March 13, 2016

சிகப்பு புள்ளி


பஸ் ஸ்டாப்பிலிருந்து பேருந்து கிளம்பும் போது தான் சிவகுமரனுக்கு சட்டென்று நினைவு வந்தது. அது புக்கித் மேரா டவுன் சென்ட்டர், அங்கு தான் இறங்க வேண்டும். ஆனால் சிகப்பு பொத்தானை அழுற்றுவதற்குள், பேருந்து கிளம்பி விட்டது. தன்னையே ஒரு முறை திட்டிக்கொண்டார் சிவகுமரன். அடுத்த ஸ்டாப் சிறிது தூரம். வெய்யிலில் நடந்து திரும்பிவர வேண்டும்.

“சர்ர்ரியான வேஸ்ட்டு மாமா நீ!” என்று குணா சொன்னது மீண்டும் சிவகுமரனின் காதில் ஒலித்தது. பஸ்ஸிலிருந்து அடுத்த ஸ்டாப்பில் இறங்கி விறுவிறுவென மார்கெட்டை நோக்கி நடக்கையில், வெய்யிலுடன் சேர்ந்து எரிச்சலும் அவரை பற்றிக்கொண்டது. “நான் என்ன வேஸ்ட்டா?”

“ஹல்லோ பிரதர்! உங்கள இதுக்கு முன்னாடி யாராச்சும் இங்க இன்வைட் பண்ணிருக்காங்களா?”

நடந்து கொண்டிருக்கும் சிவகுமரனை வழிமறித்து ஆங்கிலத்தில் கேட்டாள் ஒரு சீனப் பெண்மணி. ஒரு நிமிடம் எதை பற்றி கேட்கிறாள் என்று சிவகுமரனுக்கு புரியவில்லை. பிறகு பக்கவாட்டில் இருந்த பெரிய வெள்ளை கோவிலை பார்த்தார். அதன் கூரை ஓடம் போல அமைந்திருந்தது. சிறிய நீல ஜன்னல்கள்.

“வீ ஆல் பிரதர் அண்ட் சிஸ்டர். நீங்க இந்தியாவிலிருந்து வந்தவரா?” என்று ஆங்கிலத்தில் கேட்டாள்.

“நோ மலேசியன்”

“ஓ! அப்போ நீங்க கும்பிடற கடவுள்...” சற்று யோசித்து மெதுவாக உச்சரித்தாள். “மு..ரூ...கா?”

“எஸ். எஸ். முருகா” தலை ஆட்டினார் சிவகுமரன்.

“எதாச்சும் நன்கொடை கேக்க போறாளா இவ?” மனதில் ஒரு எண்ணம் சட்டென ஓடியது.

“எங்க மாஸ்டர் மலேசியாவும் போயிருக்கார். பாருங்க.” உடனே கையில் இருக்கும் புத்தகம் ஒன்றை திறந்தாள். அதில் ஒரு பக்கத்தில் மலேசியா மற்றும் இந்தோனேசியாவின் வரைப்படம் ஒட்டப்பட்டிருந்தது. சிங்கப்பூர் ஒரு சிறிய சிகப்பு புள்ளியாக இருந்தது. வேறு சில நகரங்களை மட்டும் சுட்டிக்காட்டி இருந்தார்கள். அங்கெல்லாம் அவர்களுக்கு கிளைகள் உள்ளதாக சொன்னாள். பிறகு பல மலேசிய நகரங்களில் எடுக்க பட்ட புகைப்படங்களை காண்பித்தாள்.

“எல்லா கடவுளும் ஒன்னு தான். முருகா, புத்தா, இயேசு… அதே மாதிரி எல்லோரும் நம்ம அக்கா தங்கச்சிங்க தான் பாருங்க.”

சிவகுமரனும் மறுக்க முடியாமல் புகைப்படங்களை பார்த்து தலை அசைத்தார். பாதிரியார் போல வெள்ளை உடை அணிந்த ஒரு ஆசாமி பல பேருடன் பல இடங்களில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள். அந்த வெள்ளை உடை அணிந்தவர் தான் மாஸ்டரோ? அவர் முகத்தில் ஒரு அமைதி கலந்த புன்னகை.

“நீங்க உள்ள வந்தீங்கன்னா உங்களுக்கு மாஸ்டர் ஆசிகள் தருவார்.”

வேறு வேலை இருக்கென்று காரணம் சொல்வதற்குள், “ஜஸ்ட் டென் மினிட்ஸ் ஒன்லி பிரதர்” என்றாள். “வாழ்க்கையில ஒரு முறை ஆசி வாங்கினா போதும். நீங்க சொர்க்கத்துக்கு போகலாம்.”

உள்ளுக்குள் சிரிப்பு வந்தது சிவகுமரனுக்கு. சொர்க்கம் ஒன்னு தான் இப்போ குறை! அவரின் மனம் கடந்த மாதம் நடந்த சம்பவங்களை தோண்டி எடுத்தது.

***

கையில் குளியலுக்கு தேவையான எல்லா பொருட்களும் இருந்தன. லிப்ட் பொத்தானை அழுற்றினார் சிவகுமரன். பக்கத்தில் நின்றிருந்த மிஸ். வாங்கிடம் “ஹெல்லோ!” என்றார். பிறகு தன் வழுக்கை தலையை தடவியப்படி குனிந்து, லிப்ட் கதவின் அடிவாரத்தை நோக்கினார். கூச்சம் சிறுவயதிலிருந்து அவருடன் பயணித்தது. அதுவும் தனது கையில் மாற்று துணிகளுடன் நிற்கும் போது, பக்கத்தில் ஒரு பெண் வந்தால்...

தரையை பார்த்தப்படியே லிப்ட்டில் நுழைந்து, முதல் நிலையை அடைந்தார். அங்கே சற்று தள்ளி, தகரத்தாலான இரு குளியலைறைகளும், இரு கழிவறைகளும் இருந்தன. ஒரு அறையின் வாசலில் பிளாஸ்டிக் பக்கெட்டுடன் ஒரு பெண்மணி காத்திருந்தாள். மற்றொரு குளியலறையின் கதவை லேசாக தள்ளி பார்த்தார். உள்ளே யாரும் இல்லை. காத்திருந்த பெண்மணியிடம் புன்னகைத்துவிட்டு உள்ளே சென்றார்.

புக்கித் மேரா புளோக் 107ல் ஐந்தாம் மாடியில் குடியிருந்தவர் சிவகுமரன். சொந்த வீடு தான். இன்னும் லோனை அடைக்கவில்லை. தற்போது வீட்டு கழிவறையை எச்.டி.பி ஆட்களை வைத்து புதுப்பித்துக்கொண்டிருந்தது. இரண்டு வாரங்களாக இவ்வாறு தான் சிவகுமரன் குளியலுக்கும் மற்றவைக்கும் கீழே தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த தகர அறைகளுக்கு வர வேண்டும். வீட்டில் இருக்கும் போது, வேலை ஆட்கள் உண்டாக்கும் சப்தம் காதை அடைக்கும். ஆனால் அவர்களின் வேலை செய்யும் நேர்த்தியைக் கண்டு ஆச்சரியப்பட்டார். வாசலிலிருந்து சமையலறைக்குள் இருக்கும் கழிவறைவரை அட்டை கம்பளத்தால் ஒரு பாதை அமைத்து, தள்ளுந்து ஒன்றில் சாமான்களை கொண்டுவந்து இறக்கினார்கள். மார்பிள் தரையை பாதிக்காது தான். ஆனால் சிமெண்ட் நெடி வீடெங்கும் பரவிடும். பூஜை அறையை மட்டும் மூடி வைத்துவிட்டார் சிவகுமரன்.

தகர குளியலறையின் கதவை மூடி தாழிட முயன்றார். அப்போது தான் ஏன் இந்த குளியலறைக்கு அந்த பெண்மணி போகாமல் நின்றிருந்தாள் என்று புரிந்தது. தாழிட முடியவில்லை. தாழ் சற்று குறைவான உயரத்தில் இருந்தது. வலது பக்கம் இருக்கும் தகர ஹூக்கிர்க்குள் செல்லவில்லை. தாழை நெம்பி பார்த்தார். லேசான தகர கதவு என்பதால், நெம்பினால் தாழின் உயரத்தை அதிகரித்து விடலாம் என்ற எண்ணம் தந்தது. 5 நிமிடம் முக்கி முயன்றப்பின் அந்த எண்ணம் ஒரு மாயை என்று புரிந்தது. சற்றும் உயர மறுத்தது தாழ். கதவை காலால் மூடிப்பிடித்தப்படி, குளியல் பொருட்களை தகர மேடையில் வைத்தார் சிவகுமரன்.

“சர்ர்ரியான வேஸ்ட்டு மாமா நீ!”

***

ஒரு வழியாக வீட்டு கழிவறைகள் புதுவுருவம் கொண்டப்பின், சிவகுமரன் பெருமூச்சு விட்டார். அவரும் அவர் மனைவியும் தங்கியிருந்த அறையில் ஒரு கழிவறை. பிறகு சமையலறையை தாண்டி ஒரு கழிவறை. இவ்விரண்டும் இப்போது புதிதாய் ஜொலித்தன.

வீட்டில் தங்கியிருக்கும் வினோத்தை அழைத்து காமன் கழிவறையை காண்பித்தார், “பாருங்க வினோத். எல்லாம் புதுசு பண்ணியாச்சு. இந்த டோர் வந்து பாருங்க. இங்கிட்டு வாங்க.”

வினோத்தையும் கழிவறைக்குள் வரசொல்லி கதவை எப்படி மூடுவது என்று காண்பித்தார். மடியும் கதவை நேராக்கி, பிறகு கதவுப்பிடியை திருப்பினால் பூட்டிக்கொள்ளும். ரொம்ப நாளாக இப்படி ஒரு கதவு வைக்க வேண்டும் என்று சிவகுமரனுக்கு ஆசை.

“நைஸ்” என்று மட்டும் சொன்னான் வினோத். கண்ணாடி அணிந்த ஐ.டி இளைஞன். மாதம் 550 டாலருக்கு சிவகுமரனின் வீட்டில் இருக்கும் ஒரு அறையை மட்டும் வாடகைக்கு எடுத்திருந்தான்.

“உங்களுக்கு தெரிஞ்சு வேற யாராச்சும் அந்த ரூமுக்கு பாத்தீங்களா?”

“அந்த ரூம்” என்பது வீட்டில் காலியாக இருந்த மற்றொரு அறை. “அந்த ரூம்” பயங்கர குடைச்சலை கொடுத்தது. இதற்கு முன் அவரின் நெருங்கிய நண்பனின் மகன் ஒருவன் அங்கு தங்கியிருந்தான். சுசேந்திரன். “சுசேன்!” என்று பாசத்துடன் அழைப்பார். பாயாசம் சிக்கன் கறி எல்லாம் செய்து கொடுத்திருக்கிறார். ஆனால் அவனின் கேர்ள் பிரண்டிற்கு அவரை பிடிக்கவில்லை. என்ன காரணமோ தெரியலை. அவனும் சில மாதங்களுக்கு பிறகு காலி செய்துவிட்டான். அவன் சென்று ஒரு வருஷம் இருக்கும். இன்னும் அந்த அறைக்கு ஆள் கிடைத்த பாடில்லை.

அவர் பார்த்த ஏஜெண்டும் சரியான ப்ளர் சொதோங்! “இதோ கூட்டியாறேன். அதோ கூட்டியாறேன்னு சொல்லி ஒரு ஆளையும் இது வரைக்கும் கூட்டியாரல.” என்று வினோத்திடம் குறை சொன்னார். வினோத் அனுதாபத்துடன் தலை அசைத்தான்.

“உங்க நண்பர்கள் யாராச்சும் இருந்தா சொல்லுங்க வினோத். பெரிய ரூம் தான். இரண்டு பேரு தங்கலாம். 900 குடுத்தா ஓக்கே.”

வினோத்தும் தலையை ஆட்டிக்கொண்டே “சொல்றேன்” என்று தனது அறைக்குள் சென்றுவிட்டான்.

***

“மை நேம் ஐரிஸ்” என்றாள் வழிமறித்த சீனப் பெண்மணி.

“சிவகுமரன்“ இருவரும் கை குலுக்கினர்.

“நீங்க இந்த ஏரியால தான் தங்கி இருக்கீங்களா?”

“இல்ல பக்கத்துல. தியாங் பாரு.”

“யூ ஒர்க் ஹியர்?”

“எஸ். எஸ்.” அடுத்த கேள்வி சிவகுமரனுக்கு தெரியும்.

“யூ சிங்கப்பூரியன்?”

“நோ. பி.ஆர்.” சிறிது மௌனத்துக்குபின், “நான் எதாச்சும் நன்கொடை கொடுக்கனுமா?”

“அது உங்க இஷ்டம் பிரதர். இது உங்க ஹிந்து டெம்பில் மாதிரி தான். நோ மணி ஃபார் என்ட்ரி. நான் கூப்பிடறது ஆசிகள் வாங்க மட்டும் தான். உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?”

“அதுக்கப்புறம் தானே என் வாழ்க்கையே நாசமா போச்சு!” என்று மனதில் நினைத்தப்படி “ஆமாம்” என்றார்.

***

சிவாஜியின் ராஜரிஷி படம் வசந்தத்தில் ஓடிக்கொண்டிருந்தது. சிவகுமரன் சாம்சுங் கைபேசியில் விளையாடியபடி, அவ்வப்போது அதையும் பார்த்துக்கொண்டிருந்தார். ஞாயிற்றுக்கிழமை மதியம்.

“உங்க கிட்ட ஒன்னு பேசணும்”, மகேஸின் குரல்.

“ம்ம் சொல்லு” கைபேசியிலிருந்து சிவகுமரனின் தலை நிமிரவில்லை. என்னவாக இருக்கும்? “இந்த மாசம் காசு போதல. கொஞ்சம் வினோத் கிட்ட அடுத்த மாச வாடகைய முன்னமே கேக்கறீங்களா?” என்று தான் இருக்கும்.

“கேக்கறீங்களா?” மகேஸ் பக்கத்து சோபாவில் அமர்ந்து, தன்னை பார்த்துக்கொண்டிருக்கிறாள் என்பது அவளை பார்க்காமலே சிவாவிற்கு தெரியும்.

“ம்ம் நீ சொன்னா தானே”

“என் தம்பி அடுத்த மாசம் வரானாம். இங்க வேல தேட.”

“என்னவாம் அவனுக்கு?”

“அதான் சொன்னேனே. இங்க வேல தேட.”

“ஏன் கொலோம்போல வேல இல்லையாமா?”

“அவனுக்கு அங்க இருக்க பிடிக்கலையாம்.”

“ஆமா. இங்க சிங்கபூருல வாங்க வாங்க வேல தரோம்னு கூப்பிடறாங்க பாரு. ஏ-லெவல் கூட அவன் முடிக்கல தானே?”

“இப்போ பார்ட் டயம்மா ஒரு டிப்ளமோ முடிச்சிருக்கான்.”

சிவகுமரன் கைபேசியை சோபாவில் வைத்துவிட்டு, விசுவாமித்திரர் திரிசங்குவை சொர்க்கத்துக்கு அனுப்பும் காட்சியை பார்க்கத்துவங்கினார். டி.வி அருகே ஒரு பெரிய புகைப்படம் சுவற்றில் மாட்டப்பட்டிருந்தது. சிவகுமரனும் மகேஸ்வரியும் திருமண கோலத்தில் ஒருவரை ஒருவர் அணைத்தப்படி இருந்தனர். புன்னகையுடன்.

“என்ன பேசாம இருக்கீங்க?”

“அதான் நீயும் உங்க அம்மாவும் முடிவு பண்ணிட்டீங்களே? அப்புறம் என்னை எதுக்கு கேக்கற?”

“என்ன இப்படி சொல்லுறீங்க? நீங்க தான் அவனுக்கு வேலை வாங்கி தரனும்.”

“ஓ. இப்போ அது வேற நான் செய்யனுமா?”

மகேஸ்வரிக்கு எல்லாம் சுலபம் என்ற எண்ணம். சிங்கப்பூரில் வேலை கிடைப்பது அவ்வளவு எளிதா? அவர் அந்த முஸ்தபா வேலையை விட்டிருக்க கூடாது என்று மீண்டும் தோன்றியது.

***

முஸ்தபா வேலையும் அவ்வளவு எளிதல்ல. செக்யூரிட்டி. பொருட்கள் திருட்டு போகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். முஸ்தபாவை எல்லோரும் ஷாப்பிங் இடமாக தான் நினைக்கிறார்கள். அங்கு ஒரு நாளைக்கு எவ்வளவு சாமான் காணாமல் போகும் என்று வெளியில் யாருக்கும் தெரியாது. என்ன தான் பொருட்களில் ஒட்டியிருக்கும் டேக் கண்டறியும் இயந்திரங்கள் வைத்திருந்தாலும், டேக்கை உருவிவிட்டு பொருட்களை எடுத்து சென்றுவிடுவார்கள். இந்த வேலை செய்ய ஒரு கும்பலே இருந்தது.

அவரின் வேலை சி.சி.டி.வி காமிரா வழியே, கடைக்கு வரும் மக்களை கவனித்து, அதில் எது திருட்டு கும்பல் என்று கண்டுப்பிடிப்பது. “ஒரு மாடில நம்ம கேமரா வழியா அவனுவள ஃபால்லோ பண்ணிக்கிட்டே இருப்போம். அவனுவ இன்னொரு மாடியில அடிச்சிட்டு போயிடுவாணுவ!”

அதுவும் பலர் அல்பமான பொருட்களை திருடுவார்கள். மேக்கப் கிட். சென்ட்டு பாட்டில். ஒரேயொரு முறை ஒருத்தன் எல்.சி.டீ டி.வியை திருட முயன்று மாட்டிக்கொண்டான். அதற்கு சிவகுமரன் தான் சாட்சி. கோர்ட்டில் சாட்சி சொல்லும் போது, சிவகுமரனையே முறைத்து கொண்டிருந்தான். அடுத்த நாள் விடியற்காலை தனது நைட் ஷிப்டை முடித்து விட்டு பிராட்டா சாப்பிட பக்கத்து தெருவுக்கு செல்கையில், யாரோ பின் தொடர்வது போல் உணர்ந்தார் சிவகுமரன்.

முஸ்தபா கூட்டமாக இருந்தாலும், இரண்டு சந்துகள் தள்ளி சென்றால், ஆள் இல்லா குட்டி தெருக்கள் தான். வேகமாக அந்தவொரு தெருவுக்குள் நுழைந்தார். அவரையே அந்த உருவம் தொடர்ந்தது. கண்டிப்பாக அந்த திருடனின் நண்பனாக இருக்கும் என்று நினைத்து அலறிக்கொண்டே ஓடத் துவங்கினார். அந்த உருவமும் துரத்தியது. ஆனால் பிராட்டா கடை அருகே வந்து திரும்பி பார்த்தால், யாரும் இல்லை.

அடுத்த நாளே வேலையை ராஜினாமா செய்து விட்டார்.

***

“நீங்க டின்னர் சாப்பிட்டீங்களா?” ஐரிஸ்ஸின் குரல் சிவகுமரனை திரும்ப இழுத்தது. அந்த வெள்ளை கோவிலின் படிகளில் ஏறிக்கொண்டிருந்தார்.

“ம்ம் இல்ல”

“சரி முதல்ல கைய தொடச்சுக்கங்க.”

கோவில் வாசலில் இரண்டு ஆட்கள் அவரை தாழ்ந்து வணங்கி, ஈரமான குட்டி துண்டு ஒன்றை அவரிடம் தந்தனர். அவர் அதை பெற்றுக்கொண்டு, ஐரிஸ் என்ன செய்கிறாள் என்று பார்த்தார். அவளை போலவே தனது கைகளை துடைத்து கொண்டார். பின்னர் துண்டை மீண்டும் அந்த ஆட்களிடம் கொடுக்க, அவர்கள் குனிந்து வணங்கி அதை பெற்றுகொண்டனர். சிவகுமரனும் தயக்கத்துடன் குனிந்து வணங்கி உள்ளே சென்றார்.

உள்ளே பெரிய ஹால். நடுவில் குவான்யின்னின் சிலை. அதே சிலை அவர் பூஜை அறையிலும் இருந்தது. சிலையின் முன், வரிசை வரிசையாக நாற்காலிகளில் பல பேர் உட்கார்ந்து தாழ்ந்த குரலில் பேசிக்கொண்டிருந்தனர்.

“நீங்க நூடில்ஸ் சாப்பிடறீங்களா இல்ல ரைஸ் ஆ?”

மீண்டும் புரியாமல் முழித்தார். “முதல்ல சாப்பிடுங்க. அப்புறம் மேல பிரேயருக்கு போகலாம்” ஹாலின் வலது ஓரத்தில் நீளமான ஒரு மேஜையில் அடுக்கடுக்காக வைத்திருந்த வெள்ளை டேக் அவே டப்பாக்களை சுட்டிக்காட்டினாள்.

“நூடில்ஸ் ஆர் ரைஸ்?‘

சிவகுமரன் யோசித்தார். அவருக்கு வீட்டுக்கு செல்லும் ஆர்வம் இல்லை. மகேஸை நினைத்தாலே கடுப்பாக இருந்தது.

“நூடில்ஸ்” என்றார்.

ஐரிஸ் மேஜை அருகே சென்று, அங்கிருந்த ஒரு முதியவரிடம் ஏதோ சொன்னாள். அவர் புன்னகையுடன் ஒரு டப்பாவை எடுத்து கொடுத்தார். சிவகுமரனும் அதை குனிந்து வணங்கி பெற்றுக்கொண்டார். ஹாலின் பின்புறம், ஓரமாக இருந்த டேபிளுக்கு அவரை கூட்டிச்சென்றாள். இருவரும் பல மேசைகளில் அமர்ந்து உணவு அருந்திக்கொண்டிருந்த பலரை தாண்டி சென்றனர். “உள்ளே இத்தனை பேரா!” என்ற ஆச்சரியம் சிவகுமரனுக்கு.

“நீங்க சிங்கபூர்ல எவ்வளவு வருஷமா இருக்கீங்க?”

“இருவது வருஷத்துக்கு மேல” என்றார் சிவகுமரன், ஒரு வாய் நூடில்ஸ் சாப்பிட்டுக்கொண்டே. பீ ஹூன். நன்றாக இருந்தது. ஏனோ இதமாகவும் இருந்தது.

“யூ காட் கிட்ஸ்?”

***

இன்னொரு ஞாயிற்று கிழமை மதியம். கதவு தட்டப்பட்டது. திறந்துவுடன், மகேஸின் அக்காவும், அவளின் கணவரும், கைக்குழந்தையும் புன்னகையோடு நின்றிருந்தனர்.

“வாங்க! வாங்க!” என்று அவர்களை வரவேற்றாலும், சிவகுமரனின் மனதில் “அடுத்து என்ன பூகம்பம் வெடிக்க போகுதோ…” என்ற அச்சம்.

மகேஸின் அக்கா புருசனை கண்டாலே சிவகுமரனுக்கு பிடிக்காது. அவன் மீடியாகார்ப்பில் உதவி மேற்பார்வையாளன். “இது நொள்ள அது நொட்ட” என்று சொல்லிக்கொண்டே இருப்பான். போனமுறை வந்த போது பாத்ரூம் சின்க் மேலே கண்ணாடி வேணும் என்று கேட்டான். ஷேவிங் செய்துக்கொள்ள.

“வினோத் இவ்வளோ நாளா தங்கறாரே, ஒரு வாட்டியாச்சும் அவர் கண்ணாடி கேட்டாரா? உன் அக்கா புருசன் மட்டும் ஏன் இப்படி?”

இந்த முறை என்ன சொல்லுவான் என்று யோசித்தார் சிவகுமரன். சட்டையை சொரிந்தப்படி “ஹால்ல இன்னும் ஏ.ஸீ போடலியா?” என்றான் உதவி மேர்ப்பார்வையாளன். சிவகுமரன் அதை கவனிக்காதவாறு, “வளர்குழலி!” என்று கொஞ்சலுடன் குழந்தையை பார்த்தார்.

மகேஸுக்கும் சிவகுமரனுக்கும் வளர்குழலியை கொஞ்சுவது பிடிக்கும். ஹாலின் நடுவில் அவளை ஒரு பாயில் படுக்க போட்டு, அவர்களும் மகேஸின் அக்காவும் அவளை கொஞ்சிகொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. டி.வியில் ஏதாவது பாட்டு வரும். இல்லை கைபேசியில் அடடா மழைடா பாட்டை சிவகுமரன் போட்டு தானும் பாடுவார். வளர்குழலி கைகளை தட்டியோ, கால்களை உதைத்தோ ஈடு கொடுப்பாள். உதவி மேற்பார்வையாளன் உண்ட களைப்பில் சோபாவில் தூங்கி கிடப்பான்.

***

“உங்க முழு பெயர இதுல எழுந்துங்க. ஸ்பெல்லிங் கரெக்டா இருக்கணும்.”

நூடில்ஸ் சாப்பிட்டு முடித்த சிவகுமரன், ஐரிஸ் அவரிடம் நீட்டிய சிறிய புத்தகமும் பேனாவையும் பெற்றுக்கொண்டார். அதில் தனது பெயரை எழுத, எதிரே இரு பெண்மணிகள் அவர் எழுதுவதை கவனித்தார்கள்.

“இப்போ நீங்க எதாச்சும் சின்ன நன்கொடை குடுத்தீங்கன்னா உங்கள ரெஜிஸ்டர் பண்ணிடுவாங்க. இது ஒரு வாட்டி தான். இனிமே நீங்க எப்போ வேணும் நாளும் இங்க வந்து ஆசி வாங்கிக்கலாம். உங்க பேர சொன்னா போதும்!”

சிவகுமரன் வாலட்டிலிருந்து பத்து வெள்ளி தாள் ஒன்றை எடுத்து கொடுத்தார்.

ஐரிஸ் பணத்தையும், சிறிய புத்தகத்தையும் எதிரே இருந்த பெண்மணிகளிடம் கொடுத்தாள். அவர்களில் கண்ணாடி அணிந்த ஒருவர், வேறொரு நோட்டில் ஏதோ குறித்துக்கொண்டார்.

“சரியான ஸ்பெல்லிங் தானே எழுதி இருக்கீங்க? இல்லாட்டி… அத தமிழ்ல எப்படி சொல்லுவீங்க… புண்... யம்... ”

“புண்ணியம்?” என்று கேட்டார் சிவகுமரன்.

“ஆமா அது தான். ஸ்பெல்லிங் தப்பா இருந்தா, அது வேற ஆளுக்கு போயிடும்“ என்றபடி ஐரிஸ் சிரித்தாள்.

***

“அது ரொம்ப சக்தி வாய்ந்த கோவிலாம். அங்க போனா நாம நினைக்கறது நடக்கும். எதுவுமே சரியா நடக்க மாட்டேங்குது தானே நமக்கு?”

“உன் அக்கா சொன்னாளா?” என்றார் சிவகுமரன். கேள்வி கேட்டு புண்ணியமில்லை. மகேஸ் முடிவெடுத்துவிட்டாள் என்று தெரிந்தது. தமிழ் நாடு போனார்கள். செலவு ஆனது. வந்தார்கள்.

அடுத்து இன்னொரு லோக்கல் சாமியார் ஒருத்தர் வீட்டுக்கு வந்தார். ஒரு நாள் முழுவதும் வீட்டில் பூஜை செய்தார். பிறகு கிளம்பும் முன் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம், கால் கழுவாமல் வீட்டிற்குள் வருவது தான் என்றார்.

அன்றிலிருந்து வாசலில் ஒரு பக்கெட் தண்ணி. அதில் சிறிதளவு மஞ்சள். கால்களை கழுவிவிட்டு தான் வினோத்தும்கூட உள்ளே வர வேண்டும் என்றானது.

***

“ஹெவென்லி தாவோ என்றால் என்ன?”

வெள்ளை சட்டை கருப்பு பேன்ட் அணிந்த ஒருவர், கரும்பலகை ஒன்றில் “ஹெவென்லி தாவோ” என்று எழுதி கோடிட்டார். தனது பெயரை சொர்க்கத்துக்கு செல்ல ரெஜிஸ்டர் செய்த பிறகு, சிவகுமரனும் ஐரிஸ்ஸும், இந்த வெள்ளை சட்டை ஜென்டில்மேன் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தனர்.

“தாவோ என்றால் பாதை. ஹெவென்லி தாவோ என்றால் சொர்க்கத்துக்கு செல்லும் பாதை. நம்ம வாழ்க்கையில எத நம்மால தீர்மானிக்க முடியும்? நம்ம பிறப்ப தீர்மானிக்க முடியுமா? நாம எந்த குடும்பத்துல பிறக்கறோம்? அத தீர்மானிக்க முடியுமா? தீர்மானிக்க முடிஞ்சா, அப்புறம் எல்லாரும் பணக்கார குடும்பத்துல தானே பிறப்பாங்க? ஏழைங்களுக்கு குழந்தையே இருக்காது. நம்மால நம்ம முகத்த தீர்மானிக்க முடியுமா? அப்போ உலகத்துல எல்லாரும் அழகா இருப்பாங்க.”

சிவகுமரன் சிரித்தார். “உலகத்தில் எல்லோரும் அழகாய் இருந்தால்!” என்ற எண்ணம் அவரை உற்சாக படுத்தியது.

***

சிறு வயதில் சிவகுமரனுக்கு தன்னை அழகு படுத்திக்கொள்ள மிகவும் பிடிக்கும். குளித்து முடித்து, சட்டை பவுடர் எல்லாம் போட்டுக் கொண்டு, சமயலறையில் அம்மாவுக்கு உதவ செல்வார். அம்மாவோ, “அழகு டா நீ! ஆனா இங்க ஏன் வந்து வேகர? இதெல்லாம் பொம்பளைங்க வேல” என்பாள்.

கே. எல்லில் மாமாவின் வீட்டில் தான் தங்கியிருந்தார்கள். சிவகுமரன் தனது அப்பாவை பார்த்ததே இல்லை. மாமா தான் எல்லாம். மாமாவுக்கு ஓடியாடி வேலை செய்வார். அவர் வீடு கடல் போல இருக்கும். விடுமுறைக்கு எல்லோரும் வெளியே சென்றால், சிவகுமரன் தான் வீட்டை கவனித்து கொள்வார். அந்த நாட்கள் எல்லாம் வீட்டு ராஜா போலிருப்பார் - டி.வி பார்த்துக்கொண்டு, பக்கத்து ரொட்டிக்கடையிலிருந்து நினைத்ததை வாங்கியாந்து சாப்பிட்டு.

சிங்கப்பூருக்கு மாமா அவரை அழைத்துவந்தவுடன் தொல்லை துவங்கியது. மாமாவின் ஃபாக்டரியில் செக்யூரிட்டியாக வேலை செய்தார். சம்பளம் கொடுக்கிறேன் கொடுக்கிறேன் என்று சொல்லி கடைசியில் 4 வருடம் வேலை பார்த்தபின் அவரின் கல்யாணத்தின் போதுதான், ஒரு தொகையை கொடுத்தார் மாமா. அதுவும் என்ன தொகை? “நீ சாப்பிட்ட செலவு மத்த செலவு எல்லாம் கழிச்சுக்கிட்டேன்” என்றார்.

பெண்ணாவது தனக்கு பிடித்த பெண்ணா? இல்லை. மாமா பார்த்த பெண். “பொண்ணு சிங்கப்பூரியன் டா. ஒரு கொரைச்சலும் இல்ல. அப்பா அம்மா ஸ்ரீ லங்கா போயிட்டாங்க. நீயும் பி.ஆர் வாங்கிடு. கையோட கல்யாணம் முடிச்சிடுவோம்.”

கல்யாணம் முடிந்தவுடன் புக்கித் மேராவில் வீடு. அதுவும் மாமா ஏற்பாடு. அதன்பின் அவர் முகத்திலேயே முழிக்க கூடாது என்று முடிவு செய்தார் சிவகுமரன். வேறு செக்யூரிட்டி வேலை தேடினார். பேருந்து ஓட்டுனர் தேர்வுக்கு சென்றார். தேர்வு பெறவில்லை. முஸ்தபாவில் சேர்ந்தார். வீட்டில் இருக்கும் இரு அறைகளையும் வாடகைக்கு விட்டார்.

முதலில் குடி வந்த சுசேந்திரனால் பெரும் பிரச்சனை. அவர் அவனை தம்பியாகப் பார்த்தார். ஆனால் மகேஸுக்கு பிடிக்கவில்லை. ஒரு நாள் வேறு ஏதோ விஷயம் பற்றி சண்டை போடுகையில், அலறினாள், “சுசேன் சுசேன்னு நீ ஏன் வழியற? அவன மடியில உக்காத்தி வெச்சு சோறு ஊட்டற... நீ என்ன கே வா?!”

***

“இங்க வெயிட் பண்ணுங்க. மாஸ்டர் உங்கள உள்ள கூப்பிடுவாரு.”

நான்கு மாடிகள் ஏறி, வெள்ளை கோவிலின் மேல் நிலையில், ஒரு கதவருகில் காத்திருந்தார் சிவகுமரன். கூட ஐந்து ஆறு நபர்கள். எல்லோருக்கும் ஒரு பேட்ஜ் தரப்பட்டிருந்தது. அவரின் பேட்ஜில் மட்டும் “வீ.ஐ.பி” என்று எழுதி இருந்ததைப் பார்த்தார்.

உள்ளே வரச்சொன்னார்கள். உள்ளே பெரிய மண்டபம். பத்து வரிசைகளில் சிறிய சதுர மெத்தைகள் வைத்திருந்தனர். அந்த மெத்தைகளின் முன்னே ஐந்து பெரிய சிலைகள். சுவர்களில் மொட்டை அடித்த பல நபர்களின் ஓவியங்கள். மண்டபத்தின் ஓரங்களில் வழிகாட்டிகள் போல் சிலர் நின்றிருந்து வழிமுறை சொன்னார்கள்.

ஒரு ஆள் அந்த சிறிய மெத்தையில் அமரப் போனார். அப்போது வழிகாட்டி, “அமரக் கூடாது. எல்லோரும் நேர் வரிசையில் ஒவ்வொரு மெத்தையின் பின்னே நில்லுங்கள். ஒவ்வொருவரின் பெயரையும் படிப்போம். உங்கள் பெயர் வரும் போது கை தூக்குங்கள்.”

சிவகுமரன் உற்று கவனித்தார். பல பெயர்களின் இடையே அவரின் பெயர் வந்ததும் உடனே கை தூக்கினார். பெயர்களை படிப்பவர் அவரை பார்த்து புன்னகை புரிந்தார்.

பிறகு ஒவ்வொருவரையும் தனக்கு முன்னே இருக்கும் மெத்தையில் மண்டியிட சொன்னார்கள். வெள்ளை உடை அணிந்த மாஸ்டர், நடுவில் இருக்கும் சிலை முன் வந்து நின்றார். அப்போது தான் கவனித்தார் சிவகுமரன். ஐந்து சிலைகளில், நடுவில் இருக்கும் பெரிய சிலை சிரிக்கும் புத்தர் சிலை. சிரிக்கும் புத்தர் என்றாலே சிவகுமரனுக்கு குணா ஞாபகம் தான் வரும்.

***

“உன் ரெஸுமே வெச்சிருக்கியா? மூணு காப்பி என் கிட்ட கொடு.”

“சரி மாமா! நான் பில் கேட்ஸ் ஆனதும் உங்கள கண்டிப்பா கவனிச்சுக்கறேன்.” மகேஸின் தம்பி குணா சகல பற்களும் காட்டியபடி இளித்தான். அவன் கருப்பு முகத்தின் பின்னணியில் பற்கள் பளிச்சிட்டன.

“கேட்டியா மகேஸ் உன் தம்பி சொல்லுறத? பில் கேட்ஸாக போறாராம்!” பாட்டு கேட்டுக்கொண்டே பாத்திரம் துலக்கிக்கொண்டிருந்த மகேஸ் புன்னகைத்தாள்.

“என்ன வயசுடா ஆவுது உனக்கு?”

“25 மாமா. மாமா, நீங்க வேல பாக்குற கே.எப்.ஸிலயே எனக்கும் ஒரு வேல பாருங்களேன்?”

“கே.எப்.ஸியா? அந்த வேலைய எப்போவோ விட்டுட்டேன்டா.” சிவகுமரனின் குரல் சற்று தொய்வுற்றது.

“கைல இருக்கற முடிய ஷேவ் பண்ணு, கால்ல இருக்கற முடிய ஷேவ் பண்ணு, தொப்பி போட்டுக்கோ, இத பண்ணு அத பண்ணுன்னு... மாவு பெனையரதுக்கு இவ்வளவு பேச்சா! ச்சே! அதான் விடுங்கடா ஆளன்னு வந்துட்டேன்.”

“இப்போ என்ன பண்ணுறீங்க?”

“இங்க பக்கத்துல ஜிம் இருக்கு. அங்க க்ளீனிங் சூப்பர்வைஸர்.” உண்மையில் கிளீனர். ஆனால் இப்படி தான் யார் கேட்டாலும் பதில் சொல்வார்.

“இங்க ரூம்ல ஒருத்தர் இருக்காரே… அவரு என்ன வேல பண்ணுறாரு?”

“அவரு ஐ.டி டா. தெரியுமா உனக்கு?”

“மாமா ஐ.டி எல்லாம் நல்லா பண்ணுவேன். சிஸ்டம் இன்ஸ்டால் பண்ணுறது. வேர்ட், எக்ஸல் எல்லாம் தெரியும்.”

“சரி நாளைக்கு அவர் கிட்ட பேசி பாக்கறேன். ஆமா உனக்கு கம்ப்யூட்டர் நல்லா தெரியுமா?”

“ம்ம்!”

“நம்ம வீட்டு கம்ப்யூட்டர் கொஞ்சம் பாக்கறியா? எப்போ ஆன் பண்ணாலும் ஏதோ இன்ஸ்டால் இன்ஸ்டால்னு கேக்குதுடா. அமுத்தினா போகவும் மாட்டேங்குது. உங்க அக்காவும் நோட்ஸ் எல்லாம் அதுலதான் வெச்சிருக்கா.”

“அப்படி இருக்க கூடாதே. இதோ பாக்கறேன்.”

***

“அம்மா சொன்னது சரி தான். சர்ர்ரியான வேஸ்ட்டு மாமா நீ! உன்ன நம்பி வந்தேன் பாரு...”

சிங்கப்பூரில் ஒரு மாதம் இருந்து, வேலை தேடுறேன் என்று சொல்லி சாப்பிட்டு, அவரின் வீட்டு ஹாலிலே தூங்கி, பிறகு அவரை பார்த்து சொன்ன வாக்கியம் இது. அதை கேட்ட சிவகுமரன் மெளனமாக அறைக்குள் சென்றுவிட்டார். இரண்டே நாட்களில் குணாவும் இலங்கைக்கு திரும்பிவிட்டான்.

ஒரு வாரத்துக்கு மகேஸும் சிவகுமரனும் பேசிக்கொள்ளவில்லை. ஒரு நாள் இருவரும் ஹாலில் அவரவர் கைபேசி திரையை உருட்டிக்கொண்டிருக்க, பின்னணியில் டி.வி ஓடிக்கொண்டிருக்க, வினோத் ரூமிலிருந்து வெளியே வந்தான். “துணி வாஷிங்க்கு போடணும்...”

“ம்ம் இதோ...” என்று மகேஸ் தலை அசைத்தாள். ஏற்கனவே இயந்திரத்தில் இருந்த துணிகளை நீக்கக்கோரி வினோத் தொடுத்த விண்ணப்பம். திரும்ப ரூமுக்குள் சென்று விட்டான்.

“உங்க துணி தான். போய் எடுங்க.”

சிவகுமரன் கைபேசியிலிருந்து நிமிர்ந்து மகேஸை முறைத்தார்.

“நான் என்ன வேஸ்ட்டா மகேஸு?”

“விடுங்க. அவன் ஏதோ கோவத்துல உளரிட்டான்…”

சிவகுமரனின் தலை சரிந்தது. மகேஸ் பக்கத்தில் வந்து அமர்ந்தாள். அவர் தோளில் கை வைத்தாள்.

“நம்ம படுற கஷ்டம் அவனுக்கு தெரியாதுங்க. சின்ன பைய்யன். விடுங்க.”

“நான் ட்ரை பண்ணிட்டு தானே இருக்கேன்?”

“ச்ச்” பெருமூச்சுடன் மகேஸ் எழுந்தாள். “நீங்க முதல்ல உள்ள வாங்க. உள்ள பேசிக்கலாம்.”

ஹால் சோபாவிலிருந்து எழ அவரின் கையை பிடித்து இழுத்தாள். சிவகுமரன் அவள் கையை உதறிவிட்டு அறைக்குள் சென்றார்.

***

“அந்த விளக்கையே உற்று பாருங்கள். இப்போது உங்களுக்கு சொர்க்கத்துக்கு செல்லும் வாசலை திறந்து விடுகிறேன்.”

விளக்கையே பார்த்துக்கொண்டிருந்த சிவகுமரனின் இடது கண்ணில் ஒரு துளி கண்ணீர்.

சிவகுமரனருகே வந்தார் மாஸ்டர். அவரின் புருவங்கள் இடையே ஆள் காட்டி விரலை வைத்தார். பிறகு அவர் கண் முன்னே கை வைத்து கதவை திறப்பது போல் சைகை செய்தார். வலது புறம் நின்றிருந்த சிறுவன் ஒரு வார்த்தை சொன்னான். இப்போது 16 முறை வணங்க வேண்டும். ஒவ்வொன்றாக எண்ணிக்கொண்டு 16 முறை குனிந்து நிமிர்ந்தார் சிவகுமரன். கண்ணீர்த்துளி எங்கோ பறந்தது.

மாஸ்டர் புரியாத எழுத்துக்களில் எழுதியிருந்த பேப்பரை மடக்கி தங்கக்கிண்ணத்தில் எரித்தார். அந்த பேப்பரின் உருவத்தை கருப்பும் நெருப்பும் மெல்ல பருகுவதை சிவகுமரன் கூப்பிய கைகளுடன் பார்த்தார். அந்த பேப்பரிலிருந்து ஒரு துகள் எரிந்து காற்றில் மிதந்து, மறைந்தது. அப்போது சிவகுமரனுக்கு ஒரு எண்ணம் தோன்றியது.

“நான் உங்களுக்கு சொல்லிக்கொடுத்த மூன்று ரகசியங்களையும் நீங்கள் ரகசியமாக வைத்து கொள்ளவேண்டும். சென்று வாருங்கள்.” என்றார் மாஸ்டர்.

மூன்று முறை வணங்கிவிட்டு அனைவரும் எழுந்தனர். ஒவ்வொருத்தராக அவர்களின் பேட்ஜை திருப்பிக் கொடுத்தனர். பிறகு அனைவரின் சட்டையிலும் வட்டமான சிகப்பு ஸ்டிக்கர் ஒன்று ஒட்டினார்கள். வெளியே வந்ததும் அவரை ஐரிஸ் சந்தித்தார்.

“கீழ வாங்க. உங்களோட மந்திர புத்தகம் உங்களுக்கு வாங்கித் தரேன்.”

கீழே சென்றதும், ஒரு சிறிய புத்தகத்தை அவரிடம் கொடுத்தாள். “நீங்க கொடுத்தீங்களே பத்து வெள்ளி. அது இந்த மாதிரி மந்திர புத்தகங்கள் அச்சிட உபயோகம் ஆகும். ஏழை மக்கள் படிக்க. உங்க பேரு இருக்கு பாருங்க” கடைசி பக்கத்தில் சிவகுமரன் என்று அவர் பெயர் அச்சிடப் பட்டிருந்தது.

“சரி அடுத்த வாரமும் வாங்க, உங்க மனைவிய கூட்டிக்கிட்டு”

“கண்டிப்பா”

சிவகுமரனுக்கு ஐரிஸிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்போல இருந்தது.

“வரும் போது என் பஸ் ஸ்டாப்பை மிஸ் பண்ணிட்டேன். ஒரு ஸ்டாப் தள்ளி எறங்க வேண்டியதா போச்சு. அப்புறம் தான் உங்கள சந்திச்சேன்.”

ஐரிஸ் ஆச்சரியத்துடன் பார்த்தாள். “கடவுள் நினைச்சிருக்கார். நீங்க இங்க இன்னிக்கி வரணும்னு. இட் இஸ் எ சைன்!”

சிவகுமரன் புன்னகைத்தார். அவருக்கும் அவ்வாறு தோன்றியது. ஏன் அவருக்கும் மகேஸுக்கும் அன்று சண்டை வர வேண்டும்? ஏன் கடுப்பில் அவர் பஸ் ஸ்டாப்பை தவற விடவேண்டும்? அது மட்டும் அல்ல. மண்டபத்தில் எரியும் காகிதத்தை பார்க்கும் போது, ஏன் அவருக்கு சொந்தமாக ஒரு சிறு தொழில் ஆரம்பிக்கும் எண்ணம் வர வேண்டும்?

***

கோவிலிலிருந்து வெளியே வந்தவுடன், சிவகுமரனின் கைபேசி ஒலித்தது. “மகேஸ்” என்றது.

“ஆன்ன் மகேஸ் இதோ வந்துட்டேன்.”

“எங்க இருக்கீங்க?”

“இதோ இங்க சாமான் வாங்கிட்டு இருக்கேன்… அரை மனில வந்துடறேன்.”

“சாமான் கெடக்கு. சீக்கிரம் வாங்க.”

“என்ன விஷயம்?”

“வாங்க சொல்லுறேன்.”

***

வீட்டிற்கு வந்ததும் மகேஸ் செய்தியை சொன்னாள். சொல்லிவிட்டு அவர் மடியில் படுத்து கொண்டாள். அரை மணி நேரம் சோபாவில் இருவரும் அப்படியே இருந்தார்கள். சிவகுமரனுக்கு தன்னை அறியாமல் புன்னகை வந்தது, “அதுவும் கரெக்டா எஸ்.ஜி 50ல...” மகேஸும் புன்னகைத்தாள்.

சிவகுமரன் எழுந்து பூஜை அறைக்கு சென்றார். அங்கு முருகனுடன் குவான்யின் இருந்தாள். கைகளை கூப்பினார். மேலும் கீழும் ஆட்டினார். என்ன செய்வது, எப்படி சமாளிக்க போகிறோம், என்று எதுவும் அவருக்கு புரியவில்லை. ஆனால் மனதில் ஒரு அசாதாரண நம்பிக்கை. பூஜை அறையின் விளக்கொளியில் அவர் சட்டையில் இருந்த சிகப்பு புள்ளி மின்னியது.

வுட்லாண்ட்ஸிலிருந்து தியாங் பாரு

கோகுலுக்கு அந்த நாளின் தேதி ஞாபகம் இல்லை. ஆனால், அறையில் நுழைந்தவுடன், அவன் நண்பர்கள் நாலு பேரும் ஒருவரை ஒருவர் பார்த்தப்படி நின்றிருந்த அந்த காட்சி நினைவில் இருந்தது. பிரவீனின் கையில் மொபைல் போன். மற்ற மூன்று நண்பர்களும் அவனையே பார்த்திருந்தனர்.


“என்ன டா மேட்டர்? எதுக்கு இந்த மீட்டிங்?” என்று சகஜமாக கேட்டான் கோகுல்.

உடனே பிரவீன், “கோக்ஸ், நான் உனக்கு ஒரு நம்பர் போன் போட்டு தறேன். பேசறியா?”

“யாருக்கு டா?”

“வீடு சுத்தம் செய்ய ஆள் தேடிட்டு இருந்தோம்ல. அஜய் ஒரு நம்பர் குடுத்திருக்காரு. பேசறியா?”

“நீயே பேசேன் டா. என்ன பிரச்சன?”

“நீ தானே மச்சான் எல்லார் கிட்டயும் சகஜமா பேசுவ. இவங்க கிட்டயும் பேசு.” நக்களிடித்தான் விவேக்.

பிரவீன் விவேக்கை முறைத்து விட்டு, மொபைலை பிழிந்தான், “ஒன்னும் இல்ல டா. 40 டாலருக்கு மேல தர முடியாது. கொஞ்சம் கறாரா பேசணும். அதான்...”

“சரி குடு. பேசறேன்”, என்று கோகுல் மொபைலை வாங்க, அவன் மனதில் மின்னல் வேகத்தில் பாய்ந்தது, சென்னையில் நடந்த ஒரு சம்பவம்.

***

அம்மா ஹாலில் சோபாவில் உட்கார்ந்து டி.வி பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கண்களை தவிர்த்தப்படி வீட்டிற்குள் நுழைந்தான் கோகுல்.

“என்ன டா… கிளாஸ் எப்படி போச்சு?” என்றது அம்மாவின் குரல்.

“ஆன்… நல்லா போச்சு மா...” அவளை பார்க்காமல் புத்தக பையை கீழே வைத்துவிட்டு நாற்காலியில் கோகுல் அமர்ந்தான்.

“ஆட்டோ ஈசியா கெடச்சுதா?”

“ம்ம்...”

“காந்தி சிலைக்கு ஆப்போசிட்ல தானே எடுத்த?‘

“ஆமா”

“எவ்வளோ கேட்டான்…?”

கோகுல் கண்களை இறுக்கி மூடிக்கொண்டான். பொய் சொல்லி விடலாமா என்று ஒரு நொடி யோசித்தான். முடிவு எடுப்பதற்குள் அவன் வாய் தானாகவே திறந்து விட்டது.

“100 ரூபா மா...”

“என்ன டா சொல்லுற?! 100 ரூபா வா?? 50க்கு மேல குடுக்காதேன்னு சொன்னேன்ல உனக்கு?”

“50க்கெல்லாம் எந்த ஆட்டோக்காரனும் வரமாட்டான் மா! சொல்லி பாத்தேன்.. கேக்கல...”

“நல்லா அழுத்தி சொல்லணும். சரியான பேக்குடா நீ!”

கோகுலின் தம்பி ரிமோட் கையில் வைத்தப்படி, அம்மாவுடன் டி.வி பார்த்துக்கொண்டிருந்தான். அவனை கோகுல் நிமிர்ந்து பார்க்கவில்லை. அவன் முகத்தில் நக்கலான சிரிப்பு இருக்கும் என்று கோகுலுக்குத்  தெரியும்.

***

இப்படி பல சம்பவங்கள் கோகுலின் மனதில் மின்னல் வேகத்தில் பறந்தன. அவன் டயல் செய்திருந்த எண் இப்பொழுது ஒலித்துக்கொண்டிருந்தது. என்ன தான் ஊரில் அவன் அம்மாவை பொறுத்தவரை ஏமாளியாக இருந்தாலும், சிங்கப்பூரில் அவனுக்கு அந்த பிரச்சனை இல்லை.

“கொத்த மல்லிக்கருவேப்பிலைக் கூட காசு குடுக்காம வாங்க தெரியல உனக்கு…” என்ற அம்மாவின் திட்டல் இங்கு செல்லுப்படி ஆகாது. ஜயண்ட் மால் சென்றால் கொத்தமல்லி 2.5 வெள்ளி என்று கொட்டை எழுத்தில் போட்டிருப்பான். எல்லோருக்கும் அதே விலை தான். அவனுக்கு சிங்கப்பூர் பிடித்திருந்தது.

என்.யூ.எஸ்ஸில் படிப்பு முடித்து, ஹாஸ்டலை விட்டு வெளியேறி, பணம் தரும் ஒரு வேலையை பிடித்து, 4 நண்பர்களுடன் தியாங் பாருவில் அந்த பணத்திற்கேற்ற ஒரு எச்.டீ.பீ வீட்டில், 6 மாதங்களுக்கு முன்பு குடியேறியிருந்தான் கோகுல். அந்த வீட்டின் வாடகைக் கேட்டு அவனின் பாட்டி வாயை பிளந்தாள், “3000 டாலர்னா நம்ம ரூபாய்ல எவ்வளோ வரும்? அடேங்கப்பா! ஒரு லட்சம் கிட்ட வரும் போல இருக்கே!”

வாடகை அதிகமாக இருந்தாலும், சென்னையில் எப்பொழுதும் இருக்கும் “நாம் ஏமாத்தப்படுகிறோமா?” என்ற ஒரு பயம் இங்கு இல்லை. ஆனால், சிங்கப்பூரிலும் சில விஷயங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை கிடையாது. கதவுகள் தானாக பூட்டிக்கொண்டாலோ, பைப் ஏதேனும் துண்டித்து போனாலோ, சில தெருக்கடைகளில் பொருட்கள் வாங்கினாலோ, மீண்டும் பேரம் என்ற அசுரன் உருவெடுத்து வருவான். ஒரு முறை, வாசல் கதவு சரி செய்ய வந்த ஆள், செய்த வேலைக்கு 30 வெள்ளியும், போக்குவரத்துச் செலவுக்கு 40 வெள்ளியும் வாங்கிக்கொண்டு போய் விட்டான். அதை கொடுத்த நண்பனை இரண்டு வாரம் எல்லோரும் திட்டிக்கொண்டிருந்தனர். “ஏன் டா… ஜூ கூன் லேர்ந்து சாங்கி போனா கூட 40 வெள்ளி ஆகாதுடா. அந்த ஆளு கேட்டான்னு இப்படி அள்ளிக் கொடித்திருக்கியே!”

இவ்வாறான ஏமாளித்தனம் கோகுலை சற்று ஆறுதல் படுத்தியது. “நீங்க அஞ்சு பேரும் சரியான பேக்குங்க. எவனாச்சும் வீட்டுக்குள்ள நொழஞ்சு திருடிட்டுப்போனாக் கூட தெரியாது. எப்பப்பாரு கம்ப்யூட்டரேக் கதின்னு கெடப்பீங்க.” என்று ஒரு அம்மா சொன்னா பரவாயில்லை, ஐந்து நண்பர்களின் அம்மாக்களும் ஸ்கைப்பில் பேசும் போது, வேறு வேறு வார்த்தைகளில் சொன்னாலும், மேட்டர் அதே தான்.  எப்படி நம்மை விட பயந்தவன் ஒருத்தன் இருந்தால் நமக்கு தைரியம் வருமோ, அது போலத்தான் கோகுலின் நிலை அவன் அந்த போன் செய்யும் பொழுது.

“ஹலோ... சாந்தி கிட்ட பேசலாமா?”

மருப்பக்கத்திளிருந்து ஒரு பெண் குரல் வணக்கம் என்று சொன்னது.

“வணக்கம். என் பேரு கோகுல். இங்க தியாங் பாருல தங்கிருக்கேன். வீடு கொஞ்சம் சுத்தம் பண்ணனும்... ஆன்… இன்னிக்கேதான்...”

சைகையால் எப்பொழுது வரவேண்டும் என்று பிரவீனை கேட்டான். அவன் இரண்டு என்று காற்றில் வரைந்து காட்டினான்.

“மத்தியானம் வந்தீங்கன்னா நல்லா இருக்கும்... மொத்தம்... மொத்தம் 4 ரூம்...”

பாத்ரூமை விரலால் சுட்டிக்காட்டினான் பிரவீன்.

“கூட 2 பாத்ரூம்... உம்ம்... எவ்வளோ... எவ்வளோ ஆகும்?... ஓ... அது கொஞ்சம் அதிகமா இருக்குங்களே...”

60 என்று சைகையால் சுற்றி நின்ற நண்பர்களுக்கு கோகுல் வரைந்து காட்டினான். அவர்கள் முடியவே முடியாது என்று தலையை ஆட்டினார்கள்.

“இல்லைங்க புரியுது...ம்ம்... வூட்லாண்ட்ஸ் தூரம் தான்... ஆனா நீங்க ரெட் லைன் எடுத்து.. அப்புறம் கிரீன் லைன் எடுத்தா வந்துடலாம்...ம்ம்.. கரெக்ட்டு தான்... என் பிரெண்ட் அஜய் தான் உங்க நம்பர் குடுத்தார்... அதான் போன் அடிச்சேன்... நீங்க என்னடான்னா இவ்வளோ சொல்லுறீங்களே... ம்ம்.. ஆமா அவரு தான் நம்பர் குடுத்தார்... கூட காலேஜுல படிச்சவர்... அப்படியா... சரி... சரி... அட்ரஸ் நான் மெசேஜ் பண்ணிடறேன்... ஓக்கே... ரொம்ப நன்றிங்க!”

போனை துண்டிக்கும் பொழுது கோகுலின் முகம் பிரகாசமாக மின்னியது. அவனால் நம்பவே முடியவில்லை.

“40 டாலருக்கு ஓக்கே சொல்லிட்டாங்க மச்சி!”

பேரம் பேசுவதில் முதல் வெற்றி.

***

“மச்சி எதாச்சும் படம் பாக்கலாம் டா!” என்றான் கோகுல். 40 வெள்ளி டீல் முடித்த சந்தோஷத்தில்.

“‘டின் டின்’ இருக்கு பார்க்கலாமா?”

“அது இன்னும் தியேட்டர்ல ஓடிட்டு தானே இருக்கு? இப்போ எப்படி?”

“மூவி ஆன் டிமாண்ட்!” என்று அறிவித்தப்படி கையில் இருந்த டி.வி ரிமோட்டில் சில பொத்தான்களை அழுற்றினான் அமர் (40 வெள்ளி கொடுத்து 2 வாரம் திட்டு வாங்கினானே, அந்த நண்பன்).

“டேய்! படம் பாக்கறதுக்கு முன்னாடி, சில விஷயம் வாங்கணும்டா… வீடு சுத்தம் செய்ய.” உணர்ச்சிகளுக்கு அப்பாற்ப்பட்டு எப்பொழுதும் நிலையாக இருக்கும் பிரவீன் கூறினான்.

“நீ வாங்கிட்டு வந்திடு மச்சி!” என்றான் விவேக், டி.வி.யின் அருகே கால்களை விரித்து தரையில் உட்கார்ந்தப்படி. படம் துவங்கி ஒரு சிங்கம் உறும ஆரமித்தது.

கதவருகே இருக்கும் செருப்பை எடுத்தப்படி பிரவீன் சொன்னான், “டே அப்புறம், அவங்க சுத்தம் செய்யறப்போ சரியா பண்ணுறாங்களான்னு பார்க்கணும் டா. சந்தீப் அவங்க வீட்டுக்கு வந்தவங்கள பத்தி சொல்லிருக்கான். சுத்தம் பண்ணறேன்னு சொல்லிட்டு பாத்ரூம்குள்ள போய் தாப்பா போட்டு, இரண்டு மணி நேரம் சும்மா உக்காந்துட்டு, அதிகமா காசு வாங்கிட்டு போயிட்டாங்களாம்.”

விவேக் டி.வி பார்த்துக்கொண்டே கையை மட்டும் தூக்கினான், “டோன்ட் வரி மச்சி! பாத்துக்கலாம்!”

***

கதவு தட்டப்பட்டது. உடனே ஓடிக்கொண்டிருந்த ‘டின் டின்’ பாஸ் செய்ய பட்டது. ஒரு 35 வயது பெண்மணி உள்ளே நுழைந்தாள். சுடிதார் அணிந்திருந்தாள். தோளில் ஒரு பை. 4 நண்பர்களும் என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டிருக்க, “வாங்க! நான் தான் உங்களுக்கு போன் செஞ்சேன். இது தான் வீடு” என்றான் கோகுல். சாந்தி சிறிதாக புன்னகைத்தாள்.

பிறகு, “இடம் உங்களால சுலபமாக் கண்டு பிடிக்க முடிஞ்சுதா?” என்றான். அவனின் அம்மா வீட்டுக்கு வருபவர்களிடம் அடிக்கடிக் கேட்கும் கேள்வி அது. ஆமாம் என்று தலை ஆட்டியப்படி, “நீங்க மாப் அதெல்லாம் வெச்சிருக்கீங்களா?”

“ஆன்.. இங்க இருக்கு...”, என்று தான் வாங்கி வந்திருந்த பொருட்களை நோக்கி அவர்களை கூட்டிச்சென்றான் பிரவீன்.

இரண்டு நிமிடம் கழித்து ஹாலுக்கு மீண்டும் வந்து. “இங்க ரூம் எங்க இருக்கு?” என்றாள் சாந்தி. கையில் மாற்று உடை வைத்திருந்தாள். கோகுல் பக்கத்தில் இருக்கும் அறையை சுட்டிக்காட்டினான். அந்த ரூமுக்குள் சென்று சாந்தி தாளிட்டுக்கொண்டாள்.

“சரி படத்த போடு” விவேக் மீண்டும் தரையில் உட்கார்ந்தான். டின் டின் ஓட துவங்கியது. உடை மாற்றிய சாந்தியும் வேலையை துவங்கினாள். கோகுலின் கவனம் படத்தை விட அவள் செய்யும் வேளையில் தான் இருந்தது.

ஒரு பெரிய கருப்பு பிளாஸ்டிக் பையை எடுத்து கொண்டாள். கூட்டும் பொழுது வரும் குப்பை மற்றும் தேவை இல்லாத சாமான்களை அதில் போட்டாள். தரையில் கிடக்கும் தேவையான பொருட்களை, மேஜை மீதோ, மெத்தையின் மீதோ வைத்துவிட்டு, தரையைப் பெருக்கினாள். ஹாலில் உட்கார்ந்து டி.வி பார்த்துக்கொண்டிருந்த கோகுலுக்கு அவ்வப்போது சாந்தியின் கைகள் ஏதாவதொரு அறையின் உள்ளிருந்து வெளியே வந்து, குப்பையை கருப்பு பைக்குள் வீசுவது மட்டும் தான் தெரிந்தது.

கோகுலின் அறையை சுத்தம் செய்யும் பொழுது கோகுல் ஓடிப்போய் பின்னால் நின்றுக்கொண்டான். “எதையாச்சும் தேவை இல்லைன்னு தூக்கி போட்டுடப் போறாங்க…” என்ற பயம்.

***

டின் டின் முடிந்திருந்தது. சாந்தி மீண்டும் சுடிதாருக்கு மாறி இருந்தாள். அவள் வீட்டுக்கு வந்த நேரம் 2. கிளம்பும் நேரம் 6.30. நாலறை மணி நேரம் ஆகியிருந்தது.

சாந்தி வீட்டுக்கு வெளியே செருப்பு அணிந்துக்கொண்டிருக்க, பிரவீன் மெதுவாக கோகுலிடம் சொன்னான், “எங்க யாரு கிட்டயும் கேஷ் இல்ல டா. நீ கீழ ஏ.டீ.எம்ல எடுத்து குடுத்திடறியா? பில்மாங்க்ல செட்டில் பண்ணிக்கலாம்.”

கோகுல் மெல்லிய குரலில், “அது ஓக்கே. ஆனா நாலறை மணி நேரம் ஆகிருக்கே. இப்போ அவங்களுக்கு 40 தருனுமா 50 ஆ?”

“40 குடுத்துட்டு என்ன சொல்றாங்க பாரு...” என்று கோகுலிடம் குடை கொடுத்தப்படி சொன்னான் பிரவீன்.

வெளியே மழை பலமாக பெய்துக்கொண்டிருந்தது.

“இந்த வழியா வாங்க. ஏ.டி.எம்க்கு நனையாம போயிடலாம்.” குடையை மேலே பிடித்தப்படி சாந்தியை சாலை தாண்ட வைத்தான். சாலையின் மறுப்பக்கத்தில் கடைகள் இருந்ததால் குடை தேவைப்படவில்லை. அந்த கடைகளின் ஊடே குறுக்கும் நெருக்கும் நடந்தவாறு ஏ.டி.எம் சென்றடைந்தான். 40 வெள்ளிக்கு சில்லறை இல்லை என்றபடி 50 வெள்ளி நோட்டைக் கக்கியது இயந்திரம். கோகுலின் மனதில் பல்லி சத்தமிட்டது.

“இப்போ எப்படி அவங்க கிட்ட மிச்ச காசு கேக்குறது… எதாச்சும் டக்குனு வாங்கி சில்லறை மாத்தலாமா...”

அதற்குள் சாந்தியின் கண்களை பார்த்துவிட்டான். தவிர்க்கமுடியாமல் சென்று பணத்தை அவ்வாறே கொடுத்துவிட்டான். “அவங்களாவே மிச்சம் கொடுக்கறாங்களா பாப்போம்…”

சாந்தி நன்றி சொல்லியப்படி 50 வெள்ளியை வாங்கி ஒரு பர்ஸ் உள்ளே வைத்துக் கொண்டாள்.

“பஸ் ஸ்டாப் அந்த பக்கம் இருக்கு… வாங்க...” என்று மறுபடி அவளை குடைக்குள்ளே அழைத்து சென்றான்.

“இங்க 124ன்னு ஒரு பஸ் வரும். அதுல ஏறினா, தியாங் பாரு எம்.ஆர்.டிக்கு 5 நிமிஷத்துல போயிடலாம்.”

டக்கென்று போன் வெளியே எடுத்து திரையில்  சில பொத்தான்களை அழுற்றினான். “இன்னும் 7 நிமிஷத்தில் பஸ் வந்திடும்.” சாந்தி தலையை ஆட்டினாள்.

“நீங்க எந்த ஊரு?”

“கேரளா”

இப்போது தான் கோகுலிற்கு அவளின் வினோத தமிழ் உச்சரிப்பின் காரணம் புரிந்தது. ஆனால் அவன் சினிமாவில் மலையாளிகள் தமிழ் உச்சரிப்பதைக் கேட்டதுண்டு. அது போல இல்லை அவளின் தமிழ்.

“எப்படி… நீங்க எப்படி சிங்கப்பூருக்கு வந்தீங்க?”

“எனக்கு தெரிஞ்சவர் ஒருத்தர் கூட்டிட்டு வந்தாரு. இங்க ஒரு வேலை வாங்கி தறேன்னு. எனக்கு இரண்டு பசங்க இருக்காங்க. என் புருஷனுக்கு வேலை போய்டுச்சு. நான் கெமிஸ்ட்ரி படிச்சிருந்தேன். இங்க டீச்சர் வேலை வாங்கி தறேன்னுக் கூட்டிட்டு வந்தாரு. அப்புறம் அவர் வீட்டுல வேல செய்ய வெச்சுட்டாரு. மொதல்ல ரொம்ப பயந்துட்டேன். ஆனா வேற வழி இல்ல. அதுக்கு அப்புறம் இன்னொருத்தங்க வீட்டுல வேலைக்கு சேத்துவிட்டுட்டாறு. அந்த வீட்டுல ரொம்ப நல்லவங்க. ஞாயித்திக்கிழம லீவ் கொடுத்திடுவாங்க. அப்போ தான் இந்த மாதிரி மத்த வீடுங்கள சுத்தம் செய்யுவேன்.”

கோகுலின் தொண்டை வற்றியது. அவன் வயிற்றில் ஏதோ ஒரு நரம்பு இழுப்பது போல இருந்தது. அவனுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. அவன் பாட்டியின் பாத்திரம் தேய்த்து வெளுத்துப்போன கைகள் நினைவுக்கு வந்தன.

நீண்ட நிசப்தத்திற்குப்பின், “நீங்க… அப்புறம் டீச்சர் வேலைக்கு ட்ரை பண்ணலியா?”

“என் செர்டிபிகேட் எல்லாம் ஊர்ல இருக்கு. திரும்ப போகணும் ஒரு நாள் எடுத்துட்டு வர...”

மழை மெதுவாக நிற்க தொடங்கியது. தூரத்தில் 124 வருவதை கவனித்தான். “டக்கென்று ஓடி போய் இன்னொரு 50 வெள்ளி ஏ.டி.எம் லேர்ந்து எடுத்து வந்து கொடுக்கலாமா? நாம கொடுக்கறத பிச்சை அப்படின்னு தப்பா நினச்சுடுவாங்களோ? எப்படி அந்த ஆளுக்கு இந்த மாதிரி ஒருத்தங்கள வேலைக்காரி ஆக்க மனசு வந்துச்சு? மொதல் மொதல்ல இவங்கள வீட்டு வேலை செய்ய சொல்லும் போது இவங்களுக்கு எப்படி இருந்திருக்கும்? இன்னிக்கி நம்ம வீட்ட சுத்தம் செய்யும் போது?”

124 நெருங்கியது.

“நாம எதாச்சும் செய்யணுமே… நமக்கு தெரிஞ்ச ஆட்களிடம் பேசி இவங்களுக்கு ஒரு வேலை வாங்கி கொடுப்போமா? பானு டீச்சர் இருக்காங்க… அவங்கள கேட்டு இவங்களுக்கு ஒரு டீச்சர் வேல வாங்கி தந்தா? ஆனா நாம கேட்டா பானு டீச்சர் செய்வாங்களா? இவங்க முதல்ல டீச்சர் வேலை செய்ய தயாரா இருப்பாங்களா? ஒரு வேல இவங்களுக்கு இந்த வேலை பழகிப் போய் இருந்தா? ஐய்யோ என்ன செய்யுறது…”

124 பஸ்ஸின் கதவுகள் திறந்தன. அவனை பார்த்து லேசாக தலையாட்டியப்படி சாந்தி பஸ் உள்ளே ஏறி கார்டை தட்டினாள். கோகுல் ஜடம் போல் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.

***

கோகுலின் ரூம் மேஜையின் மீதிருந்த மொபைல் துடித்தது. “சஞ்சய்” என்றது திரையில் ஆங்கில எழுத்துக்கள்.

“சொல்லு மச்சி… சும்மா தான்டா இருக்கேன்… அப்படியா… என்ன பிளான்? ஓக்கே. ஐ அம் கேம். ஆனா என் கிட்ட ஷட்டில் ராக்கெட் இல்லடா... ஓக்கே கூல்... மத்தவங்க கிட்ட நான் சொல்லிடறேன். பாப்போம் மச்சி.”

வீட்டிலிருந்த நண்பர்களிடம் சஞ்சயின் பிளானை சொல்லிவிட்டு, குளிப்பதற்கு துண்டை எடுத்துக்கொண்டு, கோகுல் பாத்ரூமுக்குள் நுழைந்தான். இதுவரை அவன் கண்டிராத அளவிற்கு பாத்ரூம் சுத்தமாக இருந்தது.

முற்றும்