், “டேய்! நீ ஏன் அடுத்த செமஸ்டர் அந்த பிலிம் சப்ஜெக்ட் திரும்ப எடுக்கக்கூடாது?”

இன்னொருத்தன், “ஆமா டா! எடுத்து நீ பண்ண கூத்தையே ஒரு குறும்படமா பண்ணி ப்ரொபசருக்கு காட்டேன்!”

மற்றொருத்தன், “ஒரு நாளில்ல ஒரு நாள் அவங்க லைப்ரரி காமிரால பதிவான வீடியோ பாக்க போறாங்க… அதுல நீ அன்னிக்கி காலைல உக்காந்து தூங்கிட்டு இருந்தத பார்த்து உன்ன பெயில் ஆக்க தான் போறாங்க… பாரு டி...”

ஆனால் இதையெல்லாம் ராமு காதில் வாங்கிக்கொள்ளவில்லை. பரோட்டா தின்றப்படியே அவன் யோசனை முழுவதும் அவன் காதில் கேட்கும் ஒரு குரலின் மீது தான் இருந்தது.

“உங்களுக்கு அப்பெண்டிசிடிஸ்ன்னு நினைக்குறேன்...”

“ஏன் அந்த டாக்டர் அப்படி சொன்னாரு? ஒரு வேளை அவரு பயிர்ச்சி எடுத்துக்கிட்டு இருந்த டாக்டரோ? இல்ல நம்மள அட்மிட் பண்ணி கொஞ்சம் காசு கறப்போமுன்னு நினைச்சாரா? நமக்கு நிஜமாவே அப்பெண்டிசிடிஸ் இருக்குமோ? இல்லாட்டி நம்ம அந்த அளவுக்கு சூப்பரா நடிச்சோமா? அப்படினா படிச்சு முடிச்சிட்டு பேசாம கோடம்பாக்கத்துக்கு கிளம்பிடுவோமா?”

இந்த கேள்விகளுக்கான பதில் தனக்கு எப்போதும் தெரியவராது என்று நினைத்து, மீதம் இருக்கும் பரோட்டாவை விண்டு வாய்க்குள் போட்டுக்கொண்டான் ராமு.

முற்றும்.