Showing posts with label Thangameen. Show all posts
Showing posts with label Thangameen. Show all posts

May 31, 2016

கோபம்

வின்கப்பலின் மெல்லிய விர்ர்ர்ர் அவளுக்கு மங்கலாக கேட்டது. ஜெயனிடம் பேசியே ஆகவேண்டுமா என்று யோசித்தாள் கண்ஸ். வேறு வழி இல்லை. அவளுக்கு தர பட்ட கட்டளை அது. நிறை வேற்றி தான் ஆக வேண்டும். ஆனால் ஜெயனை நேரில் பார்த்தால், அவளால் தன் கோபத்தை கட்டுபடுத்த முடியுமா?


ஜெயன் என்ன சொல்வார் என்று கண்ஸ் நன்கு அறிந்திருந்தாள். பூலோகிகளின் நடத்தை அவளால் யூகிக்க கூடியதாக தான் இருந்தது. பழமைவாதிகள். முடிந்தவரை அவர்களுடன் பேசுவதை தவிர்க்க விரும்பினாள். ஏனோவொரு அருவருப்பு. பூலோகிகள் அருகில் இருந்தால், அவர்கள் பக்கம் கூட திரும்ப மறுக்கும் அவள் முகம். இப்போதோ அவர்கள் செய்திருக்கும் கொலை… அவள் விரல் நகங்கள் இருக்கையின் கைப்பிடியை கீறின.


“அரை நாழி கூறில் அடுத்த சந்திப்பு”, காதில் இனிமையான ஒரு பெண் குரல் ஒலித்தது.


“எஸ் சிரி”


“ஜெயன் - 3012 இலிருந்து பூமியின் தலைவர்”


ஜெயனின் முகம் ஹோலோக்ராமாக காற்றில் மிதந்தது. கண்ஸ் அதை திரும்பி பார்க்க வில்லை. பார்த்தால், ஹோலோக்ராமை உடைத்தெறியும் அளவிற்கு அவளுள் கோபம் ததும்பியது.


“அண்ட பேரரசின் கட்டுப்பாடுகளை விரும்பாதவர். முன் கோபம் அதிகம். பிடித்த நிறம் பச்சை. இரண்டு ஆண்டுகள் முன்பு...”


“நன்றி சிரி.”


ஜெயன் ஒரு கொலையை ஆதரித்தவன். அவ்வளவு தான். கண்ஸ் வேறெந்த தகவல்களையும் தெரிந்து கொள்ள விரும்பவில்லை. வின் கப்பலின் கண்ணாடி திரை வழியே வெளியே பார்த்தாள். கருப்பு பெருவெளியில் பச்சையும் நீளமும் கலந்த வண்ணத்துடன் மிதந்து கொண்டிருந்தது பூமி.


“சிரி, மாலனுக்கு மெசேஜ் அனுப்பு.”


“என்னவென்று?”


“ரெடியா?”


“அனுப்பியாகிவிட்டது… பதில் வந்துவிட்டது.”


“படி”


“எஸ். எல்லாம் தயார்”


கண்ஸ் முகத்தில் ஒரு புன்னகை. பூமியின் பிம்பம் அவள் கருவிழிகளில் சுழன்றது. அவளை நெருங்கி கொண்டிருந்தது. கண்களை மூடினாள்.


***


“வணக்கம் கண்ஸ். பூமிக்கு வருக.”


வின் கப்பலின் கதவு திறந்தவுடன், அவளை புன்னகையுடன் வரவேர்த்தது ஒரு உருவம். கண்ஸ் தடுமாறினாள். எல்லா கிரகங்களிலும் ரோபாட்ஸ் தான் வரவேற்பு செய்யும். இங்கு மட்டும் மனிதர்கள்.


நீளமான வெள்ளை வழிப்பாதையில் நடந்தாள். ஒரு வெள்ளை மேஜையின் பின்னால் இரு உருவங்கள் அமர்ந்திருந்தன. இதுவும் மனிதர்கள்.


“பூமிக்கு வருக. தலைவர் ஜெயனுடன் சந்திப்பு தானே?”


“ம்ம்”


“உங்களின் சிரி அணிகலனை கழற்றுமாறு வேண்டுகிறேன்.”


கண்ஸ் திகைத்தாள்.


“ஏன்?”


“மன்னிக்கவும். உரையாடலின் போது இயந்திர அணிகலன்கள் அனுமதிக்க பட மாட்டாது. இது பூமியின் சட்டம்.”


“ஆனால்... சிரி என் உதவியாளர். பல தகவல்கள் என் மெமரியில் கிடையாது. பேச்சுவார்த்தைக்கு உதவ சிரி எனக்கு தேவை.”


“மன்னிக்கணும் கண்ஸ். இது பூமியின் சட்டம். தலைவருடன் உரையாடும் போது இயந்திர அணிகலன்கள் அனுமதிக்க பட மாட்டாது.”


அதே தொனியில் மீண்டும் ஒப்பித்தாள். சட்டங்கள் மதிக்க பட வேண்டும் என்று எண்ணியவாறு, கண்ஸ் தனது இடது கையை காதில் தடவி, மெல்லிய ஸ்டிக்கர் ஒன்றை பிரித்து எடுத்தாள். மேஜையின் பின் இருந்தவள் அதை பெற்றுக்கொண்டு, திரும்பி சுவரில் சில இடங்களில் விரல் நுனியால் தொட்டாள். சுவரிலிருந்து வெளிவந்த ஒரு சிறிய பெட்டியில் அந்த ஸ்டிக்கரை வைத்து மூடினாள்.


“எ-2 நுழைவுக்கு செல்லுங்கள். அங்கே உங்களை சிகப்பு மாளிகைக்கு அழைத்து செல்ல ஒருவர் காத்திருப்பார்.“


கண்ஸ் நடக்க ஆரம்பித்தாள்.


“உங்கள் நாள் இனிதாய் அமையட்டும்.”


அதை அவள் காதுகள் புறக்கணித்தன. சிரியை கழற்ற சொல்வார்கள் என்று அவள் எதிர்ப்பார்க்க வில்லை. கை விரல்களை இறுக்கி கொண்டாள்.


***


ஒரு வட்ட அறையை நிரப்பியப்படி இருந்தது ஒரு வட்ட மேஜை. அதன் பின் அமர்ந்தப்படி காத்திருந்தாள் கண்ஸ். அறையில் யாருமில்லை. அவள் எதிரே ஒரேயொரு வெள்ளை கதவு.  அவளை சுற்றி வெற்று சுவர். அறையின் கூரை நடுவில் ஒரு நெருப்பு எரிந்தது. அதன் ஒளி எல்லா திசைகளிலும் சுவற்றை ஓங்கி அடித்துக்கொண்டிருந்தது.


கண்ஸ் அந்த நெருப்பையே பார்த்தப்படி இருந்தாள். நெருப்பு மீது அவளுக்கு ஒரு இனம் புரியா ஈர்ப்பு. பல முறை தொட ஆசை எழுந்ததுண்டு. கட்டுபடுத்திக்கொள்ள அவள் மூளை சொல்லும். நெருப்பு என்றால் அழிவு. இரண்டு வாரங்களில் அவள் வாழ்க்கை சுழற்சியில் நடந்த அழிவை எண்ணினாள். அவள் வாழ்க்கை புரட்டி போட பட்டது அவள் கண் எதிரே மறுபடியும் ஓடியது.


பத்து நிமிடம் காத்திருப்புக்கு பின், அவள் முன்னே இருந்த கதவு திறந்தது. இரு காவலர்கள் முதலில் உள்ளே நுழைந்து, கதவின் இரு பக்கங்களிலும் நின்று கொண்டனர். காவலர்களும் மனிதர்கள். இரும்பு கவசம். கைகளில் மரக்கைப்பிடிகளுடன், ஒளியில் மின்னும் நுனிகளை கொண்ட ஈட்டி. இந்த ஈட்டிகளை லேசர் பீம் ஒரு நொடியில் உருக்கி விடும் என்று கண்ஸ்ஸிற்கு தோன்றியது.


ஜெயன் உள்ளே நுழைந்தார்.


தலையில் பறவை இறக்கைகளை கொண்ட ஒரு கிரீடம். ஒரு காலத்தில் உடல் கட்டுடன் இருந்த உடல் சற்று தசை போட்டது போல இருந்தது தேகம். கழுகு போன்ற மூக்கு. காதிலிருந்து வெள்ளை முடி எட்டி பார்த்தது.


ஜெயன் கண்ஸ் எதிரே அமர்ந்தார். கதவு மூடப்பட்டது. அவர் கண்களை கண்ஸ் பார்த்தாள். ஒரு இனம் புரியா உணர்வு அவளுக்கு. அந்த நீல கண்களில் அவளுக்கு ஏதோ தென்பட்டது. கர்வம். ஏளனம். பெருமை. இவை அனைத்தும் குழைந்த கலவையாக இருந்தது ஜெயனின் பார்வை.


அப்போது தான் கண்ஸ்ஸிற்கு புலப்பட்டது. பூலோகிகளின் பார்வை தான் அவளுக்கு அருவருப்பை உண்டாக்கியது. அவர்கள் பார்வையில் இருந்த ஏளனம். உயிர் உண்டான இடம் இது. இங்கிருந்து தான் நீங்கள் அனைவரும் சொகுசு வாழ்க்கைக்காக வேற்று கிரங்களுக்கு ஓடினீர்கள். அகம் புறம் இருண்ட பொழுதிலே, உயிர் செழித்த பூமியின் வாசி நான். என்னுடன் பேசும் பொழுது, அதை நினைவில் கொள். இப்படி இருந்தது ஜெயனின் பார்வை.


“வணக்கம். எனக்கு இன்னொரு சந்திப்பு உள்ளது. நீங்கள் கூற வந்த விஷயத்தை விரைவில் கூறினால் மகிழ்வேன்.” இரு கைகளையும் ஒருங்கிணைத்து, மேஜையின் மீது ஊன்றினார் ஜெயன். அவரின் மேல் உடல் முற்றிலும் உடையில்லாமல் இருந்தது. தீயின் ஒளி கீற்றுகள் அவர் தேகத்தில் இருந்த தசை மடிப்புகளில் விழுந்து தெறித்தன.


“புதிதாக எதுவும் கேட்க போவதில்லை. கோவின் கொலை பற்றி தான்.”


“தவறு. கோவின் கொலை அல்ல. கோவின் மரணம். அது மரணம் கூட அல்ல. செயலிழக்கம். கோ ஒரு ரோபாட் தானே?”


ரோபாட் என்ற வார்த்தையை வெறுத்து துப்பியது போல அவர் வாய் அதை உச்சரித்தது.


“அது கொலையா இல்லையா என்பதை அண்ட பேரரசு தீர்மானிக்கும்.”


சத்தமாக ஒரு சிரிப்பொலி ஜெயனிடமிருந்து. “அண்ட பேரரசு! ஹா!”


கண்ஸ்ஸின் இடது கை விரல் இருக்கை பிடியில் பொதிந்தது. அவள் உடல் கோபத்தில் கொத்தித்து எழுவதை உணர்ந்தாள். கொடுக்கப்பட்ட கடமையை முடிக்க வேண்டும் என்றது அவள் மூளை.


“கோவிற்கு நடந்ததை பற்றி, பூமியின் தலைவர் என்ன சொல்கிறார். இதை கேட்டு தெரிவது தான் என் பணி.”


ஜெயன் நேராக கண்ஸ்ஸின் கண்களை பார்த்தார். அவர் காதில் இருந்த ரோமங்கள் படபடத்தன.


“முற்றும் அறிந்த அண்ட பேரரசு, கோவிற்கு நிகழ்ந்ததை அறியாதோ?”


வார்த்தைகளில் இருந்த ஏளனம் கண்ஸ் முகத்தை அறைந்தது.


“பூமியின் தலைவருடைய அதிகாரப்பூர்வமான அறிக்கை தெரிந்து கொள்ள வந்துள்ளேன்.”


ஜெயன் கண்ஸ்ஸின் முகத்திலிருந்து கண்களை விலக்காமல், விரலை சொடுக்கினார். பின்னே நின்றிருந்த ஒரு காவலாளி முன் வந்தான். அவனிடம் ஒரு கையால் செய்கை செய்தார். அவன் ஒப்பிக்க ஆரம்பித்தான்.


“கோ என்னும் ரோபாட் பூமிக்கு இரு வாரங்கள் முன் வந்தது. பூமியில் நீல குகைகளுக்குள் ரோபாட்ஸ் நுழைய கூடாது என்பது சட்டம். நுழைந்தது. பூமியின் சட்டத்தின் படி செயலிழக்க தண்டனை விதிக்கப்பட்டு, போன வாரம் நிறைவேற்ற பட்டது.”


கண்ஸ்ஸின் விரல்கள் நடுங்கின. கோவை குறிக்கும் பொழுது “வந்தது”, “போனது” என்ற வார்த்தைகள்… ஒரு ரோபாட் என்றால் அவ்வளவு லேசாக எடுத்து கொள்வதா? காவலாளி கையில் வைத்திருந்த ஈட்டியை கொண்டு ஜெயனின் கழுத்தில் குத்தவேண்டும் போல இருந்தது. மூளை குறுக்கிட்டது.


“பூமியின் சட்ட படி வேண்டுமானால் கோ தவறு இழைத்திருக்கலாம். ஆனால் கோ ஒரு பூமிவாசி அல்ல. அது மட்டும் அல்ல. செயலிழக்க விதியின் படி, ரோபாட்டை மெமரியுடன் சேர்த்து அதன் கிரகத்திடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால், கோவையும் அவர் மெமரியையும் நீங்கள் அழித்து விட்டீர். அவ்விதத்தில் இது ஒரு திட்டமிடப்பட்ட கொலை என்றே அண்ட பேரரசு கருதுகிறது.”


“கொலையா?” ஜெயன் சத்தமாக சிரிக்க ஆரம்பித்தார். வட்ட அறையில் அவரின் சிரிப்பொலி எதிரொலித்தது.


“ரோபாட் ஒரு ஜடம். வெற்று பொருட்களின் ஒருங்கிணைப்பு. அதை பிரித்தெரிவது கொலையா? கொலை என்றே வைத்து கொள்ளுங்கள். கோவை கொலை செய்வதில் பூமிக்கு என்ன பயன்?”


“கோ நீல குகைகளில் பூமி செய்யும் தடைசெய்யப்பட்ட ஆராய்ச்சியை பற்றி கண்டரிந்துவிட்டார். அது அண்ட பேரரசிற்கு தெரியாமல் இருக்க நீங்கள் செய்த சதி.”


ஜெயன் மீண்டும் சிரித்தார்.


“நான் உங்களை ஒரு எளிமையான கேள்வி கேட்கிறேன். இவ்வளவு நேரம் பூமியில் இருந்தீர்களே, ஒரு ரோபாட் உங்கள் கண்ணில் பட்டதா?”


கண்ஸ் மெளனமாக இருந்தாள்.


ஜெயன் ஒரு புருவத்தை  உயர்த்தினார். பிறகு தலையை வலதும் இடதும் ஆட்டினார்.


“ஒன்று கூட கிடையாது. 2 வருடங்களுக்கு முன், என் ஆணையின் பேரில், எல்லா ரோபாட்களும் அழிக்க பட்டன. பூமி இயந்திரங்களை நம்புவதில்லை. இயந்திரங்களை நம்பும் நீங்கள் வாழ்க்கையின் சாரத்தை மறந்து, நாச பாதையில் செல்கிறீர்கள்.”


“மன்னிக்கவும். இதற்கும் நான் கேட்ட கேள்விக்கும் என்ன சம்பந்தம்?”


“இருக்கிறது. நீல குகைகளில் ஆராய்ச்சி என்கிறீர்கள். பூமியில் ரோபாட்களும் இல்லை, ஆராய்ச்சியும் இல்லை. விஞ்ஞானத்தை துறந்து விட்டோம். இருப்பது போதும் என்ற மன நிலை இருந்தால், இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்தால், விஞ்ஞானம் ஒரு அளவிற்கு வளர்ச்சி அடைந்திருந்தால் போதும்.”


“அப்போது நீல குகைகளில் ஆராய்ச்சி நடக்கவில்லையா?”


“இல்லை. நீல குகைகள் எங்களின் கோவில். உங்களுக்கு புரியாது. எல்லாவற்றிற்கும் என்ன பயன் என்று அலசி ஆராயும் அறிவியல் மேதைகள் அல்லவா நீங்கள்!”


“என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?”


“கோவை பூமி திட்டமிட்டு பிரித்தெடுக்கவில்லை. திட்டமிட்டு அழிக்கும் அளவிற்கு அந்த ரோபாட் முக்கியமும் இல்லை. பிடுங்கி எறியப்பட்ட சில வெற்று சர்க்யூட்களுக்காக எதற்கு இவ்வளவு பேச்சு என்று எனக்கு புரியவும் இல்லை. முடிந்ததா உங்களின் விசாரணை?”


கண்ஸ்ஸின் உடலால் தீயை சுமக்க முடிந்திருந்தால், இந்நேரம் வாயை திறந்து, ஜெயனை பொசுக்கியிருப்பாள். மிகுந்த கட்டுப்பாட்டுடன், அவள் உதடுகள் பொறுமையாக நகர்ந்தன.


“மன்னிக்கவும். நீங்கள் பேசும் விதம், ரோபாட்களை அவமதிப்பதாக இருக்கின்றது. நானும் ஒரு ரோபாட் என்ற வகையில் இதை கண்டிக்கிறேன்.”


ஜெயனின் முகம் மாறியது. ஒரு அலை அடித்து தெளியும் மண் போல, அவர் முகத்திலிருந்து ஏளனம் துடைத்து எடுக்க பட்டது. அதன் இடத்தில், இப்போது அருவருப்பு மெதுவாய் பரவியது. மேலும் கீழும் கண்ஸ்ஸின் உருவத்தை பார்த்தார். அவரின் கழுகு மூக்கு சுருங்கியது.


“இதை இங்கிருந்து அகற்றுங்கள்!” என்று அலறியப்படி, எழுந்து, கதவை பிளந்து வெளியே சென்றார். இரு காவலாளிகளும் கண்ஸ்ஸை ஆச்சரியத்திலும் பயத்திலும் வெறித்து பார்த்தார்கள்.


கண்ஸ் அசைவின்றி அமர்ந்திருந்தாள். அவள் உள்ளிருக்கும் பாகங்களை ஏதோவொரு விசை அடித்து கிழித்தெறிவது போன்ற உணர்வு. ‘விட்’ ‘விட்’ என்று தீப்பொறிகள் வெடியும் சத்தம் மட்டும் அறையை நிரப்பியது.


***


ஜெயனின் அடிகள் ஒவ்வொன்றும் நடைப்பாதையை சுட்டெரித்தன. உள்ளங்கைகளுக்கு நடுவே அண்டம் இருப்பது போல் எண்ணி, இரு கைகளையும் ஒன்றாக தட்டி அடித்து கர்ஜித்தார், “அண்ட பன்னிகள்!”


எங்கே வந்து யாரிடம் என்ன கேள்வி கேட்கிறார்கள்? அதுவும் ரோபாட்டை அனுப்பி என்னை அவமதிக்கிறார்கள். சுற்றுலா என்ற பேரில் அண்டத்தின் இடுக்குகளிலிருந்து கண்டவர்கள் வருவார்கள். பூமியின் சட்டங்களை மதிக்காமல் அலைந்து திரிவார்கள். உளவு பார்க்க மனித உருவில் ரோபாட்களை அனுப்புவார்கள். ஆனால், இவை அனைத்தையும் பூமி சகித்து கொள்ளவேண்டுமா?


கிரகத்துக்கு கிரகம் திரியும் ரோபாட்டுக்கு மண்ணின் மகிமை எப்படி தெரியும்? எல்லாவற்றையும் ஒளிப்படம் எடுத்து கொச்சை படுத்தும் அறிவு சூனியங்கள்! அந்த செயலிழக்கத்தை நிறைவேற்றியதில் ஒரு திருப்தி ஜெயனுக்கு தோன்றியது. அவரின் தோள்கள் விருந்து, கர்வத்துடன் அடுத்த சந்திப்புக்கு இன்னொரு வட்ட அறையை நெருங்கினார்.


***


சிரியை நேராக கையில் தராமல், மேஜை மீது வைத்தாள். கண்ஸ்ஸை பார்க்காமல், வேறு திசை நோக்கியிருந்தது அவள் முகம். மேஜையிலிருந்து சிரியை எடுத்து, காதில் ஒட்டிக்கொண்டு, வின் கப்பலை நோக்கி கண்ஸ் நடக்க துவங்கினாள்.


ஜெயன் குற்றத்தை மறுப்பார் என்று அவளுக்கு தெரியும். எதிர் பார்த்தது தான். ஆனால் அவர் அவளை பார்த்த பார்வை, சிரித்த விதம், பதில் சொன்ன முறை... கோவின் முகம் அவள் கண்கள் முன்னே தோன்றி மறைந்தது. “இதை இங்கிருந்து அகற்றுங்கள்!” என்று அலறியபோது, ஜெயனின் கண்களில் கசிந்த வெறியை பார்த்தாள். கோவின் கொலைக்கு நீல குகைகள் காரணம் அல்ல… அவள் விரல்கள் நடுங்க துவங்கின. இரண்டு வாராங்களாக அடக்கி வைத்திருந்த எண்ணங்கள், மடை பிளந்தது போல் அவள் மெமரியை வெள்ளமாக நிரப்பின.


வின் கப்பலின் கதவை நெருங்கியதும், அவள் வாய் உச்சரித்தது.


“சிரி”


“உத்தரவிடுங்கள்”


“மாலனுக்கு மெசேஜ்”


“என்னவென்று?”


ஒரு கணம் பொறுத்தாள். அவள் ஆழ் மனதில் பொதிந்திருக்கும் மின்சுருள்களின் ரீங்காரம் அவளுக்கு கேட்டது. ‘முடி!’, ‘முடி!’ என்ற ஒலி அவள் காதுகளை அடைத்தது. மூளை மௌனமானது.


“முடித்து விடு”


“அனுப்பியாகிவிட்டது”


முறைத்தப்படியே கண்ணாடி திரையின் பின்னேயிருந்த பொத்தானை அழுற்றினாள். கதவு மூடி, மெல்லிய விர்ர்ர்ருடன் வின் கப்பல் சில நொடிகளில் காற்றில் மிதக்க ஆரம்பித்தது.


கண்ஸ் தனது இருக்கைக்கு சென்றாள். அதில் சாய்ந்து அமர்ந்தப்படி, கண்ணாடி திரை வழியே எட்டி பார்த்தாள். கேஸ் அடுப்பு பற்றிக்கொள்வதுப்போல், பூமி பந்தை தீ பிழம்பு தழுவியது. அதன் உஷ்ணம் எட்டமுடியாத தூரத்தை நோக்கி விண்கப்பல் பறக்க, தீயின் பிம்பம் கண்ணாடி சுவர்களிலும் கண்ணகியின் கண்களிலும் ஒளிர்ந்தது.

முற்றும்.

April 7, 2016

வீடு

செல்வசேகர். அவர் தந்த விசிட்டிங் கார்டில் இந்தப் பெயர் அச்சிடப்பட்டிருந்தது. பெயரின் மேல் கருப்பு கோட் அணிந்தபடி புன்னகைக்கும் முகம், வெள்ளை கார்டில் மேலும் கருப்பாக தெரிந்தது. முதுகுக்குப் பின்னால் பளபளக்கும் கட்டிடங்கள், அவர் செய்யும் தொழிலைத் தெளிவாக காட்ட.

செல்வசேகர் விசிட்டிங் கார்டு ஏன் தந்தார் எனப் பாலாவிற்கு புரியவில்லை. அவரின் தொலைப்பேசி எண் பாலாவிடம் இருந்தது. வீட்டுக்குச் சென்றதும் தூக்கிப்போட வேண்டும் என மனதில் குறித்துக்கொண்டு, வாலெட்டினுள் சொருகினான். தனது வாலெட் எப்போதும் லேசாக இருக்க வேண்டும் என்ற எண்ணம்.

“நீங்க ஏதாச்சும் குடிக்கறீங்களா?” செல்வசேகரிடம் கேட்டான்.

“ஒரு கோபி ஓ”

இருவரும் பாலா வீட்டருகே இருக்கும் ஃபுட் கோர்ட்டில் இருந்தனர். வெளியே மழை மேலும் கடுமையாக பெய்து கொண்டிருந்தது. காலி மேஜை ஒன்றில் அமர்ந்திருந்த செல்வசேகர் ஸ்டால்களை சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டிருந்தார்.

பாலா ட்ரிங்க்ஸ் ஸ்டால் பக்கம் சென்றான். வாய் திறக்கும் முன்னரே, “ஹல்லோ பிரதர்! ஒன் தே ஓ லீமா பனாஸ்?“ என்று கேட்டார் கோபி கடை அங்கிள். அவரின் பெயர் பாலாவிற்குத் தெரியாது ஆனால் பாலாவின் ஆர்டர் அவருக்கு அத்துப்படி. தனக்கு தானே முணுமுணுத்துக்கொண்டு பில்லிங் இயந்திரத்தில் தட்ட ஆரம்பித்தார்.

“வாஹ்! ரெயின் வெரி ஹெவி ஆ?” பாலாவின் சட்டை இங்கும் அங்கும் நனைந்ததைப் பார்த்து கேட்டார்.

பாலா தலை அசைத்தபடி, “ஆல்சோ ஒன் கோபி ஓ அங்கிள்” என்றான்.

“யுவர் ஃபிரன்ட் ஆ?” என்று தூரத்தில் அமர்ந்திருந்த செல்வசேகரை சுட்டிக்காட்டிக் கேட்டார். பாலா இல்லை என்று தலை மட்டும் அசைத்து புன்னகைத்தான்.

“நீங்க மொத்தம் 5 பேரு தானே?” கோபி ஓ குடித்துக்கொண்டே கேட்டார் செல்வசேகர். பருகிட குனியும் பொழுது அவரின் சட்டை இறுக்கியதை பாலா கவனித்தான். பொத்தான்கள் தெரித்துவிடுமோ எனும் அளவிற்கு. ஒட்டுமொத்தமாகப் பார்க்க அங்கும் இங்கும் உப்பிய பூரி போல இருந்தார் செல்வசேகர்.

“ஆமா நாங்க 5 பேரு. மூணு பெட்ரூம் வீடு தேடுறோம்.”

“எல்லாரும் தமிழவங்களா?”

பாலா யோசித்தான். சட்டென்று நினைவுக்கு வரவில்லை. மனதிற்குள் விரல்விட்டு எண்ணிவிட்டு, “இல்ல. ஒருத்தர் தெலுங்கு. இன்னொருத்தர் கேரளா. ஆனா எல்லாரும் தமிழ் பேசுவாங்க.”

“எந்த ஏரியால பாக்குறீங்க?”

“க்ரீன் லைன். பர்பிள் லைன். இது இரண்டுள எங்க இருந்தாலும் ஓக்கே.”

“சரி. கவல படாதீங்க தம்பி. வீடு ஈஸியா கெடச்சிடும். இப்போ மார்க்கெட் டவுன்னா இருக்கு. கொறஞ்ச ரெண்ட்டுக்கு நல்ல வீடு பாத்துடலாம்.”

“முதல்ல நாங்களே தேடலாம்னு தான் நெனைச்சோம். ஆனா ரொமப் தலை வலியா இருக்கு.”

“அதுக்கு தானே நாங்க இருக்கோம்! இன்னும் எவ்வளோ நாள் இந்த வீடு லீஸ் இருக்கு உங்களுக்கு?”

“அது இருக்கு 6 மாசம். ஆனா நாங்க சீக்கிரம் காலி பண்ணலாம்னு இருக்கோம்.”

“ஏன் என்ன ஆச்சு?”

“ஓனர் சரி வரல.”

“சைனீஸ் ஆ?”

பாலா தலை அசைத்தான். அவனின் வலது முழங்கையை ஏதோ கடிப்பது போல இருந்தது. சொறிந்ததும் நின்றது.

“சில சீனிவாசங்க அப்படி தான் தம்பி. கறி இன்சிடென்ட் கேள்வி பட்டிருப்பீங்களே?”

பாலாவிற்குப் புரியவில்லை. “சீனிவாசன்?”

செல்வசேகர் இளித்தார். “கோட் வர்ட். எங்க க்ரூப்ல அப்படி தான் சொல்வோம். சீனிவாசன்னு சொன்னா அவங்கள பத்தி தான் பேசறோம்னு தெரியாது பாருங்க!”

“ஓ… சைனீஸ்...” பாலா கோப்பையில் மிதக்கும் கலமான்சி பழத்தை எடுத்து வெளியே போட்டான். செல்வசேகரை அவனுக்குப் பிடிக்கவில்லை.

“தம்பி நீங்க பீ.ஆர் ஆ?”

“ஆமா. போன வருஷம் கெடச்சுது. என் நண்பர்கள் எல்லாரும் தான்.”

“பரவா இல்லியே! இப்பெல்லாம் பீ.ஆர் கிடைக்கறதே ரொம்ப கஷ்டம் தம்பி.”

“நாங்க எல்லாரும் என்.யூ.எஸ்ல படிச்சோம். அதுனால இருக்கலாம்.”

“நான் உங்களுக்கு ஒரு யோசனை சொல்றேன் கேளுங்க. இங்கையே ஒரு வீடு வாங்கிடுங்க. ஏதாச்சும் கம்யூனிட்டி கிளப் சேர்ந்து ஹெல்ப் பண்ணுங்க. உங்க ஏரியா எம்.பி கண்ணுக்கு தெரியுற மாதிரி. அப்புறம் சுலபமா சிட்டிசன்ஷிப் கெடச்சிடும்.”

“நீங்க சிங்கப்பூரியன் ஆயிட்டீங்களா?”

“ஆமா!” தடித்த மீசையின் கீழ் அவரின் அனைத்து பற்களும் தெரிந்தன.

“சரி. நீங்க வீடு பாத்துட்டு சொல்லுங்க. எனக்கு கால் பண்ணுங்க. வியுயிங் ராத்திரி 7 மணிக்கு மேல இருந்தா பெட்டர். வீக்கெண்ட்னா எனி டயம் கேன்!”

செல்வசேகர் தலை அசைத்தவுடன் அவரின் மொபைல் ஒலிக்கத் துவங்கியது. பாலா கை குலுக்கிவிட்டுக் கிளம்பினான்.

“சீ யூ அங்கிள்!” என்று கோபி கடை அங்கிளை பார்த்து கை அசைத்தான். அவர் வாயில் சிகரெட்டுடன் திரும்ப கை அசைத்தார்.

***

பாலா வீடு திரும்பினான். அவனுக்கு இப்போதெல்லாம் வீட்டுக்கு வருவதே பிடிக்கவில்லை. சோபாவில் ஒரு நண்பன் கிடந்தான். டீவி ஓடிக்கொண்டிருந்தது. தனது அறைக்குள் சென்று கதவை மூடினான். வெறும் தரையில் படுத்தான். சிலீரென்று இருந்தது.

அவ்வப்போது அறையில் இவ்வாறு தனியாக படுத்திருக்கும் போது, பாலாவிற்கு என்.யூ.எஸ்ஸில் படிப்பை தொடர்ந்திருக்கலாம் என தோன்றும். அங்கு இருந்தவரைத் தங்குமிடத்திற்கு கவலை இல்லை. ஹாஸ்டல் இருந்தது. அதில் இடம் கிடைக்க ஏதாவதொரு சி.சி.ஏ செய்ய வேண்டும். அவ்வளவு தான். ஆனால் பட்டம் பெற்று, வேலை கிடைத்த பிறகு வீடு தேடுவது அவனுக்கு ஒரு தலை வலியாகவே இருந்தது. ஐந்து பேரின் அலுவலகங்களுக்கும் செல்ல இலகுவாக இருக்க வேண்டும். 3000 டாலர் பட்ஜெட்டுக்குள் இருக்க வேண்டும். அருகில் சாப்பிட ஏதாவதொரு இந்திய கடை இருக்க வேண்டும். அவ்வப்போது பெற்றோர்கள் வந்து தங்குவதற்கு வீட்டுக்காரர் அனுமதிக்க வேண்டும். இந்த நிபந்தனைகள் எல்லாம் ஒத்துபோனாலும், “லேடீஸ் ஒன்லி” அல்லது “கப்பிள்ஸ் ஒன்லி” என்ற வாசகம் விளம்பரத்தின் ஓரத்தில் போட்டிருப்பார்கள். அப்படியே போடாவிட்டாலும், கால் செய்து “உங்க விளம்பரம் பார்த்தேன். அந்த வீடு இருக்கா?” என்று கேட்டால், கேள்விக்குப் பதில் சொல்லாமல், “உங்கள் பெயர் என்ன?” என்று கேட்பார்கள். “பாலா” என்று சொன்னதும், “சாரி! தட் ஹவுஸ் டேக்கன் ஒரெடி!” என்பார்கள். அது ஏன் பெயரை கேட்ட பிறகு “டேக்கன் ஒரெடி” வருகிறது? பாலாவிற்கு ஒரு காரணம் தோன்றும். ஆனால் அதுவாக இருக்காது என்று மனதைத் தேற்றிக்கொள்வான்.

ஏற்கனவே ஒரு வீடு மாறி ஆயிற்று. முதல் வீட்டிலேயே பிரச்சனை. “இந்திய ஹவுஸ் ஓனர் தான். கவலை வேண்டாம்!” என அவர்களின் ஏஜென்ட் சொன்னான். அவரோ மூக்கால் அழும் பேர்வழி. ஒவ்வொரு மாதமும் வீட்டை வந்து பார்த்துவிட்டு, “பேச்சலர்ஸ் குடி வெச்சது தப்பா போச்சு!” என்று புலம்பிவிட்டு வாடகையைக் கவ்விக்கொண்டு செல்வார். இரண்டாவது ஹவுஸ் ஓனர் சைனீஸ். ஆஸ்திரேலியாவில் இருந்தனர். முகம் கூட பார்த்ததில்லை. எதுவாக இருந்தாலும் ஈ-மெயில் மூலம் அல்லது ஏஜென்ட் மூலம் பேசிக்கொள்வார்கள். வாடகையும் இணையம் வழியாக அனுப்பிவிடுவார்கள். நிம்மதியாக இருந்தது. ஆனால் ஸ்டோர் ரூமிலிருந்து ஒரு மெத்தையை நண்பன் ஒருவன் வெளியே எடுக்க, அதிலிருந்த மூட்டைப்பூச்சிகள் வீடெங்கும் பரவி விட்டன. உடனே வீட்டை மாற்ற வேண்டிய கட்டாயம். அதனால் தான் செல்வசேகருடன் பேச்சுவார்த்தை.

முதுகு அரிக்க ஆரம்பித்தது. சட்டைக்குள் கையை விட்டுச் சொறிந்தான். விரல்களால் அமுக்கிப் பார்த்தான். சிறியதாக ஏதோவொன்று நசுங்கியது. விரல் நுனி ஈரமானது. கையைச் சட்டையிலிருந்து வெளியே எடுத்தான். பரிட்சயமான சிறிய வட்ட பொட்டாக ரத்தம் விரலில் இருந்தது. அதை கட்டை விரலால் துடைத்தான். இரும்பின் கந்தம் மூக்கிற்கு எட்டியது. ஆரம்பத்தில் இரவு வேளையில்தான் கடித்தன. ஆனால் கடந்த சில நாட்களாக காலை வேளையிலும் துவங்கிவிட்டன. சட்டென்று உருண்டெழுந்து தரையை பார்த்தான். சிறு அசைவுகள் தென்படுகிறதாவென கண்கள் தரையைத் துழாவின.

நாற்காலி அருகே அசைவு தென்பட்டது. தவழ்ந்து சென்றான். சிறிய பொட்டு போலத் தரையில் ஊர்ந்துகொண்டிருந்தது. கூர்ந்து கவனித்தால், இரு வட்டங்களை இணைத்தது போன்ற உடல். சிறிய வட்ட தலை, அதைவிடச் சற்று பெரிய வட்ட உடம்பு. கருப்பு அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும். ஆனால் இந்த மூட்டைப்பூச்சி சிகப்பும் பழுப்பும் கலந்திருந்தது. ஏன் என்று பாலாவிற்கு தெரியும். சில வினாடிகள் ஆச்சரியத்துடன் அந்த மூட்டைப்பூச்சியைப் பார்த்தான். அதன் உடம்புக்குள் பாலாவின் ரத்தத்தை ஏந்தியபடி மெதுவாக எங்கோ சென்றுகொண்டிருக்கிறது. எங்கிருந்து வந்தது? எங்கே செல்கிறது? அவனின் ஆள் காட்டி விரல் அதை நோக்கி நகர்ந்தது.

நசுக்கச் செல்கையில், மூட்டைப்பூச்சியின் நடை தனது பள்ளிப் பருவத்தை நினைவூட்டியது. இதே போல தனது தோள் பையைத் தூக்கிக்கொண்டு பள்ளிக்கு நடந்து செல்வான். பள்ளியில் முதன் முதலில் என்.யூ.எஸ்ஸின் விளம்பரம் பார்த்தது ஞாபகம் வந்தது. ஆசிரியரின் மேஜை மீது விரித்திருந்த சிறு புத்தகத்தில் ஒரு புகைப்படம். பச்சை வெளியில், வட்டமாக அமர்ந்திருக்கும் வெவ்வேறு நாட்டை, இனத்தைச் சேர்ந்த மாணவர்கள். எந்தக் கவலையுமில்லாமல் சிரிப்புடன் தங்களுக்குள் ஏதோ பேசி கொண்டிருப்பது போல. அந்தப் புகைப்படம் தான் அவனைச் சிங்கப்பூர் வரவைத்தது. ஆனால் இன்றுவரை அந்த பச்சை வெளி சிங்கப்பூரில் எங்குள்ளது என பாலாவிற்கு தெரியவில்லை. கண்டுபிடிக்கவேண்டும். கையில் விளம்பரத்துடன் பச்சை வெளியைத் தேடும் மூட்டைப்பூச்சி போல தன்னைக் கற்பனை செய்து பார்த்தான். நாற்காலியின் காலில் மெல்ல ஊர்ந்துசெல்லும் மூட்டைப்பூச்சி மீது பரிதாபம் ஏற்பட்டது. விரலை மடித்துக்கொண்டான்.

***

“ம்ம் சொல்லுடா” பஸ்ஸில் ஏறி கார்டை தட்டினான். மொபைலை காதில் வைத்துக்கொண்டே பஸ்ஸின் மேல் மாடிக்கு ஏறினான்.

“செல்வசேகர் கால் பண்ணிருந்தாரு. ஊட்ரம் பார்க்குல ஒரு வீடு இருக்குன்னு. அது பாக்க போயிட்டிருக்கேன்.”

மேல் மாடியை அடைந்ததும், ஆடும் பஸ்ஸின் கைப்பிடியை இறுக பிடித்தபடி, எங்கு அமர்வது என நோட்டம் விட்டான். சீராக அமைக்கப்பட்டிருந்த இருக்கை வரிசைகளில், இருவர் அமரக்கூடிய ஒவ்வொரு இருக்கையிலும் தனி ஒருவராக அமர்ந்திருந்தனர். தனித் தனி தீவுகள் போல. வரிசைகளின் நடுவே நடந்து செல்லும் பாலாவிற்கு, பின் பக்கத்தில் காலி இருக்கை ஒன்று தென்பட்டது. அதை நோக்கி நடந்தான். கடந்து செல்கையில் அதிருப்தியான முகபாவத்துடன் ஒரு முதியவர் அவனையே உற்றுப் பார்த்தார்.

“என்ன ஈ-மெயில்?” இருக்கையில் அமர்ந்து தனது தோள்பையை பக்கத்தில் வைத்துக் கொண்டான். சில வரிசைகள் முன்னால், ஒரு பிலிப்பினோ பெண் உரத்த குரலில் யாரையோ தொலைபேசியில் திட்டிக்கொண்டிருந்தாள். பாலாவிற்குத் தனது நண்பன் சொல்வது தெளிவாகக் கேட்கவில்லை. ஒரு காதை விரலால் மூடிக் கேட்டான். நண்பன் சொன்னதை கேட்டவுடன் அவனுக்குள் கட்டுண்ட கோபம் அவிழ்ந்தது.

“ஸ்டோர் ரூம்ல இருந்த பெட் லேர்ந்து தான் பெட் பக்ஸ் வந்துச்சுன்னு சொல்ல வேண்டித் தானே? அது எப்படிடா நம்மள குத்தம் சொல்வாங்க?”

“சரி. இப்போ என்ன வேணுமாம் அவங்களுக்கு?”

“1000 டாலரா? டேய்! அந்தப் பழைய சோபா 100 டாலர் கூட இருக்காதுடா. என்னமோ நாம தான் அவங்க வீட்டை கெடுத்த மாதிரி பேசுறாங்க!”

“மச்சி.. நாம கறாரா பேசனும். நம்ம மேல ஒரு தப்பும் இல்ல. நம்ம டெபாசிட் அவங்க முழுசா திருப்பித் தந்தே ஆகணும்.”

“இன்னிக்கு நைட் நான் வீடு பாத்துட்டு வர்றேன். நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஈ-மெயில் அனுப்புவோம்.”

தொலைப்பேசியைத் துண்டித்தான். எரிச்சல் தலைக்கு ஏறுவது அவனால் உணர முடிந்தது. தலை மேலே குளிர்ந்த காற்றைக் கக்கி கொண்டிருக்கும் ஓட்டையை அடைத்தான். பிலிப்பினோ பெண் இன்னும் கத்திக்கொண்டிருந்தாள். ஜன்னல் வழியே வெளியே பார்த்தான். ஒரு பெட்ரோல் பங்க் கடந்து பேருந்து சென்றுகொண்டிருந்தது. அந்த பங்க் வாசலில் காற்றால் ஆன ஒரு பொம்மை நின்றுகொண்டிருந்தது. மனிதன் போல, தொப்பி அணிந்து, முகத்தில் புன்னகையுடன். அதனுள் காற்று ஊதப்பட்டு, ஒரு கையை மட்டும் ஆட்டிக்கொண்டு “வாருங்கள்! வாருங்கள்!” என்று அனைவரையும் அழைப்பது போல. “இப்படி கூப்பிட்டப்புறம் பெட்ரோல் தீந்து போனா என்ன செய்வாங்க?” என்று தோன்றியதும் பாலாவிற்குச் சிரிப்பு வந்தது.

பங்கிலிருந்து சிறிது தூரத்தில் விநாயகர் கோவில் தென்பட்டது. சிகப்பு பொத்தானை அழுத்திவிட்டு, பையை மாட்டிக்கொண்டு எழுந்தான். பொத்தானை அழுத்திய சத்தம் கேட்காதவாறு பிலிப்பினோ பெண் பேசிக்கொண்டிருந்தாள். பஸ் வேகம் பிடித்ததில் சற்று தள்ளாடியது. கைப்பிடியைப் பிடித்தான். அவனின் தோல் பை அருகில் அமர்ந்திருந்த முதியவரை உரசியது. அவர் சிடுசிடுத்து அவனை முறைத்தார். அவரைக் கவனிக்காமல், பாலா கீழே இறங்கினான். முதியவர் அதே அதிருப்தியான முகபாவத்துடன் பாலா சென்ற திசையையே பார்த்தார்.

***

அவசரமாக எம்.ஆர்.டியில் நுழைந்தான் பாலா. இரவு 7 மணி. வேலை முடித்த களைப்பு கண்களைக் கவ்விக்கொண்டிருந்தது. இயர்போன்ஸ் மாட்டி காதுகளை பாட்டால் நிரப்பிக்கொண்டான். ஊட்ரம் பார்க் வீடு சரிவரவில்லை. வாடகை குறைக்க முடியாது என்றுவிட்டார் ஓனர். இன்று லிட்டில் இந்தியாவில் ஒரு வீடு காண்பதற்கு செல்வசேகர் ஏற்பாடு செய்திருந்தார். அவரின் மீசை அவனை உறுத்தினாலும், விரைவாகப் பல வீடுகளைக் கண்டுபிடிக்கும் ஆற்றல் பாலாவிற்கு பிடித்திருந்தது.

அன்று மதியம் உணவு இடைவேளையின் போது அலுவலகத்திலும் வீடு பற்றிய பேச்சு தான். சக ஊழியர் ஒருவர் செங்காங்கில் வீடு மாறிருப்பதாகவும், குறைந்த வாடகைக்குக் கிடைத்ததாகவும், ஓனரை நேரடியாக அணுகியதால் ஏஜென்ட் கமிஷன் கட்டாமல் தப்பித்ததாகவும் பூரிப்புடன் சொன்னார். அதை தொடர்ந்து வழக்கமான கேள்விகள். “வீடு வாடகை எவ்வளோ? அங்கேர்ந்து ஆபீஸ் வர எவ்வளவு நேரம் ஆகுது? எச்.டி.பி வீடா காண்டோவா?” பாலாவிற்கு அலுப்பாக இருந்தது. புதிதாக சிங்கப்பூரில் யாரைச் சந்தித்தாலும், விடை பெரும் நேரத்தில் இந்தத் தேவை இல்லாத கேள்விகள் மீண்டும் மீண்டும் தோன்றின. “எங்க தங்கியிருக்கீங்க? அங்க ரெண்ட் எவ்வளோ?”

நிமிர்ந்து பார்த்தான். அகலமான கருப்பு திரையில் மின் எழுத்துக்கள் அடுத்த ஸ்டேஷன் சைனாடவுன் என அறிவித்து நகர்ந்தன.

பாடலின் ஓசை சற்று தணியும் போது, ஏதோவொரு சலசலப்பு கேட்டுத் திரும்பினான். இடது பக்கத்தில் நின்றிருந்த நடுத்தர வயது ஆசாமி, கோவமாகக் கத்திக்கொண்டிருந்தான். காற்றில் பறந்துவிடும் அளவிற்கு ஒல்லியான உடல். கட்டம் போட்ட சட்டை. பற்களில் பல நாட்கள் புகைபிடித்த கறை. கைகளை இங்கும் அங்கும் ஆட்டிக்கொண்டிருந்தான். காதில் ஒலித்துக் கொண்டிருந்த பாட்டை நிறுத்தினான் பாலா.

ஆசாமி திட்டிக்கொண்டிருந்தது முதியவர்களுக்கான சீட்டில் தலையைச் சாய்த்தவாறு அமர்ந்திருந்த ஒரு கட்டிட தொழிலாளியை. தொழிலாளி பார்ப்பதற்கு பங்களாதேஷ்காரன் போல இருந்தான். சில சாமான்களுடன் ஒரு பிளாஸ்டிக் முஸ்தப்பா கவர் கையிலிருந்து தொங்கியது. வண்ணம் மங்கிய பச்சை சட்டை, பல முறை போட்டு துவைத்த நிறத்தில் ஒரு ஜீன்ஸ் பேன்ட். சிமெண்ட் கறை படிந்த பூட்ஸ். சீட்டுப் பக்கத்தில் இருக்கும் கண்ணாடியில் தலை சாய்த்து கண் மூடியிருந்தான்.

அந்தத் தொழிலாளியை பக்கத்தில் இருந்தவர் ஒரு விரலால் தொட்டு எழுப்பினார். அவன் முழித்ததும், இந்த ஆசாமி ஆங்கிலமும் மேன்டரினும் கலந்து புலம்பி கொண்டே இருப்பதைக் கவனித்தான். கத்தும் ஆசாமியின் சைகைகள் மூலம், “ஏன்டா முதியவர்களுக்கான சீட்டுல உட்கார்ந்துட்டு இருக்க?” என்பது தான் சாராம்சம் என புரிந்துகொண்டு எழுந்து நின்றான். அந்தச் சீட்டில் உட்காருவதற்கு முதியவர்கள் யாருமில்லை. ஆனாலும் ஒல்லி ஆசாமியின் திட்டு குறையவில்லை.

சிறிது நேரம் மெளனமாக இருப்பான். பின்னர் திரும்ப அந்தக் கட்டட தொழிலாளியைப் பார்த்து திட்டுவான். அவ்வப்போது தூரத்தில் நிற்கும் சிலர் திரும்பி என்ன சத்தம் என்று பார்த்தனர். ஆனால் ஆசாமியின் பக்கத்தில் நின்றவர்கள் எதையுமே கவனிக்காதவாறு வேறு பக்கம் திரும்பிக் கொண்டனர். ஓரிரு பேர் சற்று தள்ளி போய் நின்றனர்.

கட்டிட தொழிலாளி பயந்துவிட்டான். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் நின்றிருந்த பாணி, கிட்டத்தட்ட பாலாவின் பின்னால் ஒளிருந்திருப்பது போலிருந்தது. பாலாவின் காதில் இயர்போன்ஸ் இருந்தது, ஆனால் பாட்டு கேட்காமல் அந்த ஆசாமி பேசுவதை கூர்ந்து கவனித்தான்.

அந்த ஆசாமி இப்போது முழுமையாக ஆங்கிலத்தில் திட்டினான். “உன்னால ரூல்ஸ் கடை பிடிக்க முடியல? அந்த சீட்டு முதியவர்களுக்குன்னு உனக்கு தெரியல? யூ காட் நோ ஐஸ் ஆர் வாட்? எங்க வேணும்னாலும் உட்கார இது என்ன உன் வீடா? ரூல்ஸ் கடை பிடிக்க முடியலென்னா, உன் சொந்த ஊருக்கே ஓடிப்போ! கோ பேக் டு யுவர் கன்ட்ரி!! என்ன முறைக்கிற? அடிக்க போறியா? வா வந்து அடி! உன்னையெல்லாம் வீடியோ பிடிச்சு இன்டர்நெட்ல போடணும். இரு…”

பாக்கெட்டிலிருந்து மொபைலை வெளியே எடுத்தான். தொழிலாளி பாலாவின் பின்னால் மறைந்து கொண்டான். பாலா ஆசாமியை முறைத்தான். தன்னை திட்டுவதுபோல் ஏனோ திடீரென தோன்றியது. கைப்பிடியை இறுகப் பிடித்தான்.

“பேஸ்புக்ல வந்தா என்ன ஆகும் தெரியுமா? நீ பாரு! நாளைக்கு இது நியூஸ்ல வரும் பார்!” மொபைலை அவன் முன்னால் பிடித்தபடி கத்தினான் ஆசாமி.

தோபி காட் ஸ்டேஷன் வந்தது. கதவுகள் திறந்தவுடன் ஆசாமி சற்று மௌனமானான். உள்ளே நுழைந்தவர்களில் ஒரு இளம் சீன பெண், காலியாக இருந்த அந்த முதியவர்கள் சீட்டில் அமர்ந்தாள். ஆசாமி எதுவும் பேசவில்லை.

பாலா தோபி காட்டிலேயே விடுக்கென இறங்கி விட்டான். எம்.ஆர்.டி கதவுகள் மூடிய பின்னரும், அவன் பிடித்திருந்த முக்கோண கைப்பிடி மட்டும் சில வினாடிகள் ஆடிக்கொண்டிருந்தது.

***

பல நாட்கள் கழித்து பாலாவின் அறை காலியாக இருந்தது. அறையின் நடுவில் நீல நிற பயணப்பெட்டி மட்டும் நின்றிருந்தது. தனது சகல சாமான்களும் அதனுள் அடங்கியதில் பாலாவிற்கு ஆச்சரியம். முதல் முதலாகச் சிங்கப்பூர் வரும் பொழுது சென்னை விமான நிலையத்தில் பாலாவின் நண்பனின் தந்தை சொன்னது இன்றும் ஞாபகம் இருந்தது. “பாலா எவ்வளோ சமத்து பாரு. ஒரே பெட்டி தான் எல்லாச் சாமானுக்கும். நீயும் இருக்கியே!” எனத் தனது பிள்ளையைத் திட்டினார். அவர் சொன்னதாலோ என்னவோ, பாலாவிடம் இந்தவொரு பெட்டியில் அடங்கும் அளவிற்கு அதிகமாகப் பொருள் சேர்ந்ததே இல்லை. பெருமையுடன் அறை ஜன்னலைச் சாத்தினான். வெளியே மழை பெய்துகொண்டிருந்தது. சாமான்களை நகர்த்தும் ட்ரக் சரியான நேரத்திற்கு வருமா என்ற சந்தேகம் எழுந்தது.

“ட்ரக் வர எவ்வளோ நேரம் ஆகும் டா?” என நண்பனைக் கேட்டான். அவன் மொபைலை நோண்டிவிட்டு, “15 நிமிஷம்” என்றான். ஏதாவது பொருட்களை மறந்து வைத்துவிட்டோமா என்று அறையை நோட்டம் விட்டான். ஏனோ தனது அறை போலவே மனதும் காலியாக உணர்ந்தான். கடந்த சில நாட்களாகக் கோபம் கொப்பளிக்கும் பல ஈ-மெயில் பரிமாற்றங்கள். மூட்டைப்பூச்சி வர யார் காரணம் என்ற விவாதம். இறுதியில் குறிப்பிட்ட தொகை டெபாசிட்டிலிருந்து கழித்துக்கொள்ள ஒத்துக்கொண்டனர். பாலாவிற்கு உடலெங்கும் சோர்வாக இருந்தது. அடுத்துச் செல்லும் லிட்டில் இந்தியா வீட்டில் என்ன நடக்குமோ? செல்வசேகர் சொன்னதுபோல சொந்த வீடு வாங்கினால் நிம்மதியாக இருக்குமா? ஜன்னல் வழியாக வானத்தைப் பார்த்தான். இருட்டியிருந்தது. மதியம் போல இல்லாமல் மாலை போல இருந்தது. லேசாக மூச்சு முட்டியது.

“சரி, நான் கீழ காபி ஷாப்ல இருக்கேன் டா”

மினி மார்ட்டின் வழவழப்பான வாசல் தரையை கவனமாகக் கடந்து நடந்தான். ஒரு காதில் இயர்போன்ஸ் மாட்டிக்கொண்டிருந்த பெண் அவசர அவசரமாக ஈரமாகும் சில அட்டைப்பெட்டிகளைக் கடைக்குள் நகர்த்திக்கொண்டிருந்தாள். காலி அட்டைப்பெட்டி ஒன்று முழுமையாக மழையில் நனைந்து கரைந்துகொண்டிருந்தது. கொஞ்சம் விட்டால் எழுந்து நின்றுவிடுமோ என்ற பதற்றத்தில் மழை அந்த அட்டையைச் சரமாரியாக அடித்துத் தின்றது.

“ஹெல்லோ பிரதர்! தே ஓ லீமா... ” என்றபடி அங்கிள் திரையில் தட்டத்துவங்கினார். அவர் இன்னொரு கையில் சிகரெட் வைத்திருந்ததை பாலா கவனித்தான்.

“அங்கிள் கேன்சல் தே ஓ லிமா”

“ஓக்கே! வாட் யூ வாண்ட்?”

“ஒன் சிகரெட் கேன்?”

இருவரும் ஃபுட் கோர்ட் ஓரமாக, மழையின் விளிம்பில் நின்று சிகரெட் பற்றவைத்தனர். அங்கிளின் ஸ்டைல் அவனுக்குப் பிடித்திருந்தது. சில சமயம் அவன் கவனித்ததுண்டு. ஸ்டாலில் இருக்கும்போதே வாயில் சிகரெட் வைத்துக்கொள்வார். பிறகு இரு கைகளையும் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, ஃபுட் கோர்ட் ஓரமாக நடந்து செல்வார். அங்குச் சென்ற பிறகு, பாக்கெட்டிலிருந்து லைட்டர் எடுத்துப் பற்றவைப்பார். அதையே இன்றும் செய்தார்.

“ஏன் அப்படி பண்ணுறீங்க?”

“வெறும் சிகரெட்டோட டேஸ்ட் பிடிக்கும்” என்றபடி மழைக்குள் புகை ஊதினார். பாலாவும் இழுத்து இரண்டு முறை ஊதினான். கடைசியாக என்.யூ.எஸ்ஸில் புகை பிடித்த நினைவுகள் வந்து சென்றன. உள்ளிழுத்த புகை வெற்றிடத்தைத் தற்காலிகமாக நிரப்பியது. வார்த்தைகளால் சொல்ல முடியாத எண்ணங்களை ஏந்திக்கொண்டு அந்தப் புகை வெளிவந்தது. வெளிவரும் புகையை அமுக்க, மழை வேகமாகப் பொழிந்தாலும், அதன் இடுக்குகளில் நுழைந்து புகை தப்பியது. அதைப் பார்த்த பாலாவின் உதட்டில் மெல்லிய புன்னகை தவழ்ந்தது.

அங்கிள் ஏதோவொரு பாட்டு விசில் அடிக்க ஆரம்பித்தார். தாளத்துக்கு ஏற்ப விரலைச் சொடுக்கினார். புகை ஊதினார். பாலா ஃபுட் கோர்ட்டை பார்த்தான். சலசலப்புடன் விரைந்துகொண்டிருந்த உருவங்கள், உரசிக்கொள்ளும் பீங்கான் தட்டுகள். எதிரே ஆள் அரவமற்ற நடைபாதைகளுடன் நிற்கும் கட்டிடங்கள். வாய்ட் டெக்கில் மழையை வெறித்து பார்த்தபடி சக்கர நாற்காலிகளில் முடங்கியிருக்கும் முதியவர்கள். யாரும் அந்தப் பாட்டை கவனிக்கவில்லை. தனக்கென பிரத்தியேகமாக ஒலிக்கும் பாடல். அந்தப் பாடல் ஏனோ அவனின் மனதில் துக்கத்தை நிரப்பியது. அங்கிளை பார்த்தான். பாதி புகைத்து கசக்கிய சிகரெட் போன்ற உடல். அவரின் முகத்திலும் கைகளிலும் சுருக்கங்கள். பல வண்ணம் கொண்ட தலைமுடி ஐஸ் கச்சாங்கை நினைவூட்டியது. பாலா மீண்டும் புன்னகைத்தான்.

“இன்னிக்கு வீடு காலி பண்ணுறேன் அங்கிள். வேற வீட்டுக்கு போறோம்” என்றான்.

“ஓ… எந்த ஏரியா?” என்றார் திரும்பி பார்க்காமல்.

“லிட்டில் இந்தியா”

“குட் குட். ரெண்ட் ஹவ் மச் ஆ?” புகை ஊதிக்கொண்டே கேட்டார். பாலாவிற்கு ஏனோ சிகரெட்டால் சுட்டது போல இருந்தது. அங்கிளிடம் என்ன பதில் எதிர்பார்த்தான் எனத் தெரியவில்லை. ஆனால் அவன் எதிர்பார்த்தது ஏதோ கிடைக்காதது போல உணர்ந்தான். புகையால் மூச்சு முட்டியது. சிகரெட்டை கீழே தேங்கிக்கொண்டிருக்கும் நீரில் வீசினான்.

“தேங்க்ஸ் ஃபார் தி ஸ்மோக் அங்கிள்” என்று மட்டும் சொன்னான். தூரத்தில் ட்ரக் வருவது தெரிந்தது. அதைச் சுட்டிக்காட்டி நான் கிளம்புகிறேன் என்றபடி சைகை செய்தான்.

அவர் விசில் அடித்துக்கொண்டே கை அசைத்தார். பாலாவின் நண்பர்கள் பெட்டிகளை கீழே இறக்கி விட்டார்கள். அவனின் நீல நிற பெட்டி தென்பட்டது. தூரத்திலிருந்து பார்க்கும் போது மிகவும் சிறியதாக தோன்றியது. “இவ்வளவு சின்னதா என் பெட்டி?”

அதை நோக்கி பாலா ஓடினான். மழையில் நனைந்துகொண்டே. மழைத்துளிகள் யாவும் சிறுசிறு ஊசிகளாக அவனின் தோள்களையும் தலையையும் குத்தின. தலையை கவிழ்த்தபடி பெட்டியை நோக்கி ஓடினான். நெருங்க நெருங்கப் பெட்டி பெரிதானது. மூச்சிறைக்க அதன் ஜிப்பை இழுத்துத் திறந்தான். உள்ளே அவனின் சகல சாமான்களும் அடுக்கப்பட்டு இரு பெல்ட்டுகளால் பிடித்து வைக்க பட்டிருந்தன. கையால் உள்ளே துழாவினான். மழையின் வேகம் கூடியது. ஒவ்வொரு நீர்த்துளியும் அவனைத் தொட்டவுடன் மூட்டைப்பூச்சியாக மாறிக் கடித்தது. அட்டைப்பெட்டிபோல தனது தேகம் கரைவதை உணர்ந்தான். பெட்டிக்குள் முழு கையை நுழைத்தான். ஒரு காலையும் உள்ளே வைத்தான். சற்று குனிந்து தலையையும் நுழப்பினான். பெட்டியில் இன்னும் இடம் இருந்தது. சாமான்களை நகர்த்தி மற்றொரு காலையும் மடித்துக்கொண்டான். இன்னொரு கையால் பெட்டியின் மூடியை இழுத்தான். கச்சிதமாக மூடிக்கொண்டதில் ஆச்சரியம். மழையின் சப்தம் நின்று போனது. இருட்டில் நஃப்தலீன் உருண்டைகளின் நெடி வரவேற்றது. வளைந்து மடங்கிய அவனின் உடலை பெட்டிக்குள்ளிருந்த சாமான்கள் கட்டி அனைத்து கொண்டன. கதகதப்பாக இருந்தது.

***