December 21, 2012

எல்லோரும் லைக் செய்யுங்கள்

(My first Tamil short story. Wrote it for a story writing contest organized by Thangameen. The topic given was 'நவீன யுகம்')

சமீபத்துல முகப்புத்தகம்னு ஒரு படம் பார்த்தேன். சார்ட் பிலிம். மரண மொக்கைன்னு சில பிரெண்ட்ஸ் சொன்னாங்க, சுமார்னு சொல்லி இரண்டு மூணுப் பேர் லைக் போட்டிருந்தாங்க. பேஸ்புக்ல ஒரு பய்யன் ஒரு பொண்ணை சந்திக்கிறான், ஆன்லைன்ல கடல போடறான், பிக்கப் பண்ணிட்டு நேர்ல சந்திக்கும்போது அந்த பொண்ணு குருடுனு தெரிய வருது. ஆனாலும் காதல் உண்மைன்னு சொல்லிட்டு அவள கல்யாணம் பண்ணிக்கேறன்னு சொல்லி ஹீரோவா நம்ம மனசுல நிக்கறான். இது தான் படத்தோட லைன்.

"நம்பர மாதிரி சொல்லுங்கடா! எவன் மச்சி நிஜ லைப்ல இந்த மாறி செய்வான்?" ன்னு என் பிரெண்ட் ஒருத்தன் நியாயமா கேட்டான். அந்த பிரெண்ட்சொல்லுறதுக்கு நானும் தலை ஆட்டிருப்பேன், ஆனா இரண்டு வர்ஷம் முன்னாடி எனக்கு நடந்த ஒரு அனுபவம் அப்படியே என் மண்டைய ப்ரீஸ் பண்ணிடுச்சு.

இரண்டு வருஷம் முன்னாடின்னா, சந்த்யா எனக்கு இன்னும் அறிமுகம் ஆகாத டையம். அதுனால வேலைக்கு போயிட்டு வந்தா வீட்டுல வெட்டியா தான் இருந்தேன். அப்போ எனக்கு ஒரு ஹாபி, டையம்பாஸ், என்டர்டைன்மெண்ட் எல்லாமே பேஸ்புக் தான். யார் எங்க போய் போட்டோ எடுத்தாங்க, தலைவர் பத்தி எவன் தப்பா பேசுறான், எந்த பய்யன் எந்த பொண்ணு பின்னாடி சுத்தறான் - இந்த மாதிரி எந்த டீடைல் நீங்க கேட்டாலும் அப்போ நான் புட்டு புட்டு வெச்சிருப்பேன். அப்படி ஒரு ஆர்வம்.

அந்த சமயம் என் பிரெண்ட் லிஸ்ட்ல ஒரு பய்யன் இருந்தான். பேரு விக்ரம். ஏதோ ஒரு போஸ்ட்டுல அவன் அடிச்ச கமென்ட் பிடிச்சதுனால அவனுக்கு பிரெண்ட் ரிக்குவஸ்ட் அனுப்பிச்சேன். ஒத்துக்கிட்டான். அவன நான் நேர்ல பார்த்ததே இல்ல. அவன் ப்ரோபைல் பார்த்தா செம்ம படிப்ஸ்னு தோனுச்சு. எல்லாம் இங்கிலீஷ் புக்ஸ், இங்கிலீஷ் பிலிம்ஸ், இங்கிலீஷ் கோட்ஸ். அப்பப்போ அவன் ஸ்டேடஸ் அப்டேட் புரியும். பெரும்பாலும் புரியாது. எல்லார் மாதிரியும் சும்மா படத்தோட ட்ரெயிலர்  இல்லாட்டி கார்டூன் மாதிரியான விஷயங்கள் ஷேர் பண்ண மாட்டான். உலக அரசியல் பத்தி ஏதோ ஒரு பேர் தெரியாத எழுத்தாளர் குமுருற கட்டுரை இல்லாட்டி இயற்கையை மனுஷன் எப்படி அழிக்கறான் அப்படிங்கர டாகுமெண்டரி - இது மாதிரி மூளையை பெசையிர மேட்டர் தான் போடுவான். சில சமயம் பார்க்க பாவமாகவே இருக்கும். "ஏதோ நல்லா சொல்லுரான்யா. ஆழ்ந்த கருத்து இருக்கற மாதிரி இருக்கு. ஆனா மக்களுக்கு புரியாததுனால லைக் வரமாட்டேங்குது... பாவம்..." 
ன்னு நான் அவன பத்தி நினைச்சது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு.

ஒரு நாள் நான் நைட் ஷோ பார்த்துட்டு, படத்த பத்தி ஒரு நாலு நல்ல வார்த்த ஸ்டேடசா போட்டு இரண்டு லைக் வாங்கலாம்னு மும்முரமா டைப் பண்ணிட்டு இருந்தேன். அப்போ திடீர்னு அவன் ஸ்டேடஸ் வந்துச்சு. தமிழ்ல ஒரு அழகான காதல் கவிதை போட்டிருந்தான். என்னடா இது பீட்டர் திடீர்னு பொன்னுசாமியா மாறறானேன்னு  தோனுச்சு. இரண்டு நாள் கழிச்சு பார்த்தா பைய்யனோட ரிலேஷன்ஷிப்  ஸ்டேடஸ் மாறிடுச்சு. சுகந்தி அப்படிங்கற பொண்ணோட லவுஸ் பண்ணிட்டு இருக்கான் அப்படின்னு பேஸ்புக் எனக்கு தகவல் சொல்லிச்சு. ஓஹோ! பொண்ணு தமிழ் மீடியம் போல.

அதுக்கப்புறம் தினம் ஒரு தமிழ் கவிதை - கண்ணே, மணியே, பவழமேன்னு. கவிதைகளுக்கு பலே பலேன்னு பலப்பேர் அடிச்ச கமென்ட்ஸ் பார்த்து என் மனசு பெருமூச்சு விட்டுச்சு. இந்த மாதிரி வர்ணிக்க நம்ம வாழ்க்கைல ஒரு பாசிமணி கூட இல்லியேன்னு. நமக்கும் ஒரு நாள் மணி அடிக்கும் அப்படின்னு மனச தேத்திக்கிட்டு பல நாள் அவன் கவிதைக்கு லைக் போட்டிருக்கேன். நான் விட்ட பெருமூச்சு நாலையோ என்னவோ, சில நாட்கள்ல அவனோட தமிழ் ஆர்வ தீ ஆப் ஆயிடுச்சு. டபக்குனு அவன் ஹிஸ்டரிய கொஞ்சம் நோன்டிப்பாத்ததுல இரண்டு பேருக்கும் பிரேக்கப்னு தெரிய வந்தது. எப்படி சேர்ந்தாங்க... எப்படி பிரிஞ்சாங்க... ஒன்னும் தெரியல. ஆனா விக்ரம் ரொம்ப சோகமாய்ட்டான்னு மாத்திரம் தெரிஞ்சுது. சட்டி சுட்டதடா, வாழ்வே மாயம் பாடல்களோட பீலிங் இருக்கிற இங்கிலீஷ் பாடல்கள் ஒவ்வொன்னா ஷேர் பன்ன ஆரமிச்சான்.

ஒரு நாள் அவன் போட்டிருந்த ஸ்டேடஸ் ஓட சோகம் தாங்காம ஒரு பொண்ணு "என்ன டா விக்ரம்? என்ன ஆச்சு உனக்கு?" அப்படின்னு கமென்ட் அடிக்க, பய்யன் உள்ள அடக்கிவெச்சிருந்த காவேரிய ஓப்பன் பண்ணிட்டான். ஒரு நூறு கமென்ட்ஸ் அந்த ஸ்டேடஸ்ல இரண்டு பேரும் மாத்தி மாத்தி. ரைட்டு! அடுத்தது இந்த பொண்ணுதான் அப்படின்னு தெளிவாயிடுச்சு. அப்போதான் நமக்கு சந்த்யா கிட்டயிருந்து பிரெண்ட் ரிக்குவஸ்ட் வந்துச்சு. சோ ஒரு சில நாட்களுக்கு என்னோட கவனம் வேற திசைல திரும்பிடுச்சு.

இரண்டு வாரம் கழிச்சு ஒரு நாள், பாதி தூக்கத்துல நியூஸ்பீட தடவிக்கிட்டு இருந்தப்போ, நாலு போட்டோ கண்ணுக்கு முன்னாடி குதிச்சுது. விக்ரமோட கல்யாண போடோஸ். டேய்! என்னடா இது சொல்லாம கொள்ளாம! யார் கல்யாண பொண்ணு? அன்னிக்கி இவன் சோக கதைய கேட்டவளா? பொறுமையா அவன் டைம்லைன் பார்த்தப்போ தான் தெரிஞ்சுது நான் இரண்டு வாரத்துல ஒரு மெகா
சீரியலே மிஸ் பண்ணிட்டேன்னு. விக்ரமுக்கு விஜய் டி.வீ.யின் நீயா நானா பார்க்கற பழக்கம் உண்டு போல. ஒரு நாள் அவங்க ஷோவுல போய் கலந்துக்கிட்ட வீடியோவ ஷேர் பண்ணியிருந்தான். ஏதோ மென் வெர்சஸ் வுமென் டாபிக். அங்க வந்த ஒரு பொண்ணு அவள ஒரு பய்யன் ஏமாத்தின கதைய சொல்லி அழுதிருக்கா. இவன் அத நேர்ல பார்த்து பீல் ஆகி, அந்த பொண்ண நான் கல்யாணம் பண்ணிக்கறேன் அப்படின்னு சபையில சொல்லிருக்கான். இதக்கேட்டு பெருமித பட்டு கிளாப் பண்ணி அவன கட்டி பிடிச்சிருக்காரு கோபிநாத். அப்புறம் சொன்ன மாதிரியே அந்த பொண்ண கல்யாணமும் பண்ணியிருக்கான். அஞ்சு நிமிஷம் அப்படியே வாய பொளந்து ஸ்க்ரீனையே பாத்துக்கிட்டு இருந்தேன்.

ஒரு பொண்ண பத்தி முன்னப்பின்ன தெரியாம அவள கல்யாணம் செஞ்சுக்கறேன்னு சொல்ல எவ்வளோ தில்லு வேணும், அப்படின்னு ஆச்சர்யப்பட்டேன். முகப்புத்தகம் படத்துல ஹீரோக்கு இருந்த அதே தில்லு! மனசளவுல விக்ரமோட பெரிய விசிறி ஆகிட்டேன். அன்னிலேர்ந்து அவங்க கல்யாண வாழ்க்கை எப்படி போயிட்டு இருக்கு அப்படின்னு பால்லோ பண்ணிட்டு இருக்கேன். விக்ரமுக்கு நான் யார்னுகூட தெரியுமா தெரியல. ஆனா என் வாழ்க்கைக்கு அவன் ஒரு பெரிய இன்ஸ்பிரேசன். எந்த விதத்துலன்னு கேக்கறீங்களா? நான் சந்த்யா கிட்ட ப்ரோபோஸ் பண்ணதே விக்ரம்நால தான். அவன் கலந்து கொண்ட நீயா நானா எபிசோடு பார்த்த அப்புறம், என்னன்னு தெரியல, உடம்புக்குள்ள வேகமா இரத்தம் பாயிர உணர்வு. அப்படியே கன்ன மூடினா இரண்டு அழகான கவிதை. அத டப்புன்னு போன் எடுத்து சந்த்யா கிட்ட சொன்னேன். அன்னிக்கு மயங்கினவதான். காதல்ல மட்டும் இல்ல. என்னோட வேலையில கூட எப்போவாச்சும் ஒரு முடிவு எடுக்கணும்னா சட்டுன்னு மனசுக்கு எது சரின்னு படுதோ அத செய்வேன். இந்த யுக்திய எனக்கு 
சொல்லி கொடுத்ததே விக்ரம் தான்.

அந்த விக்ரமுக்கு எப்படி நன்றி சொல்வதுன்னு பல நாள் குப்புற படுத்து யோசிச்சிருக்கேன். உருப்படியா எதுவும் தோனல. இன்னிக்கு அவனுக்கு ஒரு சின்ன குழந்தை பிறந்திருக்கு. அவன் மனைவி குழந்தையுடன் பேஸ்புக்ல ஒரு போட்டோ போட்டிருந்தான். அத பார்த்து ஒரு லைக் போடும்போது எனக்கு ஒரு கவிதை தோனுச்சு, "துரோணரின் படத்தை லைக் செய்ய, கட்டை விரல் காட்டும் பொத்தானை அழிற்றி, குருதட்சிணை கொடுக்கிறான் இந்த ஏகலைவன்!" எப்படி கவிதை? சந்த்யாவுக்கு ரொம்ப பிடிச்சுது இது.

No comments:

Post a Comment