கம்ப்யூட்டர் திரையில் கர்சர் மிளிர்ந்தது. சில வினாடிகள் கமலின் விரல்கள் விசைப்பலகையின் மீது தாமதித்தன. பிறகு ஒரு வார்த்தை மட்டும் டைப் செய்தான்.
“நாத்திகன்”
ஏதோவொரு விண்ணப்பத்தை இணையத்தில் நிரப்பும் பொழுது, “மதம்” என்ற இடத்தில் அவன் டைப் செய்த வார்த்தை இது.
கமல் - கருப்பு கண்ணாடி, சீராக ட்ரிம் செய்யப்பட்ட தாடி, கருப்பு சட்டை. பார்த்த உடனே, “நீங்க கமல் ஹாசனின் ரசிகனா?” என்று கேட்க தூண்டும் தோற்றம். அதற்கேற்றார் போல், “என் பேரே கமல்” என்று அவனின் பதில்.
“அது ஏன்டா எல்லாரும் கடவுள் பத்தி பேசும் போது மேல பாக்கறீங்க? அவரு கீழ இருக்க முடியாதா? எல்லா இடத்திலும் இருப்பாருன்னு வேற சொல்லுறீங்க.”
இப்படியொரு தத்துவத்தில் ஆரம்பித்து, பிறகு...
“ஜோசியத்தப்போய் நம்புவியா? எல்லாமே முன் கூட்டியே நிர்ணயம் ஆயிடுச்சா? அப்போ உன் வாழ்க்கை உன் கையில இல்லியா? எனக்குக் கூட தான் இந்த வருஷம் கண்டம்னு சொல்லிருக்கான் ஒரு ஜோசியன்...”
...இந்த நிலைக்கு வந்து, பிறகு...
“பூமிக்கும் மார்சுக்கும் நடுவுல ஒரு கோள் இருக்கு. அது கண்ணுக்கு தெரியாது. அது தான் உலகத்த ஆட்டி படைக்குதுன்னு நான் சொல்லுறேன். என்னை எப்படி நீ டிஸ்ப்ரூவ் பண்ணுவ?”
...இப்படி ரிச்சர்ட் டாக்கின்ஸின் “காட் டெலுஷன்” படித்த பின்விளைவுகள் வார்த்தைகளாய் அவன் வாயிலிருந்து உதிரும். கேண்ட்டீனில் உணவு சாப்பிடாமலோ, ஜூஸை உரிஞ்சாமலோ எவன் அவனைக் கேள்வி கேட்கிறானோ, அவனுக்கு இலவச பிரசங்கம் கிட்டும்.
கமல் என்.யூ.எஸ்ஸில் கம்ப்யூட்டர் சயன்ஸ் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவன். ஸ்காலர்ஷிப் இல்லை. மூணு வருஷம் பாண்ட் தான்.
“அதுக்கப்புறம் சே குவேரா போல இந்தியாவ பைக்ல சுத்த போறேன்டா” என்பான்.
என்.யூ.எஸ்ஸில் கூட அவனுக்கு மிகவும் பிடித்த ஆசிரியர் மார்டின் ஹென்ஸ். ஹார்லி டேவிட்ஸன் பைக்கில் கல்லூரிக்கு கூலாக வரும் ஆசிரியர். அடுத்து அவர் கிளாஸ் தான். அங்கே செல்லும் முன் கேண்ட்டீனில் மசால் வடை சாப்பிட்டு கொண்டிருந்தார்கள் - கமலும் சித்தார்த்தனும். அப்போது சுசான்தரன் அந்த வழியாக வந்தான்.
“ஹே கமல்! நாளைக்குத் தீமிதி திருவிழாக்கு வாலண்டியர் தேவை. வரியா? 8 பாயின்ட்ஸ் தரோம்”
சித்தார்த்தனை பார்த்து சுசான்தரன் கேட்கவில்லை. ஏனெனில், தினம் காலையில் வீடு துறந்து, என்.யூ.எஸ் வந்து, பின் இரவுக்கு வீடு திரும்பும் மாணவத் துறவி அவன். கமலுக்குத் தான் ஹாஸ்டல் தேவை. அதற்காக சி.சி.ஏ பாயிண்ட்ஸ் தேவை.
“போன வாட்டி தைப்பூசத்துக்கு தந்த நாலு பாயிண்ட்ஸ் போதும்!” நறுக்கென்று பதில் சொன்னான் கமல்.
அந்த நாலு பாயிண்ட்ஸிற்காக கமல் செய்ய வேண்டியிருந்த காரியம் - “ரூட் மார்ஷளிங்”. தைப்பூசமன்று டேங் ரோட்டில், இரு வரிசைகளின் முன் நின்று “மொட்டை அடிக்கனும்னா இந்த வழி. சாமிய பாக்கனும்னா அந்த வழி.” என்ற வசனத்தை வரும் ஒவ்வொரு பக்தரிடமும் சொல்ல வேண்டும். சொன்னால் ஒரு டேக் அவே டப்பாவில் பீ ஹூனும், 4 சி.சி.ஏ பாயிண்ட்ஸும் கிடைக்கும்.
இவ்வாறு தனக்கு இரண்டாம் ஆண்டில் ஹாஸ்டல் கிடைத்ததற்கு டேங் ரோடு முருகனுக்கு, அவன் நன்றிகளும் சொன்னதுண்டு.
“நானும் கவனிச்சுட்டு வாரேன். நீ ஒரு மாதிரி பேசறியே… உனக்கு என்ன கடவுள் நம்பிக்கை கிடையாதா?” சுசான்தரன் கமலை நேரடியாகக் கேட்டான்.
சித்தார்த்தன் மசால் வடையை வாயில் வைத்துக்கொண்டு முனங்கினான். அடுத்த பலி ஆடு சிக்கிவிட்டது என்று அவனுக்குத் தெரியும்.
“இல்லாத ஒன்னு இருக்குன்னு எப்படி நம்ப முடியும்?” கமல் கத்தியை கூர் தீட்டினான்.
சுசான்தரன் கமலுக்கு நேர் எதிரே அமர்ந்திருந்தான். நேர் எதிர் டைப்பும் கூட. “இந்து மதத்தில் அற்புதமான பல அம்சங்கள் உள்ளன. இதைச் சிறு பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்லும் முயற்சி இதுவே” என்று குழந்தைகளுக்கு நடத்தும் பட்டறை பற்றி வசந்தம் தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்தவன். “சுசான்தரன் போன்ற இளையர்கள் எதிர்காலத்தில் நம் கலாச்சாரம் வாழும் என்ற நம்பிக்கை தருகிறார்கள்” என்று செய்தியாளர் கூட அவரை மனமகிழ்ந்து பாராட்டினார்.
“இல்லன்னு நீ எப்படி சொல்லுற?”
“இருக்குன்னு நீ எப்படி சொல்லுற?”
“கைஸ்! நீங்க யாராச்சும் கோக் குடிக்கறீங்களா? நான் வெண்டிங் மஷீன் வரைக்கும் போறேன்.” குறுக்கிட்ட சித்தார்த்தனை இருவரும் கண்டுகொள்ளவில்லை.
சுசான்தரன் கமலை கண் சிமிட்டாமல் பார்த்தான்.
“மனுஷங்களோட பிரச்சனை என்ன தெரியுமா?” சிறு பிள்ளைக்கு புரிய வைப்பது போல் ஆரம்பித்தான் கமல். “நாம பொருட்கள உருவாக்கறோம். அதுனால எந்த பொருள பாத்தாலும் அத யாராச்சும் உருவாக்கி இருக்கணும்னு நினைக்கறோம். இப்போ...”
சுற்றி முற்றிப் பார்த்தான் கமல். தூரத்தில் டவர் கிரேன் ஒன்று தெரிந்தது. “இப்போ அந்த கிரேன் எடுத்துக்கோ”
சுசான்தரன் திரும்பி கமல் சுட்டிக்காட்டிய திசையில் பார்த்தான். புதிதாக என்.யூ.எஸ் கிளப் ஹவுஸ் கட்டுவதற்காக, 70 மீட்டர் உயரமுள்ள ஒரு ராட்சத கிரேன் தூரத்தில் நின்றுகொண்டிருந்தது.
“ஒரு மனுஷனோட கை வளைஞ்சு பொருள எடுக்கறது போல, அதுவும் பொருள எடுக்குது. ஆனா பார்க்கப் பிரம்மாண்டமா மலைப்பு ஏற்படுத்துது. அத பாத்தவொடனே என்ன தோணுது? அட! இத செஞ்சவன் யாரு டா? அப்படின்னு தானே?”
“என்ன சொல்ல வர?”
“அதே மாதிரி மனுஷங்கள செஞ்சவன் யாருடா அப்படின்னு தோணுது. அந்த கேள்வில பயணிக்காம, கடவுள் அப்படின்னு புல்ஸ்டாப் வெச்சு முடிச்சிடறோம்!”
சுசான்தரன் கை தட்டினான். “யுவர் ஃபிரெண்ட் இஸ் ஏ டஃப் நட் டு கிராக்!” என்று சித்தார்த்தனிடம் சொல்லிவிட்டு எழுந்தான். சித்தார்த்தன் சாந்தமாக கோக் கேனை திறந்தான்.
***
“ஆன்ன் எஸ்! ஹல்லோ! கேக்குதா?”
கர-கர ஒலி. ஹாஸ்டல் ரூமிலிருந்து அம்மாவுடன் ஸ்கைப் காலில் கமல்.
“கேக்… டா...”
“கேக்குதாம்மா?”
“ஹல்லோ! கேக்குது டா! ஹல்லோ?”
“ஆன் சொல்லுமா. சாப்ட்டாச்சா?”
“நீ என்ன பண்ணிட்டு இருக்க? ஆன்ன் சாப்ட்டாச்சு!”
“ஒன்னும் பெருசா இல்ல”
“ஏன் ரூம் ஒரே இருட்டா இருக்கு?”
“ஒரு படம் பாத்து முடிச்சேன்...இப்போ தான்மா.”
உட்கார்ந்த இடத்திலிருந்து எம்பி மின் விளக்கை ஆன் செய்தான் கமல், “நீ சொல்லு. என்ன ஸ்பெஷல் இன்னிக்கு?”
“என்ன படம்?”
“பதேர் பாஞ்சாலி மா. சத்யஜீத் ரே படம்.”
“ஓ, இன்னிக்கு வெண்டக்கா பொரியல் பாட்டி பண்ணிருந்தா. உப்பே இல்ல.”
“அப்படியா சூப்பர் சூப்பர். ஆமான் மெசேஜ்ல ஏதோ புக் பண்ணனும் சொன்னியே. என்னது?” திரையில் அம்மாவைப் பார்க்காமல், கையில் இருக்கும் நோட்டில் ஏதோ எழுதிக்கொண்டே பேசினான் கமல்.
“ஓலா கேப் புக் பண்ணனும்டா”
“அதான் ஐபேட்ல உனக்கு ஆப் செட் பண்ணி குடுத்தேனேம்மா”
“ஆமா செட் பண்ணி கொடுத்த. ஆனா வரவே மாட்டேங்குது.”
“அப்படியா?”
“ஆமா டா. வரவே மாட்டேங்குது!”
“வரவே மாட்டேங்குதுன்னா என்ன சொல்லுற? ஏதாச்சும் எர்ரர் சொல்லுதா இல்ல கேப் காரன் வர மாட்டேங்குரானா?”
“லாகின் பெயில்ட் அப்படின்னு மட்டும் சொல்லுது.”
“ஓஹோ… எதுக்கு இப்போ ஓலா கேப்?”
அம்மாவின் குரல் மாறியது.
“கமல்… உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்.”
“என்ன?”
“தாஸ்ஸோட அப்பா செத்து போயிட்டாருடா”
கமல் சடக்கென்று திரும்பி திரையில் அம்மாவைப் பார்த்தான். “எப்போ?”
“இன்னிக்கு மத்தியானம் தாஸ் போன் பண்ணி சொன்னாரு”
“என்ன ஆச்சு?”
“ஹார்ட் அட்டாக். அதான் நாளைக்கு காலையில போய் பார்க்கலாம்னு இருக்கேன்.”
யாரோ புலம்பிக்கொண்டே இருப்பதுபோல் பின்னணியில் குரல் கேட்டது.
“என்ன பொலம்புறா பாட்டி?”
“இத பத்தி தான்டா. நாளைக்கு காலையில கேப்ல போய் பாத்துட்டு வா, பஸ்ல போகாதே அப்படின்னு கத்திக்கிட்டு இருக்கா.”
“ஆமாம்மா பஸ்ல போகாத. வெயில்.”
“இது ஆனா லாகின் ஆக மாட்டேங்குதே.”
“சரி இரு. உனக்கு பாஸ்வர்ட் ஞாபகம் இல்லியா?”
“ஒரு பாஸ்வர்ட் நோட்புக்ல எழுதி வெச்சிருந்தேன். அது தான் ட்ரை பண்ணேன்.”
“கால் பண்ணி புக் பண்ணேன்?”
“கால் பண்ணா ஆப் வெச்சு தான் புக் பண்ணனுங்கறான். பாஸ்ட்ராக் புக் பண்ணுவேன். ஆனா அவன் காசு அதிகமா கேப்பான். ஓலா தான் சீப்.”
“சரி இரு. நோட்புக்ல என்ன பாஸ்வர்ட் எழுதிருக்கு? அத போட்டு பாத்தியா?”
“கமல்123. வேல செய்யல. லாகின் பெயில்ட் அப்படின்னு சொல்...”
“சரி சரி புரியுது. இரு நான் ரீசெட் பண்ணுறேன்.”
தனது கைப்பேசியை எடுத்து சில பொத்தான்களை அழுற்றினான் கமல்.
“எங்க இருக்கார் இப்போ தாஸ் மாமா? கடசியா மயிலாப்பூர்ல தானே இருந்தாங்க?”
கமல் எப்போதும் அவரை தாஸ் மாமா என்று தான் அழைப்பான். சிறு வயதில் அவர் வீட்டில்தான் அதிக நேரம் கழிப்பான். அவனுக்கு ஹிந்தி சொல்லித்தரும் பொழுது, தவறாகப் பதில் சொன்னால் தொடையில் கிள்ளுவார் தாஸ் மாமா. கிள்ளிய வலி இன்னும் இருக்கிறதா என்று தொடையைத் தடவி பார்த்தான்.
“இப்போ பெருங்குளத்தூர் ஸைடு போயிட்டாங்கடா. அப்பப்போ ஆபிஸ்ல பாப்பேன். ஹாய் ஹல்லோ அவ்வளவு தான்.”
கமலின் மனதில் ஒரு பெரிய கத்தரிக்கோலின் பிம்பம் தோன்றியது. கூடவே தாஸ் மாமா அப்பாவின் கட்டம் போட்ட லுங்கி, சீரான வெள்ளை தலை முடி. அவரிடம் எப்போதும் புதிதாக துவைத்த துணியின் வாசம் வரும். அவர் உடுத்தியிருக்கும் துணியின் வாசமா அல்லது அவர் தைத்துத் தரும் துணிகளின் வாசமா என்று உறுதியாகச் சொல்ல முடியாது.
“உனக்கு ஞாபகம் இருக்காம்மா? ஒரு வாட்டி முஸ்தப்பாலேர்ந்து ஒரு கத்தரிக்கோல் வாங்கி கொடுத்தேன் அவருக்கு.”
“ம்ம்.. அதோட பிடி சரியில்ல வேண்டாம்னு சொன்னாரே...”
அவரு ஏதோ அப்படி சொல்லிட்டாரு மனசுல வெச்சுக்காதப்பா என்று தாஸின் அம்மா அவனிடம் தனியாக சொன்னது ஞாபகம் வந்தது கமலுக்கு. அவன் ஒன்றும் ஆசை ஆசையாய் வாங்கி வரவில்லை அந்தக் கத்தரிக்கோலை. எல்லோருக்கும் சேர்த்து முஸ்தப்பாவில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருக்கையில், அந்தப் பெரிய கத்தரிக்கோலை பார்த்தவுடன் தாஸ் மாமாவின் அப்பா தான் நினைவுக்கு வந்தார். அதைப் போன்றொரு கத்தரிக்கோலை வைத்து அவர் துணிகளை சீராக வெட்டுவார். புதுப் புத்தகங்களுக்கு போடப்போகும் அட்டையையும் வெட்டுவார்.
“மா உனக்கு இப்போ ஒரு எஸ்.எம்.எஸ் வந்திருக்கும். அதுல இருக்கற நம்பர் சொல்லு. பாஸ்வர்ட் ரீசெட் பண்ணிடறேன்.”
“3… 8… 5… 7… 2... ”
அவள் ஒவ்வொரு எண்ணாகச் சொல்ல சொல்ல, கைப்பேசியில் டைப் செய்தான். அந்தக் கத்தரிக்கோல் சிறு வயதில் கமலுக்கு ஆச்சரியம் அளிக்கும். அவனின் அனைத்து விரல்களும் உள்ளே செல்லும் அளவிற்கு, அதன் பிடி பெரிதாக இருக்கும். ஒவ்வொருமுறை வெட்டும் பொழுதும், சரக்சரக்கென்று காதைக் கிழிக்கும் கூர்மையான ஒரு சத்தம் கேட்கும்.
“இப்போ ட்ரை பண்ணு. அதே பாஸ்வர்ட் தான்.”
“க… ம… ல்… 1… 2… 3...”
பாஸ்வர்ட்டின் ஒவ்வொரு எழுத்தையும் சொல்லியப்படி, தலை குனிந்து ஐபேட்டில் டைப் செய்யும் அம்மாவின் பிம்பத்தை திரையில் பார்த்தான் கமல். அவள் நெற்றியின் மேல் இருக்கும் சில முடிகள் வெளிர்ந்துப்போய் இருந்தன. கமலுக்கு அடி வயிற்றை ஏதோ வெட்டுவது போல் இருந்தது.
***
அவசர அவசரமாக கிளாசுக்கு கிளம்பினான். எப்போதும் போல புக்கை மறந்ததற்குத் தன்னையே திட்டிக்கொண்டான். பஸ் ஸ்டாப்பை நெருங்கும் முன், அவன் கைப்பேசி துடித்தது. திரையில் “மாம்” என்று சொன்னது. எப்போதும் காலையில் கூப்பிட மாட்டாளே… என்ன விஷயம் என்ற சிறு பதற்றத்துடன் எடுத்தான்.
“ஹல்லோ கமல்?”
“சொல்லுமா என்ன விஷயம்?”
“ஒரு நிமிஷம் இரு டா”
இரண்டு வினாடி நிசப்தம்.
“ஹல்லோ கமல்”
விறுவிறுவென நடந்துகொண்டிருந்த கமல், கண்ணுக்குத் தெரியாத ஒரு சுவரை முட்டியது போல் உறைந்து நின்றான். தாஸ் மாமாவின் குரல். என்ன சொல்வதென்று தெரியவில்லை.
“ஹல்லோ மாமா...”
“எப்படி இருக்க கமல்?”
அவரின் குரலில் அழுது ஓய்ந்த தொய்வு தெரிந்தது. இந்தக் கேள்வி தற்போதைய நிலைமைக்குப் பொருத்தமற்றதாக தோன்றியது கமலுக்கு. தான் எவ்வாறு இருந்தால் என்ன?
“நான் நல்லா இருக்கேன் மாமா. நீங்க…”
“ஹல்லோ? எப்படி இருக்க கமல்?”
தாஸ் மாமாவிற்குச் சரியாக கேட்கவில்லை என்று உணர்ந்து சத்தமாக பேசினான், “நான் நல்லா இருக்கேன் மாமா! அம்மா நடந்தது சொன்னாங்க...”
சாவு என்ற வார்த்தை அவன் நாவிலிருந்து வரவில்லை. தாஸ் மாமாவின் முகம் இப்போது எவ்வாறு இருக்கும் என்று நினைத்து பார்த்தான். அவரின் அம்மா தலையில் கைவைத்து அழுவது போன்ற ஒரு பிம்பம், அவன் மனதில் தோன்றி மறைந்தது.
“நீங்க அவர ஒரு வாட்டியாச்சும் பாத்திருக்கணும்டா. உங்க அம்மாவ கூட வரச்சொல்லி எவ்வளவோ வாட்டிக் கூப்பிட்டேன்.”
இதற்கும் கமலிடம் பதில் இல்லை. பிறகு எதாவது சொல்லவேண்டும் என்ற கட்டாயத்தினால், தொண்டையை செருமிக்கொண்டே, “கவலை படாதீங்க மாமா... எங்க சப்போர்ட் உங்களுக்கு எப்போவும் உண்டு” என்றான்.
“சப்போர்ட்” - ஏன் அந்த வார்த்தையை உபயோகித்தான் என்று கமலுக்கு தெரியவில்லை. வேறு யாராச்சும் இதைச் சொல்லி கேட்டிருகோமோ?
“நீ அம்மாவ சப்போர்ட் பண்ணுடா போதும்” என்றபடி அம்மாவிடம் கைப்பேசியை கொடுத்தார் தாஸ் மாமா. அவர் சொன்னதை எப்படிப் புரிந்து கொள்வது என்று தெரியாமல் முழித்தான் கமல்.
“ஹல்லோ கமல்?” என்று மீண்டும் அம்மாவின் குரல் கேட்டது.
“எதுவும் சொல்லாம தாஸ் மாமாக்கிட்ட போன் கொடுக்கற! லூஸாம்மா நீ?!” என்று கத்தவேண்டும் போலிருந்தது கமலுக்கு. ஆனால் தாஸ் மாமாவிற்குக் கேட்டுவிடுமோ என்றெண்ணி மெளனமாக இருந்தான்.
“சரிடா கமல், நம்ம நைட் பேசலாம்”
“வை டி” என்று மனதில் திட்டினான் அவளை.
கிளாஸ் நடக்கும் பில்டிங் வாசலில் சித்தார்த்தன் அவனுக்காகக் காத்துக்கொண்டிருந்தான்.
“ஹாய் மச்சி! என்னடா? ஏதோ யோசைனைல வர? அடுத்த படத்துக்கு ஸ்கிரிப்ட்டா?”
“ஒன்னும் இல்லடா. ஆமா சாப்ட்டியா நீ?”
“இன்னும் இல்ல டியூட். 5 நிமிஷத்துல கிளாஸ் ஆரம்பிக்க போகுது.”
“நாமெல்லாம் என்னிக்கு டா சரியான நேரத்துக்கு போயிருக்கோம்? வா!”
டக-டக-டக-டக என்று ஒரு சத்தம் கேட்டது. சித்தார்த்தனும் கமலும் திரும்பி மேலே பார்த்தனர். பக்கத்தில் நின்றிருந்த டவர் கிரேனிலிருந்து எழும்பியது அவ்வொலி. அந்த கிரேனின் ராட்சத கை செயலிழந்தது போல் வலதும் இடதுமாக மெதுவாக ஊசலாடியது.
டக-டக-டக-டக!
பில்டிங் வாசலில் ஒரு பஸ் ஸ்டாப். அந்த ஸ்டாப்பில் ஒரு பஸ் நின்றிருந்தது. அதிலிருந்து சிலர் ஏறியும் இறங்கியவாரும் இருந்தனர்.
டக-டக-டக-டக!
அனைவரும் வானத்தில் ஊசலாடும் கிரேனை பார்த்தனர். சித்தார்த்தனும் கமலும் சிலை ஆனார்கள். அடுத்த 5 வினாடிகளில் இவை அனைத்தும் நடந்தது.
தள்ளாடிய அந்த கிரேன் ஸ்லொவ் மோஷனில் சரிய ஆரம்பித்தது.... அவர்களை நோக்கி. பஸ் ஸ்டாப்பிலிருந்த அனைவரும் அலறியடித்துக்கொண்டு ஓடினார்கள். பஸ் ஓட்டுனர் உறைந்துப்போய் விழும் கிரேனையே பார்த்திருந்தார். பஸ்ஸில் இருக்கும் வேறு சிலர் சீட்டை கைகளால் பற்றியபடி, ஜன்னல் வழியே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஓடிக்கொண்டிருந்த ஒரு பெண்மணி ரப்பர் செருப்பு சறுக்கியதில் விழுந்தாள். புத்தகங்கள் தரையில் சிதறின. கிரேன் பஸ் ஸ்டாப்பையும் பஸ்ஸையும் முத்தமிட நெருங்கியது... பக்கத்திலிருந்த ஒரு மரத்தைச் சரித்துக்கொண்டே. தடுக்கி விழுந்த அந்தப் பெண் பதறியடித்துக்கொண்டு எழுந்தாள். மரக்கிளைகள் உடையும் சப்தம். கமலும் சித்தார்த்தனும் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் ஓட்டம் பிடித்தனர். கிரேன் வேகமாகச் சரிந்தது. பஸ் ஓட்டுனர் கண்களை மூடிக்கொண்டார்.
கடைசி நொடியில் கிரேனின் ராட்சத கை சற்று மடங்கி, பஸ் ஸ்டாப்பின் பின்புறம் சடார்ர்ர்! என்ற சத்தத்தோடு விழுந்தது. காற்றில் கூச்சலும் தூசியும் கிளம்பியது. கமலும் சித்தார்த்தனும் ஓடுவதை நிறுத்தி விட்டுத் திரும்பி பார்த்தனர். பஸ் ஸ்டாப் பின்னே இருக்கும் ரெயின் ஷெல்ட்டரை நொறுக்கிவிட்டு, அமைதியாய் படுத்திருந்தது டவர் கிரேன். அதிலிருந்து பத்தே அடி தூரத்தில் நின்று மூச்சு வாங்கிக்கொண்டிருந்தனர் கமலும் சித்தார்த்தனும்.
மயான அமைதி. சில நொடிகள் கழிந்தன. பஸ் மெதுவாக ஸ்டாப்பிலிருந்து ஊர்ந்தது.
***
“இன்னிக்கு என்ன சாப்பிட்டே?”
கமல் ஒரு வலைத்தளத்தில் செய்தி வாசித்துக் கொண்டிருந்தான். கிரேன் இடிந்து விழுந்ததில் மூன்று உயிர்கள் பலி என்று எழுதியிருந்தது. மூவரும் கட்டட தொழிலாளிகள்.
“இங்க பொடலங்கா கூட்டு. அங்க என்ன?”
இறந்ததில் ஒருவர் விழுந்து நொறுங்கிய கிரேனின் உச்சியில் அமர்ந்திருந்த ஆப்பரேட்டர். சிங்கப்பூரிலிருந்து தற்போது சில வெளிநாட்டு தொலைப்பேசி அழைப்புகள் விரைந்துகொண்டிருக்குமே என்று நினைத்தான். எப்படி சொல்லுவாங்க, யாரு சொல்லுவாங்க...
“என்ன டா கமல் பதிலே காணும்?”
செய்தி தளத்திலிருந்து அவன் கண்கள் பிரிந்தன, “ஆன்.. என்ன கேட்டம்மா?”
“என்ன சாப்டுச்சு என் குழந்தைன்னு கேட்டேன்.”
“ஓ அதுவா.. வந்து... நூடில்ஸ்மா... மேகி நூடில்ஸ்.”
கிரேன் விழுந்த செய்தியை, கிளாஸ் சென்று அனைவருக்கும் சொன்னபோது, சிலரின் வாய் பிளந்த முகங்கள் இன்னும் அவன் கண்கள் முன் இருந்தன. மார்டின் ஹென்ஸ் வெளியே பார்க் செய்யப்பட்டிருந்த தனது ஹார்லி டேவிட்ஸனை பார்க்கப் பதற்றத்துடன் ஓடியதும், அவன் கண் எதிரே தோன்றியது.
“என்ன டா பிஸியா?”
“இல்லமா. நீ சொல்லு என்ன விஷயம்?”
“இங்க ஒன்னும் இல்லடா. இன்னிக்கு அங்க என்ன ஸ்பெஷல்?”
கமல் பதில் சொல்ல தாமதித்தான். கம்ப்யூட்டர் திரையில் ஸ்கைப்பை பார்த்தான். கத்தரிக்கோலின் கூர்மையான சத்தம் அவன் காதில் ஒலிக்க, அம்மாவின் நெற்றி மீது இருக்கும் வெண்ணிற தலைமயிர் மீண்டும் அவன் கண்ணில் பட்டது.
“பெருசா ஒன்னும் இல்லம்மா. லெக்சர் போனேன். திரும்ப வந்தேன். அவ்வளவு தான்.”
முற்றும்.
No comments:
Post a Comment