March 13, 2016

வுட்லாண்ட்ஸிலிருந்து தியாங் பாரு

கோகுலுக்கு அந்த நாளின் தேதி ஞாபகம் இல்லை. ஆனால், அறையில் நுழைந்தவுடன், அவன் நண்பர்கள் நாலு பேரும் ஒருவரை ஒருவர் பார்த்தப்படி நின்றிருந்த அந்த காட்சி நினைவில் இருந்தது. பிரவீனின் கையில் மொபைல் போன். மற்ற மூன்று நண்பர்களும் அவனையே பார்த்திருந்தனர்.


“என்ன டா மேட்டர்? எதுக்கு இந்த மீட்டிங்?” என்று சகஜமாக கேட்டான் கோகுல்.

உடனே பிரவீன், “கோக்ஸ், நான் உனக்கு ஒரு நம்பர் போன் போட்டு தறேன். பேசறியா?”

“யாருக்கு டா?”

“வீடு சுத்தம் செய்ய ஆள் தேடிட்டு இருந்தோம்ல. அஜய் ஒரு நம்பர் குடுத்திருக்காரு. பேசறியா?”

“நீயே பேசேன் டா. என்ன பிரச்சன?”

“நீ தானே மச்சான் எல்லார் கிட்டயும் சகஜமா பேசுவ. இவங்க கிட்டயும் பேசு.” நக்களிடித்தான் விவேக்.

பிரவீன் விவேக்கை முறைத்து விட்டு, மொபைலை பிழிந்தான், “ஒன்னும் இல்ல டா. 40 டாலருக்கு மேல தர முடியாது. கொஞ்சம் கறாரா பேசணும். அதான்...”

“சரி குடு. பேசறேன்”, என்று கோகுல் மொபைலை வாங்க, அவன் மனதில் மின்னல் வேகத்தில் பாய்ந்தது, சென்னையில் நடந்த ஒரு சம்பவம்.

***

அம்மா ஹாலில் சோபாவில் உட்கார்ந்து டி.வி பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கண்களை தவிர்த்தப்படி வீட்டிற்குள் நுழைந்தான் கோகுல்.

“என்ன டா… கிளாஸ் எப்படி போச்சு?” என்றது அம்மாவின் குரல்.

“ஆன்… நல்லா போச்சு மா...” அவளை பார்க்காமல் புத்தக பையை கீழே வைத்துவிட்டு நாற்காலியில் கோகுல் அமர்ந்தான்.

“ஆட்டோ ஈசியா கெடச்சுதா?”

“ம்ம்...”

“காந்தி சிலைக்கு ஆப்போசிட்ல தானே எடுத்த?‘

“ஆமா”

“எவ்வளோ கேட்டான்…?”

கோகுல் கண்களை இறுக்கி மூடிக்கொண்டான். பொய் சொல்லி விடலாமா என்று ஒரு நொடி யோசித்தான். முடிவு எடுப்பதற்குள் அவன் வாய் தானாகவே திறந்து விட்டது.

“100 ரூபா மா...”

“என்ன டா சொல்லுற?! 100 ரூபா வா?? 50க்கு மேல குடுக்காதேன்னு சொன்னேன்ல உனக்கு?”

“50க்கெல்லாம் எந்த ஆட்டோக்காரனும் வரமாட்டான் மா! சொல்லி பாத்தேன்.. கேக்கல...”

“நல்லா அழுத்தி சொல்லணும். சரியான பேக்குடா நீ!”

கோகுலின் தம்பி ரிமோட் கையில் வைத்தப்படி, அம்மாவுடன் டி.வி பார்த்துக்கொண்டிருந்தான். அவனை கோகுல் நிமிர்ந்து பார்க்கவில்லை. அவன் முகத்தில் நக்கலான சிரிப்பு இருக்கும் என்று கோகுலுக்குத்  தெரியும்.

***

இப்படி பல சம்பவங்கள் கோகுலின் மனதில் மின்னல் வேகத்தில் பறந்தன. அவன் டயல் செய்திருந்த எண் இப்பொழுது ஒலித்துக்கொண்டிருந்தது. என்ன தான் ஊரில் அவன் அம்மாவை பொறுத்தவரை ஏமாளியாக இருந்தாலும், சிங்கப்பூரில் அவனுக்கு அந்த பிரச்சனை இல்லை.

“கொத்த மல்லிக்கருவேப்பிலைக் கூட காசு குடுக்காம வாங்க தெரியல உனக்கு…” என்ற அம்மாவின் திட்டல் இங்கு செல்லுப்படி ஆகாது. ஜயண்ட் மால் சென்றால் கொத்தமல்லி 2.5 வெள்ளி என்று கொட்டை எழுத்தில் போட்டிருப்பான். எல்லோருக்கும் அதே விலை தான். அவனுக்கு சிங்கப்பூர் பிடித்திருந்தது.

என்.யூ.எஸ்ஸில் படிப்பு முடித்து, ஹாஸ்டலை விட்டு வெளியேறி, பணம் தரும் ஒரு வேலையை பிடித்து, 4 நண்பர்களுடன் தியாங் பாருவில் அந்த பணத்திற்கேற்ற ஒரு எச்.டீ.பீ வீட்டில், 6 மாதங்களுக்கு முன்பு குடியேறியிருந்தான் கோகுல். அந்த வீட்டின் வாடகைக் கேட்டு அவனின் பாட்டி வாயை பிளந்தாள், “3000 டாலர்னா நம்ம ரூபாய்ல எவ்வளோ வரும்? அடேங்கப்பா! ஒரு லட்சம் கிட்ட வரும் போல இருக்கே!”

வாடகை அதிகமாக இருந்தாலும், சென்னையில் எப்பொழுதும் இருக்கும் “நாம் ஏமாத்தப்படுகிறோமா?” என்ற ஒரு பயம் இங்கு இல்லை. ஆனால், சிங்கப்பூரிலும் சில விஷயங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை கிடையாது. கதவுகள் தானாக பூட்டிக்கொண்டாலோ, பைப் ஏதேனும் துண்டித்து போனாலோ, சில தெருக்கடைகளில் பொருட்கள் வாங்கினாலோ, மீண்டும் பேரம் என்ற அசுரன் உருவெடுத்து வருவான். ஒரு முறை, வாசல் கதவு சரி செய்ய வந்த ஆள், செய்த வேலைக்கு 30 வெள்ளியும், போக்குவரத்துச் செலவுக்கு 40 வெள்ளியும் வாங்கிக்கொண்டு போய் விட்டான். அதை கொடுத்த நண்பனை இரண்டு வாரம் எல்லோரும் திட்டிக்கொண்டிருந்தனர். “ஏன் டா… ஜூ கூன் லேர்ந்து சாங்கி போனா கூட 40 வெள்ளி ஆகாதுடா. அந்த ஆளு கேட்டான்னு இப்படி அள்ளிக் கொடித்திருக்கியே!”

இவ்வாறான ஏமாளித்தனம் கோகுலை சற்று ஆறுதல் படுத்தியது. “நீங்க அஞ்சு பேரும் சரியான பேக்குங்க. எவனாச்சும் வீட்டுக்குள்ள நொழஞ்சு திருடிட்டுப்போனாக் கூட தெரியாது. எப்பப்பாரு கம்ப்யூட்டரேக் கதின்னு கெடப்பீங்க.” என்று ஒரு அம்மா சொன்னா பரவாயில்லை, ஐந்து நண்பர்களின் அம்மாக்களும் ஸ்கைப்பில் பேசும் போது, வேறு வேறு வார்த்தைகளில் சொன்னாலும், மேட்டர் அதே தான்.  எப்படி நம்மை விட பயந்தவன் ஒருத்தன் இருந்தால் நமக்கு தைரியம் வருமோ, அது போலத்தான் கோகுலின் நிலை அவன் அந்த போன் செய்யும் பொழுது.

“ஹலோ... சாந்தி கிட்ட பேசலாமா?”

மருப்பக்கத்திளிருந்து ஒரு பெண் குரல் வணக்கம் என்று சொன்னது.

“வணக்கம். என் பேரு கோகுல். இங்க தியாங் பாருல தங்கிருக்கேன். வீடு கொஞ்சம் சுத்தம் பண்ணனும்... ஆன்… இன்னிக்கேதான்...”

சைகையால் எப்பொழுது வரவேண்டும் என்று பிரவீனை கேட்டான். அவன் இரண்டு என்று காற்றில் வரைந்து காட்டினான்.

“மத்தியானம் வந்தீங்கன்னா நல்லா இருக்கும்... மொத்தம்... மொத்தம் 4 ரூம்...”

பாத்ரூமை விரலால் சுட்டிக்காட்டினான் பிரவீன்.

“கூட 2 பாத்ரூம்... உம்ம்... எவ்வளோ... எவ்வளோ ஆகும்?... ஓ... அது கொஞ்சம் அதிகமா இருக்குங்களே...”

60 என்று சைகையால் சுற்றி நின்ற நண்பர்களுக்கு கோகுல் வரைந்து காட்டினான். அவர்கள் முடியவே முடியாது என்று தலையை ஆட்டினார்கள்.

“இல்லைங்க புரியுது...ம்ம்... வூட்லாண்ட்ஸ் தூரம் தான்... ஆனா நீங்க ரெட் லைன் எடுத்து.. அப்புறம் கிரீன் லைன் எடுத்தா வந்துடலாம்...ம்ம்.. கரெக்ட்டு தான்... என் பிரெண்ட் அஜய் தான் உங்க நம்பர் குடுத்தார்... அதான் போன் அடிச்சேன்... நீங்க என்னடான்னா இவ்வளோ சொல்லுறீங்களே... ம்ம்.. ஆமா அவரு தான் நம்பர் குடுத்தார்... கூட காலேஜுல படிச்சவர்... அப்படியா... சரி... சரி... அட்ரஸ் நான் மெசேஜ் பண்ணிடறேன்... ஓக்கே... ரொம்ப நன்றிங்க!”

போனை துண்டிக்கும் பொழுது கோகுலின் முகம் பிரகாசமாக மின்னியது. அவனால் நம்பவே முடியவில்லை.

“40 டாலருக்கு ஓக்கே சொல்லிட்டாங்க மச்சி!”

பேரம் பேசுவதில் முதல் வெற்றி.

***

“மச்சி எதாச்சும் படம் பாக்கலாம் டா!” என்றான் கோகுல். 40 வெள்ளி டீல் முடித்த சந்தோஷத்தில்.

“‘டின் டின்’ இருக்கு பார்க்கலாமா?”

“அது இன்னும் தியேட்டர்ல ஓடிட்டு தானே இருக்கு? இப்போ எப்படி?”

“மூவி ஆன் டிமாண்ட்!” என்று அறிவித்தப்படி கையில் இருந்த டி.வி ரிமோட்டில் சில பொத்தான்களை அழுற்றினான் அமர் (40 வெள்ளி கொடுத்து 2 வாரம் திட்டு வாங்கினானே, அந்த நண்பன்).

“டேய்! படம் பாக்கறதுக்கு முன்னாடி, சில விஷயம் வாங்கணும்டா… வீடு சுத்தம் செய்ய.” உணர்ச்சிகளுக்கு அப்பாற்ப்பட்டு எப்பொழுதும் நிலையாக இருக்கும் பிரவீன் கூறினான்.

“நீ வாங்கிட்டு வந்திடு மச்சி!” என்றான் விவேக், டி.வி.யின் அருகே கால்களை விரித்து தரையில் உட்கார்ந்தப்படி. படம் துவங்கி ஒரு சிங்கம் உறும ஆரமித்தது.

கதவருகே இருக்கும் செருப்பை எடுத்தப்படி பிரவீன் சொன்னான், “டே அப்புறம், அவங்க சுத்தம் செய்யறப்போ சரியா பண்ணுறாங்களான்னு பார்க்கணும் டா. சந்தீப் அவங்க வீட்டுக்கு வந்தவங்கள பத்தி சொல்லிருக்கான். சுத்தம் பண்ணறேன்னு சொல்லிட்டு பாத்ரூம்குள்ள போய் தாப்பா போட்டு, இரண்டு மணி நேரம் சும்மா உக்காந்துட்டு, அதிகமா காசு வாங்கிட்டு போயிட்டாங்களாம்.”

விவேக் டி.வி பார்த்துக்கொண்டே கையை மட்டும் தூக்கினான், “டோன்ட் வரி மச்சி! பாத்துக்கலாம்!”

***

கதவு தட்டப்பட்டது. உடனே ஓடிக்கொண்டிருந்த ‘டின் டின்’ பாஸ் செய்ய பட்டது. ஒரு 35 வயது பெண்மணி உள்ளே நுழைந்தாள். சுடிதார் அணிந்திருந்தாள். தோளில் ஒரு பை. 4 நண்பர்களும் என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டிருக்க, “வாங்க! நான் தான் உங்களுக்கு போன் செஞ்சேன். இது தான் வீடு” என்றான் கோகுல். சாந்தி சிறிதாக புன்னகைத்தாள்.

பிறகு, “இடம் உங்களால சுலபமாக் கண்டு பிடிக்க முடிஞ்சுதா?” என்றான். அவனின் அம்மா வீட்டுக்கு வருபவர்களிடம் அடிக்கடிக் கேட்கும் கேள்வி அது. ஆமாம் என்று தலை ஆட்டியப்படி, “நீங்க மாப் அதெல்லாம் வெச்சிருக்கீங்களா?”

“ஆன்.. இங்க இருக்கு...”, என்று தான் வாங்கி வந்திருந்த பொருட்களை நோக்கி அவர்களை கூட்டிச்சென்றான் பிரவீன்.

இரண்டு நிமிடம் கழித்து ஹாலுக்கு மீண்டும் வந்து. “இங்க ரூம் எங்க இருக்கு?” என்றாள் சாந்தி. கையில் மாற்று உடை வைத்திருந்தாள். கோகுல் பக்கத்தில் இருக்கும் அறையை சுட்டிக்காட்டினான். அந்த ரூமுக்குள் சென்று சாந்தி தாளிட்டுக்கொண்டாள்.

“சரி படத்த போடு” விவேக் மீண்டும் தரையில் உட்கார்ந்தான். டின் டின் ஓட துவங்கியது. உடை மாற்றிய சாந்தியும் வேலையை துவங்கினாள். கோகுலின் கவனம் படத்தை விட அவள் செய்யும் வேளையில் தான் இருந்தது.

ஒரு பெரிய கருப்பு பிளாஸ்டிக் பையை எடுத்து கொண்டாள். கூட்டும் பொழுது வரும் குப்பை மற்றும் தேவை இல்லாத சாமான்களை அதில் போட்டாள். தரையில் கிடக்கும் தேவையான பொருட்களை, மேஜை மீதோ, மெத்தையின் மீதோ வைத்துவிட்டு, தரையைப் பெருக்கினாள். ஹாலில் உட்கார்ந்து டி.வி பார்த்துக்கொண்டிருந்த கோகுலுக்கு அவ்வப்போது சாந்தியின் கைகள் ஏதாவதொரு அறையின் உள்ளிருந்து வெளியே வந்து, குப்பையை கருப்பு பைக்குள் வீசுவது மட்டும் தான் தெரிந்தது.

கோகுலின் அறையை சுத்தம் செய்யும் பொழுது கோகுல் ஓடிப்போய் பின்னால் நின்றுக்கொண்டான். “எதையாச்சும் தேவை இல்லைன்னு தூக்கி போட்டுடப் போறாங்க…” என்ற பயம்.

***

டின் டின் முடிந்திருந்தது. சாந்தி மீண்டும் சுடிதாருக்கு மாறி இருந்தாள். அவள் வீட்டுக்கு வந்த நேரம் 2. கிளம்பும் நேரம் 6.30. நாலறை மணி நேரம் ஆகியிருந்தது.

சாந்தி வீட்டுக்கு வெளியே செருப்பு அணிந்துக்கொண்டிருக்க, பிரவீன் மெதுவாக கோகுலிடம் சொன்னான், “எங்க யாரு கிட்டயும் கேஷ் இல்ல டா. நீ கீழ ஏ.டீ.எம்ல எடுத்து குடுத்திடறியா? பில்மாங்க்ல செட்டில் பண்ணிக்கலாம்.”

கோகுல் மெல்லிய குரலில், “அது ஓக்கே. ஆனா நாலறை மணி நேரம் ஆகிருக்கே. இப்போ அவங்களுக்கு 40 தருனுமா 50 ஆ?”

“40 குடுத்துட்டு என்ன சொல்றாங்க பாரு...” என்று கோகுலிடம் குடை கொடுத்தப்படி சொன்னான் பிரவீன்.

வெளியே மழை பலமாக பெய்துக்கொண்டிருந்தது.

“இந்த வழியா வாங்க. ஏ.டி.எம்க்கு நனையாம போயிடலாம்.” குடையை மேலே பிடித்தப்படி சாந்தியை சாலை தாண்ட வைத்தான். சாலையின் மறுப்பக்கத்தில் கடைகள் இருந்ததால் குடை தேவைப்படவில்லை. அந்த கடைகளின் ஊடே குறுக்கும் நெருக்கும் நடந்தவாறு ஏ.டி.எம் சென்றடைந்தான். 40 வெள்ளிக்கு சில்லறை இல்லை என்றபடி 50 வெள்ளி நோட்டைக் கக்கியது இயந்திரம். கோகுலின் மனதில் பல்லி சத்தமிட்டது.

“இப்போ எப்படி அவங்க கிட்ட மிச்ச காசு கேக்குறது… எதாச்சும் டக்குனு வாங்கி சில்லறை மாத்தலாமா...”

அதற்குள் சாந்தியின் கண்களை பார்த்துவிட்டான். தவிர்க்கமுடியாமல் சென்று பணத்தை அவ்வாறே கொடுத்துவிட்டான். “அவங்களாவே மிச்சம் கொடுக்கறாங்களா பாப்போம்…”

சாந்தி நன்றி சொல்லியப்படி 50 வெள்ளியை வாங்கி ஒரு பர்ஸ் உள்ளே வைத்துக் கொண்டாள்.

“பஸ் ஸ்டாப் அந்த பக்கம் இருக்கு… வாங்க...” என்று மறுபடி அவளை குடைக்குள்ளே அழைத்து சென்றான்.

“இங்க 124ன்னு ஒரு பஸ் வரும். அதுல ஏறினா, தியாங் பாரு எம்.ஆர்.டிக்கு 5 நிமிஷத்துல போயிடலாம்.”

டக்கென்று போன் வெளியே எடுத்து திரையில்  சில பொத்தான்களை அழுற்றினான். “இன்னும் 7 நிமிஷத்தில் பஸ் வந்திடும்.” சாந்தி தலையை ஆட்டினாள்.

“நீங்க எந்த ஊரு?”

“கேரளா”

இப்போது தான் கோகுலிற்கு அவளின் வினோத தமிழ் உச்சரிப்பின் காரணம் புரிந்தது. ஆனால் அவன் சினிமாவில் மலையாளிகள் தமிழ் உச்சரிப்பதைக் கேட்டதுண்டு. அது போல இல்லை அவளின் தமிழ்.

“எப்படி… நீங்க எப்படி சிங்கப்பூருக்கு வந்தீங்க?”

“எனக்கு தெரிஞ்சவர் ஒருத்தர் கூட்டிட்டு வந்தாரு. இங்க ஒரு வேலை வாங்கி தறேன்னு. எனக்கு இரண்டு பசங்க இருக்காங்க. என் புருஷனுக்கு வேலை போய்டுச்சு. நான் கெமிஸ்ட்ரி படிச்சிருந்தேன். இங்க டீச்சர் வேலை வாங்கி தறேன்னுக் கூட்டிட்டு வந்தாரு. அப்புறம் அவர் வீட்டுல வேல செய்ய வெச்சுட்டாரு. மொதல்ல ரொம்ப பயந்துட்டேன். ஆனா வேற வழி இல்ல. அதுக்கு அப்புறம் இன்னொருத்தங்க வீட்டுல வேலைக்கு சேத்துவிட்டுட்டாறு. அந்த வீட்டுல ரொம்ப நல்லவங்க. ஞாயித்திக்கிழம லீவ் கொடுத்திடுவாங்க. அப்போ தான் இந்த மாதிரி மத்த வீடுங்கள சுத்தம் செய்யுவேன்.”

கோகுலின் தொண்டை வற்றியது. அவன் வயிற்றில் ஏதோ ஒரு நரம்பு இழுப்பது போல இருந்தது. அவனுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. அவன் பாட்டியின் பாத்திரம் தேய்த்து வெளுத்துப்போன கைகள் நினைவுக்கு வந்தன.

நீண்ட நிசப்தத்திற்குப்பின், “நீங்க… அப்புறம் டீச்சர் வேலைக்கு ட்ரை பண்ணலியா?”

“என் செர்டிபிகேட் எல்லாம் ஊர்ல இருக்கு. திரும்ப போகணும் ஒரு நாள் எடுத்துட்டு வர...”

மழை மெதுவாக நிற்க தொடங்கியது. தூரத்தில் 124 வருவதை கவனித்தான். “டக்கென்று ஓடி போய் இன்னொரு 50 வெள்ளி ஏ.டி.எம் லேர்ந்து எடுத்து வந்து கொடுக்கலாமா? நாம கொடுக்கறத பிச்சை அப்படின்னு தப்பா நினச்சுடுவாங்களோ? எப்படி அந்த ஆளுக்கு இந்த மாதிரி ஒருத்தங்கள வேலைக்காரி ஆக்க மனசு வந்துச்சு? மொதல் மொதல்ல இவங்கள வீட்டு வேலை செய்ய சொல்லும் போது இவங்களுக்கு எப்படி இருந்திருக்கும்? இன்னிக்கி நம்ம வீட்ட சுத்தம் செய்யும் போது?”

124 நெருங்கியது.

“நாம எதாச்சும் செய்யணுமே… நமக்கு தெரிஞ்ச ஆட்களிடம் பேசி இவங்களுக்கு ஒரு வேலை வாங்கி கொடுப்போமா? பானு டீச்சர் இருக்காங்க… அவங்கள கேட்டு இவங்களுக்கு ஒரு டீச்சர் வேல வாங்கி தந்தா? ஆனா நாம கேட்டா பானு டீச்சர் செய்வாங்களா? இவங்க முதல்ல டீச்சர் வேலை செய்ய தயாரா இருப்பாங்களா? ஒரு வேல இவங்களுக்கு இந்த வேலை பழகிப் போய் இருந்தா? ஐய்யோ என்ன செய்யுறது…”

124 பஸ்ஸின் கதவுகள் திறந்தன. அவனை பார்த்து லேசாக தலையாட்டியப்படி சாந்தி பஸ் உள்ளே ஏறி கார்டை தட்டினாள். கோகுல் ஜடம் போல் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.

***

கோகுலின் ரூம் மேஜையின் மீதிருந்த மொபைல் துடித்தது. “சஞ்சய்” என்றது திரையில் ஆங்கில எழுத்துக்கள்.

“சொல்லு மச்சி… சும்மா தான்டா இருக்கேன்… அப்படியா… என்ன பிளான்? ஓக்கே. ஐ அம் கேம். ஆனா என் கிட்ட ஷட்டில் ராக்கெட் இல்லடா... ஓக்கே கூல்... மத்தவங்க கிட்ட நான் சொல்லிடறேன். பாப்போம் மச்சி.”

வீட்டிலிருந்த நண்பர்களிடம் சஞ்சயின் பிளானை சொல்லிவிட்டு, குளிப்பதற்கு துண்டை எடுத்துக்கொண்டு, கோகுல் பாத்ரூமுக்குள் நுழைந்தான். இதுவரை அவன் கண்டிராத அளவிற்கு பாத்ரூம் சுத்தமாக இருந்தது.

முற்றும்

No comments:

Post a Comment