“ஹப்பா டா!” என்று சோபாவில் சாய்ந்து, முன்னே இருந்த மேஜை மேல் காலை நீட்டினான் சந்துரு. வீட்டு அறையின் நிசப்தத்தில், அவன் கால் விரல்களை ஒவ்வொன்றாக மடித்து சொடுக்குடைத்த சத்தம், தெளிவாக கேட்டது. கையில் இருந்த டீ கிளாஸை, கைக்கு எட்டும் தொலைவில் வைத்தான். அன்று சனிக்கிழமை. விடுமுறை நாளின் காற்று, சந்துருவின் மூச்சுடன் உள்ளேச் சென்று, அவன் மனதைக் கட்டி அனைத்து, சாந்தப்படுத்தியது. மனதிலிருந்து தானாக வெளிவந்த பாடலை முணுமுணுத்தப்படி, கையில் இருந்த புத்தகத்தைத் திறந்தான். ஒரு வரிக்கூட படித்திருக்க மாட்டான், திடீரென்று எங்கிருந்தோ ஒரு கூக்குரல் ஒலித்தது.
“காப்பாத்துங்க! யாராச்சும் காப்பாத்துங்க!”
உச்சு கொட்டியப்படி, சந்துரு சோபாவிலிருந்து எழுந்து, போட்டிருந்த சட்டை பேண்ட்டை கழற்றினான். உள்ளே அணிந்திருந்த சிகப்பு நீல உடையை பார்த்தான். தோள் பின்னே தொங்கும் கேப் கசங்கி இருந்தது. இஸ்த்ரி போட வேண்டும் என்று மனதில் குறித்தப்படி, ஜன்னல் வழியே குதித்து, பறக்க ஆரம்பித்தான்.
அந்த கூக்குரல் எந்த திசையிலிருந்து வருகிறது என்று கணித்து, அந்த திசையில் பறந்தான். ஐந்து நிமிடம் பறந்தப்பின், ஒரு எச்.டீ.பீ கட்டிடத்தின் 10வது மாடியில் தரையிறங்கினான். சாம்பல் நிறத்தில் பூப்போட்ட சட்டை அணிந்திருந்த ஒரு வயதான பாட்டி பதறிப்போய் கத்திக்கொண்டிருந்தாள். இவனை கண்டதும் அவள் முகத்தில் இருந்த பதற்றம் விலகியது.
“வந்துட்டீங்களா சூப்பர்மேன்!”
சந்துரு அவள் அருகேச் சென்று, தனது குரலை கணீர் ஸ்ருதிக்கு மாற்றி, “என்னமா பிரச்சனை?” என்று கேட்டான்.
பாட்டி பெருமூச்சு விட்டாள். “பெரிதாக ஒன்றும் இல்லை சூப்பர்மேன். நான் உணத்தியிருந்த துணி கீழே விழுந்து விட்டது. நானோ பத்தாவது மாடியில் இருக்கிறேன். என்னை போன்ற ஒரு சீனியர் சிடிஸன் எப்படி இறங்கி அந்த துணியை எடுக்க முடியும்? அதான் வருந்தி உங்களை உதவிக்கு கூப்பிட்டேன்.”
சூப்பர்மேன் பாட்டியின் வீட்டு பால்கனியிலிருந்து எட்டிப் பார்த்தான். கீழே இரண்டு துணிகள் தரையில் கிடந்தன. அவையும் பூப்போட்ட சட்டைகளே. கருப்பு பூனை ஒன்று அந்த சட்டைகளுக்கு அருகே அமர்ந்து கொட்டாவி விட்டுக்கொண்டிருந்தது. சூப்பர்மேன் திரும்பி பாட்டியை பார்த்தான்.
“ஆமாம் சூப்பர்மேன்”, பாட்டி தலையை ஆட்டினாள், “அந்த துணிகள் தான்… கொஞ்சம் கொண்டு வரீங்களா ப்ளீஸ்?”
***
“கோபி, என் வேலைய ராஜினாமா செய்ய போறேன்டா!”
“சூப்பர் டா சந்துரு!”
சாயங்கால நேரம். சூப்பர்மேன் கோபியும் சூப்பர்மேன் சந்துருவும் வானில் ஒரு மேகத்தின் மீது, சூரியனை பார்த்தவாறு அமர்ந்திருந்தார்கள். (முழுமையாக மறைவதற்குமுன் அதன் கதிர்களை உறிந்துக்கொள்ள.) கையில் ஆளுக்கொரு கிளாஸ் லஸ்ஸி. கோபியும் ஒரு பெயர் பெற்ற நிறுவனத்தில் சூப்பர்மேன் வேலை பார்த்துகொண்டிருந்தான். ஆனால் சந்துருவை போல அவனுக்கு கடுப்பு ஏதுமில்லை. அதனால் லஸ்ஸியை ஆழ்ந்து குடித்துக்கொண்டிருந்தான்.
“உள்ளாடைய வெளிய மாட்டிக்கிட்டு செய்யுற வேலையெல்லாம் ஒரு வேலையாடா? ச்சே! அன்னிக்கி ஒரு நாள் கேப் இல்லாததுனால, ஒரு பய்யன் நான் சூப்பர்மேன் தான்னு நம்பமாட்டேன்னுட்டான். நமக்குன்னு ஒரு மரியாதையும் கிடையாதுடா கோபி. எல்லாம் இந்த உடைக்கு தான்!”
பக்கத்தில் இருந்த போக்குவரத்து விளக்கு பச்சையாக மாறியது. ஓரிரு சூப்பர்மேன்கள் கையில் பெட்டியுடன் அவசரமாக விர்ர்ர் விர்ர்ர்ரென்று பறந்தனர்.
அவர்களை பார்த்து சந்துரு பெருமூச்சு விட்டான். “அதுவும் கடுப்பு என்னன்னா, மக்கள் அவங்களாவே செஞ்சுக்கக் கூடிய வேலைக்கு கூட நம்மள கூப்பிடறாங்கடா… அன்னிக்கி ஒருத்தன் அவன் முதல் முதல் வெச்ச வத்தகுழம்ப ருசி பாக்க ஆள் இல்லையாம். என்னை கூப்பிடறான். அந்த எடத்துலயே அவனையும் அவன் நீட்டின ஸ்பூனையும் உருக்கிருப்பேன்…”
கோபி அனுதாபத்தில் சிறிது நேரம் லஸ்ஸி உருஞ்சுவதை நிறுத்தினான்.
“பூனை காணாம போறது, லிப்ட் கதவு தொறக்காம மாட்டிக்கிறது, வயசான தாத்தா பாட்டிங்களுக்கு காய்கறிப் பை தூக்கிட்டு போறது... இதெல்லாம் பண்ணவா நான் சூப்பர்மேன் ஆனேன்? நான் பெருசா ஒன்னும் கேக்கலடா. ஒரு மெத்தை தீ புடிச்ச கேஸாவது கெடச்சா பரவாயில்ல.”
“புரியுதுடா. என்ன பண்ணுறது? சிங்கப்பூருல பாதுகாப்பு ஜாஸ்தி. பெருசா சம்பவம் எதுவும் நடக்கறதில்ல. நீ வேணும்னா இந்தியாவுக்கு டிரான்ஸ்பர் ட்ரை பண்ணேன். அங்க சூப்பர்மேன் வேலைக்கு ஸ்கோப் ஜாஸ்தி.”
சந்துரு அதெல்லாம் நடக்கற காரியம் இல்லை என்பதுபோல் உறுமினான்.
“சரி டிரான்ஸ்பர விடு. என்ன பண்ணலாம்னு இருக்க?”
“அதான் சொன்னேனே. வேலைய ராஜினாமா செய்ய போறேன். சம்பரதாயதுக்கு ராஜினாமா லெட்டர் கூட எழுத தேவயில்ல. புதுசா iQuit-ன்னு ஒரு ஆப் வந்திருக்கு. அதுல பேரு போட்டா...”
“டேய்! இந்த வேலைக் கிடைக்க எவ்வளோ கஷ்டப்பட்ட? அத யோசிச்சு பாரு...”
உடனே சந்துருவுக்கு முதல் முதல் பறக்க கற்றுக்கொண்ட போது, அம்மா முகத்தில் கண்ட பூரிப்பு நினைவுக்கு வந்தது. அவனை பக்கத்தில் பறக்க விட்டப்படி, ஒவ்வொரு வீடாக சென்று காமித்தாள்.
“உண்மை தான். ஆனா… போன வாரம் விஜயா விலாஸ்ல சாப்பிட்டோம் ஞாபகம் இருக்கா?”
விஜயா விலாஸிற்கும் வேலையை விடுவதற்கும் என்ன சம்பந்தம் என்று புரியாமல் கோபி முழித்தான்.
”அங்க ஒரு சர்வர் இருந்தான். வேலைய செய்யும் போது என்ன ஒரு சந்தோஷம் அவன் முகத்துல... ஒரு திருப்தி. அது தான்டா கோபி எனக்கு வேணும்.”
பறவைகளின் கும்பல் ஒன்று அவர்களை கடந்து பறந்தது. அவை தூரத்தில் செல்வதை ஏக்கத்துடன் பார்த்தான் சந்துரு.
“திருப்தி வேணும் சரி. ஆனா அடுத்த வாட்டி விஜயா விலாஸ்ல சாப்பிட காசும் வேணுமில்லையா?” மீனை பகுத்தறிவால் கொக்கிப் போட்டுவிட்ட சந்தோஷத்தில் இன்னொரு வாய் லஸ்ஸி உறுஞ்சினான் கோபி.
“அதுக்கு அப்பப்போ யாருக்காச்சும் உதவி பண்ணாப் போச்சு! உலகத்துல எல்லாருக்கும் சூப்பர்மேன் தேவ. தேவப்படும் போது பார்ட் டைம்மா காசுக்கு வேல செய்வேன்.”
“அப்போ கல்யாணம்? நிலாவுல சொந்த வீடு? குடும்பத்தோட ஜாலியா டூர் போக ராக்கெட்டு? எதுவும் வேண்டாமா?”
சந்துரு மேகத்திலிருந்து எழுந்து, தனது பின்புறத்தை தட்டிக்கொண்டான். கோபியின் கேள்விக்கு பதிலாக அவன் கையில், குடிக்காத லஸ்ஸி கிளாஸை கொடுத்துவிட்டு நடந்தான்.
“டேய் சந்துரு! இரு டா… இன்னும் நான் முழுஸா சார்ஜ் ஆகல...”
***
“மீட் மிஸ் நடாஷா!” என்றார் சந்துருவின் உயர் அதிகாரி. “இவங்க மார்ஸ்ல நடக்கற அடிமை அராஜகத்த பத்தி ஒரு புத்தகம் எழுத போறாங்க. அதுக்கு நேரடியா போய் ரிசர்ச் பண்ணலாமுன்னு இருக்காங்க. துணைக்கு ஒரு சூப்பர்மேன் இருந்தா பாதுக்காப்புன்னு சொல்லி நம்ம ஏஜென்ஸிய கேட்டிருந்தாங்க. நீ தான் இதுக்கு சரியான ஆள் சந்துரு.”
சந்துரு கஷ்டப்பட்டு புன்னகையை அடக்கி கொண்டான். ஒரு வழியாக இந்த தீவை விட்டு எஸ்கேப் ஆக போகிறோம் என்ற சந்தோஷத்தில், அவன் காலடிகள் ஏற்கனவே தரைக்கு சற்று மேல் மிதக்க ஆரமித்தன.
“ஹெல்லோ!”
திரும்பி பார்த்தான் சந்துரு. நடாஷா ஒரு கையை நீட்டியப்படி நின்றிருந்தாள். அவளின் அகலமான கண்களை பார்த்தப்படி, கை குலுக்கினான் சந்துரு.
***
“என்.யூ.எஸ்ல படிச்ச என்னுடைய நிறைய நண்பர்கள் இப்போ சூப்பர்மேனா தான் இருக்காங்க. உங்கள மாதிரியே...”
“ஓ… நைஸ்...”
சந்துருவும் நடாஷாவும் மின்தூக்கியில் சென்றுக்கொண்டிருந்தனர்.
“அதுல இரண்டு மூணு பேரு இப்போ மார்ஸ்ல வேல செஞ்சுக்கிட்டு இருக்காங்க.”
“ஓ… குட்...”
அவர்களுடன் பத்து பேர் சுற்றி நின்றிருந்ததால் சற்று நெரிசலாக இருந்தது. அதுவும் பெரிய தொப்பை உடையவர் ஒருவர் தலைத்தொங்கியப்படி உறங்கிக்கொண்டே சந்துருவின் பக்கவாட்டில் நின்றிருந்தார். அவரின் தொப்பை அவ்வப்போது சந்துருவை இடித்துக்கொண்டிருந்தது. அவன் சிறு வார்த்தைகளில் பதில் சொல்வதற்கான காரணம் இதுவே.
“நான் உங்கள கேக்கணும்னு நினைச்சேன்… இந்த எக்ஸ்-ரே விஷன்னு சொல்றாங்களே… அது இருக்கா உங்களுக்கு?” மிகுந்த ஆர்வத்துடன் சந்துருவை பார்த்து நடாஷா கேட்டாள்.
“ஒரு சூப்பர்மேனோட ரெஸூமேல அது இல்லாட்டி, நேரா அது குப்பத்தொட்டிக்கு தான் போகும்!”
“அப்படினா இப்பக்கூட உங்களுக்கு இந்த கட்டிடத்துல நடக்குற எல்லாமே தெரியுதா?” அவளின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன.
சந்துரு மெல்லிய சிரிப்புடன் தலை அசைத்தான். அவள் அதே விரிந்த கண்களுடன், “எல்லாம் தெரிஞ்சும், எப்படிதான் உங்க வேலையில கவனம் செலுத்த முடியுதோ!” என்றாள்.
சந்துருவை மீண்டும் இடித்தது தொப்பை. தொப்பையையும் அதன் உரிமையாளரையும் முறைத்தான். மின்தூக்கி நின்றது.
“லெவல் 534. மார்ஸ் லாஞ்ச் ஸ்டேஷன்” என்று ஒலித்தது யந்திர குரல். பிறகு தமிழில், “மார்ஸ் விண்கலம் வெளியீட்டு நிலையம்.” பிறகு மேண்டரின்னிலும், மலாயிலும், பஹாஸா இந்தோனேசியாவிலும் அதே மேட்டரை ஒப்பித்தது.
அதை பொறுமையாகக் கேட்டு நின்றிருந்த சூப்பர்மேன் சந்துரு, மின் தூக்கியின் கதவுகள் திறந்ததும், தொப்பையின் நசுக்கலிலிருந்து விடுபட்டு, கேப்பையும் இழுத்துக்கொண்டு சட்டென்று வெளியேறினான். நடாஷா ஆச்சர்யத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தப்படி இறங்கினாள்.
தொடரும்...
No comments:
Post a Comment