அப்பு மரக்குச்சியால் மண்ணைத் தோண்டினான். எப்படியாவது அந்த பறக்கும் தவளையைக் கையில் பிடித்துவிடவேண்டும். பிடித்து அதன் முகத்தை வெளிச்சத்தில் பார்க்கவேண்டும் என்ற ஆசை அவனுக்கு. இங்குமங்கும் தாவும் போது அதன் முகம் தவளை போல இல்லை எனத் தெரிந்தது. அதன் தோல் பார்ப்பதற்கு மீனைப் போல வழவழப்பான செதில்களாக இருந்தது. ஒரு கையால் மண்ணைத் தோண்டும் போது, இன்னொரு கையை குபுக்கென்று கவ்வத் தயாராக வைத்திருந்தான். அவன் தோண்டும் குழியிலிருந்து மின்னல் வேகத்தில் தாவி, அந்தத் தவளை மீண்டும் மண்ணுக்குள் பொதிந்து விடக்கூடாதென்று.
இவ்வாறு மண்ணைத் தோண்டிக்கொண்டிருக்கையில், பரிச்சயமான உலோக ஒலி கேட்டது. அதோடு சேர்ந்து மணிகளின் மெல்லிய ஓசை. அப்பு அருகிலிருந்த மலை உச்சியை நிமிர்ந்து பார்த்தான். மலையின் கிழக்கு பகுதியில், ஒரு வெண்ணிற யானை. பல மைல் தூரத்தை கடந்திருந்தாலும், ஒவ்வொரு அடியும் ஆழமாகவும் நிதானமாகவும் எடுத்து வைத்து அவனை நோக்கி வந்தது. யானையின் மேல் கம்பீரமாக அமர்ந்திருந்தார் அவர். இரு பக்கங்களிலும் பெரிய மூட்டைகள். யானையின் ஒவ்வொரு அடிக்கும், மூட்டைகளுக்குள் இருக்கும் பொருட்கள் ஒன்றையொன்று உரசிக் கொள்வதில் அந்த உலோக ஒலி எழும்பியது. கையில் இலைகளைச் சுழற்றிக்கொண்டிருந்த துர்கா திரும்பி யானையைப் பார்த்தாள். விடுக்கென்று மற்ற சிறுவர்களை போல் பாதையோரமாக சென்று நின்றாள். அப்பு மரக்குச்சியை எறிந்துவிட்டு, அவள் பக்கத்தில் போய் நின்றான்.
வெள்ளை யானை அருகில் வந்ததும், ஒரே அசைவில் கீழே இறங்கி யானையின் பக்கத்தில் நடக்க ஆரம்பித்தார் அவர். அவர் நடையில் ஒரு மிடுக்கு. நான்கைந்து சிறுவர்கள் யானையின் பின்னாலும் அவரின் பின்னாலும் நடந்தனர். சிலர் யானை முதுகிலிருக்கும் சிறிய மணிகளைத் தொட விரும்பி எம்பிக் குதித்தனர்.
அப்பு நின்றிருந்த மரத்துக்கு அடியில் யானை வந்து நின்றது. அனைத்துச் சிறுவர்களும் அவரை சூழ்ந்துகொண்டனர். அவர் சாந்தமாக அனைவரையும் பார்த்து புன்னகைத்தார். யானையை அருகாமையில் பார்த்த அப்புவிற்கு ஆச்சரியம். அப்பழுக்கில்லாத வெள்ளை. அதன் உடம்பில் எந்த இடத்திலும் ஒரு சிறு கறை கூட இல்லை.
திரண்டிருக்கும் சிறுவர்கள் அனைவரையும் கண்ணோட்டமிட்ட பிறகு, அவர் நடக்கத் துவங்கினார். சிறுவர்கள் அனைவரும் பின்தொடர்ந்தனர். அப்புவின் கைப்பிடித்து துர்கா இழுத்துச் சென்றாள்.
“எங்க போறோம்?” அப்புவின் கேள்வி மரக்கிளைகளின் சலசலப்பில் தொலைந்து போனது.
அடர்ந்த காடு. அதனூடே குறுகிய பாதை அமைந்திருந்தது. இதுவரை அப்பு செல்லாத பாதை. பாதங்களைக் கிழித்துவிடும் முற்செடிகள். கவனத்துடன் நடக்க வேண்டும். சிறுவர்களின் கூட்டம் பின்தொடர, நன்கு பழகிய பாதை போல அவர் மட்டும் வேகமாக முன்நடந்தார். அந்த பாதை அனைவரையும் வளைந்து நெளிந்து வழிநடத்தி, முடிவில் சிறிய மலை உச்சி ஒன்றில் உமிழ்ந்தது. அப்பு முட்டிகளைப் பிடித்துக்கொண்டு மூச்சை இழுத்து விட்டான். முன்பு ஒருபோதும் சுவைத்திடாத தூய்மை காற்றில் பரவியிருந்தது. தலையை உயர்த்திப் பார்த்ததும், அப்பு உள்ளிழுத்த மூச்சு குப்பென வெளிவந்தது. கீழே கண்ணுக்கெட்டும் தூரம் வரை லட்சோபலட்சம் விலங்குகள், பறவைகள், செடி கொடிகள். ஒவ்வொன்றும் வேலிகளால் நேர்த்தியாக பிரிக்கப்பட்டிருந்தன.
“என்ன இது?” என கேட்க நினைத்த அப்புவின் வாயிலிருந்து “என்ன...” என்று மட்டும் வெளிவந்தது. துர்காவின் தோள்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டான். அந்தக் காட்சி அவனை அச்சுறுத்தியது.
“நம் முன்னோர் கண்ட கனவுகள்” என்றாள் அவள். வெயில் அனைவரின் தோள்களையும் பற்றிக் கொளுத்த, மலை உச்சியிலிருந்து கீழ் இறங்கி ஒவ்வொரு கூண்டாக பார்வையிட்டனர். நடந்து செல்கையில் ஒவ்வொரு விலங்கின், செடியின் பெயரும், அதன் வகையும், கனவு கண்டு அதை உருவாக்கிய நபரின் பெயரும், சிறிய வெள்ளைக் காகிதத்தில் எழுதி ஒட்டியிருப்பதைக் அவர் காண்பித்தார். பற்பல பாகங்களை சுட்டிக்காட்டினார். திருகிய கழுத்து, நீட்டக் கொம்பு, தைக்கப்பட்ட இழைகள். ஒவ்வொரு பாகமும் எவ்வாறு அந்த உயிரினத்தின் வகையைக் காட்டிக்கொடுத்தது என விவரித்தார். சிறுவர்கள் வாயைப் பிளந்து கவனமாய் கேட்டனர்.
“எவ்வளவு கனவுகள்!” துர்கா ஒட்டகச்சிவிங்கி முகம்கொண்ட கழுகின் தலையை தட்டியபடி வியப்புடன் சொன்னாள்.
அப்புவிற்கு கொட்டாவி வந்தது. துர்கா அவன் காதை திருகினாள். “இப்போ தூங்காதே! இரு. பாக்க இன்னும் எவ்வளோ இருக்கு?” எவ்வளவு நேரம் தான் நடப்பது. அப்பு நினைவெல்லாம் பறக்கும் தவளைகள் நிறைத்தன. விருப்பமே இல்லாமல் துர்காவை பின்தொடர்ந்தான்.
“நம்ம முன்னோர்களோட கனவைப் பார்த்தா தானே நாம நல்ல கனவு காண முடியும்?”
அப்பு அவள் சொன்னதை காதில் வாங்கவில்லை. யானை தலையுடைய, தும்பிக்கையின் நுனியில் பூ முளைத்த, புலி உடலின் முற்பாகமும், குரங்கின் பிற்பாகமும் கொண்ட மிருகத்தை பார்த்தப்படி கேட்டான், “இதெல்லாம் ஏன் கூண்டுல இருக்கு?”
“அதுவா முக்கியம்?” துர்கா அதன் கூண்டில் ஒட்டப்பட்டிருந்த வெள்ளை காகிதத்தை சுட்டிக்காட்டினாள். “இத்தனை கனவுகளையும் வகைபடுத்தியிருக்கார். இது என்ன வகைன்னு பாரு. கத்துக்கோ.”
அப்பு காகிதத்தில் எழுதியிருந்ததைப் படிக்க முயற்சித்தான். அதிலிருந்த வார்த்தைகள் அவன் வாயில் நுழையவில்லை. யானையின் தும்பிக்கையில் இருந்த பூ அவனின் கண்களை பறித்தது. இரும்பு கம்பிகளின் வழியே தலையை நுழப்பி முகர்ந்து பார்த்தான். அதிலிருந்த மகரந்தம் மூக்கினுள் சென்று தும்மல் வரவைத்தது. தும்மியதும் சில சிறுவர்கள் அவனை முறைத்தார்கள். பூக்களைக் கூட எவ்வாறு நுகர்வது என உனக்குத் தெரியவில்லையா என்பது போல ஏளனமாகப் பார்த்தார்கள். அப்பு தலை குனிந்து நடந்தான்.
நடந்து நடந்து அனைவரும் களைத்து போயினர். ஓர் அருவி அருகே கால் நீட்டி அனைவரும் அமர்ந்தனர். எல்லோர் முகத்திலும் களைப்பு. அவர் முகம் மட்டும் பிரகாசமாக, அதே புன்னகையுடன். தனது பையை திறந்தார். அதிலிருந்து ஒரு மண் பானையை எடுத்தார். அருகிலிருந்த சிறுவனிடம் கொடுத்து எல்லோரிடமும் பகிர சொன்னார். அவன் ஓடிப் போய் சில கோப்பைகளை கொண்டு வந்தான். ஒவ்வொரு கோப்பையாக பானையில் கவிழ்த்து, ஏதோவொரு திரவம் எடுத்துக்கொடுத்தான். என்னவாக இருக்கும் என அப்புவிற்கு அறிய ஆவல். எம்பிப் பார்த்தான். தெரியவில்லை. எவ்வாறு சிறிய பானையில் அத்தனை பேருக்கும் போதும் அளவிற்குத் திரவம் இருக்கும் என்ற வியப்பு.
அவன் கையில் கோப்பை வந்ததும், குனிந்து பார்த்தான். பாயசம். அதன் வாசனை மூச்சை நிறைத்தது. துர்காவை திரும்பிப் பார்த்தான். அவள் உதடுகள் மீது பாயசம் மீசையாக இருந்தது. அவன் கண்கள் தரையை துழாவின. நீட்டமான வைக்கோல் துண்டு ஒன்று அருகில் கிடந்தது. அதை எடுத்து கோப்பைக்குள் விட்டான். மறு முனையை வாயில் வைத்து லேசாக உரிந்தான். பாயசம் நாவில் பட்டது. இரண்டு வாய் சாப்பிட்டபின் ஓர் எண்ணம் தோன்றியது. வைக்கோலின் முனையில் ஊதினான். பாயசத்தில் காற்று குமிழிகள் தோன்றி மறைந்தன. அவற்றைப் பார்க்க அப்புவிற்கு ஆனந்தமாக இருந்தது. ஒரு குமிழி வெடிக்கும் பொழுது அவன் முகத்தில் லேசான பாயச சாரல் பட்டது.
விடுக்கென அவன் தலையில் ஒரு கொட்டு விழுந்தது. “பாயசத்தை இப்படியா குடிப்ப? ஒழுங்கா குடி!” என்றாள் துர்கா, தணிந்த குரலில் அவர் பார்த்துவிடுவாரோ என்று நோட்டம் விட்டுக்கொண்டே. அப்பு தலையை சொரிந்தான். கொட்டு வலித்தது. துர்காவை முறைத்துவிட்டு வைக்கோலைத் அருவியில் தூக்கி எறிந்தான். ஒரே மடக்கில் மீதி பாயசத்தை குடித்தான்.
மாலை சூரியன் மறையும் நேரம். “நாளைக் காலை உங்கள் கனவுகளுடன் தயாராய் இருங்கள்“ என்று ஒரு சிறுவன் அறிவித்தான். அனைவரும் கலைந்து சென்றனர். அவரும் அந்தச் சிறுவனும் மலையை நோக்கி நடந்தனர். “இராத்திரில எங்க போறாங்க?” அப்பு திரும்பி அவர்களைப் பார்த்துக்கொண்டே கேட்டான். “இருட்டு குகைகள்ல சில பேர் இருக்காங்கல்ல? அவங்கள பாக்க”
அப்புவிற்கு அவர்களைத் தெரியும். ஒரு காலத்தில் அவனுடன் விளையாடிய சிறுவர்கள் தான். ஏனோ அவர்களுக்குத் தூக்கம் வருவது நின்று விட்டது. தூங்காமலேயே கனவுகள் கண்டதால் அவர்களை இருட்டு குகைகளில் அடைக்கச் சொன்னார். அவர்களின் கனவுகளும் அதே குகைகளில் இருக்க வேண்டும் என்று அவர் ஆணையிட்டிருந்தார்.
இரவு காட்டுத் தரையில் படுத்திருக்கும் பொழுது, அலறல் சத்தம் கேட்டது. முதலில் ஒரு சிறுமியின் அலறல் சத்தம். பின்னர் அதனுடன் சேர்ந்து பற்பல அலறல்கள். அப்பு தூக்கம் களைந்து எழுந்து உட்கார்ந்தான். சாய்ந்தாடும் மென்மையான தீயின் வெளிச்சத்தில் அவனைச் சுற்றி ஒரு சிறிய வட்டம் வரை கண்ணுக்குத் தெரிந்தது. வட்டத்தைத் தாண்டிய இருளிலிருந்து அலறல் குரல்கள் ஒலித்தன.
துர்காவை உலுக்கினான் அப்பு. “என்ன சத்தம்?” துர்கா தூக்கம் கலைந்து புரண்டாள்.
“தூக்கம் வராதவங்களுக்கு... ஏதோ சிகிச்சைன்னு பேசிக்கிட்டாங்க...”
“சிகிச்சையா? ரொம்ப வலிக்குமா?”
துர்கா புன்னகைத்தாள். “படு” என்று அப்புவின் கையைப் பிடித்து பக்கத்தில் படுக்க வைத்தாள். அவனின் தலைமுடியை கோதி விட்டாள். அப்பு கண்களை மூடினான். அலறல்கள் இன்னும் சத்தமாக ஒலித்தன. கண்களை இறுக்கினான். இறுக இறுக அந்த அலறல்கள் கேட்காமல் போவது போன்றொரு மாயை அவன் மனதில். தனக்குத் தூக்கம் வராமல் போனால்...
அடுத்த நாள் காலை எப்போதும் போல இருந்தது. அதே பறவைகளின் ஓசை. வழிந்தோடும் நீரின் மெல்லிய சிரிப்பொலி. அப்பு கைகளை நீட்டி கொட்டாவி விட்டான்.
“எந்திரி டா! நேரமாச்சு!”
தனது தலை மயிரை கையால் சீவிக்கொண்டே வரிசையில் அப்பு நின்றான். அனைவரும் அவரவர் கனவு உயிரினங்களுடன் முகங்களில் பெருமை ததும்ப நின்றனர். ஒருவருக்கொருவர் பேசி சிரித்துக்கொண்டு. அப்பு ஒவ்வொரு கனவு உயிரினத்தையும் பார்த்தான். அவன் பின்னால் நிற்கும் தனது கனவையும் பார்த்தான். அந்தப் பிராணி அவனுக்கு ஆறுதல் அளிப்பது போல புன்னகைத்தது. அவன் கண்கள் அதன் உடலை மேய்ந்தன. அவரின் வெள்ளை யானை தூரத்தில் செடிகளை தின்றபடி நின்றது. அதைக் கண்டதும் அப்புவின் தொண்டை வற்றிப்போனது. யாரிடமும் பேசாமல், யாரின் கண்களையும் பார்க்காமல், தலை குனிந்து மண்ணையே பார்த்துக்கொண்டிருந்தான். இரவு கேட்ட அலறல்கள் காதில் ஒலித்துக்கொண்டிருந்தன.
அவர் வந்தார். நேற்று கண்ட அதே மிடுக்குடன். அதே புன்னகையுடன். வரிசைப்படி நிற்கும் சிறுவர்களை ஒவ்வொருவராகப் பார்வையிட்டார். ஒவ்வொரு கனவு பிராணியையும் கூர்ந்து கவனித்து, சிறு காகித துண்டுகளில் ஏதோ எழுதி அந்தப் பிராணிகளின் மேல் ஒட்டினார். சில சிறுவர்களை மட்டும் பார்த்து புன்னகைத்தார். சிலரை கண்டுகொள்ளாமல் தாண்டி நடந்தார். சிலருக்கு முதுகில் தட்டி கொடுத்தார். அப்புவை நெருங்கினார். அப்பு தயங்கி தயங்கி நின்றான். ஓடி விடலாமா என்று யோசித்தான். பிடித்து குகையில் அடைத்து விட்டால்…
அவன் முன்னால் வந்து நின்றார் அவர். மேலும் கீழும் பார்த்தார். அவர் பக்கத்தில் இருக்கும் சிறுவன் அப்புவை பார்த்து, “டேய்! உன் கனவு எங்க டா?” என்றான். அப்பு தன் பின்னால் பார்த்தான். காணவில்லை. “இதோ இங்க தான் நின்னுட்டு இருந்துச்சு. எங்க போச்சு தெர்லயே...”
சுற்றிப் பார்த்தான். தூரத்து மரங்களின் பின்னால் அதன் தலை பளிச்சென்று தோன்றி மறைந்தது. “அதோ! அங்க நிக்குது!” விரலால் சுட்டி காண்பித்தான்.
“என்னடா விளையாடறியா? போய் கூட்டிட்டு வா! அவரைக் காத்திருக்க செய்யாதே!”
அவர் புன்னகையுடன் கை அசைத்தார். நாமே போய் பார்ப்போம் என்றபடி. அப்பு இருவரையும் தனது கனவு பிராணியை கண்ட திசையில் அழைத்துச் சென்றான். புதர்களைத் தாண்டி திறந்த வெளிக்கு வந்தார்கள். அப்பு பெருமூச்சு விட்டான். அவனின் கனவு எதிரே நின்றுகொண்டிருந்தது.
“அதோ!” என்றான்.
“எதோ?” சுற்றி முற்றித் தேடினான் சிறுவன்.
“இதோ இங்க. நமக்கு முன்னாடி...”
“ஒன்னும் இல்ல அங்க!”
அப்பு புரியாமல் விழித்தான். அவரைப் பார்த்து சொன்னான், “இங்க தான் இருக்கு. எனக்குத் தெரியுதே...”
அவர் மெளனமாக நின்றார். அப்புவின் கண்களை ஒரு வினாடி பார்த்தார். பிறகு அவன் சுட்டிக்காட்டிய இடத்தை. அவனைச் சாந்தமாக இருக்கும்படி சொல்லிவிட்டு, சிறுவனை அருகில் வரச்சொல்லி அவன் காதில் குசுகுசுத்தார். அவன் அங்கிருந்து ஓடிப் போய் அவரின் மூட்டைகளைக் கொண்டு வந்தான்.
அப்புவின் கையை பிடித்து அது எந்தத் திசையில் நிற்கிறதோ அந்தத் திசையை சுட்டிக்காட்டு என்பது போல தூக்கினார். அப்பு கையை நீட்டியபடி நின்றான். ஏன் கனவு பிராணி தனது கண்களுக்கு மட்டும் தெரிகிறது என்று அவனுக்குப் புரியவில்லை.
அவர் மூட்டைகளை உற்சாகத்துடன் திறந்தார். பற்பல அளவிடும் கருவிகள் புற்செடிகள் மீது உருண்டன. முதலில் பூத கண்ணாடி போல ஒன்றை எடுத்து அதன் வழியே பார்த்தார். பிறகு ஒரு மணியும் குச்சியும் எடுத்து, அவற்றைத் தட்டி ஓசை எழுப்பினார். அந்த ஓசைகளின் எதிரொலிகளைக் கூர்ந்து கவனித்தார். அப்பு சுட்டிக்காட்டும் இடத்தில் இருந்த புல் தரையில் ஒரு கூர்மையான கம்பைச் சொருகினார். அதை வெளியே எடுத்து அதில் ஒட்டியிருக்கும் மண் துகள்களை கையில் வைத்திருந்த விளக்கின் வெளிச்சத்தில் ஆராய்ந்தார். மெல்லிய காற்று அப்புவின் உடலைத் தழுவி ஓடியது. அவர் எந்தவொரு சலனமுமின்றி செயல் பட்டுக்கொண்டிருந்தார். ஒரு மண் பானையை தரையில் வீசி உடைத்தார். உடைந்த துண்டுகள் தெறித்த திசைகளை அளவிட்டார். ஒவ்வொரு செதிலிலும் உள்ள நீர் அளவை ஆராய்ந்து புத்தகத்தில் குறித்துக் கொண்டார். அவ்வப்போது அப்புவின் கையை திரும்பிப் பார்த்தார்.
அவரின் அசைவுகளில் வேகம் கூட அப்புவின் இதயத்துடிப்பும் கூடியது. நிமிர்ந்து தனது கனவு பிராணியை பார்த்தான். அவனை விட நான்கு மடங்கு உயரம். தலையை கவிழ்த்தபடி அவரின் பக்கத்தில் அமைதியாக அமர்ந்திருந்தது. ஆனால் அவரின் கண்களுக்கு தெரியவில்லை. அவ்வப்போது அவர் செய்யும் வேலைகள் அதன் கவனத்தை ஈர்க்கும். அவரை ஏறிட்டுப் பார்த்துவிட்டு பிறகு தலையை தூங்குவது போல கவிழ்த்துவிடும். மறுமுறை அவர் மண்ணில் ஈட்டியைச் சொருகியபோது அது விடுக்கென எழுந்தது.
அப்பு மூச்சை இழுத்துப் பிடித்தான். திடீரென்று தரையிலிருந்து தூக்கப்பட்டார். ஏதோ ஒன்று அவரை விழுங்குவது போல உணர்ந்தார். கையிலிருந்த விளக்கு அணைந்து போனது. கும்மிருட்டு. அக்கம் பக்கம் தடவிப் பார்த்தார். திடமாக இல்லாமல் சருக்கலாக இருந்தது. சாக்கு அறைக்குள் இருப்பது போல உணர்ந்தார். அந்த அறை நகர்ந்தது. அருகாமையில் கைகளை துழாவியபடி, தடுமாறி நடந்தார். இருட்டில் ஏதோ தட்டுப்பட்டது. தடவிப் பார்த்தார். அளவிடும் கருவிகள். ஆனால் அவரின் கருவிகள் அல்ல. இவை பழங்காலத்து கருவிகள். தூசி படிந்து கிடந்தன.
அப்பு துர்காவின் மடியில் படுத்திருந்தான். வலது கையில் பறக்கும் தவளையை பிடித்தபடி, இடது கையால் அதன் இறக்கையைத் தடவி கொண்டிருந்தான். அவன் நினைத்தவாறே வழவழப்பாக இருந்தது. தூரத்தில் அந்தி சாயும் சூரிய ஒளியில், கூண்டுகளைவிட்டு வெளியேறிய அனைத்துக் கனவு பிராணிகளும் அலைந்து திரிவதை பார்த்தான். அந்தக் கும்பலில் அவனின் கனவு பிராணியும் தென்பட்டது. அதன் பெருத்த வயிற்றைப் பார்த்தான். அது ஒவ்வொரு அடியாக எடுத்துவைக்க அந்த உலோக ஒலி மீண்டும் கேட்டது. “உனக்கு கேக்குதா?” என்று துர்காவை பார்த்துக் கேட்டான். அவள் இல்லை என்று தலை ஆட்டினாள். வானத்தின் மீது அந்தப் பிராணியின் நிழல் படர்வதை பார்த்தான். அப்புவின் கண்கள் மூடின. கையிலிருந்த தவளை குபுக்கென்று மண்ணுக்குள் குதித்து மறைந்தது. அவன் கண்களின் ஓரம் தூக்கம் வந்து ஒட்டிக்கொண்டது. அடுத்த கனவை நோக்கி அவனை இழுத்துச் சென்றது.
***