வின்கப்பலின் மெல்லிய விர்ர்ர்ர் அவளுக்கு மங்கலாக கேட்டது. ஜெயனிடம் பேசியே ஆகவேண்டுமா என்று யோசித்தாள் கண்ஸ். வேறு வழி இல்லை. அவளுக்கு தர பட்ட கட்டளை அது. நிறை வேற்றி தான் ஆக வேண்டும். ஆனால் ஜெயனை நேரில் பார்த்தால், அவளால் தன் கோபத்தை கட்டுபடுத்த முடியுமா?
ஜெயன் என்ன சொல்வார் என்று கண்ஸ் நன்கு அறிந்திருந்தாள். பூலோகிகளின் நடத்தை அவளால் யூகிக்க கூடியதாக தான் இருந்தது. பழமைவாதிகள். முடிந்தவரை அவர்களுடன் பேசுவதை தவிர்க்க விரும்பினாள். ஏனோவொரு அருவருப்பு. பூலோகிகள் அருகில் இருந்தால், அவர்கள் பக்கம் கூட திரும்ப மறுக்கும் அவள் முகம். இப்போதோ அவர்கள் செய்திருக்கும் கொலை… அவள் விரல் நகங்கள் இருக்கையின் கைப்பிடியை கீறின.
“அரை நாழி கூறில் அடுத்த சந்திப்பு”, காதில் இனிமையான ஒரு பெண் குரல் ஒலித்தது.
“எஸ் சிரி”
“ஜெயன் - 3012 இலிருந்து பூமியின் தலைவர்”
ஜெயனின் முகம் ஹோலோக்ராமாக காற்றில் மிதந்தது. கண்ஸ் அதை திரும்பி பார்க்க வில்லை. பார்த்தால், ஹோலோக்ராமை உடைத்தெறியும் அளவிற்கு அவளுள் கோபம் ததும்பியது.
“அண்ட பேரரசின் கட்டுப்பாடுகளை விரும்பாதவர். முன் கோபம் அதிகம். பிடித்த நிறம் பச்சை. இரண்டு ஆண்டுகள் முன்பு...”
“நன்றி சிரி.”
ஜெயன் ஒரு கொலையை ஆதரித்தவன். அவ்வளவு தான். கண்ஸ் வேறெந்த தகவல்களையும் தெரிந்து கொள்ள விரும்பவில்லை. வின் கப்பலின் கண்ணாடி திரை வழியே வெளியே பார்த்தாள். கருப்பு பெருவெளியில் பச்சையும் நீளமும் கலந்த வண்ணத்துடன் மிதந்து கொண்டிருந்தது பூமி.
“சிரி, மாலனுக்கு மெசேஜ் அனுப்பு.”
“என்னவென்று?”
“ரெடியா?”
“அனுப்பியாகிவிட்டது… பதில் வந்துவிட்டது.”
“படி”
“எஸ். எல்லாம் தயார்”
கண்ஸ் முகத்தில் ஒரு புன்னகை. பூமியின் பிம்பம் அவள் கருவிழிகளில் சுழன்றது. அவளை நெருங்கி கொண்டிருந்தது. கண்களை மூடினாள்.
***
“வணக்கம் கண்ஸ். பூமிக்கு வருக.”
வின் கப்பலின் கதவு திறந்தவுடன், அவளை புன்னகையுடன் வரவேர்த்தது ஒரு உருவம். கண்ஸ் தடுமாறினாள். எல்லா கிரகங்களிலும் ரோபாட்ஸ் தான் வரவேற்பு செய்யும். இங்கு மட்டும் மனிதர்கள்.
நீளமான வெள்ளை வழிப்பாதையில் நடந்தாள். ஒரு வெள்ளை மேஜையின் பின்னால் இரு உருவங்கள் அமர்ந்திருந்தன. இதுவும் மனிதர்கள்.
“பூமிக்கு வருக. தலைவர் ஜெயனுடன் சந்திப்பு தானே?”
“ம்ம்”
“உங்களின் சிரி அணிகலனை கழற்றுமாறு வேண்டுகிறேன்.”
கண்ஸ் திகைத்தாள்.
“ஏன்?”
“மன்னிக்கவும். உரையாடலின் போது இயந்திர அணிகலன்கள் அனுமதிக்க பட மாட்டாது. இது பூமியின் சட்டம்.”
“ஆனால்... சிரி என் உதவியாளர். பல தகவல்கள் என் மெமரியில் கிடையாது. பேச்சுவார்த்தைக்கு உதவ சிரி எனக்கு தேவை.”
“மன்னிக்கணும் கண்ஸ். இது பூமியின் சட்டம். தலைவருடன் உரையாடும் போது இயந்திர அணிகலன்கள் அனுமதிக்க பட மாட்டாது.”
அதே தொனியில் மீண்டும் ஒப்பித்தாள். சட்டங்கள் மதிக்க பட வேண்டும் என்று எண்ணியவாறு, கண்ஸ் தனது இடது கையை காதில் தடவி, மெல்லிய ஸ்டிக்கர் ஒன்றை பிரித்து எடுத்தாள். மேஜையின் பின் இருந்தவள் அதை பெற்றுக்கொண்டு, திரும்பி சுவரில் சில இடங்களில் விரல் நுனியால் தொட்டாள். சுவரிலிருந்து வெளிவந்த ஒரு சிறிய பெட்டியில் அந்த ஸ்டிக்கரை வைத்து மூடினாள்.
“எ-2 நுழைவுக்கு செல்லுங்கள். அங்கே உங்களை சிகப்பு மாளிகைக்கு அழைத்து செல்ல ஒருவர் காத்திருப்பார்.“
கண்ஸ் நடக்க ஆரம்பித்தாள்.
“உங்கள் நாள் இனிதாய் அமையட்டும்.”
அதை அவள் காதுகள் புறக்கணித்தன. சிரியை கழற்ற சொல்வார்கள் என்று அவள் எதிர்ப்பார்க்க வில்லை. கை விரல்களை இறுக்கி கொண்டாள்.
***
ஒரு வட்ட அறையை நிரப்பியப்படி இருந்தது ஒரு வட்ட மேஜை. அதன் பின் அமர்ந்தப்படி காத்திருந்தாள் கண்ஸ். அறையில் யாருமில்லை. அவள் எதிரே ஒரேயொரு வெள்ளை கதவு. அவளை சுற்றி வெற்று சுவர். அறையின் கூரை நடுவில் ஒரு நெருப்பு எரிந்தது. அதன் ஒளி எல்லா திசைகளிலும் சுவற்றை ஓங்கி அடித்துக்கொண்டிருந்தது.
கண்ஸ் அந்த நெருப்பையே பார்த்தப்படி இருந்தாள். நெருப்பு மீது அவளுக்கு ஒரு இனம் புரியா ஈர்ப்பு. பல முறை தொட ஆசை எழுந்ததுண்டு. கட்டுபடுத்திக்கொள்ள அவள் மூளை சொல்லும். நெருப்பு என்றால் அழிவு. இரண்டு வாரங்களில் அவள் வாழ்க்கை சுழற்சியில் நடந்த அழிவை எண்ணினாள். அவள் வாழ்க்கை புரட்டி போட பட்டது அவள் கண் எதிரே மறுபடியும் ஓடியது.
பத்து நிமிடம் காத்திருப்புக்கு பின், அவள் முன்னே இருந்த கதவு திறந்தது. இரு காவலர்கள் முதலில் உள்ளே நுழைந்து, கதவின் இரு பக்கங்களிலும் நின்று கொண்டனர். காவலர்களும் மனிதர்கள். இரும்பு கவசம். கைகளில் மரக்கைப்பிடிகளுடன், ஒளியில் மின்னும் நுனிகளை கொண்ட ஈட்டி. இந்த ஈட்டிகளை லேசர் பீம் ஒரு நொடியில் உருக்கி விடும் என்று கண்ஸ்ஸிற்கு தோன்றியது.
ஜெயன் உள்ளே நுழைந்தார்.
தலையில் பறவை இறக்கைகளை கொண்ட ஒரு கிரீடம். ஒரு காலத்தில் உடல் கட்டுடன் இருந்த உடல் சற்று தசை போட்டது போல இருந்தது தேகம். கழுகு போன்ற மூக்கு. காதிலிருந்து வெள்ளை முடி எட்டி பார்த்தது.
ஜெயன் கண்ஸ் எதிரே அமர்ந்தார். கதவு மூடப்பட்டது. அவர் கண்களை கண்ஸ் பார்த்தாள். ஒரு இனம் புரியா உணர்வு அவளுக்கு. அந்த நீல கண்களில் அவளுக்கு ஏதோ தென்பட்டது. கர்வம். ஏளனம். பெருமை. இவை அனைத்தும் குழைந்த கலவையாக இருந்தது ஜெயனின் பார்வை.
அப்போது தான் கண்ஸ்ஸிற்கு புலப்பட்டது. பூலோகிகளின் பார்வை தான் அவளுக்கு அருவருப்பை உண்டாக்கியது. அவர்கள் பார்வையில் இருந்த ஏளனம். உயிர் உண்டான இடம் இது. இங்கிருந்து தான் நீங்கள் அனைவரும் சொகுசு வாழ்க்கைக்காக வேற்று கிரங்களுக்கு ஓடினீர்கள். அகம் புறம் இருண்ட பொழுதிலே, உயிர் செழித்த பூமியின் வாசி நான். என்னுடன் பேசும் பொழுது, அதை நினைவில் கொள். இப்படி இருந்தது ஜெயனின் பார்வை.
“வணக்கம். எனக்கு இன்னொரு சந்திப்பு உள்ளது. நீங்கள் கூற வந்த விஷயத்தை விரைவில் கூறினால் மகிழ்வேன்.” இரு கைகளையும் ஒருங்கிணைத்து, மேஜையின் மீது ஊன்றினார் ஜெயன். அவரின் மேல் உடல் முற்றிலும் உடையில்லாமல் இருந்தது. தீயின் ஒளி கீற்றுகள் அவர் தேகத்தில் இருந்த தசை மடிப்புகளில் விழுந்து தெறித்தன.
“புதிதாக எதுவும் கேட்க போவதில்லை. கோவின் கொலை பற்றி தான்.”
“தவறு. கோவின் கொலை அல்ல. கோவின் மரணம். அது மரணம் கூட அல்ல. செயலிழக்கம். கோ ஒரு ரோபாட் தானே?”
ரோபாட் என்ற வார்த்தையை வெறுத்து துப்பியது போல அவர் வாய் அதை உச்சரித்தது.
“அது கொலையா இல்லையா என்பதை அண்ட பேரரசு தீர்மானிக்கும்.”
சத்தமாக ஒரு சிரிப்பொலி ஜெயனிடமிருந்து. “அண்ட பேரரசு! ஹா!”
கண்ஸ்ஸின் இடது கை விரல் இருக்கை பிடியில் பொதிந்தது. அவள் உடல் கோபத்தில் கொத்தித்து எழுவதை உணர்ந்தாள். கொடுக்கப்பட்ட கடமையை முடிக்க வேண்டும் என்றது அவள் மூளை.
“கோவிற்கு நடந்ததை பற்றி, பூமியின் தலைவர் என்ன சொல்கிறார். இதை கேட்டு தெரிவது தான் என் பணி.”
ஜெயன் நேராக கண்ஸ்ஸின் கண்களை பார்த்தார். அவர் காதில் இருந்த ரோமங்கள் படபடத்தன.
“முற்றும் அறிந்த அண்ட பேரரசு, கோவிற்கு நிகழ்ந்ததை அறியாதோ?”
வார்த்தைகளில் இருந்த ஏளனம் கண்ஸ் முகத்தை அறைந்தது.
“பூமியின் தலைவருடைய அதிகாரப்பூர்வமான அறிக்கை தெரிந்து கொள்ள வந்துள்ளேன்.”
ஜெயன் கண்ஸ்ஸின் முகத்திலிருந்து கண்களை விலக்காமல், விரலை சொடுக்கினார். பின்னே நின்றிருந்த ஒரு காவலாளி முன் வந்தான். அவனிடம் ஒரு கையால் செய்கை செய்தார். அவன் ஒப்பிக்க ஆரம்பித்தான்.
“கோ என்னும் ரோபாட் பூமிக்கு இரு வாரங்கள் முன் வந்தது. பூமியில் நீல குகைகளுக்குள் ரோபாட்ஸ் நுழைய கூடாது என்பது சட்டம். நுழைந்தது. பூமியின் சட்டத்தின் படி செயலிழக்க தண்டனை விதிக்கப்பட்டு, போன வாரம் நிறைவேற்ற பட்டது.”
கண்ஸ்ஸின் விரல்கள் நடுங்கின. கோவை குறிக்கும் பொழுது “வந்தது”, “போனது” என்ற வார்த்தைகள்… ஒரு ரோபாட் என்றால் அவ்வளவு லேசாக எடுத்து கொள்வதா? காவலாளி கையில் வைத்திருந்த ஈட்டியை கொண்டு ஜெயனின் கழுத்தில் குத்தவேண்டும் போல இருந்தது. மூளை குறுக்கிட்டது.
“பூமியின் சட்ட படி வேண்டுமானால் கோ தவறு இழைத்திருக்கலாம். ஆனால் கோ ஒரு பூமிவாசி அல்ல. அது மட்டும் அல்ல. செயலிழக்க விதியின் படி, ரோபாட்டை மெமரியுடன் சேர்த்து அதன் கிரகத்திடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால், கோவையும் அவர் மெமரியையும் நீங்கள் அழித்து விட்டீர். அவ்விதத்தில் இது ஒரு திட்டமிடப்பட்ட கொலை என்றே அண்ட பேரரசு கருதுகிறது.”
“கொலையா?” ஜெயன் சத்தமாக சிரிக்க ஆரம்பித்தார். வட்ட அறையில் அவரின் சிரிப்பொலி எதிரொலித்தது.
“ரோபாட் ஒரு ஜடம். வெற்று பொருட்களின் ஒருங்கிணைப்பு. அதை பிரித்தெரிவது கொலையா? கொலை என்றே வைத்து கொள்ளுங்கள். கோவை கொலை செய்வதில் பூமிக்கு என்ன பயன்?”
“கோ நீல குகைகளில் பூமி செய்யும் தடைசெய்யப்பட்ட ஆராய்ச்சியை பற்றி கண்டரிந்துவிட்டார். அது அண்ட பேரரசிற்கு தெரியாமல் இருக்க நீங்கள் செய்த சதி.”
ஜெயன் மீண்டும் சிரித்தார்.
“நான் உங்களை ஒரு எளிமையான கேள்வி கேட்கிறேன். இவ்வளவு நேரம் பூமியில் இருந்தீர்களே, ஒரு ரோபாட் உங்கள் கண்ணில் பட்டதா?”
கண்ஸ் மெளனமாக இருந்தாள்.
ஜெயன் ஒரு புருவத்தை உயர்த்தினார். பிறகு தலையை வலதும் இடதும் ஆட்டினார்.
“ஒன்று கூட கிடையாது. 2 வருடங்களுக்கு முன், என் ஆணையின் பேரில், எல்லா ரோபாட்களும் அழிக்க பட்டன. பூமி இயந்திரங்களை நம்புவதில்லை. இயந்திரங்களை நம்பும் நீங்கள் வாழ்க்கையின் சாரத்தை மறந்து, நாச பாதையில் செல்கிறீர்கள்.”
“மன்னிக்கவும். இதற்கும் நான் கேட்ட கேள்விக்கும் என்ன சம்பந்தம்?”
“இருக்கிறது. நீல குகைகளில் ஆராய்ச்சி என்கிறீர்கள். பூமியில் ரோபாட்களும் இல்லை, ஆராய்ச்சியும் இல்லை. விஞ்ஞானத்தை துறந்து விட்டோம். இருப்பது போதும் என்ற மன நிலை இருந்தால், இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்தால், விஞ்ஞானம் ஒரு அளவிற்கு வளர்ச்சி அடைந்திருந்தால் போதும்.”
“அப்போது நீல குகைகளில் ஆராய்ச்சி நடக்கவில்லையா?”
“இல்லை. நீல குகைகள் எங்களின் கோவில். உங்களுக்கு புரியாது. எல்லாவற்றிற்கும் என்ன பயன் என்று அலசி ஆராயும் அறிவியல் மேதைகள் அல்லவா நீங்கள்!”
“என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?”
“கோவை பூமி திட்டமிட்டு பிரித்தெடுக்கவில்லை. திட்டமிட்டு அழிக்கும் அளவிற்கு அந்த ரோபாட் முக்கியமும் இல்லை. பிடுங்கி எறியப்பட்ட சில வெற்று சர்க்யூட்களுக்காக எதற்கு இவ்வளவு பேச்சு என்று எனக்கு புரியவும் இல்லை. முடிந்ததா உங்களின் விசாரணை?”
கண்ஸ்ஸின் உடலால் தீயை சுமக்க முடிந்திருந்தால், இந்நேரம் வாயை திறந்து, ஜெயனை பொசுக்கியிருப்பாள். மிகுந்த கட்டுப்பாட்டுடன், அவள் உதடுகள் பொறுமையாக நகர்ந்தன.
“மன்னிக்கவும். நீங்கள் பேசும் விதம், ரோபாட்களை அவமதிப்பதாக இருக்கின்றது. நானும் ஒரு ரோபாட் என்ற வகையில் இதை கண்டிக்கிறேன்.”
ஜெயனின் முகம் மாறியது. ஒரு அலை அடித்து தெளியும் மண் போல, அவர் முகத்திலிருந்து ஏளனம் துடைத்து எடுக்க பட்டது. அதன் இடத்தில், இப்போது அருவருப்பு மெதுவாய் பரவியது. மேலும் கீழும் கண்ஸ்ஸின் உருவத்தை பார்த்தார். அவரின் கழுகு மூக்கு சுருங்கியது.
“இதை இங்கிருந்து அகற்றுங்கள்!” என்று அலறியப்படி, எழுந்து, கதவை பிளந்து வெளியே சென்றார். இரு காவலாளிகளும் கண்ஸ்ஸை ஆச்சரியத்திலும் பயத்திலும் வெறித்து பார்த்தார்கள்.
கண்ஸ் அசைவின்றி அமர்ந்திருந்தாள். அவள் உள்ளிருக்கும் பாகங்களை ஏதோவொரு விசை அடித்து கிழித்தெறிவது போன்ற உணர்வு. ‘விட்’ ‘விட்’ என்று தீப்பொறிகள் வெடியும் சத்தம் மட்டும் அறையை நிரப்பியது.
***
ஜெயனின் அடிகள் ஒவ்வொன்றும் நடைப்பாதையை சுட்டெரித்தன. உள்ளங்கைகளுக்கு நடுவே அண்டம் இருப்பது போல் எண்ணி, இரு கைகளையும் ஒன்றாக தட்டி அடித்து கர்ஜித்தார், “அண்ட பன்னிகள்!”
எங்கே வந்து யாரிடம் என்ன கேள்வி கேட்கிறார்கள்? அதுவும் ரோபாட்டை அனுப்பி என்னை அவமதிக்கிறார்கள். சுற்றுலா என்ற பேரில் அண்டத்தின் இடுக்குகளிலிருந்து கண்டவர்கள் வருவார்கள். பூமியின் சட்டங்களை மதிக்காமல் அலைந்து திரிவார்கள். உளவு பார்க்க மனித உருவில் ரோபாட்களை அனுப்புவார்கள். ஆனால், இவை அனைத்தையும் பூமி சகித்து கொள்ளவேண்டுமா?
கிரகத்துக்கு கிரகம் திரியும் ரோபாட்டுக்கு மண்ணின் மகிமை எப்படி தெரியும்? எல்லாவற்றையும் ஒளிப்படம் எடுத்து கொச்சை படுத்தும் அறிவு சூனியங்கள்! அந்த செயலிழக்கத்தை நிறைவேற்றியதில் ஒரு திருப்தி ஜெயனுக்கு தோன்றியது. அவரின் தோள்கள் விருந்து, கர்வத்துடன் அடுத்த சந்திப்புக்கு இன்னொரு வட்ட அறையை நெருங்கினார்.
***
சிரியை நேராக கையில் தராமல், மேஜை மீது வைத்தாள். கண்ஸ்ஸை பார்க்காமல், வேறு திசை நோக்கியிருந்தது அவள் முகம். மேஜையிலிருந்து சிரியை எடுத்து, காதில் ஒட்டிக்கொண்டு, வின் கப்பலை நோக்கி கண்ஸ் நடக்க துவங்கினாள்.
ஜெயன் குற்றத்தை மறுப்பார் என்று அவளுக்கு தெரியும். எதிர் பார்த்தது தான். ஆனால் அவர் அவளை பார்த்த பார்வை, சிரித்த விதம், பதில் சொன்ன முறை... கோவின் முகம் அவள் கண்கள் முன்னே தோன்றி மறைந்தது. “இதை இங்கிருந்து அகற்றுங்கள்!” என்று அலறியபோது, ஜெயனின் கண்களில் கசிந்த வெறியை பார்த்தாள். கோவின் கொலைக்கு நீல குகைகள் காரணம் அல்ல… அவள் விரல்கள் நடுங்க துவங்கின. இரண்டு வாராங்களாக அடக்கி வைத்திருந்த எண்ணங்கள், மடை பிளந்தது போல் அவள் மெமரியை வெள்ளமாக நிரப்பின.
வின் கப்பலின் கதவை நெருங்கியதும், அவள் வாய் உச்சரித்தது.
“சிரி”
“உத்தரவிடுங்கள்”
“மாலனுக்கு மெசேஜ்”
“என்னவென்று?”
ஒரு கணம் பொறுத்தாள். அவள் ஆழ் மனதில் பொதிந்திருக்கும் மின்சுருள்களின் ரீங்காரம் அவளுக்கு கேட்டது. ‘முடி!’, ‘முடி!’ என்ற ஒலி அவள் காதுகளை அடைத்தது. மூளை மௌனமானது.
“முடித்து விடு”
“அனுப்பியாகிவிட்டது”
முறைத்தப்படியே கண்ணாடி திரையின் பின்னேயிருந்த பொத்தானை அழுற்றினாள். கதவு மூடி, மெல்லிய விர்ர்ர்ருடன் வின் கப்பல் சில நொடிகளில் காற்றில் மிதக்க ஆரம்பித்தது.
கண்ஸ் தனது இருக்கைக்கு சென்றாள். அதில் சாய்ந்து அமர்ந்தப்படி, கண்ணாடி திரை வழியே எட்டி பார்த்தாள். கேஸ் அடுப்பு பற்றிக்கொள்வதுப்போல், பூமி பந்தை தீ பிழம்பு தழுவியது. அதன் உஷ்ணம் எட்டமுடியாத தூரத்தை நோக்கி விண்கப்பல் பறக்க, தீயின் பிம்பம் கண்ணாடி சுவர்களிலும் கண்ணகியின் கண்களிலும் ஒளிர்ந்தது.
முற்றும்.