Showing posts with label Tamil. Show all posts
Showing posts with label Tamil. Show all posts

November 22, 2016

அப்புவின் கனவு


அப்பு மரக்குச்சியால் மண்ணைத் தோண்டினான். எப்படியாவது அந்த பறக்கும் தவளையைக் கையில் பிடித்துவிடவேண்டும். பிடித்து அதன் முகத்தை வெளிச்சத்தில் பார்க்கவேண்டும் என்ற ஆசை அவனுக்கு. இங்குமங்கும் தாவும் போது அதன் முகம் தவளை போல இல்லை எனத் தெரிந்தது. அதன் தோல் பார்ப்பதற்கு மீனைப் போல வழவழப்பான செதில்களாக இருந்தது. ஒரு கையால் மண்ணைத் தோண்டும் போது, இன்னொரு கையை குபுக்கென்று கவ்வத் தயாராக வைத்திருந்தான். அவன் தோண்டும் குழியிலிருந்து மின்னல் வேகத்தில் தாவி, அந்தத் தவளை மீண்டும் மண்ணுக்குள் பொதிந்து விடக்கூடாதென்று.

இவ்வாறு மண்ணைத் தோண்டிக்கொண்டிருக்கையில், பரிச்சயமான உலோக ஒலி கேட்டது. அதோடு சேர்ந்து மணிகளின் மெல்லிய ஓசை. அப்பு அருகிலிருந்த மலை உச்சியை நிமிர்ந்து பார்த்தான். மலையின் கிழக்கு பகுதியில், ஒரு வெண்ணிற யானை. பல மைல் தூரத்தை கடந்திருந்தாலும், ஒவ்வொரு அடியும் ஆழமாகவும் நிதானமாகவும் எடுத்து வைத்து அவனை நோக்கி வந்தது. யானையின் மேல் கம்பீரமாக அமர்ந்திருந்தார் அவர். இரு பக்கங்களிலும் பெரிய மூட்டைகள். யானையின் ஒவ்வொரு அடிக்கும், மூட்டைகளுக்குள் இருக்கும் பொருட்கள் ஒன்றையொன்று உரசிக் கொள்வதில் அந்த உலோக ஒலி எழும்பியது. கையில் இலைகளைச் சுழற்றிக்கொண்டிருந்த துர்கா திரும்பி யானையைப் பார்த்தாள். விடுக்கென்று மற்ற சிறுவர்களை போல் பாதையோரமாக சென்று நின்றாள். அப்பு மரக்குச்சியை எறிந்துவிட்டு, அவள் பக்கத்தில் போய் நின்றான்.

வெள்ளை யானை அருகில் வந்ததும், ஒரே அசைவில் கீழே இறங்கி யானையின் பக்கத்தில் நடக்க ஆரம்பித்தார் அவர். அவர் நடையில் ஒரு மிடுக்கு. நான்கைந்து சிறுவர்கள் யானையின் பின்னாலும் அவரின் பின்னாலும் நடந்தனர். சிலர் யானை முதுகிலிருக்கும் சிறிய மணிகளைத் தொட விரும்பி எம்பிக் குதித்தனர்.

அப்பு நின்றிருந்த மரத்துக்கு அடியில் யானை வந்து நின்றது. அனைத்துச் சிறுவர்களும் அவரை சூழ்ந்துகொண்டனர். அவர் சாந்தமாக அனைவரையும் பார்த்து புன்னகைத்தார். யானையை அருகாமையில் பார்த்த அப்புவிற்கு ஆச்சரியம். அப்பழுக்கில்லாத வெள்ளை. அதன் உடம்பில் எந்த இடத்திலும் ஒரு சிறு கறை கூட இல்லை.

திரண்டிருக்கும் சிறுவர்கள் அனைவரையும் கண்ணோட்டமிட்ட பிறகு, அவர் நடக்கத் துவங்கினார். சிறுவர்கள் அனைவரும் பின்தொடர்ந்தனர். அப்புவின் கைப்பிடித்து துர்கா இழுத்துச் சென்றாள்.

“எங்க போறோம்?” அப்புவின் கேள்வி மரக்கிளைகளின் சலசலப்பில் தொலைந்து போனது.

அடர்ந்த காடு. அதனூடே குறுகிய பாதை அமைந்திருந்தது. இதுவரை அப்பு செல்லாத பாதை. பாதங்களைக் கிழித்துவிடும் முற்செடிகள். கவனத்துடன் நடக்க வேண்டும். சிறுவர்களின் கூட்டம் பின்தொடர, நன்கு பழகிய பாதை போல அவர் மட்டும் வேகமாக முன்நடந்தார். அந்த பாதை அனைவரையும் வளைந்து நெளிந்து வழிநடத்தி, முடிவில் சிறிய மலை உச்சி ஒன்றில் உமிழ்ந்தது. அப்பு முட்டிகளைப் பிடித்துக்கொண்டு மூச்சை இழுத்து விட்டான். முன்பு ஒருபோதும் சுவைத்திடாத தூய்மை காற்றில் பரவியிருந்தது. தலையை உயர்த்திப் பார்த்ததும், அப்பு உள்ளிழுத்த மூச்சு குப்பென வெளிவந்தது. கீழே கண்ணுக்கெட்டும் தூரம் வரை லட்சோபலட்சம் விலங்குகள், பறவைகள், செடி கொடிகள். ஒவ்வொன்றும் வேலிகளால் நேர்த்தியாக பிரிக்கப்பட்டிருந்தன.

“என்ன இது?” என கேட்க நினைத்த அப்புவின் வாயிலிருந்து “என்ன...” என்று மட்டும் வெளிவந்தது. துர்காவின் தோள்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டான். அந்தக் காட்சி அவனை அச்சுறுத்தியது.

“நம் முன்னோர் கண்ட கனவுகள்” என்றாள் அவள். வெயில் அனைவரின் தோள்களையும் பற்றிக் கொளுத்த, மலை உச்சியிலிருந்து கீழ் இறங்கி ஒவ்வொரு கூண்டாக பார்வையிட்டனர். நடந்து செல்கையில் ஒவ்வொரு விலங்கின், செடியின் பெயரும், அதன் வகையும், கனவு கண்டு அதை உருவாக்கிய நபரின் பெயரும், சிறிய வெள்ளைக் காகிதத்தில் எழுதி ஒட்டியிருப்பதைக் அவர் காண்பித்தார். பற்பல பாகங்களை சுட்டிக்காட்டினார். திருகிய கழுத்து, நீட்டக் கொம்பு, தைக்கப்பட்ட இழைகள். ஒவ்வொரு பாகமும் எவ்வாறு அந்த உயிரினத்தின் வகையைக் காட்டிக்கொடுத்தது என விவரித்தார். சிறுவர்கள் வாயைப் பிளந்து கவனமாய் கேட்டனர்.

“எவ்வளவு கனவுகள்!” துர்கா ஒட்டகச்சிவிங்கி முகம்கொண்ட கழுகின் தலையை தட்டியபடி வியப்புடன் சொன்னாள்.

அப்புவிற்கு கொட்டாவி வந்தது. துர்கா அவன் காதை திருகினாள். “இப்போ தூங்காதே! இரு. பாக்க இன்னும் எவ்வளோ இருக்கு?” எவ்வளவு நேரம் தான் நடப்பது. அப்பு நினைவெல்லாம் பறக்கும் தவளைகள் நிறைத்தன. விருப்பமே இல்லாமல் துர்காவை பின்தொடர்ந்தான்.

“நம்ம முன்னோர்களோட கனவைப் பார்த்தா தானே நாம நல்ல கனவு காண முடியும்?”

அப்பு அவள் சொன்னதை காதில் வாங்கவில்லை. யானை தலையுடைய, தும்பிக்கையின் நுனியில் பூ முளைத்த, புலி உடலின் முற்பாகமும், குரங்கின் பிற்பாகமும் கொண்ட மிருகத்தை பார்த்தப்படி கேட்டான், “இதெல்லாம் ஏன் கூண்டுல இருக்கு?”

“அதுவா முக்கியம்?” துர்கா அதன் கூண்டில் ஒட்டப்பட்டிருந்த வெள்ளை காகிதத்தை சுட்டிக்காட்டினாள். “இத்தனை கனவுகளையும் வகைபடுத்தியிருக்கார். இது என்ன வகைன்னு பாரு. கத்துக்கோ.”

அப்பு காகிதத்தில் எழுதியிருந்ததைப் படிக்க முயற்சித்தான். அதிலிருந்த வார்த்தைகள் அவன் வாயில் நுழையவில்லை. யானையின் தும்பிக்கையில் இருந்த பூ அவனின் கண்களை பறித்தது. இரும்பு கம்பிகளின் வழியே தலையை நுழப்பி முகர்ந்து பார்த்தான். அதிலிருந்த மகரந்தம் மூக்கினுள் சென்று தும்மல் வரவைத்தது. தும்மியதும் சில சிறுவர்கள் அவனை முறைத்தார்கள். பூக்களைக் கூட எவ்வாறு நுகர்வது என உனக்குத் தெரியவில்லையா என்பது போல ஏளனமாகப் பார்த்தார்கள். அப்பு தலை குனிந்து நடந்தான்.

நடந்து நடந்து அனைவரும் களைத்து போயினர். ஓர் அருவி அருகே கால் நீட்டி அனைவரும் அமர்ந்தனர். எல்லோர் முகத்திலும் களைப்பு. அவர் முகம் மட்டும் பிரகாசமாக, அதே புன்னகையுடன். தனது பையை திறந்தார். அதிலிருந்து ஒரு மண் பானையை எடுத்தார். அருகிலிருந்த சிறுவனிடம் கொடுத்து எல்லோரிடமும் பகிர சொன்னார். அவன் ஓடிப் போய் சில கோப்பைகளை கொண்டு வந்தான். ஒவ்வொரு கோப்பையாக பானையில் கவிழ்த்து, ஏதோவொரு திரவம் எடுத்துக்கொடுத்தான். என்னவாக இருக்கும் என அப்புவிற்கு அறிய ஆவல். எம்பிப் பார்த்தான். தெரியவில்லை. எவ்வாறு சிறிய பானையில் அத்தனை பேருக்கும் போதும் அளவிற்குத் திரவம் இருக்கும் என்ற வியப்பு.

அவன் கையில் கோப்பை வந்ததும், குனிந்து பார்த்தான். பாயசம். அதன் வாசனை மூச்சை நிறைத்தது. துர்காவை திரும்பிப் பார்த்தான். அவள் உதடுகள் மீது பாயசம் மீசையாக இருந்தது. அவன் கண்கள் தரையை துழாவின. நீட்டமான வைக்கோல் துண்டு ஒன்று அருகில் கிடந்தது. அதை எடுத்து கோப்பைக்குள் விட்டான். மறு முனையை வாயில் வைத்து லேசாக உரிந்தான். பாயசம் நாவில் பட்டது. இரண்டு வாய் சாப்பிட்டபின் ஓர் எண்ணம் தோன்றியது. வைக்கோலின் முனையில் ஊதினான். பாயசத்தில் காற்று குமிழிகள் தோன்றி மறைந்தன. அவற்றைப் பார்க்க அப்புவிற்கு ஆனந்தமாக இருந்தது. ஒரு குமிழி வெடிக்கும் பொழுது அவன் முகத்தில் லேசான பாயச சாரல் பட்டது.

விடுக்கென அவன் தலையில் ஒரு கொட்டு விழுந்தது. “பாயசத்தை இப்படியா குடிப்ப? ஒழுங்கா குடி!” என்றாள் துர்கா, தணிந்த குரலில் அவர் பார்த்துவிடுவாரோ என்று நோட்டம் விட்டுக்கொண்டே. அப்பு தலையை சொரிந்தான். கொட்டு வலித்தது. துர்காவை முறைத்துவிட்டு வைக்கோலைத் அருவியில் தூக்கி எறிந்தான். ஒரே மடக்கில் மீதி பாயசத்தை குடித்தான்.

மாலை சூரியன் மறையும் நேரம். “நாளைக் காலை உங்கள் கனவுகளுடன் தயாராய் இருங்கள்“ என்று ஒரு சிறுவன் அறிவித்தான். அனைவரும் கலைந்து சென்றனர். அவரும் அந்தச் சிறுவனும் மலையை நோக்கி நடந்தனர். “இராத்திரில எங்க போறாங்க?” அப்பு திரும்பி அவர்களைப் பார்த்துக்கொண்டே கேட்டான். “இருட்டு குகைகள்ல சில பேர் இருக்காங்கல்ல? அவங்கள பாக்க”

அப்புவிற்கு அவர்களைத் தெரியும். ஒரு காலத்தில் அவனுடன் விளையாடிய சிறுவர்கள் தான். ஏனோ அவர்களுக்குத் தூக்கம் வருவது நின்று விட்டது. தூங்காமலேயே கனவுகள் கண்டதால் அவர்களை இருட்டு குகைகளில் அடைக்கச் சொன்னார். அவர்களின் கனவுகளும் அதே குகைகளில் இருக்க வேண்டும் என்று அவர் ஆணையிட்டிருந்தார்.

இரவு காட்டுத் தரையில் படுத்திருக்கும் பொழுது, அலறல் சத்தம் கேட்டது. முதலில் ஒரு சிறுமியின் அலறல் சத்தம். பின்னர் அதனுடன் சேர்ந்து பற்பல அலறல்கள். அப்பு தூக்கம் களைந்து எழுந்து உட்கார்ந்தான். சாய்ந்தாடும் மென்மையான தீயின் வெளிச்சத்தில் அவனைச் சுற்றி ஒரு சிறிய வட்டம் வரை கண்ணுக்குத் தெரிந்தது. வட்டத்தைத் தாண்டிய இருளிலிருந்து அலறல் குரல்கள் ஒலித்தன.

துர்காவை உலுக்கினான் அப்பு. “என்ன சத்தம்?” துர்கா தூக்கம் கலைந்து புரண்டாள்.

“தூக்கம் வராதவங்களுக்கு... ஏதோ சிகிச்சைன்னு பேசிக்கிட்டாங்க...”

“சிகிச்சையா? ரொம்ப வலிக்குமா?”

துர்கா புன்னகைத்தாள். “படு” என்று அப்புவின் கையைப் பிடித்து பக்கத்தில் படுக்க வைத்தாள். அவனின் தலைமுடியை கோதி விட்டாள். அப்பு கண்களை மூடினான். அலறல்கள் இன்னும் சத்தமாக ஒலித்தன. கண்களை இறுக்கினான். இறுக இறுக அந்த அலறல்கள் கேட்காமல் போவது போன்றொரு மாயை அவன் மனதில். தனக்குத் தூக்கம் வராமல் போனால்...

அடுத்த நாள் காலை எப்போதும் போல இருந்தது. அதே பறவைகளின் ஓசை. வழிந்தோடும் நீரின் மெல்லிய சிரிப்பொலி. அப்பு கைகளை நீட்டி கொட்டாவி விட்டான்.

“எந்திரி டா! நேரமாச்சு!”

தனது தலை மயிரை கையால் சீவிக்கொண்டே வரிசையில் அப்பு நின்றான். அனைவரும் அவரவர் கனவு உயிரினங்களுடன் முகங்களில் பெருமை ததும்ப நின்றனர். ஒருவருக்கொருவர் பேசி சிரித்துக்கொண்டு. அப்பு ஒவ்வொரு கனவு உயிரினத்தையும் பார்த்தான். அவன் பின்னால் நிற்கும் தனது கனவையும் பார்த்தான். அந்தப் பிராணி அவனுக்கு ஆறுதல் அளிப்பது போல புன்னகைத்தது. அவன் கண்கள் அதன் உடலை மேய்ந்தன. அவரின் வெள்ளை யானை தூரத்தில் செடிகளை தின்றபடி நின்றது. அதைக் கண்டதும் அப்புவின் தொண்டை வற்றிப்போனது. யாரிடமும் பேசாமல், யாரின் கண்களையும் பார்க்காமல், தலை குனிந்து மண்ணையே பார்த்துக்கொண்டிருந்தான். இரவு கேட்ட அலறல்கள் காதில் ஒலித்துக்கொண்டிருந்தன.

அவர் வந்தார். நேற்று கண்ட அதே மிடுக்குடன். அதே புன்னகையுடன். வரிசைப்படி நிற்கும் சிறுவர்களை ஒவ்வொருவராகப் பார்வையிட்டார். ஒவ்வொரு கனவு பிராணியையும் கூர்ந்து கவனித்து, சிறு காகித துண்டுகளில் ஏதோ எழுதி அந்தப் பிராணிகளின் மேல் ஒட்டினார். சில சிறுவர்களை மட்டும் பார்த்து புன்னகைத்தார். சிலரை கண்டுகொள்ளாமல் தாண்டி நடந்தார். சிலருக்கு முதுகில் தட்டி கொடுத்தார். அப்புவை நெருங்கினார். அப்பு தயங்கி தயங்கி நின்றான். ஓடி விடலாமா என்று யோசித்தான். பிடித்து குகையில் அடைத்து விட்டால்…

அவன் முன்னால் வந்து நின்றார் அவர். மேலும் கீழும் பார்த்தார். அவர் பக்கத்தில் இருக்கும் சிறுவன் அப்புவை பார்த்து, “டேய்! உன் கனவு எங்க டா?” என்றான். அப்பு தன் பின்னால் பார்த்தான். காணவில்லை. “இதோ இங்க தான் நின்னுட்டு இருந்துச்சு. எங்க போச்சு தெர்லயே...”

சுற்றிப் பார்த்தான். தூரத்து மரங்களின் பின்னால் அதன் தலை பளிச்சென்று தோன்றி மறைந்தது. “அதோ! அங்க நிக்குது!” விரலால் சுட்டி காண்பித்தான்.

“என்னடா விளையாடறியா? போய் கூட்டிட்டு வா! அவரைக் காத்திருக்க செய்யாதே!”

அவர் புன்னகையுடன் கை அசைத்தார். நாமே போய் பார்ப்போம் என்றபடி. அப்பு இருவரையும் தனது கனவு பிராணியை கண்ட திசையில் அழைத்துச் சென்றான். புதர்களைத் தாண்டி திறந்த வெளிக்கு வந்தார்கள். அப்பு பெருமூச்சு விட்டான். அவனின் கனவு எதிரே நின்றுகொண்டிருந்தது.

“அதோ!” என்றான்.

“எதோ?” சுற்றி முற்றித் தேடினான் சிறுவன்.

“இதோ இங்க. நமக்கு முன்னாடி...”

“ஒன்னும் இல்ல அங்க!”

அப்பு புரியாமல் விழித்தான். அவரைப் பார்த்து சொன்னான், “இங்க தான் இருக்கு. எனக்குத் தெரியுதே...”

அவர் மெளனமாக நின்றார். அப்புவின் கண்களை ஒரு வினாடி பார்த்தார். பிறகு அவன் சுட்டிக்காட்டிய இடத்தை. அவனைச் சாந்தமாக இருக்கும்படி சொல்லிவிட்டு, சிறுவனை அருகில் வரச்சொல்லி அவன் காதில் குசுகுசுத்தார். அவன் அங்கிருந்து ஓடிப் போய் அவரின் மூட்டைகளைக் கொண்டு வந்தான்.

அப்புவின் கையை பிடித்து அது எந்தத் திசையில் நிற்கிறதோ அந்தத் திசையை சுட்டிக்காட்டு என்பது போல தூக்கினார். அப்பு கையை நீட்டியபடி நின்றான். ஏன் கனவு பிராணி தனது கண்களுக்கு மட்டும் தெரிகிறது என்று அவனுக்குப் புரியவில்லை.

அவர் மூட்டைகளை உற்சாகத்துடன் திறந்தார். பற்பல அளவிடும் கருவிகள் புற்செடிகள் மீது உருண்டன. முதலில் பூத கண்ணாடி போல ஒன்றை எடுத்து அதன் வழியே பார்த்தார். பிறகு ஒரு மணியும் குச்சியும் எடுத்து, அவற்றைத் தட்டி ஓசை எழுப்பினார். அந்த ஓசைகளின் எதிரொலிகளைக் கூர்ந்து கவனித்தார். அப்பு சுட்டிக்காட்டும் இடத்தில் இருந்த புல் தரையில் ஒரு கூர்மையான கம்பைச் சொருகினார். அதை வெளியே எடுத்து அதில் ஒட்டியிருக்கும் மண் துகள்களை கையில் வைத்திருந்த விளக்கின் வெளிச்சத்தில் ஆராய்ந்தார். மெல்லிய காற்று அப்புவின் உடலைத் தழுவி ஓடியது. அவர் எந்தவொரு சலனமுமின்றி செயல் பட்டுக்கொண்டிருந்தார். ஒரு மண் பானையை தரையில் வீசி உடைத்தார். உடைந்த துண்டுகள் தெறித்த திசைகளை அளவிட்டார். ஒவ்வொரு செதிலிலும் உள்ள நீர் அளவை ஆராய்ந்து புத்தகத்தில் குறித்துக் கொண்டார். அவ்வப்போது அப்புவின் கையை திரும்பிப் பார்த்தார்.

அவரின் அசைவுகளில் வேகம் கூட அப்புவின் இதயத்துடிப்பும் கூடியது. நிமிர்ந்து தனது கனவு பிராணியை பார்த்தான். அவனை விட நான்கு மடங்கு உயரம். தலையை கவிழ்த்தபடி அவரின் பக்கத்தில் அமைதியாக அமர்ந்திருந்தது. ஆனால் அவரின் கண்களுக்கு தெரியவில்லை. அவ்வப்போது அவர் செய்யும் வேலைகள் அதன் கவனத்தை ஈர்க்கும். அவரை ஏறிட்டுப் பார்த்துவிட்டு பிறகு தலையை தூங்குவது போல கவிழ்த்துவிடும். மறுமுறை அவர் மண்ணில் ஈட்டியைச் சொருகியபோது அது விடுக்கென எழுந்தது.

அப்பு மூச்சை இழுத்துப் பிடித்தான். திடீரென்று தரையிலிருந்து தூக்கப்பட்டார். ஏதோ ஒன்று அவரை விழுங்குவது போல உணர்ந்தார். கையிலிருந்த விளக்கு அணைந்து போனது. கும்மிருட்டு. அக்கம் பக்கம் தடவிப் பார்த்தார். திடமாக இல்லாமல் சருக்கலாக இருந்தது. சாக்கு அறைக்குள் இருப்பது போல உணர்ந்தார். அந்த அறை நகர்ந்தது. அருகாமையில் கைகளை துழாவியபடி, தடுமாறி நடந்தார். இருட்டில் ஏதோ தட்டுப்பட்டது. தடவிப் பார்த்தார். அளவிடும் கருவிகள். ஆனால் அவரின் கருவிகள் அல்ல. இவை பழங்காலத்து கருவிகள். தூசி படிந்து கிடந்தன.

அப்பு துர்காவின் மடியில் படுத்திருந்தான். வலது கையில் பறக்கும் தவளையை பிடித்தபடி, இடது கையால் அதன் இறக்கையைத் தடவி கொண்டிருந்தான். அவன் நினைத்தவாறே வழவழப்பாக இருந்தது. தூரத்தில் அந்தி சாயும் சூரிய ஒளியில், கூண்டுகளைவிட்டு வெளியேறிய அனைத்துக் கனவு பிராணிகளும் அலைந்து திரிவதை பார்த்தான். அந்தக் கும்பலில் அவனின் கனவு பிராணியும் தென்பட்டது. அதன் பெருத்த வயிற்றைப் பார்த்தான். அது ஒவ்வொரு அடியாக எடுத்துவைக்க அந்த உலோக ஒலி மீண்டும் கேட்டது. “உனக்கு கேக்குதா?” என்று துர்காவை பார்த்துக் கேட்டான். அவள் இல்லை என்று தலை ஆட்டினாள். வானத்தின் மீது அந்தப் பிராணியின் நிழல் படர்வதை பார்த்தான். அப்புவின் கண்கள் மூடின. கையிலிருந்த தவளை குபுக்கென்று மண்ணுக்குள் குதித்து மறைந்தது. அவன் கண்களின் ஓரம் தூக்கம் வந்து ஒட்டிக்கொண்டது. அடுத்த கனவை நோக்கி அவனை இழுத்துச் சென்றது.


***

July 31, 2016

நோம்பு பெருநாள்


செங் சியாங் பில்லிங் கவுண்ட்டரில் பிளாஸ்டிக் கூடையை தூக்கி வைக்கும்போது தான் கணேஷ் கவனித்தார், கடை ஊழியர்கள் அனைவரும் பச்சை நிற சட்டை அணிந்திருந்தனர். பெண்களும் சரி, ஆண்களும் சரி, அனைத்து ஊழியர்களின் சட்டைகளுக்கு பின்னால், மஞ்சள் எழுத்துக்களில் “செலாமத் ஹரி ராயா” என எழுதியிருந்தது.

ஒவ்வொரு பொருளாக “பிங் பிங்” கென்று கவுண்டர்காரி பில்லிங் மெஷீனில் தட்ட, பிளாஸ்டிக் பைகளுக்குள் பொருட்களை வேகமாக அள்ளி போட மற்றோரு பெண் உதவி செய்தாள். எல்லா பொருட்களையும் தட்டிவிட்டு, அந்த பெண் கணேஷை நிமிர்ந்து பார்த்தாள்.


“பே வேவ்” என்று தனது கார்டை நீட்டினார் கணேஷ்.


மூன்று பிளாஸ்டிக் பைகளும், இரு காகித ரசீதுகளும், “தாங்க்யூ!” வையும் கொடுத்தாள் கௌண்ட்டர் பெண்மணி. ரசீதுடன் “ஹரி ராயா ஸ்பெஷல் லக்கி டிரா”விற்கு ஒரு சீட்டும் இருந்தது.


“லக்கி” என்ற வார்த்தையை ஒரு முறை பார்த்தார் கணேஷ். அந்த காகிதத்தை கசக்கி குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு, தனது தோள் பையும், மூன்று பிளாஸ்டிக் பைகளையும் தூக்கிக்கொண்டு செங் சியாங்கின் பின்புறம் இருக்கும் பாதை வழியாக நடக்க துவங்கினார். இரவு 7 மணி இருக்கும். ஒரு டிரக்கிலிருந்து அடுத்த நாளுக்கான பொருட்களை சில ஊழியர்கள் இறக்கி கொண்டிருந்தார்கள். ஆள் உயர இரும்பு கூண்டுகளுக்குள் இருக்கும் அட்டைப்பெட்டி டப்பாக்கள். அவற்றை நகர்த்த அடியில் சக்கரங்கள்.


அந்த டிரக்கிலிருந்து சிறிது தூரத்தில், கார் பார்க்கிற்கு வண்டிகள் செல்லும் பாதையில், ஒரு பெருச்சாலி செத்து கிடந்தது. அந்த டிரக் ஏற்றி இருக்கலாம் என்று கணேஷ் மனதில் தானாக தோன்றியது. எலியின் பாகங்கள் அனைவரும் காணும்படி, ஷாப்பிங் பேகிலிருந்து வெளியே விழுந்த பொருட்கள் போல இறைந்து கிடந்தன. ரத்தம் காய்ந்திருந்தது. அதை உற்று பார்த்தப்படி கடந்து சென்றார். அழுகும் குப்பையின் நாற்றம் அவர் மூக்கிற்கு எட்டியது. இடது புறத்தில் குப்பைகளை ஒன்றுசேர்க்கும் தற்காலிக குப்பை கிடங்கு. நடைபாதை மேல்நோக்கி உயர ஆரம்பித்தது. கையில் பிடித்திருந்த பிளாஸ்டிக் பைகள் வெட்டியதால், இடது கையிலிருந்து வலது கைக்கு மாற்றினார்.


5 நிமிடத்தில், பரிச்சயமான பெரிய போர்டு அருகே வந்து விட்டார். அந்த போர்டில் “செலாமத் ஹரி ராயா” என்ற எழுத்துக்களுக்கு பக்கத்தில் ஒரு சீனர் சீருடையில் சிரித்து கொண்டிருந்தார். அவர் யார் என்று கணேஷிற்கு தெரியவில்லை. அந்த போர்டின் பின்னே தான் அவரின் புளோக் உள்ளதாக மனதில் குறித்திருந்தார்.


***


வீட்டிற்குள் நுழைந்து பிளாஸ்டிக் பைகளை மெளனமாக லலிதாவிடம் ஒப்படைத்தார். அவள் பைகளை துழாவி பார்த்துவிட்டு, “சௌ-சௌ இல்லையா?” என்று கேட்டாள்.


“கிடைக்கல”


“அங்க தான் இருந்துச்சே. இன்னிக்கு மத்தியானம் கூட பார்த்தேனே?”


“நான் பாக்கும் போது அங்க இல்ல.”


பைகளை மேஜை மீது லலிதா வைத்தாள். கணேஷ் ஹால் சோபாவில் சாய்ந்தார்.


“என்ன ஆச்சு?”


மேலே சுழன்று கொண்டிருக்கும் மின் விசிறியை பார்த்தப்படி மெளனமாக இருந்தார். அதிலிருந்து தொங்கும் கயிறு காற்றில் லேசாக ஆடிக்கொண்டிருந்தது. அந்த கயிறை இழுத்தால் விசிறியின் வேகம் கூடும்.


“ஹே! உன்ன தான். என்ன ஆச்சு?”


“இன்னிக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்துச்சு” என்றார் கணேஷ். குனிந்து தனது தோள் பையிலிருந்து லேப்டாப்பை வெளியே எடுத்தார்.


“என்ன விஷயம்?”


“பீ.ஆர் ரிஜெக்டட் அப்படின்னு”


லலிதா கணேஷை நிமிர்ந்து பார்த்தாள், “நிஜமா தான் சொல்றியா?”


கணேஷ் தனது மொபைலை அவளிடம் தந்தார்.


“ஏனாம்?”


மடியில் இருக்கும் லேப்டாப்பை பார்த்து கொண்டே, தெரியவில்லை என்பது போல கணேஷ் தோள்களை அசைத்தார். “காரணம் சொல்ல மாட்டாங்க. சொல்லணும்னு அவசியம் இல்ல.”


“இது என்ன லாஜிக்? இந்த காரணம்னு சொன்னா தானே அடுத்து ஏதாச்சும் ஸ்டெப் எடுக்க முடியும்?”


கணேஷ் பதில் சொல்லவில்லை.


“இப்போ என்ன பண்ண போறோம்?”


“ஆபீஸ்ல சில பேர் திரும்ப அப்ளை பண்ணி பாக்க சொன்னாங்க.”


“அப்போ இன்னொரு ஏழெட்டு மாசமா?” பெருமூச்சு விட்டாள் லலிதா.


“பாப்போம்”


லேப்டாப் திரையில் எதை தேடுகிறோம் என்று தெரியாமல் கணேஷ் கர்சரை நகர்த்திக்கொண்டிருந்தார்.


“சரி வாங்க சாப்பிடலாம்!”


கணேஷிற்கு சாப்பிட இஷ்டம் இல்லை.


“ஹவுஸ் ஓனர் வரேன்னு சொல்லிருந்தார்”


“என்னவாம் அந்த ஆளுக்கு? அவனை கண்டாலே எனக்கு பிடிக்கல!”


“பாத்ரூம் ஃபிளஷ் வேலை செய்யலன்னு நீ தானே சொன்ன. அத சரி செய்ய ஒரு ப்ளம்பரோட வறாராம்”


“எப்போ?”


“8 மணிக்கு மேலன்னு சொன்னாரு”


“சரியான நேரம் சொல்லலியா?”


“இல்ல. ஆனா வந்துடுவாரு. இன்னும் 10 இல்ல 20 நிமிஷத்துல.”


“என்னவோ. இந்த வீடே ஒரு மாதிரி இருக்கு. அடுப்பு கரெக்ட்டா பாத்ரூமுக்கு வெளிய இருக்கு. எவனாச்சும் இப்படி கட்டுவானா வீட்ட?”


“நீ முதல்லயே இத பாக்கலியா? காண்ட்ராக்ட் ஸைன் போடறதுக்கு முன்னாடி சொல்ல வேண்டிதானே?”


“அன்னிக்கு வீடு பாக்கும் போது இங்க இருந்தவங்க சமச்சுட்டு இருந்தாங்க. அதுனால கிட்சன் சரியா பாக்கல.”


இதற்கு மேல் பேசினால் சண்டை தான் வருமென்று, கணேஷ் திரும்பவும் லேப்டாப் திரைக்கு திரும்பினார்.


“சரி நான் உள்ள இருக்கேன். அந்த ஆள் வந்து சரி செஞ்சுட்டு போனதும் சொல்லு.”


***


“ஹெல்லோ மிஸ்டர் கணேஷ்!” என்று வாசலிலிருந்து ஒரு குரல். கதவு பக்கத்தில் இருக்கும் ஜன்னல் வழியாக, வீட்டு எஜமானர் தனது முகத்தை காட்டி, கைகளை அசைத்து புன்னகைத்தார். பெயர் காலேத். வழவழப்பான முகம். மலாய்க்காரர். தலையில் ஒரு ஸ்போர்ட்ஸ் கேப். வழுக்கையை மறைக்கவா என்ற சந்தேகம் கணேஷிற்கு உண்டு. வியர்வை உறிஞ்சும் தொளதொள சட்டையும் ஷார்ட்ஸும் அணிந்திருந்தார். டென்னிஸ் ஆட போகிறவர் போல. ஆனால் லலிதா பார்த்தால், அவரை டென்னிஸ் ஆடுபவர்களுக்கு பந்து பொறுக்கி போடுபவர் என்று தான் சொல்வாள்.


அவரையே கேட்டால் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்ஸிற்கு வேலை செய்வதாக சொல்வார். “சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் எல்லாம் டூ மூச்! டைகர் ஏர்வேஸ்ஸா இருக்கும்!” என்றாள் லலிதா அவரை முதலில் பார்த்ததும். அவளுக்கு காலேதை சுத்தமாக பிடிக்கவில்லை. வீட்டு வாடகையை 100 டாலர் குறைக்க முடியுமா என்று பேரம் பேசிய போது, மூக்கால் அழுதார். ஹால் சுவர்களை பெயிண்ட் செய்து தர முடியுமா என்று கேட்டதற்கும் அதே வழவழப்பான மூக்கால் அழுதார். அது மட்டுமல்லாமல், ஒவ்வொரு மாதமும் தானே வந்து கைப்பட வாடகையை கேஷாக வாங்கி செல்கிறேன் என்ற நிபந்தனை வேறு. “இன்டர்நெட் வழியா டிரான்ஸ்பர் பண்ணா அந்த ஆளு அக்கௌண்டுக்கு போகாதா என்ன?” வீட்டு எஜமானர் அவ்வப்போது வந்துபோவது லலிதாவிற்கு பிடிக்கவில்லை.


“ப்ளம்பர் வந்துட்டானா?” காலேத் வாசலில் ஷூவை கழட்டிக்கொண்டே விசாரித்தார்.


“இல்லியே இன்னும் இல்லியே”


“அய்யா!” பெருமூச்சு விட்டபடி உள்ளே நுழைந்து, தலையை வலதும் இடதும் ஆட்டிக்கொண்டு, மொபைலை வெளியே எடுத்தார்.


“அவனுக்கு கொஞ்ச நேரம் முன்னாடி தான் போன் அடிச்சேன். இந்நேரம் வந்திருக்கணும். எங்க இருக்கானோ தெரியல.”


“ஓ” என்றார் கணேஷ். வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை.


“சரி நீங்க வாங்க. நம்ம அந்த டிராயரை சரி செய்வோம்!”


“அந்த டிராயர்” என்பது சமையல் அறை அலமாரியில் இருந்த பல டிராயர்களில் ஒன்று. அலமாரியின் இடது ஓரத்தில் ஒன்றன்கீழ் ஒன்றாக இருக்கும் மூன்று டிராயர்களில் முதல் டிராயர் அது. வீட்டை முதல் முறையாக காண வந்தபோது கணேஷ் அதை சும்மா திறந்து பார்த்தார். கையோடு அதன் முன் பாகம் வந்துவிட்டது.


வீடு பழைய வீடு. காமன்வெல்த்தில் தங்கிளின் ஹால்ட் என்னும் கட்டிடம். 1960களில் கட்டப்பட்டது. அநேகமாக சிங்கப்பூரின் அனைத்து மூத்த குடிமக்களும் இந்த கட்டிடத்தில் ஏதோ ஒரு கட்டத்தில் தங்கி இருக்க வாய்ப்புண்டு என கணேஷ் நினைத்தார். தனது பழைய வீட்டு எஜமானரிடம் சொன்னபோது அவர், “நான் என்னோட சின்ன வயசுல அங்க தான் வளந்தேன்” என்று ஃப்ளாஷ்பேக் மோடுக்கு போயிட்டார்.


இன்னும் நான்கு வருடங்களில் இந்த கட்டிடத்தை முழுதாக இடித்து தகர்த்துவிட்டு, புதிதாக எச்.டீ.பீ கட்டிவிடும். அது வரை எப்படியாவது தேத்தி விடலாம் என்ற முடிவில் இருந்தார் வீட்டு எஜமானர் காலேத்.


இப்போது கூட அந்த கைய்யொடு வந்த டிராயரை “சரி செய்யலாம்” என்று அவர் சொன்னதன் அர்த்தம், அதை டேப் போட்டு திறக்கவே முடியாமல் ஒட்டிவிடலாம் என்பது தான். இதற்காகவே சாம்பல் நிறத்தில் ஒரு டேப் வாங்கி வந்திருந்தார். ஆணி அடித்து சரி செய்யும் அளவிற்கு பலகை இல்லை. கரையான் கரைத்தது போல செதில் செதிலாக பிரிந்து வந்துவிட்டது. ஆகாவே டேப் போட்டு விட்டால், திறக்கவே தேவை இல்லை என்ற அற்புதமான யோசனையுடன் வந்திருந்தார் காலேத்.


ஹாலிலிருந்து கிட்சனுக்கு செல்கையில், ஹால் மேசையில் உள்ள முறுக்கு டப்பாவை பார்த்ததும், “முறுக்கு!” என்றார் காலேத்.


“ஆமா முறுக்கு” என்றார் கணேஷ்.


“என் பொண்ணுக்கு முறுக்கு ரொம்ப பிடிக்கும்!”


“ஓ”


வாயை பிளந்து கிடக்கும் டிராயர் முன்னே காலேத் குந்தி அமர்ந்தார். முதலில் டேப்பை பல்லால் கடிக்க போனார். பிறகு கத்தரிக்கோல் இருக்கிறதா என்று கணேஷிடம் கேட்டார். பிறகு அதை ஒரு கையில் வாங்கிக்கொண்டு, மற்றோரு கையில் டிராயர் மூடியை வாங்கிக்கொண்டு, மெதுவாக ஒட்ட ஆரம்பித்தார்.


“காலைலேர்ந்து நான் இன்னும் சாப்பிடல, மிஸ்டர் கணேஷ். ஃபாஸ்டிங். ரொம்ப வீக்கா இருக்கேன். தலை வேற லைட்டா சுத்துது.”


அப்போது தான் கணேஷிற்கு ஹரி ராயாவை முன்னிட்டு சாப்பிடாமல் இருப்பார்கள் என்பது நினைவுக்கு வந்தது.


“ஏதாச்சும் சாப்பிடுறீங்களா?”


“இல்ல பரவாயில்ல. இங்க வேலைய முடிச்சிட்டு வீட்டுக்கு போய் தான் சாப்பிடணும். நான் இந்த மாசம் வெறும் டேட்ஸ் தான் சாப்பிடறேன்.”


“ஓ அப்படியா”


“ஏர்லைன்ஸ் வேற கொல்லுறாங்க! தே ஆர் ஸ்டுப்பிட் லா! இன்னும் அடுத்த மாச செட்யூல் வரல. நான் ஹரி ராயாக்கு ஊர்ல இருப்பேனான்னே தெரியல. உங்களுக்கு லீவ் உண்டு தானே மிஸ்டர் கணேஷ்?”


“ஆமா ஆமா லீவ் தான்… “


பாவம் அவர் புலம்பும் போது, நமக்கு லீவ் என்று சொன்னால் வறுத்த படுவாரோ என்று கணேஷ் மனதில் பட்டது. உடனே பேச்சை திசை திருப்ப, “நீங்க பொறந்து வளந்தது சிங்கப்பூரா?”


“மலேசியா. பேசாம அங்கேயே இருந்திருக்கலாம்.”


“ஏன்? சிங்கப்பூருக்கு என்ன?”


“அய்யோ! கேக்காதீங்க மிஸ்டர் கணேஷ். இந்த ஊருல ஒரு பக்கம் காசு வருது. இன்னொரு பக்கம் காசு போய்க்கிட்டே இருக்கு!”


இந்த வாக்கியத்தை வலியுறுத்த, இடது பாக்கெட்டுக்குள் கைவிடுவது போலவும் வலது பாக்கெட்டிலிருந்து கை வெளியே வருவது போலவும் செய்கை செய்தார்.


“கவர்ன்மென்ட் காசு புடுங்கறதுலயே குறியா இருக்கு. எனக்கு மட்டும் மனைவி கொழந்த இல்லாட்டி, நான் சிங்கப்பூர்லயே இருக்க மாட்டேன் தெரியுமா?”


வீட்டிற்கு டெபாஸிட் கட்டும் போது காலேதின் மனைவியை பார்த்த ஞாபகம் கணேஷிற்கு. சிகப்பு நிற ஹிஜாப் மற்றும் ஸ்டைலான கண்ணாடி போட்டிருந்தார். “ஹெல்லோ” என்று வாயால் மட்டும் சொல்லி நின்ற கணேஷிடம் முன்வந்து கை குலுக்கினார். அவரின் கை மென்மையாக இருந்தது. காலேதின் வயதிற்கு மிக குறைவான வயது போல தோன்றியது.


“இங்க ஸ்கூலு, ஹாஸ்பிடல், இது ரெண்டு மட்டும் தான் உருப்படியா இருக்கு. இல்லாட்டி நான் மலேசியாவே போய்டுவேன்.”


காலேத் டிராயரை மேலிருந்து கீழ் ஒட்டிவிட்டார். அதை அழுத்தியப்படி தலையை சற்று பின் நகர்த்தி பார்த்தார். பிறகு குறுக்கே ஒட்டுவதற்கு டேப் பிரித்தார்.


“போன வாரம் கூட கே.எல் போயிருந்தேன். கார் ஓட்டிக்கிட்டு ரோட்டுல போறேன், பக்கத்துல ஒரு பீ.எம்.டபிள்யூ கார் வருது. நான் இங்க என்னோட சாதாரண காருக்கு கட்டின காசுக்கு அங்க பீ.எம்.டபிள்யூ வாங்கலாம் தெரியுமா? அதுவும் இங்க பத்து வருஷம் கழிச்சு என் காரு துண்டு சீட்டு  ஆகிடும்.”


“துண்டு சீட்டா?”


“உங்களுக்கு தெரியாது? உங்க காரு நீங்க வித்தாகணும். அப்புறம் ஒரு பேப்பர் கொடுப்பாங்க. இது தான் உன் காருக்கான விலை அப்படின்னு. அத நீங்க காசா வாங்கிக்க முடியாது. கென்னாட்! திரும்ப இன்னொரு கார் வாங்குறத்துக்கு உபயோகிச்சா தான் உண்டு.”


“பப்லிக் டிரான்ஸ்போர்ட் யூஸ் பண்ணறதுக்கு, கவர்ன்மென்ட் இப்படி செய்றாங்க போல.”


“பப்லிக் டிரான்ஸ்போர்ட் யூஸ் பண்ற மாதிரியா இருக்கு? கண்டவனெல்லாம் ஏறுறான்.” முகத்தை அருவருப்புடன் சுழித்தார். அந்த “கண்டவன்” லிஸ்ட்டில் தானும் இருப்போமா என்று கணேஷ் யோசித்தார்.


“உங்களுக்கு இங்கேர்ந்து ஆபீஸ் போக வசதியாத்தானே இருக்கு?”


“ஆன்ன்… எம்.ஆர்.டீ தான் பக்கத்துலயே இருக்கே… இல்ல பஸ் கூட எடுக்கலாம்.”


“மிஸ்டர் கணேஷ், நீங்க என்ன வேலை செய்யுறீங்க? ஐ.டீ தானே?”


“ஆமா”


குறுக்கேயும் நெடுக்கேயும் ஒட்டிவிட்டு டேப்பை எழுந்து பார்த்தார். பிறகு கீழேயும் டேப் ஒட்ட சென்றார்.


“அது ஒட்டாதீங்க. கீழ டேப் போட்டீங்கன்னா கீழ இருக்கற டிராயர திறக்க முடியாது”


“ஓ ஆமான்ல! சரி எங்க இந்த பிளம்பர்?”


திரும்பவும் தலையை வலதும் இடதும் ஆட்டிக்கொண்டு, மொபைலை எடுத்து திரையை பார்த்தார் காலேத்.


“நீங்க சாப்பிட்டீங்களா?”


“இன்னும் இல்ல” என்றார் கணேஷ், “வைஃப் உள்ள தான் இருக்காங்க. இத முடிச்சிட்டு சாப்பிடலாம்னு இருக்கோம்”


“ஓ அப்படியா? இல்ல இல்ல! மொதல்ல சாப்பிடுங்க. நான் கீழ வெயிட் பண்ணுறேன். நீங்க சாப்பிட்டு முடிச்சிடுங்க. அப்புறம் ப்ளம்பரை கூட்டிட்டு வரேன்”


மளமளவென்று வீட்டை விட்டு வெளியேறினார் காலேத். அவர் சென்ற ஐந்தே நிமிடத்தில் பிளம்பர் வந்துவிட்டார்.


“சாரி ஆன்ன்” என்றபடி உள்ளே நுழைந்தார். ஒல்லி உடல். அழுக்கு சட்டை. பீடி குடித்து கரை படிந்த பற்கள். கருப்பு வெள்ளை கலந்த தலை முடி ஒட்டவைத்தது போல நீட்டி கொண்டிருந்தது.


“எந்த டாய்லெட்?” என்று கேட்டார்.


“காமன் டாய்லெட்” என்று கணேஷ் அவருக்கு சமையல் அறையை ஒட்டியிருக்கும் கழிவறையை காண்பித்தார். பிளம்பர் நேராக உள்ளே சென்றார். ஃபிளஷ் கீழே இருக்கும் குழாய்களை குனிந்து சோதனை செய்தார். பிறகு தனது கைபையை விசிறி, எல்லா பொருட்களையும் தரையில் கொட்டினார். பல விதமான நட்டு போல்ட்டுகள், ஆணிகள், சிறிய குழாய் துண்டுகள் இவை அனைத்தும் தரையில் சிதறின.


கணேஷ் காலேதுக்கு வாட்ஸாப் மூலம் மெசேஜ் அனுப்பினார். இரண்டு நிமிடங்களில் காலேத் மீண்டும் மேலே வந்தார்.


“நீ எப்படி மேல வந்த? நான் கீழ தானே நின்னிட்டு இருந்தேன்?” என்று ப்ளம்பரிடம் ஆங்கிலத்தில் கேட்டார். பிளம்பரும் ஆங்கிலத்தில் பதில் சொன்னான்.


“படிக்கட்டு ஏறிதான் வந்தேன்!”


“ஓ! அவன் இந்த பக்கம் இருக்கற படிக்கட்டு எடுத்துட்டான் போல” என்று கணேஷிற்கும் புரியவைப்பதுப்போல் சொன்னார் காலேத். கணேஷ் தலை ஆட்டினார்.


“ஏன் நீ இவ்வளோ லேட்?” டாய்லெட் வாசலில் ஒரு கையை ஊன்றியபடி, குனிந்து வேலை செய்யும் ப்ளம்பரை கேட்டார் காலேத்.


“நீ எனக்கு காலைல கால் பண்ணி கண்ஃபர்ம் பண்ணனும்.”


“அதான் இன்னிக்கு வரணும்னு திங்கட்கிழமையே சொன்னேனே. நீ கூட சரி சரின்னு சொன்ன?”


“எனக்கு ஞாபகம் இருக்காதுலா! அதுக்கு தான் ஒரு நாள் முன்னாடி ஞாபக படுத்தினா நான் வந்துடுவேன். வயசு ஆச்சுல்ல?” ஒரு சிறிய ஸ்பேனர் எடுத்து ஏதோவொரு குழாயை திருகிக்கொண்டே பேசினார், “நல்ல வேல நீ இன்னிக்கு கூப்பிடும்போது நான் பக்கத்து ஏரியால இருந்தேன். அதுனால வர முடிஞ்சுது.”


“எங்க? இவ்வளோ லேட்டா வர? நான் வேற காலைலேர்ந்து இன்னும் சாப்பிடல தெரியுமா?”


“என் கிட்ட சைக்கிள் தான் இருக்கு. மெதுவாத்தான் வர முடியும்? எனக்கு என்ன உன்ன மாதிரி கார் இருக்கா? ஆமா, உன் கிட்ட எத்தனை காரு? ஒண்ணா ரெண்டா?” இளித்தப்படி பிளம்பர் கேட்டார்.


“எதுக்கு இப்போ? வேலைய பாருலா. ரொம்ப பேசாதே!”


“உனக்கென்னப்பா? வீடு வெச்சிருக்க. எனக்கு பொண்டாட்டி கூட இல்ல. கேர்ள்பிரண்ட் மட்டும் தான்.” பைப்பை திருகிக்கொண்டே இளித்தார் பிளம்பர்.


“கேர்ள்பிரண்ட்டா?” காலேதும் பின்னால் இருக்கும் கணேஷை பார்த்து, “பாத்தியா? இந்த வயசுல இந்த ஆளு எப்படி பேசுறான்னு?” என்பது போல சிரித்தார்.


“அய்யா!” என்று பிளம்பர் ஊளையிட்டார். சிதறி கிடக்கும் பொருட்களில் விறுவிறுவென எதையோ தேடினார்.


“என்ன ஆச்சு?”


“ச்ச்!” குழாய் அருகே முகத்தை எடுத்துச்சென்று உற்று பார்த்தார். பின்னர் பொருட்களை மீண்டும் துழாவினார். “போச்சுடா! ஏதோ பார்ட் இல்லைன்னு சொல்லி இன்னொரு நாள் வர போறானா? லலிதா வேற கத்துவாளே!” என்று கணேஷ் யோசிக்க துவங்கினார்.


சட்டென்று கண்ணில் ஏதோ பட்டது போல் ஒரு போல்ட்டை எடுத்தார்.


“எனக்கு ஃபாஸ்ட் பண்ணாமலே கண்ணு சரியா தெரிய மாட்டேங்குது” மறுபடியும் காலேதை பார்த்து சிரித்தார்.


“ஃபாஸ்ட் பண்ணா கண்ணு தெரியாதுன்னு யாரு சொன்னா? ஃபாஸ்ட் பண்ணி பாருலா! உனக்கு சக்தி கொடுக்கும் தெரியுமா? உடல் பலம் மட்டும் இல்ல. உன்னோட ஆத்மாவும் சக்தியாகும். உண்மை தான். உங்களுக்கு தெரியுமா மிஸ்டர் கணேஷ்?”


கணேஷ் காலேதின் தோளை தாண்டி பிளம்பர் உள்ளே என்ன செய்துக்கொண்டிருக்கிறார் என்று எட்டிப்பார்ப்பதில் மும்முரமாக இருந்தார். அதனால் காலேதின் திடீர் கேள்விக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.


பிளம்பர் சந்தேகத்துடன் காலேதை பார்த்தார்.


“ஆமாலா. உன் ஆத்மா சக்தி ஆகும். இங்கேர்ந்தே நான் என் அம்மா கூட பேசலாம் தெரியுமா? என் அம்மா கே.எல்ல இருக்காங்க. ஆனா நான் ஃபாஸ்ட் பன்னா அவங்களோட நான் பேசலாம். சும்மா சொல்லல. அது நான் உணர்ந்திருக்கேன். ஃபோன்ல இல்ல. மனசு வழியா.”


“வாஹ்! ரீலி ஆ?”


“ஃபாஸ்ட் பண்ணுறது மூலமா நீ சுத்தம் ஆகுற. சுத்தம் ஆகும் போது எல்லாமே செய்யலாம்.”


“உன் அம்மாவும் ஃபாஸ்ட் பண்ணுவாங்களா?”


“ம்ம்”


“இவங்க? இந்த ஐ.எஸ் க்ரூப். அவங்களும் பாஸ்ட் பண்ணுவாங்களா?”


“ஐ.எஸ்ஸா?! அவனுங்கெல்லாம் முஸ்லிம்ஸ்ஸே கெடையாதுலா. பயித்தியக்கார பசங்க! உங்களுக்கு தெரியுமா மிஸ்டர் கணேஷ்? மக்கள ஆத்துல இறக்கி... அப்படியே கழுத்த வெட்டி கொல்லுறாங்க. இதெல்லாம் இஸ்லாமே கெடையாது! இஸ்லாம் ஓட அஞ்சு பில்லர்ஸ் என்ன தெரியுமா? ஒன்னு ஃபாஸ்டிங். இன்னொன்னு தானம். மூணாவது...”


சற்று யோசித்தார். அதற்குள் பிளம்பர் காலேதை கூப்பிட்டார்.


“ஃபிளஷ் ரெடி! பாருங்க!”


காலேத் உடனே கழிவறைக்குள் சென்று ஒரு முறை ஃபிளஷ் அழுத்தி பார்த்தார்.


“வாங்க மிஸ்டர் கணேஷ். நீங்களும் ஒரு வாட்டி செக் பண்ணிடுங்க.”


கணேஷும் ஒரு முறை முயற்சித்தார். ஃபிளஷ் ஆனதும் தண்ணீர் மீண்டும் ரொம்பும் சத்தம் கேட்டது. “பாத்தீங்களா? தண்ணி கரெக்டா திரும்ப ரொம்புது. எல்லாம் ஓக்கே!”


கணேஷும் சரி என்றார். பிளம்பர் மின்னல் வேகத்தில் சிதறி கிடந்த அனைத்து பொருட்களையும் பைக்குள் போட்டுக்கொண்டு கிளம்பினார், “நான் கீழ வெயிட் பண்ணுறேன்” என்று காலேதிடம் சொல்லிவிட்டு.


“சந்தோஷமா மிஸ்டர் கணேஷ்? ஃபிளஷ் சரி பண்ணியாச்சு! முதல் மாசத்துல வீட்டுல வேற ஏதாச்சும் பிரச்சனை வந்தாலும் சொல்லுங்க. கண்டிப்பா பாக்கறேன்.”


“தாங்க்ஸ். ஹேப்பி ஹரி ராயா!” கணேஷ் வாசல் கிரில் கதவை மூடினார்.


“எனக்கு ஹரி ராயா உண்டான்னு தெரியல. முதல்ல வீட்டுக்கு போய் சாப்பிடணும்! எனிவே தேங்க்யூ மிஸ்டர் கணேஷ்!” ஷூவை அணிந்த பிறகு, “பூட்டிக்கோங்க” என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.


***


கணேஷ் படுக்கையறை கதவை திறந்தார்.


“போயிட்டானா அந்த ஆளு?”


“ம்ம்”


“பிளஷ் ஓக்கேவா?”


“ம்ம்”


“சரி நான் சாப்பாடு எடுத்து வெக்கறேன். நீ தட்டு எடு.”


கணேஷ் தட்டு எடுக்க சமையல் அறைக்குள் நுழைந்தார். கோணல்மாணலாக டேப் ஒட்டப்பட்டிருந்த டிராயர் அவர் கண்ணில் பட்டது. அவரால் சிரிப்பை அடக்கமுடியவில்லை.

***