September 16, 2013

மொபைல் முனிவர்

எதன் மீது உனக்கு இணைப்பு உள்ளதோ, அதனால் உனக்கு துன்பம் நீளும்ன்னு புத்தர் சொல்லிட்டு போயிட்டாரு. அந்த ஆழமான தத்துவம் என் புத்திக்கு எப்போ எட்டிச்சு? ஸ்லோ மோஷன்ல என் கண்ணு முன்னாடி, அந்த காட்சி நடக்கும் போது தான். ஒரு கையில ஸ்டார்பக்ஸ் காபி, இன்னொரு கையிலஉன்னால் முடியும் - வாழ்கையை சீரமைக்க 7 வழிகள்என்ற புத்தகம். இரண்டு கையும் இப்படி பிஸியா இருக்கும் போது, மூணாவது பொருளை எடுக்கலாமா? இந்த ஞானம் அப்போ மூளைக்கு எட்டல. யாரோ போன் அடிக்கறாங்களே, எடுக்காட்டி தப்பா நினச்சுக்குவாங்களேன்னு, கைபேசியை மேஜைலேர்ந்து எடுத்தேன். என் கை தவற, கூடிலிருந்து விடுப்பட்ட பட்டாம்ப்பூச்சிப்போல கை பேசி எகுற, மெதுவா சுத்தி சுத்தி பூமி மாதாவை அது நெருங்க, வழவழப்பான தரையில லேசான சத்தத்தோட அது முத்தமிட, கைபேசியின் திரையில மரக்கிளைகள்போல பிளவுகள் படர, என் விரல்கள் பரதமாடிய பொத்தான்கள் தெறிக்க... 

என் போன் ஒடஞ்சு போச்சு மச்சின்னு என் நண்பன் அறிவு கிட்ட சொல்லி, சோகத்தை மறக்க சாய் டீ லாட்டேவை ஒரு வாய் குடிச்சேன். அறிவு என்ன மொறச்சு பாத்தான்

டேய் அந்த டப்பா போன் தானே டா! எவ்வளோ வருஷமா அதையே வெச்சு பிளாஸ்திரி போட்டுக்கிட்டு இருந்த. நல்லதா போச்சு... புதுசா ஒன்னு வாங்கித்தொல!”

எனக்கு அதே மாடல் தான்டா வேணும்!”ன்னு மனம் தளராம நான் சொன்னேன். சொல்லிட்டு நான் சீரியசா இருக்கேன்னு காமிக்க, மிச்சம் இருந்த லாட்டேவை மடக்குன்னு ஒரே வாயில குடிச்சு, கம்பீரமா மேஜை மேல கப்பை வெச்சேன். ‘தலைவாபடம் முதல் ஷோவுல எல்லோரும் விசில் அடிச்சிட்டு இருக்கும் போது, பக்கத்துல இருக்கற நண்பனின் தோளை சுரண்டி, “மச்சி! என்ன தான் இருந்தாலும் எம்.ஜீ.ஆர் மாதிரி வருமாடா?” அப்படின்னு சொன்னா என்ன ரியாக்ஷன் வருமோ, அதை துல்லியமா முகத்துல காமிச்சான் அறிவு.

யாரையும் கடுப்பேத்துறது என் நோக்கம் இல்லீங்க. உண்மை இதாங்க. எனக்கு இந்த -போன், புதுசா வர டச்-போன் இதுல எல்லாம் ஈடுபாடு கெடையாது. எனக்கு பிடிச்சது என்னோட நோக்கியா 6188. கையுக்கு அடக்கமா... தூக்கறதுக்கு கனமா இல்லாம... உண்மைய சொல்லனும்னா எனக்கு ஏன் அந்த போன் பிடிச்சிருக்குன்னு சொல்ல தெரியல. உங்க காதலிய இந்த இந்த காரணங்களுக்காக பிடிச்சிருக்குன்னு நீங்க லிஸ்ட் போட முடியுமா? அப்படி போட்டா அது காதலா? சொன்னா நம்ப மாட்டீங்க... நான் முதல் முதல்ல என் போனை பார்த்தது எங்க ஊருல ஒரு புது ஷோரூம்ல. அங்க பல விதமான மொபைல் போன் அடுக்கி வெச்சிருந்தாங்க. அந்த சமயத்துல, என்னை பொருத்தவரைக்கும் ஒரு போன் அப்படின்னா கால் அடிக்க மட்டும்தான். காமிரா, ப்ளூடூத் இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் என்னான்னே தெரியாது. சும்மா பொத்தாம்பொதுவா சுத்தி பாத்துக்கிட்டு இருந்தேன். அப்போ ஒரு போன் மட்டும் என்னை, “டேய் மகேசு.. மகேசு இங்க பாருடா..” அப்படின்னு கூப்பிடற மாதிரி இருந்துச்சு. திரும்பி பார்த்தா அப்படியே மனச கொக்கி போட்டு இழுத்துச்சு. அப்போ செலக்ட் பண்ணதுதாங்க!

அதுக்கப்புறம் அந்த போன் யூஸ் பண்ண பண்ண தான், அது பத்தின பல விஷயங்கள் தெரிய வந்திச்சு. அது ஒரு மாதிரி கிக்காவே இருந்துச்சுன்னு வெச்சுக்கோங்களேன். பெரியோர்களால் நிச்சயிக்க பட்ட திருமணத்துக்கு அப்புறம், வந்த மனைவிய காதலிப்பது போல. ஆனா அப்படி அணு அணுவா நான் காதலிச்ச என் போன், இப்போ என் கண்ணு முன்னாடி சிதறி கிடக்கு. ஏற்கனவே இந்த மாதிரி பல முறை கீழ விழுந்திருக்கு, ஒவ்வொருவாட்டியும் தமிழ் சினிமா கதாநாயகன் மாதிரி அடி தாங்கிடும். ஆனா இப்போ...

சார் கொஞ்சம் வழி விடுங்க...” கையால பல தொப்பைகள தள்ளியப்படி கவுண்ட்டர்ல இருந்த ஆளை நெருங்கினேன். “முஸ்தபால கெடைக்காத போனே இல்ல மச்சிஅப்படின்னு யாரோ சொன்னதா ஞாபகம். அதுனால ஞாயிற்றுகிழமையானாலும் பரவாயில்லைன்னு, அடிச்சு புடிச்சு முஸ்தபால நோக்கியா கைபேசிகள் இருக்கும் கவுண்ட்டருக்கு வந்துட்டேன். ஒவ்வொரு பக்தன் கிட்டயும் அர்ச்சனை சீட்டு வாங்கிட்டு, அவங்களோட பேரு நக்ஷத்திரத்தை பொறுமையா கேட்டபடி நம்மள காக்க வெக்கும் பூசாரி போல, அந்த கவுண்ட்டர்ல இருந்த ஆளு பொறுமையா என் கிட்ட வந்தாரு. “ஒரு நோக்கியா 6188 போன்...”ன்னு சொல்லி ஒரு சின்ன யோசனைக்கப்புரம், “...இருக்குமா சார்?”ன்னு சேர்த்துக்கிட்டேன்.

உண்மையா சொல்லுறேன், ஒரு அற செகண்ட் என்ன பாத்துட்டு, என் பக்கத்துல நின்னுட்டு இருந்த தொப்பி போட்ட தம்பி பக்கம் திரும்பிட்டார். அந்த தொப்பி போட்ட தம்பி ஏதோ போன் கேக்க, அத எடுக்கறதுல கவுண்ட்டர் ஆளு மும்முரமாகிட்டார்

தொண்டையை சரி செய்தப்படி இன்னும் கொஞ்சம் சத்தமா கேட்டேன், “சார்... நோக்கியா 6188...”

அந்த மாடெல் எல்லாம் இப்போ விக்கறது இல்லீங்க...”

என் முகம் பார்த்து கூட பதில் சொல்லல. வேற ஏதோ போனை டப்பாவுலேர்ந்து எடுத்தப்படி பதில் சொன்னார் அந்த கவுண்ட்டர் ஆளு. அந்த தொப்பி போட்ட தம்பிக்கு பக்கத்துல இருந்த ஜீன்ஸ் பாண்ட்குள்ள கை விட்ட தம்பி, என்ன பார்த்து ஒரு மாதிரி சிரிக்க ஆரமிச்சுட்டாரு.

நான் என்ன தப்பு பண்ணேன் சரண்யா? எனக்கு பிடிச்ச பொருள எப்பவுமே வெச்சுக்கனுமுன்னு நினைக்கறது தப்பா?” லேப்டாப் திரையில் ஸ்கைப் வழியாக என்னோட மனைவி கிட்ட கதறிக்கிட்டிருந்தேன். இரண்டு மாசமா போன் இல்லாத கடுப்பு

.டி.பேரை சுத்தி சுத்தி வந்தேன். பல மால்களுக்குள் நுழைஞ்சு கடை கடையா அலைஞ்சேன். “இந்த போன் லேர்ந்து நீங்க முகப்புத்தகம் கூட யூஸ் பண்ணலாம் சார்”,ன்னு கண்மை அதிகமா போட்ட ஒரு கண்மணி, அவங்க கடைய நான் தாண்டிபோறப்போ சொன்னாங்க. என் காதுல அது விழுந்தப்போ, பளிச்சுன்னு ஒரு ஐடியா வந்திச்சு. உடனே வீட்டுக்கு போய் முகப்புத்தகத்தை திறந்தேன். பிரெண்ட் லிஸ்ட்ல இருக்கற ஒவ்வொரு நல்ல நண்பருக்கும் மெசேஜ் அனுப்பிச்சேன். (அதவாது நான் போடும் ஸ்டேடஸ லைக் செய்யும் நண்பர்) ச்சே! முகப்புத்தகதுல ஒவ்வொருத்தர் ப்ரொபைல்லயும் அவங்க என்ன மாடல் போன் வெச்சிருக்காங்கன்னு போட்டிருந்தா, எவ்வளோ வசதியா இருந்திருக்கும். இப்போ ஒவ்வொருத்தருக்கும் மெசேஜ் அனுப்பனுமே... பேசாம காபி பேஸ்ட் பண்ணி, பெயரை மட்டும் மாத்திடலாமா?

ஹல்லோ <நண்பரின் பெயர்>, எப்படி இருக்கீங்க? நம்ம பேசியே எவ்வளோ நாட்கள் ஆச்சுல! எனக்கு ஒரு சின்ன உதவி செய்ய முடியுமா? வாய்ப்பு ரொம்ப கம்மி தான், ஆனா உங்க கிட்ட ஒரு நோக்கியா 6188 போன் இருக்குமா? இல்லாட்டி உங்களுக்கு தெரிஞ்சவங்க யார் கிட்டயாவது? நான் பண்ணுற ஒரு ரிசர்ச்சுக்கு அந்த போன் தேவைப்படுது. அப்படி உங்களால வாங்கி கொடுக்க முடிஞ்சுதுனா, நீங்க கேக்குற கமிஷன் கொடுக்க நான் ரெடி! கண்டிப்பா சொல்லுங்க. நன்றி, மகேசு

சில பேர் பாத்துட்டு, “கண்டிப்பா மகேசு! நான் சொல்லுறேன்அப்படின்னு பதில் சொன்னாங்க. சில பேர், மெசேஜ் பார்த்ததுக்கு டிக் அறிகுறி வந்திச்சு, ஆனா பதில் தான் வரல. இரண்டு வாரம் வெயிட் பண்ணேன். அதுக்கப்புறம், “போங்க டா டேய்! உங்க யாரோட உதவியும் வேண்டாம்! இந்த கலி யுகத்துல மனுஷங்கள நம்பி பிரயோஜனமே இல்ல...”ன்னு நினைச்சுக்கிட்டே, லேப்டாப்ல கூகிளை திறந்தேன். இரண்டு மணி நேரம் கழிச்சு, லேப்டாப்பை கடுப்புல மூடினேன். பக்கத்துல ஒரு கிளாஸ் கிண்ணத்துல இருந்த என் பழைய போனோட உடைஞ்ச பாகங்கள பார்த்தேன். தாங்க முடியாம அழுக வந்திச்சு. மேஜை மேல தலைய சாச்சேன்.

என் அன்புக்குரிய மகேசு, என்ன வரம் வேண்டும் உனக்கு?”

நிமிர்ந்து பார்த்தா, கடவுள் எனக்கு முன்னாடி பிரசன்னமாகியிருந்தார். எனக்கு ஒண்ணுமே புரியல. உடனே கன்னத்துல போட்டுக்கிட்டேன். அப்போதான் என் கன்னத்துலேர்ந்து பெரிய தாடி வளர்ந்திருக்குன்னு தெரிஞ்சுது. இடுப்பு வரைக்கும் எறும்புகள் மலை கட்டிருந்துச்சு. கடவுளை பார்த்து வணக்கம் சொன்னேன்.

பல வருடம் பலத்த தவம் செய்துள்ளாய்... என்ன வேண்டுமோ கூச்ச படாமல் கேள் குழந்தாய்!”

உங்களுக்கு தெரியாதது ஒன்னும் இல்ல சாமி... எனக்கு வேண்டியது எல்லாம் ஒரு நோக்கியா 6188 தான்...”

கடவுள் தலையை சாய்த்து சற்று யோசித்தார். பிறகு நிமிர்ந்து என்னை பார்த்து, “இதற்கு நீ ஏன் எட்டு ஆண்டுகள் கடும் தவம் செய்தாய்? நோக்கியா கால் சென்ட்டருக்கு ஒரு கால் அடித்திருக்கலாமே...”

ஞானபண்டிதா! என் அறிவு கண்ணை திறந்து விட்டாய்!” அப்படின்னு நான் சொல்லி முடிக்கறதும், கடவுள் மறையுரதும், நான் தூக்கத்துலேர்ந்து எழுந்திரிக்கறதும் சரியா இருந்துச்சு. உடனே வெளிய ஓடிபோய், நோக்கியா கால் சென்டருக்கே கால் அடிச்சேன். ம்-ஹூம்! “உங்களுக்காக ஸ்பெஷலா ஒரு பீஸ் தயாரிச்சா தான் உண்டு சார்!” அப்படின்னு சொல்லிட்டான். தலைய பிச்சுக்கலாம் போல இருந்துச்சு. அப்போ ஒரு யோசனை...

சினிமா நடிகர்களுக்கு டோப்பா, துணிகள், பொருட்கள் வாடகைக்கு தருகிற கடைங்களுக்கு போனேன். அங்கயும் இல்லைன்னு தலை ஆட்டினாங்க. கடுப்புல கேட்டேன், “ஹீரோ ஹீரோயின் கிட்ட காதல சொல்ல, ஒரு நோக்கியா 6188 போன் எனக்கு நாளைக்கே வேணும்னு, யாராச்சும் பெரிய டைரக்டர் கேட்டா என்ன சார் பண்ணுவீங்க?”. கடைக்காரன் என்னை பாத்துட்டு, “அந்த மாதிரி ஸ்கிரிப்ட் இன்னும் யாரும் எழுதலீங்க...”ன்னு மரியாதையோட பதில் சொன்னான்.

சுத்த வேஸ்ட்டுடா நீங்கெல்லாம்!”ன்னு கத்திக்கிட்டே, சிம் லிம் ஸ்க்வயருக்கு ஓடினேன். அந்த கட்டிடத்துக்குள்ள நுழையும்போது, என்னான்னு தெரியல, மனசுல கண்டிப்பா போன் இங்க கிடச்சிடுமுன்னு ஒரு நம்பிக்கை மணி அடிச்சுது.

பல கடைகளுளநோ சார்!”, “சாரி!” ன்னு பதில் வந்தப்புறம், இடுக்குல இருக்கற ஒரு கடை கண்ணுல பட்டிச்சு. அங்க மூக்கோட நுனியில கண்ணாடிய மாட்டிக்கிட்டு, அது வழியா பாக்காம, தலைய முன்பக்கமா சாச்சப்படி என்ன பாத்தாரு, ஒரு தாத்தா.

அங்கில்... யூ காட் தி நோக்கியா 6188 போன்?”

போன் பேரு கேட்ட உடனே, உதட கடிச்சு யோசிச்சாரு. அவர் பின்னாடி இருந்த பல மோடைகளில் அடுக்கியிருந்த டப்பாக்கள உத்து பாத்தாரு

ஒன் மினிட் ஆன்...”ன்னு சொல்லிட்டு ஒரு கதவு வழியா ஸ்டோர் ரூம் மாதிரி இருந்த ஒரு அறைக்குள்ள போனாரு. என்னோட நெஞ்சு ஆவலா அடிக்க ஆரமிச்சுது. ஸ்டோர் ரூம்லேர்ந்து கையில ஒரு டப்பாவோட திரும்பி வந்தாரு. அந்த டப்பா மேல இருந்த தூசிய ஊதியப்படி, அத கவுண்ட்டர் மேல வெச்சு, பிரிக்க ஆரமிச்சாரு. டப்பா வெறும் அட்டைபெட்டி டப்பாவா இருந்ததுனால, உள்ள என்ன இருக்குமுன்னு தெரியல. பிரிச்சா, பல விதமான பழைய கைபேசிகள் அதுக்குள்ள குவிச்சு கிடந்துச்சு.. 

ஸீ இப் யூ காட் ஹியர்... அங்கிள் ஐஸ் நாட் வெரி குட் ஆன்...”ன்னு சொல்லி அந்த அட்டைபெட்டி டப்பாவ என் கிட்ட கொடுத்தப்படி லேசா சிரிச்சார். நானும் அவர் கிட்டேர்ந்து அந்த டப்பாவை வாங்கி, அருசியில கல்லு தேடுற மாதிரி போன் தேட ஆரமிச்சேன். இவ்வளோ வித விதமா போன் இருந்திருக்கான்னு ஆச்சரியமா இருந்துச்சு. ஒவ்வொரு போன் எடுக்கும் போதும், இது எனக்கு வேண்டிய போன் இல்ல, ஆனா இதையும் தேடி ஒரு நாள் ஒரு மகேசு வருவான்ல... அப்படின்னு தோணிச்சு. அப்போ தான், அத பார்த்தேன். பிங்க் கலர் போன் ஒன்னுக்கு பின்னாடி... பாதி ஒலிஞ்சுக்கிட்டு, திருட்டுத்தனமா என்னை எட்டி பாக்குற மாதிரி பாத்துச்சு... கை ஒதர ஆரமிச்சது எனக்கு... மெதுவா அதை தொட்டு எடுத்தேன்... 6188... என்னோட செல்லம்... இது தான் எழுத பட்ட விதின்னு சொல்லுவாங்களோ... நான் மட்டும் இந்த இடுக்குல இருக்கற கடைய பாக்காம போயிருந்தா

ஒரு நிமிஷம் இரு... இந்த போன் இன்னும் கொஞ்சம் கனமா இருக்கணுமே... இவ்வளோ லைட்டாவா இருக்கும் 6188? போனை திருப்பி பாத்தப்போதான், அதுக்கு பின்னாடி ஒரு டாலர் அளவுக்கு ஓட்டை இருந்தது தெரிஞ்சுது. ஓட்டை வழியா பாத்தா போன்குள்ள ஒண்ணுமே இல்ல

அங்கிள் திஸ் போன் எம்ப்டி வாட்?!”

எம்ப்டி ?”

கண்ணாடிய மூக்கு நுனிலேர்ந்து கண்ணு கிட்ட கொண்டு வந்து, என் கையிலேர்ந்து அந்த டப்பா போனை வாங்கினாரு தாத்தா. கடுப்பு தலைக்கு ஏறிச்சு எனக்கு. சர்ருன்னு வெளிய வந்தேன். எம்.ஆர்.டிகுள்ள நுழைஞ்சு, ஒரு சீட்டுல உக்காந்துக்கிட்டு, -போட் வெளிய எடுத்து, ‘விடுகதையா இந்த வாழ்க்கைங்கற பாட்டை கேக்க ஆரம்பிச்சேன்

என் முன்னாடி இருந்த வரிசைல காபி கலர்ல முடி வெச்சிருந்த ஒரு தம்பி, கண்ண மூடி பாட்டு கேட்டுக்கிட்டு இருந்தாரு. அவர் முகத்துல ஒரு அமைதி. இறங்க வேண்டிய ஸ்டாப் வந்தா என்ன... வராட்டி என்ன... எனக்கு என்னோட இசையும் தூக்கமும் போதும், அப்படின்னு அவர் சொல்லுற மாதிரி எனக்கு தோணிச்சு. நானும் இனிமே இந்த காபி முடி தம்பி போல தான் இருக்கணும். இனிமே அந்த போன் கெடச்சா என்ன... கெடைக்காட்டி என்ன... நாசமாப்போகட்டும்! அப்படின்னு முடிவு பண்ணேன்.

அந்த தம்பிக்கு பக்கத்துல ஒரு ஆண்ட்டி. அவங்களும் காதுல இயர்போன்ஸ் மாட்டிக்கிட்டு, டச்-போன்ல ஏதோ வீடியோ பாத்துக்கிட்டு இருந்தாங்க. ச்ச... என்ன ஒரு நிம்மதியான பொழப்பு. பேசாம இந்த டச்-போனே வாங்கிடலாமா? அந்த எண்ணம் என் மனசுல வந்தப்போதான் கவனிச்சேன், என் முன்னாடி ஒரு பாட்டி நின்னுக்கிட்டு என்னையே முறைச்சு பாத்துக்கிட்டு இருந்தாங்க. கொஞ்ச நாள் முன்னாடி பேய் படம் பாத்திருந்ததுனால, எனக்கு லேசா தூக்கி வாரி போட்டிச்சு. அவங்க நம்மள தான் பாக்குறாங்களா, இல்ல வேற ஏதோ யோசனைல இருக்காங்களா?

டோர்ஸ் ஆர் க்ளோசிங்ன்னு சொல்லிச்சு அந்த இனிமையான பெண் குரல். எந்த ஸ்டேஷன்ல இருக்கோமுன்னு நிமிர்ந்து பார்த்தேன். சிகப்பு விளக்கு டோவர்லேர்ந்து கிளிமெண்டிக்கு மாறிச்சு

டேய்! மூணு ஸ்டாப் தள்ளி வந்துட்டடா!” மனசுக்குள்ளயே கேவலமா என்னை திட்டிக்கிட்டேன். அடுத்த ஸ்டாப்ல இறங்கி திரும்ப போகணும்... போன் இன்னும் கெடைச்ச பாடில்ல... அந்த பாட்டி வேற என்னையே முறைச்சு பாத்துக்கிட்டு இருக்கு... என்ன வேணும் அதுக்கு? அப்போ தான் எனக்கு மண்டைல உரைச்சுது, நான் ரிசர்வெட் சீட்டுல உக்காந்துக்கிட்டு இருக்கேன்னு. டக்குனு எந்திருச்சு அவங்களுக்கு சீட் கொடுத்தேன். அவங்களும் சிரிச்சுக்கிட்டே நன்றி சொல்லிட்டு உக்காந்தாங்க

திடீருன்னு யாரோ என்ன கூப்பிட்ட மாதிரி இருந்துச்சு. திரும்பி பார்த்தேன். நான் ரிசர்வெட் சீட்டை கொடுத்த அந்த பாட்டி, பைக்குல்லேர்ந்து போன் எடுத்து, யார் கூடையோ பேச ஆரமிச்சுட்டாங்க. அவங்க காது கிட்ட இருந்த முடியும், அவங்க கையும், கையில போட்டிருந்த பெரிய மோதிரமும், அந்த போனை கொஞ்சம் மறைச்சிட்டு இருந்துச்சு. ஆனா எவ்வளோ மேகங்கள் சூழ்தாலும், பிச்சுக்கிட்டு ஒளி அடிக்கிற சூரியன் மாதிரி மின்னிச்சு அந்த போன்... ஒரு கொக்கி என் மனசோட கதவ இரண்டாவது வாட்டி தட்டிச்சு...