February 6, 2013

தேசியக் கொடியும் சில பெருமூச்சுகளும்

(I wrote this short story for the topic "Paalangal" for the Thangameen Short Story Contest in Feb 2013.)

"வானமோ நீலம், நீ தான் என் பாலம்...", என்று கண்ணாடி முன்னே சொல்லிப்பார்த்தான் சிவா. முகபாவனைகள் எதிர்ப்பார்த்த வண்ணம் வெளிவராததால், இரண்டு முறை திரும்ப சொல்லிப்பார்த்தான். இது தேறாதென்று வெறுப்புடன் கையில் இருந்த சீப்பை வீசி எறிந்தான். அந்த சீப்பு பறந்துபோய் ஒரு காகித தேசியக்கொடி மீது விழுந்தது. அந்த இந்திய காகிதக்கொடி சிவாவின் நிலையை பார்த்து தனக்குள்ளே சிரித்துக்கொண்டது. இறைவனின் படைப்பில் ஒவ்வொரு அணுவிற்கும் ஒரு நோக்கம் உண்டு, என்று பக்கத்து வீட்டு தாத்தா அவ்வப்போது சொல்லுவார். அது போல, கற்பகாம்பாள் ப்ரெஸ்ஸில் அச்சடிக்கப்பட்ட அந்த கொடியின் நோக்கம், சிவாவை காதல் எனும் கடலில் விழவைப்பது. அந்த நோக்கத்தை நிறைவேற்றிய திருப்தியுடன் அந்த கொடி அமைதியாக முக்தியை நோக்கி காத்திருந்தது.

இரண்டு மாதங்கள் முன்புவரை யாரேனும் சிவாவின் நெற்றியில் விபூதியையோ குங்குமத்தையோ பார்த்தால், உடனே ரமணனுக்கு மணியடித்து, "சார், இன்னிக்கி கண்டிப்பா மழை வந்திடும்!" என்று சொல்லுவார்கள். அப்படிப்பட்ட ஒரு அக்மார்க் நாத்திகன். (அவன் ஏன் நாத்திகனானான் என்பதற்கு வேறு தனி கதை உள்ளது.) ஒரு நாள் வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருந்த போது, கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு குதித்தெழுந்தான். தாப்பாளை திரந்துப்பார்தால், ஒரு அழகிய இளம்பெண். வேறு எங்கோ செல்ல நினைக்கும் கண்களை கட்டுப்படுத்தி, "எஸ்?" என்றான்.
"ஹாய்! நான் ஷ்ரீ ஷ்ரீ ரவிசங்கர் ஆஷ்ரமத்திலிருந்து வருகிறேன். அண்ணா ஹஜாரேவின் போராட்டத்திற்காக இளைஞர்கள் நாங்கள் நிதி திரட்டுகிறோம். உங்களுக்கு தோன்றுகிற பங்களிப்பு தாருங்கள்", என்றபடி ஒரு டப்பியை நீட்டினாள்.

"அண்ணாவாவது போராட்டமாவது... நீங்க எதுக்காக என்ன கேட்டாலும் நான் தருகிறேன்!" என்று மனசுக்குள்ளே சொல்லிக்கொண்டு, சட்டை பைக்குள் கையை விட்டு, இருக்கும் நோட்டுகளை பார்க்காமல் வெளியே எடுத்தான். அந்த பொண்ணும் நோட்டுகளை வாங்கிக்கொண்டு, ஒரு தேசியக்கொடியை சிவாவின் சட்டையில் நெஞ்சருகே குத்தினாள்.

அடுத்த நாள் ஷ்ரீ ஷ்ரீ ரவிசங்கர் ஆஷ்ரமத்தில் நம்ம நாத்திகன் கண்களை மூடி தியானம் செய்ய அமர்ந்தான். மூச்சை இழுத்து இழுத்து விடும் இடைவெளிகளில், ஒற்றை கண்ணை திறந்து அவளை தேடினான். இவ்வாறு இரு மாதங்களாக அவளை நினைத்து நினைத்து பெருமூச்சும் சிறுமூச்சும் விட்டப்படியாக இருந்தவன், இப்போது காதலை அவளிடம் சொல்லியே ஆகவேண்டும் என்ற முடிவுடன் கண்ணாடி முன்னால் நின்று ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தான். கடைசியில் கவிதை எல்லாம் தேவை இல்லை, இப்போதெல்லாம் பெண்களுக்கு சின்சியரா பேசினாத்தான் பிடிக்குது என்று தியாகு சொன்ன அட்வைஸ்ப்படி நடக்க முடிவு செய்தான்.

அன்று ஆஷ்ரமத்தில் ஏதோ சொற்பொழிவு போலும். சில வீ.ஐ.பீகள் கூட வந்திருந்தன. மேடையில் ரவிசங்கர் புன்னகையுடன் அமர்ந்திருந்தார். ஆனால் சிவா பார்த்துக்கொண்டு இருந்ததோ ரவிசங்கரின் வலதுபுறத்தில் நின்றிருந்த அவனது அழகியைத்தான். மேடையில் இருந்தவர்கள் ஒவ்வொருவராக பேசினார்கள். ஏதோ பெரிய பிரச்சனை நாட்டில் நடக்குது என்று அவர்கள் கத்திய குரலை வைத்து யூகித்தான் சிவா. என்ன பிரச்சனை இருந்தால் என்ன? பேச்சுவார்த்தைக்கு என் ஆளை அனுப்பினால் சிரிப்பாலையே கவுத்திடுவாளே, என்று எண்ணி சிரித்தான். சட்டென்று அவன் புன்னகை மறையும்ப்படி ரவிசங்கர் ஒரு குண்டு போட்டார்.

"உலக அமைதிக்காக நாங்கள் ஒரு குழுவாக உலகத்தின் இருவது தேசங்களுக்கு சென்று வரவிரிக்கிறோம்", என்று அறிவித்தப்படி அந்த குழுவை மேடைக்கு வரவைத்தார். அதில் முதல் ஆளு நம்ம சிவாவோட ஆளுதான். அவள் முன்னே வந்து ஜனங்களை பார்த்து வணக்கம் சொல்லும்போது, ரவிசங்கர் கூறினார், "முதல் நாடாக சிங்கபூருக்கு செல்லவிருக்கிறோம்!". கரகோஷம் எழும்பியது.

"மச்சி! எனக்கு அதெல்லாம் தெரியாது டா! என்னையும் அந்த குழுவில் சேர்த்துக்கோங்க... பிளீஸ்!", என்று கார்த்திக்கேயன் காலில் விழாத குறையாக சிவா கெஞ்சினான்.

"இது என்ன ஸ்கூல் ட்ரிப்பா டா? நானும் வரேன்னு அடம் பிடிக்கற. குருஜிக்கு தெரிந்த நம்பிக்கையானவர்கள் மட்டும் செல்லும் ஒரு புனித யாத்திரை. தயவு செஞ்சு இத கொச்சை படுத்தாதே!", என்று கோபித்தான் கார்த்திக்கேயன்.

"சார் சார் பிளீஸ் சார்... நீங்க தான் சார் எனக்கு உதவி செய்யனும்...", என்று அடுத்த படியாக காமிராமேன் கணேஷ் காலில் விழுந்தான் சிவா. அவர் அவனை உற்று பார்த்து, தலையை ஆட்டி சிரித்தார்.

***

"கொஞ்சம் லெப்ட் சைடு வாங்க. கொஞ்சம் ரைட்..."

ஒரு கையில் காமிராவுடன், மருக்கையால் தனது அழகியை காமிரா சதுரத்திற்குள் கொண்டு வந்தான் சிவா. அவன் ஆளு வாயில் புன்னகையுடன் காமிராவை பார்த்தாள். அவள் பின்னே இருந்த மெர்லையன் வாயில் தண்ணீருடன் ஓரக்கண்ணால் காமிராவை பார்த்தது. இவ்வாறான ஒரு காட்சியை வாழ்க்கையில் காண்போம் என்று அவன் நினைக்கவில்லை. அவன் ஆளு இன்னிக்கி சிங்கபூரை சுத்திப்பார்க்க போகிறாள் என்ற செய்தி தெரிந்தவுடன், அவள் செல்லும் இடத்திற்கு சென்று தற்செயலாக சந்தித்ததுபோல் அமைத்துவிட்டான். கிளிக்!

“தேன்க்யூ!”, என்றபடி காமிராவை திரும்பவாங்கினாள் சிவாவின் அழகி.

“உங்கள எங்கயோ பாத்திருக்கேனே...” கண்களை சிறிதாக்கி யோசித்தாள்.

“குருஜி ஆஷ்ராமத்துல தான். சென்னைல.”

“ஓ எஸ்! இங்க என்ன பண்ணுறீங்க?”

“ஒரு படம் ஷூட்டிங்கிற்காக வந்தேன். தெரிஞ்ச டைரக்டர் தான்”, கம்பிமேல் சாய்ந்தப்படி சகஜமாக சொன்னான் சிவா.

“ஓஹோ...”

அடுத்து எதாவது கோப்பி ஷாப்பிற்கு அழைத்துச்சென்று பேச்சுகொடுப்போம் என்று முடிவு செய்தான். அவளும் ஒப்புக்கொண்டாள். நடத்துடா சிவா நடத்து என்று அவன் மனசு அவனை பார்த்து சொன்னது.

"நான் வாழ்கையில என்ன செய்ய நினைக்கிறேன் தெரியுமா?" என்று கோப்பி குடுத்திக்கொண்டே டபக்கென்று கேட்டாள்.

"இறைவனுக்கு சேவை செய்ய போகிறேன்னு சொல்லி கண்ணிகாச்த்ரீ ஆகாம இருந்தால் சரி", என்றது சிவாவின் மனசு.

"எனக்கு ஒரு பள்ளிக்கூடம் ஆரமிச்சு ஏழை குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கணும்!"

“சுப்பர்! ஆரமிச்சுடலாம்...” கடந்த பத்து வருடங்களாக தினம் ஒரு ஸ்கூல் ஆரம்பித்தவன் போல விரல்களை சுண்டிக்கொண்டே சொன்னான் சிவா. அவன் சொல்வதை நம்பாதவாறு பார்த்தாள் அவன் ஆளு.

“நெஜமாங்க. ஒரு ஸ்கூல் ஆரமிக்கிறதுதான் என்னோட கனவே... நம்ம ஊருல இருக்கறதெல்லாம் ஸ்கூலா என்ன... கொழந்தை ஜெயில்! நம்ம விவேக்கானந்தா...”  

திடீரென்று வெடி வெடிக்கும் சத்தம் கேட்டது. இருவரும் திரும்பிப்பார்த்தனர். இருட்டிடும் வானத்தில் மரத்திலிருந்து உதிரும் பூக்கள் போல, வானவேடிக்கை. அசந்துபோய் சிவாவின் ஆளு வானையே பார்த்தாள். அந்த ராக்கெட்டின் பளிச்சிடும் வெளிச்சத்தில், சிவாவின் கண்களுக்கு அவள் பல பலவென மின்னினாள். மூச்சை உள்ளிழுத்தான் சிவா.

***

குப்பென்று மூச்சை வெளிவிட்டான். சரக்கு நிறைந்த பிலாஸ்டிக் கப்பை அவன் முகத்தின் முன் நீட்டினார் காமிராமேன் கணேஷ். அவர் கை ஒரு இடத்தில் நிற்காமல் தள்ளாடியது.

“இந்தாடா தம்பி...”

“நான் அவள கேட்டிருக்க கூடாது சார். மனச அப்படியே செதச்சுட்டா.”

“இது இருக்கே, இந்த மேட்டர்.. இது பசை மாதிரிடா. குடி. மனசு தானா ஒட்டிக்கும்.”

“ஏன் சார் படத்துல மட்டும் ஹீரோ ஊர விட்டு ஊரு போய் காதல் சொன்னா வேலைக்காவுது... ஆனா வாழ்க்கைல...”

“டேய் தம்பி... வாழ்க்கை வேற... சினிமா வேற...” இதை கூறும்போது கையை சிறிது ஆட்டியதால் சரக்கு கொஞ்சம் சிந்தியது. சிந்திய சரக்கிற்கு ஒரு வினாடி மௌன அஞ்சலி செலுத்திவிட்டு கணேஷ் தொடர்ந்தார், “இப்போ என்னையே எடுத்துக்கோ. சினிமாவுல மக்கள் என்ன பாத்து சிரிக்கறாங்க, ஆனா வாழ்க்கைல யூனிட்டே என்ன பாத்து மெரளும்.”

“எனக்கு இப்போ தான் சார் யுவன் பாடின ஒவ்வொரு பாட்டோட வலி புரியுது” கண் கலங்க ஆரமித்தான் சிவா. அவன் கண்களை துடைக்க அருகே சென்றார் கணேஷ், ஆனால் திடீரென்று சிவா அலறியது அவரையே மிரள வைத்தது.

“வான் பிளந்து கண்ணெதிரே வந்து நின்றாள்! சிரிப்பால் என் குட்டி மனதை வென்றாள்! அப்புறம் என்னை விட்டு... என்னை விட்டு சென்றாள்.. வஞ்ச... வஞ்சமகள்... என் மனதை கிழித்து தின்றாள்...”

“பெண்டாஸ்டிக்!” சிவாவும் கணேஷும் திரும்பினர். கணேஷின் வலது கண்ணிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் எட்டி பார்த்தது, “டைரக்டர் சார் வாங்க...”

“இந்த மாதிரி ஒரு பாட்டு தான் எனக்கு வேணும். யாரு கணேஷ் இவரு?”

***

“அடுத்தப்படியாக சிறந்த புதுமுக பாடலாசிரியர் விருது!” மக்கள் கரகோஷம் இட்டனர். ஒவ்வொன்றாக தேர்வு செய்யப்பட்ட ஐந்து பேரின் புகைப்படங்கள், விஜய் அவார்ட்ஸ் மேடையில் இருந்த பிரம்மாண்ட திரையில் காண்பிக்கப்பட்டது. சிவக்கார்த்திகேயன் தொடர்ந்து பேசினார், “அண்ட் தி அவார்ட் கோஸ் டூ...”

“சிவா!” கோட்டுசூட்டு அணிந்துக்கொண்டு தலையை சற்று குனிந்தவாறு மேடையேறினான் சிவா.

“நீங்க இந்த அவார்ட் வாங்கினா, நான் பாதி வாங்கின மாதிரி. நம்ம பேருல அப்படி ஒரு ஒற்றுமை. சொல்லுங்க சிவா” சிவா என்ன சொல்வது என்றுதெரியாமல் சிரித்தான்.

“சொல்லுங்க. எப்படி பீல் பண்ணுறீங்க?”

“எல்லோருக்கும் வணக்கம்”, என்று ஆரமித்து சிறிது இடைவெளி கொடுத்தான். யாரும் கைதட்டுவதுபோல் தெரியவில்லை. தொண்டையை கிலியர் செய்தவாறு, “எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு இந்த அவார்ட் ஜெயிச்சதுல. நான் எழுதுற ஒவ்வொரு வரிக்கும் எனக்கு தூண்டுதலா ஒரே ஒருத்தங்க தான். என்னோட வரிகள்ல இருக்கற அழகும் சரி காதலும் சரி, இரண்டுமே அவங்கனாலதான்.”

“அப்போ கண்டிப்பா மனைவியா இருக்க முடியாது”, என்று கேப்பில் கடா வெட்டினான் சிவகார்த்திகேயன். அரங்கம் சிரித்தது.

“எனக்கு அவங்க பேரு தெரியாது. உலகத்துல இப்போ அவங்க எங்க இருக்காங்கன்னும் தெரியாது. அந்த பீலிங் தான் இந்த ‘உசுலம்பட்டிக்காரன்’ படத்தோட வரிகள்ல வந்துச்சு. விஜய் டீவீக்கும் உங்களுக்கும் ரொம்ப நன்றி! வணக்கம்!”

ஓரிரண்டு பேர் கைத்தட்ட, அவன் குனிந்து வணங்கினான். அப்போது மைக் அணைக்க பட்டிருந்ததால், அவன் விட்ட பெருமூச்சு யாருக்கும் கேட்கவில்லை.

***

No comments:

Post a Comment