வெள்ளை காகிதத்தின் மேல் சரக் சரக்கென்று நகர்ந்த கை, சில நொடிகளில் 20 பிழைகளை சுற்றி சிகப்பு பேனாவால் வளையங்கள் போட்டது. மீனாட்சி திகைப்புடன் அந்த இயந்திரத்தை நோக்கினாள்.
“திருமதி மீனாட்சி, நீங்கள் பார்கின்றவாரு, இந்த ஆர்-152 ரோபாட், எழுத்து பிழைகளும் சரி, ஒற்று பிழைகளும் சரி எல்லாவற்றையும் கண்டறிந்து விட்டது. பாருங்கள்.”
மீனாட்சியிடம் இயந்திரம் சரி பார்த்த தாழை நீட்டினார் திரு.கண்ணபிரான். ஆர்-152 பேனாவை மேஜை மீது வைத்து விட்டு, உறைந்தது.
மீனாட்சிக்கு ஒன்றும் பிடிப்படவில்லை. நெற்றிப்பொட்டில் நரம்பு தெறிப்பது போல இருந்தது. தாழில் இருக்கும் கட்டுரையை பார்த்தாள். பிழைகள் சரியாக சுட்டிக்காட்ட பட்டிருந்தன.
“இன்னொரு விஷயம் கவனியுங்கள்”, கைகளை மேஜை மீது இணைத்தப்படி திரு. கண்ணபிரான் தொடர்ந்தார், “கட்டுரையில் ஒரு இடத்தில் ஆபிஸ் என்று எழுதப்பட்டிருக்கிறது. அதையும் ஆர்-152 சுட்டிக்காட்டி, அலுவலகம் என்று திருத்தியிருக்கிறது.”
“மற்றொரு இடத்தில் சம்பாஷனை என்று ஒரு சொல் வருகிறது பாருங்கள். அது சமஸ்க்ரித சொல். அதையும் கோடிட்டு ‘உரையாடல்’ என்று பரிந்துரைத்துள்ளது.”
தன்னையே அறியாமல் மீனாட்சியின் தலை மேலும் கீழும் நகர்ந்தது.
“நீங்கள் எத்தனை தமிழ் புத்தகங்கள் படித்திருப்பீர்கள்?”
“ஆன்ன்?...” மீனாட்சிக்கு கேள்வியின் நோக்கம் புரியவில்லை.
“தோராயமாக சொல்லுங்கள். எத்தனை தமிழ் நூல்கள் வாசித்திருப்பீர்கள்?”
மீனாட்சி மெளனமாக இருந்தாள்.
“ஐந்நூறு? ஆயிரம்? ஆர்-152 எல்லா தமிழ் நூல்களையும் படித்திருக்கிறது. எந்த ஒரு வாக்கியம் நீங்கள் தந்தாலும், அரை வினாடிக்குள் அது எந்த நூல், எந்த காலம், என்ன அர்த்தம், எல்லாம் சொல்லிடும். வேறு ஏதாவது பரிசோதனை தாங்கள் ஆர்-152விற்கு தர விரும்புகிறீர்களா?”
தன்னையே அறியாமல் மீனாட்சியின் தலை வலதும் இடதுமாக நகர்ந்தது.
“நன்று. எங்கள் ஆர்-152ன் ஆற்றல்களை காண்பிக்க நீங்கள் தந்த வாய்ப்புக்கு நன்றி. உங்கள் மின்னஞ்சலுக்கு நான் ஒப்புதல் ஆவணத்தை அனுப்பிவிடுகிறேன். உங்களின் கையெழுத்தை சேர்த்து சனிக்கிழமைக்குள் திருப்பி அனுப்பிவிடுங்கள்.”
திரு கண்ணபிரான் ஆர்-152வை பார்த்தார். அவரின் பார்வையை புரிந்துக்கொண்ட இயந்திரம், எழுந்து கதவை ஒரு கையால் திறந்தப்படி பிடித்துகொண்டு, மீனாட்சியை பார்த்தது.
மீனாட்சிக்கு சிறிது நேரம் கழித்து தான் புரிந்தது. மெதுவாக எழுந்து கதவை நோக்கி நடந்தாள். இயந்திரத்தின் முகத்தில் கண்ணியமான புன்னகை ஒட்டப்பட்டது போல் இருந்தது. அறையை விட்டு அவள் வெளியேற, திரு. கண்ணபிரான் மேஜைக்கு கீழ் இருந்த ஒரு பொத்தானை அழுற்றினார். வெளியே, கதவின் மேல் இருந்த திரையில் எண் 0431லிருந்து 0432 ஆனது.
திரு. கண்ணபிரானின் அறையிலிருந்து எம்.ஆர்.டி ஸ்டேஷனுக்கு நடக்கும்வரை, மீனாட்சிக்கு சுற்றி இருப்பது எதுவும் பதியவில்லை. சிந்தனைகளில் தொலைந்திருந்தாள்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு அவள் வீட்டுக்கு வந்த கடிதம் நினைவுக்கு வந்தது. அவள் வாழ்க்கையையே புரட்டி போட்ட கடிதம்.
திருமதி மீனாட்சி அவர்களுக்கு,
அணுக்கதிர்களின் தாக்கம் காரணமாக உலகெங்கும் நடந்து வரும் மார்ஸ் இடம்பெயர்தல் பணிகள் உங்களுக்கு தெரிந்ததே. சிங்கப்பூருக்கு ஒரே ஒரு வின்க்கப்பல் தான் ஒதுக்கப்பட்டுள்ளது*.
விண்கப்பல்லில் அனுமதிக்கப்பட, 25 மே மாலை 5 மணிக்கு நடைப்பெற்ற உங்களின் நேர்க்காணல் தொடர்பாக இந்த கடிதம். வலுவான போட்டியின் காரணமாக, மற்றும் விண்கப்பலில் இடப்பற்றாக்குறையால், நீங்கள் தேர்வு செய்யப்படவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.
இதனால் பூமியில் இருக்கும் உங்களின் உரிமைகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. அடுத்த இரண்டு வருடங்களுக்கு உங்களின் சொத்துரிமைகள் அப்படியே இருக்கும். குடிமக்களுக்கும் நிரந்தர வாசிகளுக்கும் சலுகைகள் அலிக்கப்படும்**.
இந்த முடிவை குறித்து உங்களுக்கு சந்தேகங்கள் இருந்தாலோ, நீங்கள் முறையீடு செய்ய விரும்பினாலோ, எண் 67584599யை அல்லது contactus@marsmission.org என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளுங்கள்.***
நன்றி,
விக்டர் டான்
தலைவர்
மார்ஸ் செலெக்ஷன் கமிட்டி
*வின்க்கப்பலின் விவரங்களுக்கு இணைப்பு இ-2 காண்க.
**சலுகை விவரங்களுக்கு இணைப்பு இ-5 காண்க.
***உங்கள் முறையீட்டை காரனமின்றி நிராகரிக்கும் உரிமை செலெக்ஷன் கமிட்டிக்கு உண்டு.
அந்த கடிதத்தை படித்தவுடன் மீனாட்சிக்கு பக்கென்றது. இரண்டு விஷயங்கள் அவளை உறுத்தின. ஒன்று, “அளிக்கப்படும்” என்ற சொல்லில் “ள”விற்கு பதில் “ல” இருந்தது. இரண்டு, மார்ஸுக்கு சென்றதும், இவ்வாறான தாக்குதல்களிலிருந்து தமிழை யார் காப்பாற்றுவார்கள்?!
மீனாட்சி ஒரு தமிழ் ஆசிரியர். அதுவும் சாதாரண ஆசிரியர் அல்ல. சிங்கப்பூரில் தமிழின் தரத்தை தூக்கி நிறுத்தும் பளுவான பணியை ஏற்றுக்கொண்ட ஆசிரியர். பள்ளிப்பனியை தவிர, கட்டுரை தொகுப்புகளை திருத்துவது, தொலைக்காட்சி தொடர்களின் மலிவான தமிழை எதிர்த்து புகார் கடிதம் எழுதுவது, போன்ற காரியங்களில் தானே சென்று ஈடுப்பட கூடிய ஒருவர். சாங்கி விமான நிலையத்தில் இருக்கும் ஒரு சிறிய பலகையிலும் தமிழில் எழுத்து இருக்க வேண்டும் என்று போராடியவர். பல தமிழ் மொழி விழாக்களுக்கு குத்துவிளக்கேற்றி, ஓரிரண்டு வார்த்தைகள் பேசி துவக்கி வைக்க, ஒவ்வொரு வருடமும் அழைப்புகள் வந்து குவியும். அப்படியொரு மீனாட்சிக்கு இப்படி ஒரு கடிதம்.
“ஹ்ம்ம்… பாரதி சொன்னது சரியாப்போச்சு!” என்று நினைத்தாள். மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று முடிவு செய்தாள். “அது எப்படி ஒரு ஆசிரியர் செய்யக் கூடிய வேலையை ஒரு இயந்திரம் செய்யும்? ஒரு திருக்குறளை பற்றி அதனால் உருகி உருகி இரண்டு மணி நேரம் பேச முடியுமா? இரண்டு மணி நேரம் என்ன… இரண்டு நிமிடம் பேச முடியுமா?!”
ஆனால் இயந்திரத்திற்கு அவள் தொடுத்த அனைத்து பரிசோதனைகளும் வீணாயின. முறையீடு நிராகரிக்கப்பட்டு, திரு. கண்ணபிரானின் அலுவலகத்திலிருந்து வெளியேறிய அந்த தருணம், மீனாட்சியின் மனதில் ஒரே ஒரு எண்ணம் தான் இருந்தது.
“மற்ற தமிழ் ஆசிரியர்களுக்கு இடம் கிடச்சிருக்குமா?”
***
அஜய் தள்ளுவண்டியை சூப்பர்மார்க்கெட்டின் சலவை பொருட்கள் பிரிவுக்குள் நகர்த்தியப்படி யோசித்தான்.
“கதைய அடுத்து எப்படி கொண்டு போலாம்? மீனாட்சிக்கு தோல்வி. அடுத்து என்ன செய்வா? அவளோட சக ஆசிரியர்களோட பேசற மாதிரி ஒரு பகுதி எழுதலாமா? எந்த தமிழ் ஆசிரியருக்கும் வின்கப்பல்ல இடம் இல்லைன்னு கொண்டு போலாமா? கலாய்யா இருக்கும்.”
“பிளாஸ்டிக் பாட்டிலா இல்ல பாக்கெட்டா? எது வாங்கலாம்?”
அவன் முன்னே ஒரு கைக்குழந்தையை கங்காரூ குட்டிப்போல மாட்டியப்படி ஒரு பெண் நின்றிருந்தாள். அவனிடம் கேள்வி கேட்டது அந்த பெண் தான். ஒரு வினாடி யார் இந்த பெண் என்று யோசித்தான். ஓ! ஸ்ருதி...
“என்ன?”
“பாக்கெட்டா பாட்டில்லா?” கீழ்தட்டில் இருந்த இரண்டு சலவை திரவங்களை ஸ்ருதி சுட்டிக்காட்டினாள். ஒன்று இளஞ்சிவப்பு நிற பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்தது. மற்றொன்று வழவழப்பான நீல நிற பாக்கெட்டில் இருந்தது.
“எது உனக்கு வெச்சுக்க சுலபம்?”
“பாட்டில்னா மூடி வெச்சு மூடிக்கலாம். பாக்கெட்டுன்னா சில சமயம் ஒழுகிடுது.”
“அப்போ பாட்டில்லே வாங்கிடுவோம்.”
“ஆனா பாட்டில் இரெண்டு டாலர் வில ஜாஸ்தி...”
“ச்ச்… எனக்கு எதுனாலும் ஓக்கே.”
அஜய் மீண்டும் யோசனையில் மூழ்கினான். ஸ்ருதி அவனை முறைத்ததை அவன் கவனிக்கவில்லை.
“உலகத்துல இருக்கற எல்லாரும் அவள விட்டுட்டுப்போனா பத்தாது. இன்னும் கொஞ்சம் இக்கட்டுல மீனாட்சிய போடணும்... என்ன செய்யலாம்? எந்த தமிழ் ஆசிரியருக்கும்...”
“வீட்டுல நாளைக்கு பால் இருக்கா?”
ச்ச்… மூச்சை உள்வாங்கினான் அஜய். வேகமாக ஓடுகையில் யாரோ வந்து முட்டித்தள்ளியது போல ஓர் உணர்வு அவன் தலைக்குள். எரிச்சல் ஏறியது.
***
சிங்கப்பூரில் எங்கு சென்றாலும் அஜய்க்கு மூச்சுத் திணறும். காலையில் அலுவலகம் செல்வதற்கு இரண்டு ரயில்களை விட்டு, மூன்றாவதில் தான் இடம் கிடைக்கும். அதுவும் முட்டைகளை குழித்தட்டில் அடுக்கி, நடுவில் இருக்கும் இடைவெளிகளிலும் முட்டைகளை புகுத்தி, குளிர் சாதன பெட்டிக்குள் அடைத்தது போல இருக்கும் ரயில் பயணம். கிளிமெண்டியிலிருந்து ராபிள்ஸ் பிளேஸ் செல்லும் வரை. உணவு அருந்தும் போது கதை யோசிக்கலாம் என்றால், லா ப சாத்தில் க்யூவோ கியூ. மதியம் 12லிருந்து 2மணி வரை அமர ஒரு மேஜை பிடிக்க திண்டாட்டம். அப்படியே “கண்டேன் மேஜையை!” என்று அனுமன் போல குதித்து ஓடினாலும், அந்த மேஜையின் நடுவில் ஒரு டிஷ்யூ பேப்பர் அல்லது கார்டை வைத்து எவனாவது இடத்தை பிடித்திருப்பான். சுருட்டிய வாலுடன் வேறு இலங்கையை தேட வேண்டியது தான்.
இரவு வீட்டுக்கு வந்தால், குழந்தைக்கு சாதம் ஊட்டியப்படி ஏதாவது ஒரு தலைப்பு பேசப்படும். அதுவும் ஸ்ருதி பேசும் வேகம் இருக்கிறதே. அரை நொடியில் செயலிழந்த ஹீட்டரிளிருந்து இங்கிலாந்து அரசியலுக்கு தாவிடும். அவள் பேசும் சங்கதிகளை துரத்தி பிடித்து புரிந்துக்கொள்ள ஓடினால், பத்தே நிமிடங்களில் மூளையின் கால்கள் வலிக்கும்.
இந்த பேரமளியில், அஜய்யின் ஒரே ஆறுதல் - கழிவறை. “காலையில அவ்வளோ நேரம் டாய்லெட்டுல என்னதான் பன்னுறியோ…” என்று ஸ்ருதி சொல்லுவாள். அவளுக்கு புரியவில்லை.
இரு கன்னங்களிலும் கை வைத்தப்படி, அவன் கண்கள் கழிவறையின் கதவை வெறித்து பார்க்க, அஜய்யின் மூளை விடுவிக்கப்பட்ட குதிரை போல ஓடும். முந்தைய நாளில் கடந்த சம்பவங்கள், சந்தித்த மனிதர்கள், ஒட்டுக்கேட்ட உரையாடல்கள், பல வருடங்களுக்கு முன்பு படித்த வரிகள். இப்படி எந்த எல்லையும் இலக்குமின்றி துள்ளித் திரியும். உட்கார்ந்தேயிருந்த தொடைகள் சற்று உரைத்த பின்பு தான், எழுந்திருத்து பிளஷ் செய்யலாம் என்று அஜய்க்கு தோன்றும்.
***
இப்படிப்பட்ட அஜய்யிடம், “வீட்டுல நாளைக்கு பால் இருக்கா?” என்று வந்தது ஸ்ருதியின் கேள்வி.
தள்ளுவண்டியிலிருந்து நடுங்கும் கைகளை மெல்ல விடுவித்தான் அஜய். கழுத்திலிருந்து தலை உச்சிவரை வியர்த்தது. ஸ்ருதியை உற்று பார்த்தான். சட்டென்று திரும்பி ஓடினான். பில்லிங் கவுண்ட்டரில் நீண்ட கியூ. இருக்கும் இடுக்குகளில் தன்னை நுழைத்துக்கொண்டு ஓடினான். வாசலுக்கு வந்து வலது புறம் திரும்பி ஓடினான். வாசலில் ஷாப்பிங் கூடை எடுத்துக்கொண்டிருந்த ஒரு தாத்தா அவன் ஓடுவதை பார்த்தார். தெருவின் முக்குவரை ஓடினான். வலது பக்கம் திரும்பியும் ஓடினான். தனது பார்வையை விட்டு அவன் சென்றதும், தாத்தா காலி கூடையுடன் சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்தார்.
ஆள் நடமாட்டம் இல்லா தெரு ஒன்று வரும் வரை அஜய் ஓடினான். பிறகு நின்று முட்டிகளை பிடித்துக்கொண்டான். மூச்சு வாங்கியது. மெலிதான வெய்யில் அவன் தோள்களை பற்றிக்கொண்டது.
ஒரு சிறிய அதிர்வு. பிறகு இன்னொன்று. ஒரு வினாடிக்கு இரண்டு அதிர்வு என்றப்படி அதிர்ந்தது அஜய்யின் பாக்கெட். போனை வெளியே எடுத்தான். “ஸ்ருதி” என்றது திரை. இரண்டு மூச்சுக்கள் உள்ளே இழுத்துவிட்டு, போனை காதில் வைத்தான்.
“ஹெல்லோ?”
“... என்ன டா ஆச்சு? ஆர் யூ ஓக்கே?”
“ஹே ஸ்ருதி… யா.”
“எனக்கு பயமா இருக்கு. எதுக்கு ஓடின? எங்க இருக்க இப்போ?”
“இங்க தான். ஒரு அர்ஜண்ட் வேல இருக்கு... மறந்துட்டேன்... நீ வீட்டுக்கு போ. நான் வந்துடறேன்.”
“என்ன வேல? ஆர் யூ ஷுவர்?”
“யா யா. நீ வீட்டுக்கு போ. நான் இந்த வேலைய முடிச்சிட்டு வந்துடறேன்.”
போனை கட் செய்துவிட்டு பக்கத்தில் இருந்த பெஞ்ச்சில் அமர்ந்தான். அந்த பெஞ்ச்சில் ஒரு தாத்தா தூங்கி கொண்டிருந்தார். அமர்ந்தப்படியே, தலையை பின்னால் சாய்த்து, வாயை பிளந்தப்படி. அவர் பக்கவாட்டில் வண்ண ஒளி வீசும் ஒரு டப்பாவிலிருந்து மெல்லிசை பாட்டு ஒன்று ஒலித்துக்கொண்டிருந்தது. சீன பெண் ஒருத்தி தனது காதலனுக்காக உருகி பாடும் பாட்டு.
***
“நீ ஸ்மோக் பண்ணுறியா?”
அஜய் முழித்தான்.
“வேற எதாச்சும் பழக்கம்னாலும் சொல்லுடா. ஐ வோன்ட் ஜட்ஜ் யூ.”
இரவு நேரம். அஜய்யும் ஸ்ருதியும் ஒருவரை ஒருவர் பார்த்தப்படி, கட்டிலில் படுத்திருந்தனர். குழந்தை மனோ பக்கத்து தொட்டிலில் விரல் சூப்பி கொண்டே உறங்கி கொண்டிருந்தான்.
“என்ன ஸ்மோக்கிங்கா?!” அஜய்க்கு சிரிப்பு வந்தது.
“எதுனாலும் சொல்லு டா. பயமா இருக்கு.”
“ச்சே ச்சே! லூசு!” அவள் கன்னத்தில் கை வைத்தான். “உனக்கு தெரியும்ல. எனக்கு கதை பத்தி யோசிக்கும் போது யாராச்சும் பேசினா கடுப்பு ஆகும்ன்னு.”
“அதுக்காக ஓடிடுவியா? நீ எப்போ கதை பத்தி யோசிக்கரன்னு எனக்கு எப்படி தெரியும்?”
கோவம் அவள் உதட்டருகில் எட்டி பார்த்தது.
“புரியுதுடி. நான் என்ன செய்ய. நான் இப்போ எழுதுற கதை ஒரு எடத்துல போய் மாட்டிக்கிச்சு. நீ பேசிட்டு இருக்கும் போது என்னால அத பத்தி யோசிக்க முடியல.”
ஸ்ருதி மெளனமாக இருந்தாள்.
“அதான் வரும் போது பால் வாங்கிட்டு வந்தேனே.”
ஸ்ருதி அஜய்யின் கண்களிலிருந்து பார்வையை திருப்பி கொண்டாள். “நீ வாங்கினது மேரிகோல்ட். கேவலமா இருக்கும். நாம எப்போவும் வாங்குறது பார்ம்ஹவுஸ்.”
அஜய் பெருமூச்சு விட்டான். அவள் முகத்தை தனது பக்கம் திருப்பினான்.
“கோவமா?”
ஸ்ருதி அவன் கையை தட்டிவிட்டு திரும்பி படுத்து கொண்டாள்.
***
அஜய் காலையில் லேப்டாப் பேக்கை எடுத்துக்கொண்டு அலுவலகத்துக்கு கிளம்புகையில், மேஜை மீது ஒரு தாழ் எரிய பட்டது.
“இந்தியாக்கு டிக்கட் வாங்கிட்டேன். நானும் மனோவும் போறோம். ஒரேடியா. நீ உக்காந்து கதை எழுது.”
கைகளை கட்டியப்படி மேஜை அருகே ஸ்ருதி நின்றிருந்தாள். அஜய் உறைந்து போனான். தனது நண்பன் ஒருவன் சிங்கப்பூரில் விவாகரத்து லாயர்களுக்கு காசு கொடுத்து மாளாது என்று சொன்னது நினைவுக்கு வந்தது.
அவனின் முகத்தை கண்டு ஸ்ருதி சிரிக்க தொடங்கினாள்.
“டேய் லூசு! சும்மா சொன்னேன் டா. இரண்டு வாரத்துக்கு தான் போறேன். அதுக்குள்ள உன்னோட கதைய எழுதி முடி.”
சில வினாடிகளுக்கு பிறகு தான், அஜய்க்கு பேச்சு வந்தது. “ஓ… அப்போ… உன் ஆபிஸ்?”
“லீவு சொல்லிட்டேன். அம்மாவும் மனோவ பாக்கனும்னு சொல்லிட்டே இருந்தா. அவங்களோட கொஞ்ச நாள் இருந்த மாதிரியும் இருக்கும்.”
அஜய் கையில் லேப்டாப் பேக்குடன், ஸ்ருதியை கட்டி அணைத்தான்.
***
4 மாதங்கள் கடந்தன. இந்த 4 மாதங்களில் சிறிதாக சில மாற்றங்கள். பூமியிலிருந்து பெரும்பாலான மனிதர்கள் மார்ஸுக்கு இடம் பெயர்ந்து விட்டனர். சிங்கப்பூரிலிருந்து 20 பேரை தவிர்த்து மற்ற எல்லோரும் எஸ்கேப்! இந்த 20 பேர், விண்கப்பலில் இடப்பற்றாக்குரையால் பூமியில் விடப்பட்டவர்கள்.
அந்த 20 பேரில், 5 பேர் தமிழர்கள். அதில் 2 ஆசிரியர்கள் (மீனாட்சி உட்பட). 1 பேராசிரியர். 1 இதழாசிரியர். மற்றும் ஒரே ஒரு சிறுவன்.
அந்த ஐவரில், மீனாட்சி போலவே, புருஷோத்தமனும் தமிழ் ஆசிரியர். வெள்ளை மீசை. சாம்பல் நிற முடி. தமிழ் நிகழ்சிகள் தொகுப்பதில் மன்னர். மார்ஸுக்கு ஓடிவிட்ட யாரை வேண்டுமானாலும் நீங்கள் கூப்பிட்டு, கடந்த 10 வருதங்களில் நடந்த சிறந்த தமிழ் நிகழ்ச்சி எது என்று கேட்டால், அது கண்டிப்பாக திரு. புருஷோத்தமன் ஒருங்கினைத்ததாகதான் இருக்கும்.
மற்றொருவர் வரதராஜன். பேராசிரியர். சொட்டை மண்டை. அதற்குள் கவிதைகள் மீது ஒரு தீரா பசி. பாரதியார் தான் இவரின் முதல் காதலி. தினம் கையில் ஏதாவதொரு புதிய புத்தகம் இருக்கும். (சிங்கப்பூரில் இருவதே பேர் மட்டும் இருந்தாலும், எல்லா நூலகங்களும் திறந்து தான் இருந்தன. இயந்திரங்களால் இயக்கப்பட்டு.)
கடைசியாக திரு. ரெத்தினம். தமிழ் முரசு செய்தித்தாள் இயங்கியப்போது, அதன் தொகுப்பாளர் இவர். தற்போது தமிழ் தாரை என்று நால்வர் மட்டுமே படிக்கும் இதழின் ஆசிரியர் (அவரையும் உட்பட). அது என்ன தமிழ் தாரை என்று யாராவது கேட்டால், “முரசு தான் கொட்டி முடிச்சாச்சே. இனிமே தாரை தான்!” என்பார். பார்ட் டயம்மாக புட் கோர்ட்டில் பரோட்டா கடையும் வைத்திருந்தார். (தற்போது ஒரேயொரு புட் கோர்ட் தான் இருந்தது. மற்றவை யாவும் க்ளோஸ்!) இதழில் கதை சுத்தியப்பின், கடைக்கு வந்து பரோட்டா சுத்துவார்.
இந்த நான்கு தமிழ் ஜீவிகளிடம் தனியாக சிக்கிக்கொண்ட அப்பாவி பரோட்டா தான் - சுப்பு. இந்த சுப்பு ப்ரைமரி 4 மாணவன். அவன் மட்டும் ஏன் இடம்பெயர்தலுக்கு தேர்வு செய்யப்படவில்லை என்பது புதிர். (கணிதத்தில் மூன்றாம் வகுப்பிலேயே முட்டை வாங்கினது தான் காரணம் என்று அவன் நினைக்கிறான்.) மிக குறைந்த அளவு தான் பேசுவான். முடிந்த அளவுக்கு நான்கு தமிழ் ஆசிரியர்களையும் கண்டுக்கொள்ளாமல் இருப்பான். கண்டுக்கொண்டால் எதாவது செய்ய சொல்வார்கள். அதுவும் அந்த நான்கு பேரும் ஒரே விஷயமா சொல்வார்கள்?
புட் கோர்ட்டில் சந்தித்தால் போதும்! நால்வரும் சேர்ந்து நீயா நானா தொடங்கி விடுவார்கள். “சுப்பு முதலில் படிக்க வேண்டிய இல்லக்கியம் எது?” இது தான் தலைப்பு. சுப்பு கண்டுக்கொள்ளாமல் பந்துங் பருகிக்கொண்டிருக்க, ஒருத்தர் பாரதியிலிருந்து ஆரம்பிக்கலாம் என்பார். மற்றொருவர் திருவள்ளுவர் தான் சரி என்பார். இன்னொருவர் சுஜாதா தான் சிறுவர்களுக்கும் பொருந்தும் மொழியில் எழுதுவார் என்பார். முடிவில் எதுவும் முடிவு ஆகாது. சுப்புவின் பந்துங் மட்டும் காலி ஆகும்.
இந்த நால்வரும் ஒன்று சேரும் விஷயம் ஒன்றே ஒன்று தான்.
“என்னுடைய கவிதை ஒன்னு இன்றைய இதழள்ல வந்திருக்கு பாருங்க”, என்பார் புருஷோத்தமன்.
“என்னுடையதும் தான்!” என்று மற்றவர்களும் சொல்வார்கள். பரோட்டா சுத்தி கொண்டிருக்கும் இதழாசிரியரின் இதழில் பதிப்பான தங்களின் கவிதைகளை மாறி மாறி நால்வரும் படித்து காட்டுவார்கள். பூரிப்புடன்.
***
இப்படி சென்றுக்கொண்டிருந்த சுகாமான வாழ்வில், ஒரு திடீர் திருப்பம். ஒரு திங்கட்கிழமை மதியம். புட் கோர்ட்டின் ஓரம் இருக்கும் ஒரு தொலைக்காட்சியில் வசந்தம் சேனலில் ஒரு தொடர் ஓடிக்கொண்டிருந்தது. முன்பெல்லாம் வசந்தத்தில் எப்போதாவது மறு ஒளிப்பரப்பு நிகழ்ச்சிகள் இருக்கும். இப்போது எல்லா நாளும் மறு ஒளிப்பரப்பு தான். அதுவும் இந்த தொடரில், ஏதோ இயந்திர கோளாறு காரணமாக அதே எபிசொட் தினமும் வரும். அதை பொருட்படுத்தாமல், மீனாட்சி பேனாவை தயார் நிலையில் வைத்திருந்தாள். (தமிழ் அல்லாத சொற்களை பட்டியலிட). பக்கத்து டேபிலில், வரதராஜன் நெகிழ்ந்து ஒரு வெண்பா படித்துகாட்டிக்கொண்டிருக்கையில், அவரின் விலாவை குடைந்தார் புருஷோத்தமன். வரதராஜன் மூழ்கி இருந்த கவிதை கடலிலிருந்து விடுப்பட்டு விழித்தார். புருஷோத்தமன் பக்கத்துக்கு டேபிளை சுட்டிக்காட்டினார்.
அந்த டேபிளில், சுப்பு ஒரு சீன மாணவியுடன் பேசி கொண்டிருந்தான். “சாதாரண விஷயம் தானே, இதுக்கு என்ன?” என்று வரதராஜன் நினைக்க, சட்டென்று அவருக்கும் புரிந்தது.
சுப்பு அவளிடம் சீன மொழியில் பேச முயற்சி செய்து கொண்டிருந்தான். உடைந்த சொற்களாகதான் அவன் வாயிலிருந்து வந்துக்கொண்டிருந்தது. ஆனால் கண்டிப்பாக சீன மொழி தான்.
உடனே தொலைக்காட்சி பெட்டிக்கு பின்புறம், நால்வர் சபை கூடியது.
“பெரிதாக ஏதோ சூழ்ச்சி நடக்கிறது”, என்றார் புருஷோத்தமன், தனது வெள்ளை மீசையை சொரிந்தப்படி.
“ஆமா… சீன மொழி ஏற்கனவே பேசுறவங்க போராதா?!” என்றாள் மீனாட்சி.
வரதராஜன் மட்டும் மெதுவாக சொன்னார், “எனக்கு அவர்கள் யதார்த்தமாகதான் பேசி கொண்டதாக தோன்றியது.”
“ம்ம்.. நடைமுறை.” உறுமினார் ரெத்தினம்.
மற்ற மூவரும் முழித்தனர். அதைக் கண்ட ரெத்தினம், “யதார்த்தம் என்ற சொல்லுக்கு பதிலாக நடைமுறை பயன்ப்படுத்தலாமே!” என்றார் புன்னகையுடன்.
எவ்வாறு இந்த பெரும் பிழை நடந்தது, என்று வரதராஜன் சிந்தனையில் மூழ்க, புருஷோத்தமன் ரெத்தினத்தை முறைத்தார்.
“சமஸ்க்ரிதம் இப்போ நம்ம பிரச்சனை இல்ல ரெத்து! அத நம்ம அப்புறம் கவனிச்சிப்போம். சுப்பு சீன மொழி பேச ஆரமிச்சுட்டா என்ன ஆகும் யோசிச்சு பாருங்க!”
***
அன்றிரவு மீனாட்சிக்கு ஒரு கெட்ட கனவு. ஆரம்பம் நன்றாக தான் இருந்தது. அவளும் ஆர்-152வும் அருகருகே அமர்ந்து கட்டுரைகளை திருத்தி கொண்டிருக்கிறார்கள். ஆர்-152வை விட அதிவேகத்தில் மீனாட்சி கட்டுரைகளை திருத்துகிறார். அவளின் பேனா வட்டமிடும் சப்தம் ஆர்-152வை நிலைகுலைய வைக்கிறது. சிரித்துக்கொண்டே கட்டுரைகளை மீனாட்சி குனிந்து பார்க்கிறாள். அவை யாவும் சீன மொழியில் இருக்கின்றன!! இதைக்கண்ட ஆர்-152 இயந்திர குரலில் சிரிக்கிறது. வேர்த்தப்படி மீனாட்சி எழுகிறாள்.
தனக்கு வந்த ட்விஸ்ட் முடிவுள்ள கனவை நால்வர் சபையில் பகிர்கிறாள். சபையில் பதற்றம். அன்று மதியம் புட் கோர்ட்டில் சுப்புவின் காதுகளில் விழும்படி பாரதியார் பாடல்களை போடுகிறார்கள். நிற்பதுவே நடப்பதுவே என்று அவர் உருகி பாடினாலும், சுப்பு கேட்பது போல தெரியவில்லை. அந்த சீன மாணவியுடனான உரையாடல் தீவிரம் ஆகிறது.
அடுத்து வைரமுத்து எழுதிய சினிமா பாடல்கள். அடுத்து சிவாஜியின் கட்டபொம்மன் வசனங்கள். ம்ம்ஹும்ம். சுப்புவோ ஒரு காதில் இயற்போன்ஸ் மாட்டிக்கொண்டு, மற்றொரு முனையை சீன மாணவியின் காதில் மாட்டிவிட்டு, வேறு ஏதோ கேட்க துடங்கிவிட்டான்.
நால்வர் சபை ஒரு தீவிரமான முடிவுக்கு வந்தது. சாயங்கால நேரம் சுப்புவும் அந்த பெண்ணும் தனியாக அமர்ந்திருக்கும் போது, சுப்புவை மட்டும் பிடிக்க ஒரு கோணி பையுடன் நால்வரும் சத்தமின்றி பின்னிருந்து நெருங்கினர். வெகு தூரத்துக்கு அவனை கடத்திச் சென்று, இரவும் பகலும் சங்க இலக்கியம் படித்து காட்டிவிடுவோம் என்று முடிவு செய்ந்திருந்தனர். இருவரையும் நால்வர் நெருங்க, அந்த சீன மாணவி புன்னகைப்பது கேட்டது.
“நல்லா இர்க்கூ” என்றாள்.
ஏதோ சினிமா பாடல் இருவரும் கேட்டு கொண்டிருந்தனர்.
“எது பாட்ட் எலுட?”
“எது இல்ல, யாரு. யாரு பாட்டு எழுதினா? அப்படி சொல்லனும்”, என்றான் சுப்பு.
“யார்ர்ர் பாட்ட் எல்தீனா?” சீன மாணவி சொல்லிவிட்டு சிரித்தாள்.
அவர்களின் பின்னால், நான்கு வாய்கள் பிளந்து நின்றன. பல பிழைகளை குபுக்கென்று பிடித்த பிடியிலிருந்து கோணிப்பை நழுவியது.
***