அவனுக்கு அஞ்சு வயசு ஆகும்போது ஒரே ஒரு சின்ன பொய் சொன்னதுக்காக அவனை அம்மா திட்டினாள். "பொய் சொல்லுற வாய்க்கு போஜனம் கிடைக்காதுடா பாவி!", என்றாள், புருவங்களை இறுக்கியபடி. அவன் அம்மாவின் இவ்வார்த்தைகள் அவனுக்கு நிறைய நாட்கள் தூக்கம் வராமல் செய்தது. ஆனால் அவன் வளர்ந்து ஒரு ஜோசியக்காரன் ஆன பின்பு தான் அவனுக்கு அவன் அம்மா சொன்னது எவ்வளவு தப்பென்று புரிந்தது.
சிறு வயதிலேயே பள்ளியில் கதை கட்டுவதில் அவன் கில்லாடி. ஒரு முறை கணக்கு கிளாசுக்கு வராததற்கு, வாத்தியாரிடம் அவன் சொன்ன கதையின் கருவை வைத்து, அவனின் நண்பன் ஒரு மேடை நாடகமே எழுதிவிட்டான் என்றால் பாத்துக்கோங்க!
"உனக்கு கணக்கு தான் வரல. கதை சுத்துற திறமைய வெச்சு ஏதாச்சும் பண்ணு!" என்று அவனுக்கு தட்டி கொடுத்தார் கணக்கு வாத்தியார். கணக்கு வாத்தியார் அன்று சொன்னதைத்தான், பல வருடங்களுக்கு பிறகு சிங்கப்பூரின் லிட்டில் இந்தியாவில் உள்ள ஹோட்டல் பார்க் ராயல் உள்ளே உட்கார்ந்துகொண்டு செய்தான் அவன். அவனது கடையின் பெயர் "எதிர் நோக்கியா". அவனது வேலை ஒரு சின்ன கூண்டில் இருக்கும் கிளியை வைத்துக்கொண்டு, அந்த 5-ஸ்டார் ஹோட்டலுக்கு தங்க வரும் விருந்தாளிகளின் கவனத்தை ஈர்ப்பது தான். அவனை போன்ற இருவது வயது இளைஞனுக்கு அது குஷியான வேலை.
"இந்த கிளி பேரு லக்ஷ்மி சார், காசு குடுக்கற தெய்வத்தோட பேரு. இந்த கிளி கணிச்சு சொன்னா சத்தியமா நடக்கும் சார்! ஜப்பான்ல பூகம்பம் வரும்னு கூட என் லக்ஷ்மி முன்னாடியே சொன்னா சார்... யாருமே சீரியசா எடுத்துக்கல. நீங்க வந்து பாருங்க சார். லக்ஷ்மி எடுக்கற சீட்டவெச்சு உங்க வாழ்க்கைல என்ன நடக்கும்னு புட்டு புட்டு வெப்பேன்!"
இதே விஷயத்தை அந்த ஹோட்டலுக்கு வருபவர்களிடம் பல பல மொழிகளில் கூறுவான். சற்று அருகில் நீங்கள் சென்றவுடன், உங்கள் காதருகே வந்து, "இந்த கிளியோட தாத்தா சிங்கபூர் மலேசியா கிட்டேயிருந்து பிரியும் தேதியை லீ குவான் யூவிற்கு முன்க்கூட்டியே சொன்னது தெரியுமா?", என்பான். அவன் சொன்னதை நம்பினார்களோ இல்லையோ, ஹோட்டல் விருந்தாளிகள் அவன் கிளியை ஆச்சர்யத்துடன் பார்த்தனர். "அவன் சொல்வதை அப்படியே செய்கிறதே!" என்ற வியப்பு அனைவருக்கும்.
இளம் தம்பதிகள்தான் அந்த ஜோசியக்காரனின் முதல் குறி. புதிதாக கல்யாணம் செய்த மனைவி கேட்பதை கொடுத்துவிடவேண்டும் என்ற எண்ணத்துடன் ஒரு கணவன் கையில் சிக்கினால், காசை கறக்காமல் ஓய்ந்தது இல்லை அந்த ஜோசியக்காரன். அதுவும் ஒரு இளம் பெண்ணை மிக எளிதாக வார்த்தைகளால் கவரக்கூடிய பேச்சுதிறமையும் அவனிடம் இருந்தது. அவன் எப்பொழுதுமே எதிர்காலத்தில் நல்ல விஷயங்கள் நடக்கும், நல்ல செய்தி வரும் என்று தான் ஜோசியம் கூறுவான். "உங்களுக்கு கண்டம்!", "ஆபத்து வர போகுது!" என்றெல்லாம் சொல்லி தனது வாடிக்கையாளர்களை கஷ்டபடுத்த விரும்பாத ஒரு ஜோசியக்காரன் அவன். இதனால் ஹோட்டல் விருந்தாளிகள் அவன் கடைக்கு வந்து கிளி ஜோசியம் பார்த்தால், அவனுடனும் அவன் கிளியுடனும் போட்டோ எடுத்துக்கொள்ளாமல் திரும்பயதில்லை.
இறுதியில், ஜோசியக்காரனுக்கோ அவனது சன்மானம் கிட்டிவிடும், ஹோட்டல் நிர்வாகிகளுக்கோ "எதிர் நோக்கியா" கடையால் மாத வாடகை வந்துவிடும், விருந்தாளிகளுக்கோ கிளியுடன் ஒரு ஜாலியான அனுபவம் கிடைத்துவிடும், அந்த கிளியிற்க்கோ பாதாம் பிஸ்தா சாப்பிட கிட்டிவிடும். மொத்தத்தில் எல்லோருக்கும் திருப்தி.
இவ்வாறு அந்த ஜோசியக்காரனின் வாழ்கை சக்கரம் மெதுவாய் சுழன்றது. இதை பார்த்து கொண்டிருந்த சக்திவாய்ந்த நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களுக்கு இது சற்றும் பிடிக்கவில்லை. மக்களின் ஒரே மாதிரியான தினவாழ்க்கை கிரகங்களுக்கு அலுப்பாக இருந்தது. உலகத்தில் நிறைய மக்கள் தினமும் அதே வேலையை செய்து செய்து, கிரகங்களை கொட்டாவி விட வைத்தனர். கொஞ்சம் சுவாரஸ்யத்தை உண்டாக்க என்ன செய்யலாம் என்று முடிவெடுக்க, கிரகங்கள் எல்லாம் ஓர் இரவு ஒன்று கூடினர். அந்த கூட்டத்தில், சிறிய நட்சத்திரம் ஒன்று பளிச்சிடும் ஐடியா சொன்னது. அந்த ஐடியாவை கேட்ட உடனே, மற்ற நட்சத்திரங்களும் கிரகங்களும் புன்னகையால் மின்னின.
அடுத்த நாள் பூமியில், பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது.
ஹோட்டல் பார்க் ராயல் இழுத்து மூடப்பட்டது. ஜோசியக்காரன் லக்ஷ்மியை விற்க வேண்டிய சூழ்நிலை ஆனது. செல்வம் தரும் அந்த குட்டி தேவியை விற்றதில் வந்த காசு, ரோட்டோரமாக ஒரு சின்ன கடை போட்டு பூத கண்ணாடி வாங்குவதற்கு சரியாய் இருந்தது. ஜோசியக்காரன் இப்பொழுது ரேகை படிக்கும் தொழிலில் இறங்கிவிட்டான்.
ரேகைகள் பார்க்க அவனுக்கு நிறைய கைகள் கிடைத்தன. அந்த கைகள் எல்லாம் சில நாட்கள் முன்னர் பெரிய பெரிய கம்பெனிகளில் நோட்டுகளை என்னிக்கொண்டு கணினி பலகைகளை தட்டிக்கொண்டு இருந்தன. ஆனால் இப்பொழுது அந்த கைகளுக்கு என்னவோ தட்டவோ ஏதும் இல்லை. திண்டாட்டம் தான். இந்த சூழ்நிலையில் "எல்லாம் நல்லதா நடக்கும்" என்று சொல்வது ஜோசியக்காரனுக்கு கொஞ்சம் கஷ்டமானது.
வேலையில்லா மக்கள் மனதுகளில் கோபம் பொங்குவதை அவன் கவனித்தான். சோர்வு மனப்பான்மை கூடிக்கொண்டிருந்தது. இதனால் எதிர்காலத்தை பற்றி அவன் கணித்து சொல்வதை சிறிது கவனமாய் சொல்ல கட்டாயம் உண்டானது. சொல்ல வரும் விஷயத்தில் ஒரு சிறு பிழை செய்தால் கூட, மக்கள் கோபத்தில் அவன் கடையையே அடித்து நோரிக்கிவிட கூடும், என்று உணர்ந்தான்.
ஞானி என்ற பெயரில் இருந்த ஒரு பிரபலமான ஜோசியக்காரருக்கு நடந்த கதையை அவன் கேள்வி பட்டிருந்தான். ஒன்பதாம் கிரகமான ப்ளுட்டோவை கிரகமே அல்ல என்று விஞ்ஞானிகள் சமீபத்தில் கூறியதால்தான், கிரகங்களுக்கு கோபம் வந்து பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது என்று சொன்னார் ஞானி. இதை கேட்ட சில பேர் சிரித்து விட்டு மறந்தனர், ஆனால் சில பேர் ஞானியை அடித்து அவரை மருத்துவமனைக்கு பார்சல் செய்து அனுப்பிவிட்டனர். இதை கேட்டப்பின் தான் சொல்லும் வார்த்தைகளை மிகவும் கவனத்துடன் தேர்ந்தெடுத்தான் நமது ஜோசியக்காரன்.
வானில் இருக்கும் நட்சதிரங்களுக்கோ இப்பொழுது குஷியாகி விட்டது. முதலில் ஐடியா கொடுத்த சிறிய நட்சத்திரம் உலகத்தில் இன்னும் சில கலகங்கள் உண்டாக்க ஐடியா கொடுத்து கொண்டே இருந்தது. ஜோசியக்காரன் வாழ்க்கையிலும் ஒரு கலகம் வேண்டாமோ?
அப்பொழுதுதான் ஜோசியக்காரன் அவளை முதலில் பார்த்தான். அந்த நாளை ஜோசியக்காரனால் மறக்கவே முடியாது - அவன் அவள் கையை பிடித்து ரேகை பார்த்த அந்த நாள், அவள் கண்களில் மின்னும் ஒளியை கண்ட அந்த நாள். அப்பொழுதே முடிவு செய்தான். "இவதான் என் மனைவி!"
நட்சத்திரங்களுக்கு நன்றி சொல்லிவிட்டு, சாமர்த்தியமாக காய்களை நகர்த்தினான். அவளும் காதல் வலையில் விழுந்தாள். சில நாட்களிலேயே அவர்கள் ஒன்றாக பார்க்கில் உட்கார்ந்தபடி, தங்கள் எதிர்கால கனவுகளை நான்கு கண்களால் பார்த்து ரசித்தனர்.
"கிராமத்துல குயுலுங்க கூவுற எடத்துல ஒரு வீடு. இந்த எச்.டீ.பீ வத்திபொட்டி சைஸ்ல இல்லாம, நல்லா பெருசா! அப்பப்ப வந்து நலம் விசாரிச்சிட்டு பக்கோடா தின்ன மாமா-மாமிகள் இல்லை. அமைதியான சந்தோஷமான வாழ்க்கை", என்று கனவு கண்டான் ஜோசியக்காரன்.
அந்த அழகிய கனவை கலைக்கும்படி, சிவந்த கண்களுடன் அவர்கள் முன்னே வந்து நின்றான் அந்த காதலியின் அண்ணன்.
"நாங்க உயிருக்கு உயிரா காதலிக்கறோம். நீங்க ஒத்துக்கலனாலும் ஓடி போய் கல்யாணம் செஞ்சுக்குவோம்!" என்று தமிழ் சினிமா பார்த்த மயக்கத்தில் சொன்னான் ஜோசியக்காரன்.
பெண்ணின் அண்ணன் கராத்தே கற்றவன் போலும். பார்க்கில் கொஞ்சம் 'டிஷூம் டிஷூம்' நடந்த பிறகு, காதலியோ வீட்டின் ஒரு பூட்டப்பட்ட அறையில் ஓரமாக அழுதாள். நமது ஜோசியக்காரனோ அடிப்பட்டு ஆஸ்பத்திரியில் விழுந்தான்.
"வாப்பா! நீ என்ன சொன்ன?" என்று கேட்டார் பக்கத்து படுக்கையில் முகத்தில் கட்டுகளுடன் இருந்த ஞானி. (ப்ளுட்டோவை பற்றி பேசி அடிவாங்கினாரே அந்த ஞானி...)
பதிலிக்கு நமது ஜோசியக்காரன் முனங்கினான். அவனால் தன் முதுகை மெத்தைமீது சாய்க்க முடியவில்லை.
"நன்றிகெட்ட உலகம் இது நண்பா!" என்றார் ஞானி, "பிறர் செவி விரும்புவதை சொன்னால் தருவார் நேசம்... தன் மனம் விரும்புவதை சொன்னால் செய்வார் நாசம்!"
நமது ஜோசியக்காரன் அழ துவங்கினான். ஞானி கட்டிலிலிருந்து தன் தலையை தூக்கி ஜோசியக்காரனை பார்த்தார்.
"என்னப்பா? கவிதை நல்லா இல்லியா என்ன?"
"என் மனசு பூரா அந்த பொண்ணு தான் சார்", ஜோசியக்காரன் முனுமுனுத்தான், "என்ன பன்னுறதுன்னே தெரியல..."
"கவலை வேண்டாம் நண்பா! யாம் இருக்க பயமேன்? நான் ஒரு ஜோசியக்காரன்!" திரு ஞானி அவர்கள் இதை அறிவித்தப்படி தனது படுக்கையிலிருந்து எழுந்து கைகளை விரித்து சொன்னார், "நான் சொன்னால் நடக்கும்!"
அந்த வழியாக சென்ற ஒரு மலாய் நர்ஸ், ஞானியை மீண்டும் படுக்கையில் தள்ளினாள். படுக்கையில் விழுந்தபடி ஞானி நமது ஜோசியக்காரனின் காதுகளுக்கு அருகில் சென்று, "நட்சத்திரங்களை ஏமாத்தனும். அவ்வளவு தான்!" இவ்வாறு சொல்லிவிட்டு தனுக்குத்தானே சிரித்து கொண்டார்.
"நானும் ஒரு ஜோசியக்காரன் தான்!" என்று பதில் அளித்தான் நமது ஜோசியக்காரன்.
"அதுனால?"
"அதுனால உன்னோட எல்லா விதமான வித்தைகளும் எனக்கு அத்துபடி. என்ன பேசாம அழவிடு போரும்!"
"ஒரு கடையில் கவரிங் நகை வித்தா, தங்கமே இல்லைன்னு அர்த்தமா என்ன?" ஞானி புன்னகையுடன் கேட்டார்.
"சரி. நான் போலிஜோசியர்னு ஒத்துக்கறேன். ஆனா நெஜமாவே ஒரு மனுஷனோட எதிர்காலம் அவன் கையில் எழுதிருக்கா?", என்று சந்தேகத்துடன் கேட்டான் நமது ஜோசியக்காரன், "கிரகங்கள் நகர்வதால் நம் வாழ்க்கை பாதிக்குமா?"
ஞானியின் புன்னகை நீடித்தது. "நான் முன்பு சொன்னவாறு, நட்சத்திரங்களை ஏமாத்தனும். அவ்வளவு தான்!"
நமது ஜோசியக்காரர் ஞானியின் கண்களை உற்று பார்த்தார். சில வினாடிகளுக்குப்பின், "ஞானி அவர்களே! சொல்லுங்க... என் காதலிகூட ஒன்னு சேர நான் என்ன செய்யணும்?"
ஞானியின் முகத்தில் இருந்த ஒரு தேஜஸ் நமது ஜோசியருக்கு அவர் மீது நம்பிக்கை கொண்டு வந்தது. ஞானி சொன்னப்படி செய்தார். அவர் சொல்லும் பரிஹாரங்களில் நிறைய காசு செலவழித்தப்பின்தான் ஞானி ஏமாற்ற நினைப்பது நட்சத்திரங்களை அல்ல என்று ஜோசியக்காரனுக்கு விளங்கியது.
கிரகங்கள் மீண்டும் தங்களின் சேட்டையை அருமையாக நடத்திவிட்டனர் - இந்த முறை ஞானி மூலமாக. நமது ஜோசியக்காரன் கோபத்தில் கொப்பளித்தான். தனது வீட்டு பாத்ரூமிலிருந்து ஒரு இரும்பு பைப்பை உடைத்து எடுத்தான்.
கையில் பைப்புடன் ஞானியின் வீட்டு கதவை தட்டினான். ஞானி கதவை திறந்து சிரித்தார். டமால்! டிஷூம்!
அடுத்து தனது காதலியின் அண்ணன் வீட்டு கதவை தட்டினான். காதலின் வில்லன் கதவை திறந்து நக்கலாக சிரித்தார். டமால்! டிஷூம்!
அடுத்து வேறொரு கதவை தட்டினான். அவன் காதலி தயக்கத்துடன் கதவை திறந்தாள். அவள் கழுத்தில் தாலி கயிர் தொங்கிக்கொண்டிருந்தது. அவள் பின்னிலிருந்து பயத்துடன் ஒரு ஆள் எட்டி பார்த்தான்.
டமால்! வெடித்தது ஜோசியக்காரனின் இதயம்.
"என்ன மன்னிச்சிடுங்க... வீட்டுல வர்ப்புருத்தினாங்க... எனக்கு வேற வழி தெரியல..." என்றெல்லாம் அழுதுக்கொண்டே கூறினால் காதலி.
ஆனால், ஜோசியக்காரனுக்கு ஒன்றும் கேட்கவில்லை. அவனது கனவு இல்லம் வெடித்து சிதறும் சத்தம் தான் அவன் காதுகளில் ஒலித்தது. குயில்கள் கூவுவதை நிறுத்தி விட்டன. சிதறி கிடந்த கற்பனை வீட்டின் கற்களின் மீது ஒன்றும் புரியாமல் நின்றிருந்தான். அப்பொழுதுதான் அவனுக்கு அந்த சத்தம் கேட்டது - ஒரு மெல்லிய சிரிப்பொலி.
"கேட்டுச்சா உனக்கு?" என்று காதலியை கேட்டான். அவள் ஒன்றும் புரியாமல் முழித்தாள்.
அவள் நடிக்கிறாள் என்று தனக்கே சொல்லிக்கொண்டான் ஜோசியக்காரன். மெல்லிய சிரிப்பொலி பொறுமையாக பெருகி ராட்சஸ அலறல் போல் ஒலித்தது. மேலே இருக்கும் வானத்தை பார்த்தான். நட்சத்திரங்கள் அனைத்தும் அவனது நிலையை பார்த்து வாய் விட்டு சிரித்து கொண்டிருந்தன.
"நீங்க நாசமா போக!" என்று வானை பார்த்து சபித்தான்.