December 21, 2012

எல்லாம் சினிமயம்


(The 2nd short story I wrote in Tamil for Thangameen contest. The topic given was 'Appa'. I shall revisit to edit spelling mistakes!)

தலையில் கை வைத்தப்படி அறையின் ஓரத்தில் உட்கார்ந்திருந்தான் கோகுல். வீட்டில் நிசப்தம்.

"விட்டுருங்கப்பா... எல்லாத்தையும் விட்டுருங்க..." என்று தரையை பார்த்தப்படி முணுமுணுத்தான்.
கோகுலின் அருகில் நின்றிருந்த அவன் அப்பா மெதுவாக அவன் தொழின் மீது கை வைத்தார்.

"செத்துடுவேன் டா...", அவர் குரல் நடுங்கியது. "விட்டா செத்துடுவேன்..."

"செத்துப்போ! நான் தடுக்க முடியுமா? எல்லா பயபுள்ளையும் ஒரு நாள் சாக வேண்டியவன்தேன்!" என்றான் கோகுல். சிரிப்பை அவனால் அடக்க முடியவில்லை.

"டேய்! என்னடா நாயகன்லேர்ந்து திடீர்னு தேவர்மகனுக்கு தாவிட்ட!" என்றபடி, கோகுலின் அப்பாவும் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.

"தெரில... தானா வந்துடுச்சு..." என்று இளித்தான் கோகுல். "தேவர்மகன்னு சொன்ன ஒடனே ஞாபகத்துக்கு வருது. கமலை இன்னிக்கு பார்த்தீங்களா?"

சடகோப்பன் லேசாக பெருமூச்சு விட்டார். "அவர் தங்கிருந்த ஹோட்டேலைத்தான் இன்னிக்குப் பூரா சுத்தி சுத்தி வந்துகிட்டு இருந்தேன். அஞ்சு நிமிஷத்துல என்னை ஒரு டாக்ஸி டிரைவர் முந்திட்டான்டா! ச்சே! கமல் என் டாக்ஸில ஏறி இருக்க வேண்டியது..."

இவ்வாறு வருந்திய கோகுலின் அப்பா பெயர் - சடகோப்பன். வேலை தேடி தஞ்சாவூரிலிருந்து சிங்கபூருக்கு வந்தபோது இளைஞராக இருந்தவர். பல வேலைகள் பார்த்து, முடி நரைத்து, சிறிய தொந்தி போட்ட பிறகு, வயது தற்போது 48இல் வந்து நின்றது. கடந்த சில வருடங்களாக சடகோப்பன் ஒரு டாக்ஸி ஓட்டுனர். மனைவியின் பெயர் சிவகாமி. அவள் மேல் உலகத்திற்கு டிக்கெட் வாங்கி சிறிது காலம் ஆகி இருந்தது. கோகுல் அவர்களின் ஒரே மகன். படிப்பு சிங்கபூர் பல்கலைக்கழத்தில் முதல் ஆண்டு இஞ்சினியரிங்.

சடகோப்பனும் கோகுலும் சினிமா வெறியர்கள் - ஒரு வாரத்தில் இரண்டு திரைப்படங்களாவது பார்த்து விடுவார்கள். பார்த்தப்பின் அதை அக்கு வேறு ஆணி வேறாக பிரிப்பார்கள். கடைசீயில் என்ன தான் இருந்தாலும் பாலச்சந்தர் போல எவனாலயும் படம் பண்ண முடியாது என்று சடகோப்பன் சொல்ல, கிறிஸ்டோபர் நோலன் போல எவனாலயும் படம் பண்ண முடியாது என்று கோகுல் சொல்ல, இருவருக்கும் தூக்கம் வரும்.

சடகோப்பனிற்கு நடிப்பில் பயங்கர ஆர்வம். வசந்தம் டீவீ தொடர்களில் டாக்ஸி டிரைவராக இரண்டு முறையும், ரோட்டில் நடந்து செல்லும் கதாநாயகனுக்கு வழி சொல்பவராக ஒருமுறையும் நடித்திருந்தார். (அவர் வரும் பிட்டு சீனை மட்டும் யூடுபிளிருந்து டவுன்லோட் செய்து தினம் பார்த்து ரசிப்பார்.) இதை தவிர நடிக்க பல வாய்ப்புகள் அவ்வப்போது வந்தாலும், ஏதோ காரணத்தால் அவை தட்டிப்போய் கொண்டேயிருந்தன. 

ஒரு முறை ஒரு நண்பர் சடகோப்பனிற்கு போன் அடித்து, "கடைசி நிமிஷத்தில் ஒருத்தன் கை விட்டுட்டான். நாடகத்துக்கு ஒரு ஆள் குறையுது. டக்குனு வா!" என்று சொல்ல, அப்போது அவர் டாக்சியில் இருந்த ஆளோ அந்த நாடக சபை இருக்கும் நேரெதிர் திசையில் உள்ள கிளப்பிற்கு செல்ல வேண்டும் என்று சொன்னார். இது போல பல முறை அவர் டாக்சி ஒரு திசையில் செல்ல, நடிப்பு வாய்ப்புகளோ டாக்சியின் புகைப்போல எதிர் திசையில் காற்றில் பறந்தன.

கமலை மிஸ் பண்ணிட்டோமே என்று வருந்திய தன் அப்பாவை பார்த்து, "ஆமா... அப்படியே நீங்க கமலை பார்த்திருந்தா மட்டும்...", என்று நக்கலான குரலில் கோகுல் கேட்டான், "மிஞ்சிப்போனா ஆட்டோகிராப் கொடுத்திருப்பார்... விஸ்வரூபம்ல கேரக்டர் கொடுத்திருப்பாரா என்ன?"

"கேரக்டர் கொடுக்காட்டியும் அவர் முன்னாடி அந்த மகாநதி சீனை ஒரு வாட்டி நடிச்சுகாட்டிடலாம்னு இருந்தேன்டா... அது நடக்காம போச்சு!"

"சரி, கமல் எதுக்காக சிங்கபூர் வந்திருக்காரு?"

"ஏதோ விருது கொடுக்கிற விழாவிற்கு தலைமை தாங்க..."

"ஓஹோ! அப்போ கொஞ்ச நாள் இங்க தங்குவார் போல. நாளைக்கு திரும்ப ட்ரை பண்ணி பாருங்க."

"அட போடா! வேற வேலை இல்லியா என்ன... இன்னிக்கே அம்பது டாலர் வேஸ்ட்!"

"என்ன சார்? ஒரு காரியம் நடக்கணும்னா விடாமுயற்சி வேணும்னு எனக்கு சொல்லிக்குடுத்த குரு நீங்க. நீங்க இப்படி சொல்லலாமா?" என்று கோகுல் பௌன்சர் போட அதை அடிக்காமல் விட்டுவிட்டு மெளனமாக சிரித்தார் சடகோப்பன்.

****

சடகோப்பனின் தொலைபேசி ஒலித்தது. எதிர்முனையிலிருந்து ஒரு குரல், "ஹலோ! சடகோப்பன்?"

குரலை கேட்டவுடனே சடகோப்பனிற்கு அது யார் என்று தெரிந்துவிட்டது. "ம். சொல்லுங்க பாலு சார். எப்படி இருக்கீங்க?"

"நான் நல்லா இருக்கேன். ஒரு வாரம் முன்னாடி சார்ட் பிலிம் ஒன்னு எடுக்கறேன்னு சொல்லி முகநூல்ல போட்டிருந்தேன், பாத்தீங்களா?"

"ஓ! நீங்க போட்ட அடுத்த நிமிஷமே லைக் செய்தேனே. உங்களுக்கு கூட மெசேஜ் அனுப்பியிருந்தேன் ஏதாவது கேரக்டர் இருக்குமான்னு..."

"அப்படியா! தெரியல. என் மொபைல் கொஞ்ச நாளா மக்கர் பண்ணுது. மெசேஜ் எதுவும் வர மாட்டேங்குது."

"இல்ல... நான் முகநூலில் மெசேஜ் அனுப்பியிருந்தேன்."

"ஓ! சரி எப்படியோ... இப்போ ஒரு பேராசிரியர் கேரக்டர் இருக்கு. ரெண்டு வரி டயலாக் தான். ஆனா ரொம்ப முக்கியமான கேரக்டர். நீங்க செய்வீங்களா?"

சடகோப்பனின் கண்கள் விரிந்தன. "கண்டிப்பா பாலு சார்! எங்க? எப்போ?"

"விவரம் நான் உங்களுக்கு மெசேஜ் பண்றேன்."

கடவுளாக பார்த்து அமைத்ததுப்போல் அந்த சார்ட் பிலிம் படப்பிடிப்பு திங்கள் அன்று நடைப்பெற இருந்தது. திங்களும் செவ்வாயும் சடகோப்பன் டாக்ஸிக்கு லீவ் விடும் நாட்கள். இதற்கு முன்னர் நிறைய முறை வேலையால் ஷூடிங்கிற்கு செல்ல முடியாத சூழ்நிலை. இந்த முறை அப்படி ஆகாததால் மனுஷன் செம்ம குஷி ஆகிட்டார். கோகுளோட சேர்ந்து வசூல் ராஜா, நம்மவர் போன்ற படங்களை பார்த்து பேராசிரியர் கதாப்பாதிரதிற்கு ஹோம்வொர்க் செய்ய ஆரம்பித்துவிட்டார்.

ஷூட்டிங்கிற்கு ஒரு நாள் முன்னர், செரங்கூன் சாலையில் சென்று கொண்டிருந்தபோது சடகோப்பனின் டாக்ஸி என்ஜின் திடீரென்று அணைந்துப்போனது. ஓரம் கட்டி திறந்து பார்த்தால், கிழிந்தது கிருஷ்ணகிரி என்று தெரிந்தது. வண்டியை ரிப்பேர் செய்யணும்.

கோகுல் புருவங்களை உயர்த்தி தன் அப்பாவை பார்த்தான். "என்னப்பா எப்பவுமே வண்டி கூடவே நீங்க இருக்கனுமா என்ன?"

"அப்படி இல்லடா. நாளைக்கு நான் டாக்ஸி ஆபீசுக்கு போகணும். வண்டி ரிப்பேர் ஆய்டுச்சு. அவன் தான் எனக்கு டாக்ஸி வாடைகைக்கு கொடுத்தான் இல்லையா. கூப்பிடறான். என்ன செய்ய சொல்வாங்கன்னு தெரியல."

"அதுனால பாலு சார் கிட்ட ஷூட்டிங்கிற்கு முடியாதுன்னு சொல்லிட்டீங்களா?"

"வேற என்னடா செய்ய?"

"என்னப்பா இப்படி ஒவ்வொரு வாய்ப்பா..."

"எல்லாத்துக்கும் நேரம் வரும் டா. படத்துக்கா பஞ்சம்!"

****

டாக்சியை சரி செய்தப்பின் மூன்று மாதங்கள் ஓடின. ஒரு நாள் காலை மூன்று மணி இருக்கும். கொட்டாவி விட்டுகொண்டே டாக்ஸி ஓட்டிக்கொண்டிருந்தார் சடகோப்பன். பின் சீட்டில் ஒரு பெண்மணி பார்ட்டி உடையில் உட்கார்ந்து கைபேசியை நோண்டிக்கொண்டிருந்தாள். அவளை எங்கயோ பார்ததுப்போல் இருக்கிறதே என்று டாக்ஸி சிக்னலில் நிற்கும் போது சடகோப்பன் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. "ஒரு வேலை இவங்க தான் அந்த உல்லாசம் டீவீ தொடர் கதாநாயகியோ?" தன் முன்னே இருந்த கண்ணாடியில் அவளை உற்று பார்த்தார்.

கேட்டுவிடுவோம் என்று முடிவெடுத்து திரும்பினார். சிக்னலின் சிவப்பு விளக்கு பச்சை விளக்காக மாறியது. அதை கவனிக்காமல், "நீங்க உல்லாசம் தொடர்ல..." டமார்! என்றொரு சத்தம் அவர் காதையும் கேட்கவிருந்த கேள்வியையும் கிழித்தது.

திடுக்கிட்டு திரும்பி பார்த்தார். அவர் முன்னே ஒரு பெர்ராரி பேருந்தும் மற்றொரு டாக்சியும் சிதறி கிடந்தன. எது டாக்சி எது பெர்ராரி என்று தெரியாத அளவிற்கு. சடகோப்பன் ஒன்றும் புரியாமல் முழித்தார். அந்த நொறுங்கிக்கிடந்த டாக்சி சில நொடிகளுக்குமுன் அவர் டாக்சி பக்கத்தில் அவர் காத்திருந்த அதே சிக்னலில் நின்றிருந்தது. கண்மூடி திறப்பதற்குள் குறுக்கேசெல்லும் ரோட்டில் வந்த பெர்ராரி அடித்திருக்க வேண்டும். அந்த நொறுங்கிய டாக்சியையே பார்த்து கொண்டிருந்தார். அந்த டாக்சிக்கு பதில் இவர் முந்தியிருந்தால்... சட்டென்று டாக்ஸி கதவை திறந்து அவ்விரு பேருந்துகளையும் நோக்கி ஓடினார் சடகோப்பன். "ஆண்டவா! யாரும் இறந்திருக்க கூடாது... காப்பாத்து!"

****

கோகுலுக்கு ஆச்சர்யப்படுவதா இல்லை அதிர்ச்சி அடைவதா என்று தெரியவில்லை. 

"என்னப்பா திடீர்னு?"

"பெருசா ஒன்னும் காரணம் இல்லடா. வயசாகிடுச்சு. இனிமேலாவது மனசுக்கு பிடிச்ச வேலைய செய்வோமேன்னு..."

டாக்சியை திருப்பி கொடுத்துவிட்டு, அந்த வேலையையும் கை விட்டு, சென்னைக்கு செல்வதாக தீர்மானம் செய்திருந்தார் சடகோப்பன். 

"இந்த வருஷம் பூரா உன் தினசரி செலவுக்கு தேவையான பணம் சி. பீ. எப் லேர்ந்து எடுத்து உன் அக்கௌன்ட்ல போட்டுட்டேன். இந்த வீடை காலி பண்ணனும். அடுத்த நாளே நம்ம எரிக் சாரோட வீட்டுக்கு போயிடு. அவர் வீட்டுல ஒரு ரூம் காலியா இருக்கு."

"நான் உங்கள மிஸ் பன்னுவேன்ப்பா", என்றபடி சடகோப்பனை கோகுல் கட்டி அணைத்தான்.

சடகோப்பனும் அவனை இறுக்கி அணைத்தார். "கவலை படாதே டா! நீ தான் இப்போ வளந்துட்டியே... போன் இருக்கு. ஸ்கைப் இருக்கு. ஆனா என்ன, ஒன்னா சேர்ந்து படம் பார்க்க முடியாது..."

கோகுல் இளித்தான். "முடியும்ப்பா! குகிள் பிளஸ்ல ஹான்கௌட் அப்டின்னு இருக்கு. அது மூலியமா இணையத்துல ரெண்டு பெரும் சேர்ந்தே படம் பார்க்கலாம்!"

"ஓ!"

"ஆமா. சோ நீங்க சென்னைக்கு போய் என்ன பண்ண போறீங்க? எப்படி படத்துல சான்ஸ் தேடுவீங்க? இவ்வளவு நாளா கிடைக்காத வாய்ப்பு  உங்களுக்கு இப்போ எப்படிப்பா?"

சடகோப்பன் மெளனமாக இருந்தார். அவர் கண்முன்னே நடந்த விபத்தை பற்றி கோகுலிடம் சொல்லவில்லை. அவர் டாக்சி பின்சீட்டில் உட்கார்ந்திருந்த பெண்ணை பற்றியும் சொல்லவில்லை. அவள் பாடலாசிரியர் மதன் கார்க்கியின் மனைவி என்பதையும் அவர் சொல்லவில்லை. அவங்க உயிரை தான் காப்பாற்றியதாக நினைத்து, "சென்னை வந்தீங்கன்னா உங்களுக்கு என்ன உதவி வேணும்னாலும் கண்டிப்பா என்னை  கேளுங்க" என்று நந்தினி கார்க்கி கூறியதையும் சடகோப்பன் கோகுலிடம் சொல்லவில்லை.

தன் மகனை பார்த்து லேசாக புன்னகைத்து, ஒரு விரலை சொடுக்கி, "நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான் ஆனா கை விட மாட்டான்!" என்று மட்டும் சொன்னார்.


****

(The accident mentioned in this story is based on - http://www.youtube.com/watch?v=oZG1HgOyFkU)

No comments:

Post a Comment